கவலைகள் பலவிதம்

-டி.எஸ்.தியாகராசன்

              

உலகில் உள்ள அனைவர்கட்கும் கவலைகள் கணக்கற்றுப் பரவி உள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் பலரின் கவலைகளில் நேர்மை இழையோடும், சிலரின் கவலைகள் வினோதமாகவும், சில விபரீதமாகவும் இருக்கக் கூடும் என்பதையும் உணர முடிகிறது என்பதும் உண்மைதான்.  ரஷ்ய அதிபருக்கு மாதங்கள் ஆறாகியும், நம்மை வேண்டாம் என்று வெளியேறிய அண்டை நாடான உக்ரைனை இன்னமும் முழுவதுமாக வசப்படுத்த இயலவில்லையே என்பது ஒரு விபரீதமான கவலைதான். நம் நாட்டில் திரைப்படத்திற்கு பாடல் புனையும் பாடலாசிரியர் ஒருவர் அமெரிக்காவில் 10 பாடல்கள் எழுதித் தந்துவிட்டால் பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி சுகமாகக் குடியேறி மகிழலாம். ஆனால் நம் நாட்டில் ஒரு பாடலுக்கு சில லட்சங்களே ஊதியமாகக் கிடைக்கிறது என்ற  அவரது கவலை வித்தியாசமானதுதான்.

உலகில் மற்ற எந்தத் துறைகளெல்லாவற்றையும் விட மக்களின் இனப் பெருக்க வளர்ச்சித் துறையில் பாரதம் வெகு வேகமாக முன்னெடுத்து வருகிறது என்ற புள்ளிவிவரம் வருங்காலச் சந்ததியினரை ஆபத்திற்குள்ளாக்கும் என்பது விஞ்ஞானிகளின் நியாயமான கவலையாக இருக்கிறது. எல்லாக் கண்டங்களிலும் வாழ்கின்ற மக்களில் பலகோடி மக்கள் ஒரு வேலை சோற்றிற்கும் கூட வழியில்லாமல் இருப்பதும் எவரையும் நிலைகுலையச் செய்யும் நியாயமான கவலைதான்.

குடிக்கும் கூழிற்கு உப்பு இல்லை என்போரும், அருந்தும் பாலுக்கு சர்க்கரை இல்லை என்போரும் கவலையின் ஒரே நேர்க்கோட்டில் நிற்க இயலாது.  அண்மையில் ஆங்கில நாளேட்டில் வந்துற்ற செய்தி ஒன்று படித்தவர்களின் புருவத்தை உயரச் செய்தது எனில் சற்றும் மிகையல்ல!  இந் நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மாத ஊதியம் ரூ. 2.5 லட்சம் உத்தேசமாக நாளொன்றுக்கு ரூ. 8,333ஃ- என்ற அளவில் இருக்கும். பொதுவாக நாளொன்றுக்கு சற்றேறக்குறைய 40 வழக்குகளை விசாரிக்கிறார். இப்படிப் பார்த்தால் வழக்கு ஒன்றிற்கு ரூ. 208 என்றாகிறது. ஆனால் வழங்கறிஞர்கள் பொதுநலன் வழக்கு, கோவிட் தொடர்பான வழக்கு எனில் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை கட்டணமாகப் பெறுகிறார்கள். ஆனால் புகழாய்ந்த வழக்கறிஞர்களான ஏ.எம். சிங்வி, கபில் சிபல், முகுல் ரோத்தகி அல்லது ஹாரிஸ் சால்வே போன்றவர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கட்டணமாகப் பெறுகிறார்கள்.  நீதிபதிகள் மறுநாள் விசாரணைக்கு வரும் வழக்கில் கோப்புகளை சிறிதும் மனச்சலனமின்றி முதல் நாள் இரவு பொழுதைச் செலவிடுவார்கள். ஆனால் ஒரு வழக்கின் அடிப்படையில் ஊதியம் ரூ. 208 மட்டுமே!

