பாரதியின் வசன கவிதை – 6

-மகாகவி பாரதி

6.  விடுதலை

(நாடகம்)

முதல் காட்சி

அங்கம் 1; காட்சி 1

இடம்- வானுலகம்
காலம்- கலிமுடிவு.

பாத்திரங்கள்- இந்திரன், வாயு, அக்நி, ஒளி (சூரியன்), சோமன், இரட்டையர் (அசுவிநி தேவர்), மருத்துக்கள், வசுக்கள், த்வஷ்டா, விசுவே தேவர் முதலாயினோர்.

இந்திரன்:- உமக்கு நன்று,தோழரே.

மற்றவர்:- தோழா,உனக்கு நன்று.

இந்திரன்:- பிரம்மதேவன் நமக்கோர் பணியிட்டான்.

மற்றோர்:- யாங்ஙனம்?

இந்திரன்:- ‘மண்ணுலகத்து மானுடன் தன்னைக்

கட்டிய தளையெலாம் சிதறுக’என்று

அக்நி:- வாழ்க தந்தை; மானுடர் வாழ்க.

மற்றோர்:- தந்தை வாழ்க, தனிமுதல் வாழ்க.

உண்மை வாழ்க, உலக மோங்குக, தீது கெடுக, திறமை வளர்க.

ஒளி:- உண்மையும் அறிவும் இன்பமு மாகி

பலவெனத் தோன்றிப் பலவினை செய்து

பலபயன் உண்ணும் பரமநற் பொருளை

உயிர்க்கெலாந்தந்தையை, உயிர்க்கெலாந் தாயை

உயிர்க்கெலாந் தலைவனை,உயிர்க்கெலாந் துணைவனை

உயிர்க்கெலாம் உயிரை,உயிர்க்கெலாம்,

உணர்வை அறிவிலே கண்டு போற்றி

நெறியினில் அவன்பணி நேர்படச் செய்வோம்.

இந்திரன்:-நன்று தோழரே, அமிர்த முண்போம்.

மற்றோர்:- அமிழ்தம் நன்றே ஆம்.அஃதுண்போம்.

(எல்லாரும் அமிர்தபானம் செய்கிறார்கள்.)

இந்திரன்:- நித்தமும் வலிது

வாயு:- நித்தமும் புதிது

அக்நி:-தீரா விரைவு.

இரட்டையர்:- மாறா இன்பம்

மருத்துக்கள்:- என்றும் இளமை

ஒளி:- என்றுந் தெளிவு

அக்நி:- மண்ணுலகத்து மானிடர் வடிக்கும்

சோமப் பாலுமிவ் வமிழ்தமும் ஓர்சுவை.

இந்திரன்:- மண்ணுல கத்து மக்களே,நீவிர்

இன்பங் கேட்பீர்.எண்ணிய மறப்பீர்,

செயல்பல செய்வீர்,செய்கையில் இளைப்பீர்,

எண்ணள வதனால் ஏழுல கினையும்

விழுங்குதல் வேண்டுவீர்,மீளவும் மறப்பீர்,

தோழரென் றெம்மை நித்தமும் சார்ந்தீர்,

சோமப் பாலொடு சொல்லமு தூட்டுவீர்,

நும்மையே அணர் நோவுறச் செய்தார்?

ஆஅஅ! மறவுக் குறும்பா, அரக்கா,

விருத்திரா, ஒளியினை மறைத்திடும் வேடா,

நமுசிப் புழுவே,வலனே, நலிசெயுந்

துன்பமே, அச்சமே, இருளே, தொழும்பர்காள்,

பெயர்பல காட்டும் ஒருகொடும் பேயே,

உருப்பல காட்டும் ஒருபுலைப் பாம்பே

படைபல கொணர்ந்து மயக்கிடும் பாழே.

ஏடா, வீழ்ந்தனை, யாவரும் வீழ்ந்தீர்.

