சிவகளிப் பேரலை – 36

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

36. குடியிருக்கும் கோவிலைப் புனிதமாக்கு

.

க்தோ க்திகுணாவ்ருதே மும்ருதாபூர்ணே ப்ரசன்னே மன:-

கும்பே ஸாம் தவாங்க்ரிபல்லவயும் ஸம்ஸ்த்தாப்ய ஸம்வித்லம்/

ஸத்வம் மந்த்ரமுதீரயந் நிஜச’ரீராகார சு’த்திம் வஹன்

புண்யாஹம் ப்ரகடீகரோமி ருசிரம் கல்யாண-மாபாயன்//

.

பக்தியாம் நூல்சுற்றி மகிழ்ச்சியாம் நீர்நிரப்பி

பொலிவுடைமனக் குடத்தே உமதிருபத மாவிலையாய்

அறிவுத்தேங் காயிட்டு அன்பாமைந் தெழுத்தோதி

அகப்புறத்தூய் மைநாட்டி புனிதத்தைக் காட்டினனே.

.

     இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது.  இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். அசுத்தம் நிறைந்த இல்லத்தை புண்யாஹவசனம் (புண்ணியத்தை வரவழைத்தல்) என்ற புனிதச் சடங்கை நிறைவேற்றித் தூய்மைப்படுத்துவதைப்போல, அசுத்தம் நிறைந்த உடலையும் உள்ளத்தையும் புனிதமாக்குவதற்கு ஆன்ம ரீதியிலான பக்தியாகிய புண்யாஹவாசனத்தை இங்கே விவரிக்கிறார்.

     பக்தனாகிய நான், பக்தியாகிய நூலால் சுற்றப்பட்டதாயும், மகிழ்ச்சி என்கிற நீர் நிறைந்ததாயும், ஒளி பொருந்தியதாயும் உள்ள என்னுடைய மனது என்கின்ற குடத்தினிலே, உமையொருபாகனாகிய (ஸாம்பன்) சிவபெருமானே, உனது இரு திருப்பாதங்களையே மாவிலைகளாகக் கொண்டு, உன்னைக் குறித்த அறிவையே (ஞானத்தையே) தேங்காயாக வைத்து, அன்பை வளர்க்கின்ற ஐந்தெழுத்து மந்திரமாகிய “நமசிவாய” என்பதையே உச்சரித்துக்கொண்டு, எனது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு அதனை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறேன். இதனைத்தான் திருமந்திரம், “சிவசிவ என்றிடத் தீவினை மாளும், சிவசிவ என்றிடத் தேவரு மாவர், சிவசிவ என்னச் சிவகதி தானே” என்றுரைக்கிறது.       

$$$

Leave a comment