புகழாய்ந்த வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தின் முன்வைக்கும் தனது வழக்கின் வெற்றிக்கு உத்தரவாதம் தர இயலாத நிலையில் பல லட்சங்களை கட்டணமாகப் பெறுகிறார் என்பது நாளிதழ் செய்தியாளரின் அதீதக் கவலை. 

மேலும் பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள் தீர்ப்பாய அமர்வுகளில் ஒரு நாளுக்கு சில மணிநேரங்கள் மட்டுமே செலவிட்டு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருவாய் ஈட்டுகிறார்கள். ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற நீதிபதிகள் தங்களது கருத்துரைகளுக்கு ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஊதியமாகப் பெறுவார்கள். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆங்கில நாளிதழின் நிருபருக்கு தகவலாகச் சொல்லும் போது “நான் மாதம் ஒன்றிற்கு மூன்று முதல் நான்கு வழக்குகளில் கருத்துரைப்பிற்காக ரூ. 30 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை ஊதியமாகப் பெறுகிறேன். நீதிபதியாகப் பணியாற்றும் போது நினைத்துக்கூட பார்க்க இயலாததது, நான் ஒய்வு பெற்றபோது பெற்ற பிராவிடன்பண்டு தொகையைவிட அதிகமாக கடந்த இரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நிர்ணயச்சட்ட அமர்வுகளின் கருத்துரைக்க வருவாயாக ஈட்டி வருகிறேன்  இதனால் நான் பல அறக் கொடைகளை  வழங்கி வருகிறேன்” என்றார்.

நாளிதழின் நிருபர் தன் பொருளாதாரக் கவலையில் மூழ்கியிருப்பார் என்பது திண்ணம். இதைப் படிக்கும் பலருக்கும் அவரவர் தன் வருவாய், பொருள் பெருக்கும் வழிகள் குறித்தான இயல்பான கவலைகள் எழவே  செய்யும்  என்பது வெள்ளிடைமலை. ஆனால் அன்றைக்கு விடுதலைப் போராட்டக் களத்தில் தியாகத் திருவுருவாய் வாழ்ந்த பலரின் கவலையெல்லாம் நாட்டின் விடுதலை பற்றியே இருந்தாலும், தன் கணவரின் வழக்கில் தக்க நீதி கிடைக்க போராடிய உத்தமி ஒருவர் பத்திரிகை வாயிலாக தன் கவலையை வெளிப்படுத்தி நிதி கேட்ட செய்தி எவர் மனதையும் உருக்கச் செய்யும் என்பதில் இருவித கருத்துகள் இருக்க முடியாது.

பாரதத்தை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேய அரசுக்கு எதிராக பலவகையாலும் போராடிய மாநிலங்கள் வரிசையில் வங்காளமும், மகாராஷ்டிரமும் முன்னிலை வகுத்தன. தமிழ்நாட்டு மகாகவி பாரதி வார்த்தைகளில் சொன்னால் “தூங்குமூஞ்சி” மாகாணமாக இருந்தது. இந்த அவப்பெயரைத் துடைக்க வீறுகொண்டு எழுந்த வீரர்தாம் தமிழ்நாட்டின் தென்கோடியில் செல்வக் குடும்பத்தில் தோன்றிய வ.உ.சிதம்பரம் பிள்ளை. ஆங்கில அரசை பொருளாதார ரீதியில் வீழ்த்த என்னதான் சுதேசி இயங்கங்கள் திட்டம் தீட்டினாலும் அற்றை நாளில் பெரும் மூலதனம் திரட்ட இயலாத நிலையில் மெழுகுவர்த்தி, வளையல், கொண்டை ஊசி, தீப்பெட்டி, பீங்கான், துணிவகைகள் உற்பத்தி என்ற அளவிலேதான் இருந்தது.  இக்காலைதான் ’பிரிட்டிஷ் இந்தியா ஸ்கீம் நாவிகேஷன் கம்பெனி’யை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி தூத்துக்குடிக்கும், கொழும்பிற்கும் கப்பல் போக்குவரத்தை நடத்தினார் வ.உ.சி. பாரதம் முழுவதும் இவரது துணிவை ஏறிட்டுப் பார்த்து வியந்தது. தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பட்ட வ.உ.சி.யின் வீர உணர்ச்சி பொங்கும் பேச்சும், தூத்துக்குடி ’கோரல்’ மில் தொழிலாளர்களின் நலனுக்காக இவர் நடத்திய பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும்தான் தென்னக மாவட்டங்களில் சுதந்திரத் தீப்பற்றக் காரணமானது. 