அரக்கரே, மனித அறிவெனுங் கோயிலை

விட்டுநீ ரொழிந்தால் மேவிடும் பொன்னுகம்

முந்தை நாள் தொடங்கி மானுடர் தமக்குச்

சீர்தர நினைந்துநாம் செய்ததை யெல்லாம்

மேகக் கரும்புலை விருத்திரன் கெடுத்தான்.

‘வலியிலார் தேவர்;வலியவர் அரக்கர்.

அறமே நொய்யது; மறமே வலியது

மெய்யே செத்தை; பொய்யே குன்றம்.

இன்பமே சோர்வது; துன்பமே வெல்வது

என்றோர் வார்த்தையும் பிறந்தது மண்மேல்

மானுடர் திகைத்தார்; மந்திரத் தோழராம்

விசுவாமித்திரன், வசிட்டன், காசிபன்

முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது;

பொய்ந்நூல் பெருகின, பூமியின் கண்ணே;

வேதங் கெட்டு வெறுங்கதை மலிந்தது.

போதச் சுடரைப் புகையிருள் சூழ்ந்தது.

தவமெலாங் குறைந்து சதிபல வளர்ந்தன.

எல்லாப் பொழுதினும் ஏழை மானுடர்

இன்பங் கருதி இளைத்தனர்,மடிந்தார்;

கங்கைநுர் விரும்பிக் கானநீர் கண்டார்;

அமுதம் வேண்டி விடத்தினை யுண்டார்.

ஏஎ!

வலியரே போலுமிவ் வஞ்சக அரக்கர்!

விதியின் பணிதான் விரைக

மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக.

ஒளி:- ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி

நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால்

மானுடச் சாதி முழுதுநல் வழிபடும்;

மானுடச் சாதி ஒன்று; மனத்திலும்

உயிரிலும் தொழிலிலும் ஒன்றே யாகும்.

தீ:- பரத கண்டத்தில் பாண்டிய நாட்டிலே

விரதந் தவறிய வேதியர் குலத்தில்

வசுபதி யென்றோர் இளைஞன் வாழ்கின்றான்.

தோளிலே மெலிந்தான், துயரிலே அமிழ்ந்தான்

நாளும் வறுமை நாயொடு பொருவான்,

செய்வினை யறியான், தெய்வமுந் துணியான்,

ஐய வலையில் அகப்பட லாயினன்.

இவனைக் காண்போம்,இவன்புவி காப்பான்.

காற்று:- உயிர்வளங் கொடுத்தேன்; உயிரால் வெல்க.

இந்திரன்:- மதிவலி கொடுத்தேன்.வசுபதி வாழ்க.

சூரியன்:- அறிவிலே ஒளியை அமைத்தேன்;வாழ்க.

தேவர்:- மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம்,

கவலையற் றிருத்தலே வீடு. களியே

அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம்.

அச்சமே நரகம்; அதனைச் சுட்டு

நல்லதை நம்பி நல்லதே செய்க.

மகனே! வசுபதி மயக்கந் தெளிந்து,

தவத்தொழில் செய்து தரணியைக் காப்பாய்!

காட்சி 2

பாண்டி நாட்டில் வேதபுரம், கடற்கரை; வசுபதி தனியே நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

வசுபதி பாடுகிறான்:-

நிலவுப் பாட்டு

வாராய் நிலவே வையத் திருவே,
வெள்ளைத் தீவில் விளையுங் கடலே,
வானப் பெண்ணின் மதமே,ஒளியே,
வாராய், நிலவே, வா.

மண்ணுக் குள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக் குள்ளே களியைக் காட்டி
எண்ணுக் குள்ளே இன்பத் தெளிவாய்
வாராய், நிலவே வா.

இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வானொளி தன்னை மண்ணிற் காண்பீர்,
துன்பந் தானோர் பேதைமை யன்றே
வாராய், நிலவே, வா.

அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளையுங் களியாய்
வாராய், நிலவே, வா.

$$$

குறிப்பு:

இக்கவிதையின் வடிவமைப்பைக் காண்கையில், முழுமை பெறாத நாடகம் போலத் தெரிகிறது. முழுநீள கவிதை நாடகம் எழுத பாரதி எண்ணி இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s