தமிழ்த்தாயைக் காத்த தனயன்

-பத்மன்

தமிழ்த் தாத்தா உ.வே.சா.
(1855 பிப். 19 – 1942 ஏப். 28)

பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?

இன்றைக்கு தமிழ் செம்மொழி என்ற தகுதியோடு துலங்குகிறது என்றால் அதற்கு மூலக் காரணம் இந்த கும்பகோணம் அகத்தியர்தான்.

நமது செந்தமிழ் செம்மொழி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கான பழந்தமிழ் ஆதாரங்கள் வேண்டுமே! அழிவு நிலையில் இருந்த நமது பழந்தமிழ் இலக்கியங்களை ஊர் ஊராய்த் தேடித் தேடிச் சென்று திரட்டி, அவற்றை ஒப்புநோக்கி, பிழை நீக்கி, சாகா வரம் பெற்ற நூல்களாய் அச்சிட்டவர் அந்த நவீன அகத்தியர்.

இப்போது புரிந்திருக்குமே அந்த நவீன அகத்தியர் யார் என்பது?

ஆம்! நமது தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்தான் அவர். இதை நான் சொல்லவில்லை. மகாமகோபாத்யாய பட்டம் பெற்ற உ.வே.சா. அவர்களை வாழ்த்தி 1906-இல் வாழ்த்துப் பா இயற்றியபோது மகாகவி பாரதியார் இப்படிப் பாராட்டியிருக்கிறார்.

“கும்பமுனி எனத் தோன்றும் சாமிநாதப் புலவன்” என்று உ.வே.சா. அவர்களைக் குறிப்பிடும் பாரதி,

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.

– என்று அவரை வாழ்த்தியுள்ளார்.

(அக்கால இன்குபேட்டர் போன்ற) குடத்தில் இருந்து பிறந்தவர் என்று கூறப்படுவதால் அகத்தியருக்கு  ‘கும்பமுனி’ என்று பெயர். கும்பமேளாவை ஒத்த மகாமகம் நடைபெறும் குடந்தை நகரமும் கும்பத்தில் இருந்து தோன்றியதால் அதற்கு கும்பகோணம் என்று பெயர். அந்த கும்பகோணம் அருகே சூரியமூலை என்ற சிறிய கிராமத்தில் 1855-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி தோன்றியவர் சாமிநாதர்.

அவரது தந்தையின் பெயரான உத்தமதானபுரம் வேங்கடசுப்ரமணியன் என்ற பெயரையும் சேர்த்து உ.வே.சாமிநாத ஐயர் என்று அழைக்கப்பட்டார். சூரியமூலையில் பிறந்த அவர்தான், மூலை முடுக்குகளில் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து, அதன் புகழொளியை உலகெங்கும் பாய்ச்சினார். அதனால்தான்  ‘தமிழ் வாழும் காலம் முழுவதும் புலவர்களால் பாராட்டப்பட்டு அமரனாக வாழ்வாய்!’ என்று மகாகவியால் உ.வே.சா. வாழ்த்தப்பட்டார். 

அப்படிப் புகழும் அளவுக்கு என்ன செய்தார் உ.வே.சா?

ஓலைச் சுவடிகளிலும், ஏடுகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் பதுங்கியிருந்த பழந்தமிழ் இலக்கியங்களையும் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து, நூலாகப் பதிப்பிப்பதற்கு தம் வாழ்நாளில் ஏறத்தாழ 60 ஆண்டுக் காலத்தை மட்டுமின்றி, தன் சொத்துகளையும் செலவழித்தவர் உ.வே.சா.  தீயிலும், ஆற்று வெள்ளத்திலும், அருமை தெரியாமலும் அழிவின் விளிம்புக்குச் சென்ற பழந்தமிழ் இலக்கியங்களை அச்சு வாகனமேற்றி அழகு பார்த்தார் உ.வே.சா.

இவ்வாறாக 90 பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார் உ.வே.சா. அவற்றுள் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களும், திருமுருகாற்றுப்படை தொடங்கி மலைபடுகடாம் வரையான பத்துப்பாட்டு நூல்கள் முழுவதும், புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு, குறுந்தொகை ஆகிய எட்டுத்தொகை நூல்களும் அடங்கும். இதுபோக புறப்பொருள் வெண்பா மாலை, நன்னூல் உரை போன்ற இலக்கண நூல்களையும், பல்வேறு புராணங்கள், சிறு காப்பியங்கள் உள்ளிட்ட நூல்களையும் அவர் தேடிக் கண்டுபிடித்து அச்சு நூல்கள் ஆக்கியுள்ளார்.

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் சீடராகத் தமிழ் பயின்ற  உ.வே.சா., கும்பகோணம் அரசுக் கல்லூரியிலும் பின்னர் சென்னைக் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் இடைக்காலத் தமிழிலேயே அதிகத் தேர்ச்சி பெற்றிருந்த உ.வே.சாமிநாதையரை சங்கத் தமிழின்பால் நாட்டம் கொள்ளச் செய்ததோடு, அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிப்பதை தமது வாழ்வின் லட்சியமாகவும் அவர் ஆக்கிக் கொள்ள வழிவகுத்தது, சேலத்தில் இருந்து பணிமாற்றலாகி வந்திருந்த அரசு அதிகாரியும் தமிழன்பருமான இராமசாமி முதலியார் என்பவருடனான சந்திப்புதான். இராமசாமி முதலியார் கொடுத்த கையெழுத்துப் பிரதியான ‘சீவக சிந்தாமணி’ தான் உ.வே.சா. அவர்களின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது.

1874-ஆம் ஆண்டு தொடங்கி, தாம் மறைந்த 1942 ஆம் ஆண்டு வரையில் தமிழ் நூல்களை அச்சேற்றும் அரும் பணியை அயராது செய்து வந்தார் உ.வே.சா. அவரது இத்தமிழ்த் தொண்டில் சி.வை.தாமோதரம் பிள்ளை என்ற தமிழறிஞரும் உதவிகரமாகச் செயல்பட்டார்.

சங்கத் தமிழ் நூல்களை பொக்கிஷமாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தந்தது மட்டுமின்றி, இன்றைக்குத் தமிழிசைத் தழைத்திடவும் காரணமாக அமைந்தவர் உ.வே.சா. சுமார் 4 நூற்றாண்டுக் காலமாக தமிழ்நாட்டில் தெலுங்கு, சம்ஸ்கிருதக் கீர்த்தனைகளே கோலோச்சி வந்த நிலையில், உ.வே.சா. தேடிக் கண்டுபிடித்து அச்சேற்றிய சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் மூலம், அவற்றில் காணப்படும் தமிழின் பழங்காலப் பண்கள் மீண்டும் வெளியுலகைப் பார்த்தன; உலகைத் தம் வசம் மீண்டும் ஈர்த்தன.

ஆக, உ.வே.சா. என்பதற்கு பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.  

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s