துறவி சுப்பிரமணி சிவாவும் இவருடன் இணைந்ததால் விடுதலை இயக்கம் வேகம் கண்டது. ஆங்கில அரசு வெகுண்டு எழுந்து இருவரையும் கைது செய்தது.  வ.உ.சி, சிவா இருவருக்கும், ராஜத்துரோக குற்றம் சுமத்தி 1908 சூலை 7-ல் நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சிவாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளித்தார். சிவாவை இறந்த ஆடுகளின் ரோமத்தைப் பிரித்தெடுக்கும் கொடுமையான பணியிலும், வ.உ.சி.யை மாடுகளுக்குப் பதிலாக மரச்செக்கினை இழுக்கச் செய்தும்,  எண்ணெய் பிழியும் கொடூர வேலையிலும் ஈடுபடுத்தினர்.

வ.உ.சி. சிறை புகுந்த போது அவரது மனைவி மீனாட்சி அம்மாளின் வயது 19.  இரு மகன்கள், வயதான மாமனார், மாமியார் அண்ணனுக்கு சிறைத் தண்டனை என்று கேட்ட மாத்திரத்திலேயே சித்தம் கலங்கிப் பித்தரான கொழுந்தன்.  தான் சம்பாதித்த அளவற்ற செல்வத்தை பொதுநலன்களுக்கும், ஏழைகளுக்கும் தர்மம் வழங்கிய கொடையில் கர்ணனுக்குச் சமமான கீர்த்தி பெற்ற வ.உ.சி.யின் குடும்பம் வறுமையில் உழன்றது.

கவலைகளின் மொத்த உருவமாக வடிவெடுத்த மீனாட்சி அம்மாள் “என்னிடமிருந்த சிறிய பொருளும் நகைகளும் ஊரார் எங்களுக்கு தந்தனவும் எனது பர்த்தா அவர்களின் கேஸ்களுக்கும், அப்பீல்களுக்கும் எங்கள் சாப்பாட்டுக்குமாக தீர்ந்து போய்விட்டன.  எங்கள் உற்றாரும், உறவினரும் மேலும் மேலும் எங்களளுக்கு கொடுத்து சலித்துப் போனார்கள்” என்று மனம் நொந்து “ நான் எனது மானம் கெடாத கூலி வேலைகள் செய்யவும் தயார்” என்றார்.

சென்னை உயர்நீதிமன்றம் வ.உ.சி.யின் மேல்முறையீட்டில் இரட்டை ஆயுள் தண்டனையை 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக்க் குறைத்தது.  ஆனால் ராஜதுரோகக் குற்றத்தை உறுதி செய்தது. இதனால் வழக்கறிஞர் உரிமத்தை திரும்பப் பெற முடியவில்லை. வ.உ.சி.யின் குடும்பம் முற்றிலும் வறுமையில் வாடுவதைக் கண்ட சுவாமி வள்ளிநாயகம் கொழும்பு என்.டி. செட்டியாரின் ஆலோசனையின் வண்ணம், தென்னாப்பிரிக்கா – டர்பனில் வசிக்கும் சி.வி. பிள்ளைக்கு கடிதம் எழுதினார்.

