சிவகளிப் பேரலை – 27

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

27. உள்ளத்தைக் காணிக்கையாக்கு

.

கரஸ்தே ஹேமாத்ரௌ கிரீச’ நிகடஸ்தே னபதௌ

க்ருஹஸ்தே ஸ்வர்பூஜாமர ஸுரபி சிந்தாமணிணே/

சி’ரஸ்தே சீ’தாம்சௌ’ சரண யுகளஸ்தேsகிலசு’பே

கமர்த்தம் தாஸ்யேஹம் ர்த்தம் மம மன://

.

நின்கையில் பொன்மலை அருகினிலோ நிதியோன்

நின்னகத்தில் கற்பகம் காமதேனு சிந்தாமணி

நிலவோனோ நின்தலையில் நின்னடிகள் நிலைமங்களம்

நினக்கென ஏதளிப்பேன்? மனமீந்தேன் நினக்கெனவே.

.

     கடவுளுக்கு நம்மிடம் உள்ளதைக் காணிக்கையாகத் தருவதைவிட, நமது உள்ளத்தையே காணிக்கை ஆக்குவதே மிகச் சிறந்தது. கடவுளுக்கு நாம் பொருளைப் படைத்தால், அந்தப் பொருள் அவன் படைத்ததுதானே? நாம் உழைத்துச் சேர்த்த பொருள், ஆதலால் நமது என்று கருதலாமே என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டால்கூட, சகல ஐஸ்வர்யங்களையும் வைத்திருக்கும் பரமேஸ்வரன் முன் இது மாத்திரம்?

     பரமேஸ்வரனின் திருக்கரங்களில் பொன்மயமான மேரு மலை திகழ்கிறது. அவருக்கு அருகினிலே, மூவுலகிலும் மிகுந்த செல்வந்தனாகிய குபேரன், குற்றேவல் செய்வதற்காக நின்றுகொண்டிருக்கிறான். இறைவன் வீற்றிருக்கும் இடத்தினிலே கேட்டதைக் கொடுக்கும் காமதேனு, கற்பக விருட்சம், சிந்தாமணி ஆகியவை கூட்டமாக இருக்கின்றன. அவரது தலை மீது எப்போதும் குளிர்ந்த கிரணங்களை வீசிக்கொண்டு ரம்மியமான சூழலையும் இன்பத்தையும் தரும் நிலா வீற்றிருக்கிறது. சிவபெருமானின் திருவடிகளோ, எல்லா மங்களங்களும் நிலைத்து நிற்கக்கூடியதாய் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில், பகவானுக்காக பக்தன் என்ன கொடுத்துவிட முடியும்? ஒன்றே ஒன்று இருக்கிறதே! அதுதான் நமது மனம். அதனையே  சிவபெருமானுக்குக் காணிக்கையாகத் தந்துவிடுவோம்.

$$$

Leave a comment