சிவகளிப் பேரலை- 97

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

97. மனவேழத்துக்கு நிலைக்களன்

.

ப்ரசரத்யபித: ப்ரல்பவ்ருத்யா

வானேஷ மன: கரீ ரீயான் /

பரிக்ருஹ்ய நயேன க்தி- ரஜ்வா

பரம ஸ்தாணுபம் த்ரும் நயாமும் //

.

வெறிபிடித்த பெருவடிவ மனவேழம் அலைகிறதே

நெறிகெட்டு அங்குமிங்கும் அடங்காமல் திரிகிறதே

பக்தியாம் கயிற்றாலே நயமாகக் கட்டுவீரே

பரமனே நிலைக்களத்து அழைத்துச் செல்வீரே!

.

     முந்தைய ஸ்லோகம் போலவே இந்த ஸ்லோகத்திலும், மனத்தை மதம் பிடித்த யானையாக உவமானம் செய்துள்ள ஸ்ரீ ஆதிசங்கரர், அந்த மனவேழத்தைக் கட்டுப்படுத்த இறைவன் மீதான பக்தியே சிறந்த கயிறு என்பதையும், அவரது அருளே அந்தக் கயிறு அவிழ்ந்துவிடாமல் இறுகக் கட்டிவைக்கப் பயன்படும் நிலைத்தூண் என்பதையும் விளக்குகின்றார்.

.மனத்திற்கு உருவம் இல்லாவிடினும், அளவிட முடியாத எண்ணங்களால் பெரிய வடிவம் கொண்டதாக இருக்கிறது. ஒரு நினைப்பில் இருந்து வேறு நினைப்புகளுக்கு அதி வேகத்தில் மாறுவதாலும், முந்தைய நினைப்பில் இருந்து முற்றிலும் வேறான புதிய எண்ணங்களுக்குள் சட்டெனப் புகுவதாலும், கட்டுக்கடங்காமல் முரண்படுவதாலும் மனம் வெறி பிடித்ததுபோல் அலைகிறது. ஆகையால் மனத்தை வெறி பிடித்த யானையாக உருவகப்படுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். அப்படிப்பட்ட மனவேழம், எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் (நெறிமுறைகளுக்கும்) ஆட்படாமல், அங்குமிங்கும் அலைந்து திரிகிறது.

     அத்தகைய  மதம்பிடித்த மனவேழத்தை, பரமேசுவரனே, தங்கள் மீதான பக்தி என்ற கயிற்றினாலே நயமாகப் பிடித்துக் கட்டி வசப்படுத்துங்கள். அந்த மனவேழத்தின் வெறி தணிந்து, கட்டுப்பாட்டுடன் இருப்பதற்காக, தங்கள் திருவடித் தாமரை மீதான தியானம் என்ற அசைவில்லாத நிலைக்களனில் கட்டி வைத்து அருள்வீராகுக என்கிறார்.

.பல்வேறு விதமான பற்றுகள், ஆசைகளின் காரணமாக மனம் வெறி பிடித்து அலைகிறது. அந்த விஷயப் பற்று நீங்கிவிட்டால், மனம் அலையாமல் நிலைகொள்கிறது. இறைவன் மீதான பரிபூரண பக்திதான் அசையாத நினைப்பை, சஞ்சலமற்ற மனத்தைத் தந்தருள்கிறது. மோகம், கோபம், லோபம் ஆகிய சலனங்கள் நீங்கிய மனத்திலே இறைவன் தானாகவே குடிகொள்கிறான்.

$$$

Leave a comment