சி.வி.பிள்ளை டர்பன் இந்தியன் சொசைட்டி மூலம் ரூ. 30-ம் இம்பீரியல் சிகார் மானுபாக்கசரிங் கம்பெனியின் உரிமையாளர்களின் உதவியோடும் ரூ. 363-11-0 பணத்தையும் திரட்டி அனுப்பினார். பின்னர் சிதம்பரம் நா.தண்டபாணி பிள்ளையின் சகலரான வேதிய ப்பிள்ளை பற்றி வ.உ.சி. ‘சாந்திக்கு மார்க்கம்’ என்ற தனது நூலின் முன்னுரையில் (1932)  “1908 ஆம் வருஷம் ஜுலை மாதம் முதல் 1912 ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முடிய என் மனைவி மக்களுடைய வாழ்க்கைச் செலவுகளுக்கு மாதந்தோறும் ரூபா 50-க்கு மேலாகத் தென்னாப்பிரிக்காவிலிருந்து அனுப்பிக்கொண்டிருந்தும் அதற்குப் பின் எனக்கு தந்தி மணிஆர்டர் மூலமாக முதன்முறை ரூ. 500-ம் இரண்டாம் முறை ரூபா இரண்டாயிரமும் அனுப்பியும், மூன்றாம் முறை ரூபா இரண்டாயிரமும் தங்கக் கைக்கடிகாரமும் முதலியனவும் நேரில் கொடுத்து உதவிய எனது மெய் சகோதரர் தஞ்சை ஜில்லாத் தில்லையாடி திரு.த.வேதியப் பிள்ளை அவர்கட்கு யான் நன்றியறிதலுள்ளவனாயிருக்கிறேன். எனது நன்றியறிதலின் ஓர் அடையாளமாக அவர்கள் பெயரை முன்னரே என் இரண்டாவது மகளுக்கு வேதவள்ளி என்றுயிட்டுள்ளேன் என்கிறார்.

இப்படியெல்லாம் பிறரின் உதவியோடு வாழ்ந்த வ.உ.சி.க்கு தாயக மண்ணில் சிறிய உதவிகள் கூட கிடைக்காத நிலையில் தான் வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாள்  ‘இந்தியா, சூர்யோதயம்’ போன்ற பத்திரிகைகளில் “சகோதர சகோதரிகளே, என் கணவராகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட ராஜதுரோகக் குற்றத்தை ரத்து செய்வதற்காக அவர்களது விருப்பத்தின் பேரிலும் பொது ஜனங்களது விருப்பத்தின் பேரிலும் ஹைகோர்ட்டில் அப்பீல் நடந்ததும், கோர்ட்டார் ஆயுள் வரை விதித்திருந்த தீவாந்திரத்தை 6 வருஷமாக மாற்றியதும் நீங்கள் யாவரும் அறிந்திருப்பீர்கள்.  ஆனால் கோர்ட்டாரும் அவர்கள் குற்றவாளி என்றே உறுதி செய்து விட்டார்கள். இது விஷயத்தைப் பற்றி பல பெரிய வக்கீல்களிடம் கேட்டதில் எனது நாயகர் நிரபராதி என்று ஸ்தாபிக்கப் போதுமான ஆதாரங்கள் இருப்பதாயும் மேலே இங்கிலாந்து பிரிவீக் கௌன்ஸீலுக்கு ஆப்பில் செய்வதால் அது ஸாதமாகமென்றும் சொல்லுகிறார்கள். ஆதலால் நான் பிரிவீக் கௌன்ஸீலுக்கு அப்பீல் செய்யப் போகிறேன். அதற்கு சுமார் 10,000 ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்படுகிறது. ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் மனமிரங்கி தங்களால் இயன்றியதை என் பெயருக்கு அனுப்பி என்னை ஆதரிக்க கேட்டுக்கொள்கிறேன்”  என்று விளம்பரம் செய்தார்.

இதற்கிடையில் தென்னாப்பிரிக்காவில் தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட 347 ரூபாயும் 12 அனாவும் காந்தியடிகள் மூலமாக வ.உ.சி.க்கு அனுப்பப்பட்டது.  ஆனால் என்ன காரணத்தாலோ இந்தத் தொகை வ.உ.சி.க்கு வரவில்லை.  இதனால் வ.உ.சி. காந்தியிடம் கடிதம் வாயிலாக பலமுறை இந்த தொகை குறித்து கேட்கலானார். ஆனால் யார் யார் பணம் தந்தார்கள் என்ற முழு விவரமும் தெரியாததால் வ.உ.சி.யின் பல வேண்டுகோள்களையும் ஏற்கும் நிலையில் காந்தி இல்லை.

ஒரு கடிதத்தில் “இந்த நிதியை வழங்கியவர்களின் பெயர்களை நான் அறிய மாட்டேன். அவர்கள் சார்பில் அந்தப் பணம் என் நண்பர் ஒருவர் மூலமாக என்னிடம் தரப்பட்டது. அது தங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்றே இவ்வளவு காலமாக கருதியிருந்தேன். அந்தப் பணம் தங்களுக்குத் தேவையில்லா விட்டாலும் கூட இதுபற்றி விசாரித்து பணம் தந்தவர்கள் பற்றிய செய்திகளைக் கண்டறிவேன்” என்று அகமதாபாத்திலிருந்து காந்தி வ.உ.சி.க்கு கடிதம் எழுதினார்.

இதற்கு வ.உ.சி. எழுதிய பதில் கடிதத்தின் நிறைவு பகுதியில் “கடந்த இரண்டு ஆண்டு காலமாக சில தென்னாப்பிரிக்கா நண்பர்கள் தயவே என்னையும் என் குடும்பத்தையும் காத்து வருகிறது என்பதை நான் ஏற்கனவே தங்களிடம் நேரில் தெரிவித்துள்ளேன். இந்நிலையில் எனக்காகத் தரப்பட்ட பணத்தை எனக்காகத் தரப்பட தயாராய் இருக்கும் பணத்தை வேண்டாம் என்று சொல்ல எக்காரணமும் இல்லை. இப்போது இருக்கும் நிலையில் அந்தப் பணம் வேண்டாம் என்று சொல்வேனேயானால் அது நான் எனக்கும் என் குடும்பத்திற்கும் இழைக்கும் தவறேயாகும். ஆதலால் தாங்கள் தங்களுக்கு வசதிப்பட்டபோது அன்போடு அப்பணத்தை அனுப்பி உதவ வேண்டுகிறேன்.” என்று பதில் எழுதினார்.

வ.உ.சி.யின் பலமன்றாடல் கடிதங்களுக்குப் பிறகு ரூ. 347-15-0  பணத்தை 1916 பிப்ரவரியில் காந்தியடிகளிடமிருந்து வரப்பெற்றார் என்பது த.வேதியப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் மூலம் அறிய முடிகிறது என்பதை, வரலாற்று ஆய்வறிஞர் திரு. ஆ.இரா.வெங்கடாசலபதி  எழுதி,  ‘வ.உ.சி.யும் காந்தியும்- 347 ரூபாய் 12 அனா’என்ற தலைப்பில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்த நூலால் அறியலாம்.

இதில் நூலாசிரியரின் நியாயமானதொரு கவலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். செல்வமும் செல்வாக்கும் உடைய குடும்பத்தில் பிறந்து நாட்டின் விடுதலைக்கான போரில் தனது செல்வம் முழுவதையும் இழந்து சிறையில் துன்புற்று வாடி வறுமையில் சிக்கித் தவித்த வ.உ.சி.யின் பெயர் 100 பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ள மகாத்மா காந்தி தொகுப்பு நூல்களில் ஒருமுறை கூட இடம்பெறாத துர்பாக்கியசாலி. இத்தனைக்கும் வ.உ.சி.க்கும் காந்திக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்து 19 முறை இடம் பெற்றிருக்கிறது என்பதை தனது அரிய ஆய்வு மூலம் கண்டெடுத்து இருக்கிறார்.

அதிர்ஷ்டவசமாக டெல்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திக்கு வ.உ.சி. எழுதிய கடிதம் ஒன்று இன்றும் இருப்பதையும் நூலாசிரியர் குறிப்பிடத் தவறவில்லை. வ.உ.சியின் 150 ஆம் நினைவு ஆண்டில் நூலாசிரியரின் நியாயமான கவலையில் நாமும் பங்கேற்போம்.

  • நன்றி: தினமணி (16.08.2022)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s