-ஆடிட்டர் ச.சிவசுப்பிரமணியன்
திரு. ச.சிவசுப்பிரமணியன் கணக்குத் தணிக்கையாளர். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் தலைவர். பல்வேறு ஆன்மிக அமைப்புகளிலும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலும் செயல்படுபவர். 2சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்ட அன்னாரது கட்டுரை இது…

இந்தியா வலிமை பெற்ற நாடாக, தனது புராதனப் பெருமையை மீண்டும் பெற்றுத் திகழ வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் விரும்பினார்.
மக்களிடம் அறிவும் அன்பும் மட்டும் இருந்தால் போதாது. சமுதாய நலனுக்குப் பயன்படும் ஆற்றலும் இருக்க வேண்டும். இந்த அறிவு, அன்பு, ஆற்றல் ஆகிய மூன்றும் சேர்ந்த வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டிலுள்ள கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, அவர்கள் பெற்றிருக்கும் கல்வியின் உயர்ந்த தரம், பயன்படுத்தும் விதம், முறையான உழைப்பு ஆகியவற்றைப் பொறுத்திருக்கிறது. ஆம், கல்வி கற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு மாபெரும் லட்சியத்திற்கு அர்ப்பணித்துக்கொண்டால் தான், அந்த வாழ்க்கைக்கு ஒரு மதிப்பு உண்டு என்று சுவாமி விவேகானந்தர் கூறுவார்.
ஒரு தனிமனிதனாகிய எனக்கு அவ்வளவு மதிப்பா? உலகத்தில் நான் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா? என நீ சந்தேகப்படலாம். கேள் ஒரு கதையை.
ஒரு கிராமம். அதன் ஜமீன்தார் ஒருவர் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர். அவர் தினமும் உறங்கப்போகும் முன் இந்தியாவின் வரைபடத்தை வைத்து தியானம் செய்வார். ஒரு நாள் அவருடைய 3 வயதுக் குழந்தை விளையாட்டாக அதைக் கிழித்தெறிந்தது. ஒருங்கிணைந்த பாரதம், சிறு குழந்தையின் விளையாட்டால் சிதறிக் கிடந்தது தரையில்!
சிதறிய பாகங்களைச் சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தார். கனத்த உள்ளத்துடன் தூங்கப் போனார். ஆனால் தூக்கம் வரவில்லை. ஒரே சிந்தனை, புதிய இந்தியாவை எப்படிப் படைப்பது?
காலையில் எழுந்தார். சிதைந்த வரைபடத்தை இணைக்க முயன்றார். தோல்வி தான். நான்கு நாட்கள் இவ்வாறு சென்றன. 5-ஆம் நாள் வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வந்தபோது அவரின் மேஜை மீது ஒருங்கிணைந்த இந்தியா. அவருக்கு ஒரே மகிழ்ச்சி, வியப்பு! யார் உருவாக்கினார்கள் இந்தப் புதிய இந்தியாவை?
வேலைக்காரன் மேஜை மீது காப்பியை வைத்தான். அவன் ஜமீன்தாரிடம் “நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து மனசு கேட்கலை ஐயா, சரி நாம் ஏதாவது செய்யலாமென எடுத்தேன். சேர்த்தேன். இந்தியா ஒன்னாயிடுத்து”.
ஜமீந்தார் அவனிடம், “எந்த மாகாணம் எங்கு இருக்கிறது என்ற பூகோள அறிவு இல்லாத நீ எப்படி இதை ஒன்று சேர்த்தாய்?” என்று கேட்டார்.
அதற்கு வேலைக்காரன், “அது அப்படியில்லீங்க, ஒரு துண்டுக் காகிதத்தில் ஒரு மனிதனுடைய முகத்தைப் பார்த்தேன். மற்ற துண்டுகளையும் திருப்பிப் போட்டேன். கை, கால், தலை, இடுப்பு என்றிருந்தது. மனிதனை ஒன்றுசேர்க்க என்னங்க கஷ்டம்? சேர்த்து ஒட்டினேன். சரியாக அமைந்தது. எதேச்சையாக திருப்பிப் பார்த்தேன். அது என்னவோ, நம் நாடு ஒன்றாகச் சேர்ந்திருந்தது” என்றான்.
ஆம் நண்பர்களே, நல்ல மனிதர்கள், தேச சிந்தனையுள்ளவர்கள் ஒருங்கிணைந்தால் புதிய பாரதம் எனும் கனவு முழுமை பெறும்.
“யதா ராஜா ததாபிரஜா” – அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி- என்ற பழமொழி உள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் தர்மத்திலும், ஆன்மிகத்திலும் நம்பிக்கை கொண்டிருந்தால் தான் மக்களும் அவ்வாறு நம்பிக்கை கொண்டு ஒழுகுவார்கள். ஆகவே மக்களின் உயர்வை உத்தேசித்து நமது நாட்டில் உள்ள நல்ல மனம் உள்ளவர்கள், பொருளாதாரத் தேவையினால் பாதிக்கப்படாதவர்கள், ஒவ்வொரு துறையிகளிலும் அறிவும் ஆற்றலும் பெற்றவர்கள் ஒன்றிணைந்து புதிய பாரதம் படைக்க, இந்தியா உலகில் தலைசிறந்து விளங்க, சுவாமிஜியின் கனவு நிறைவேற அவரது 150- ஆம் ஆண்டு சமயத்தில் முயற்சி செய்ய வேண்டும்.
இந்தியா குடியரசான போது அரசியல் நிர்ணய சபை , நாட்டை ஆள மேல் சபை , கீழ் சபை என்று நிர்வாக முறைகளை அமைத்தது. மத்தியிலும் மாநிலங்களிலும் கல்வியாளர்களும் , சமூக சேவகர்களுமான மேலோர் சபையாக ராஜ்யசபா, மக்கள் பிரதிநிதிகள் சபையாக லோக்சபையும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அரசிற்கு ஆலோசனை சொல்லும் நிலை மாறி , அரசியல்வாதிகள், பண முதலாளிகளின் கைகளில் சிக்கிக்கொண்டு இரண்டு சபைகளும் ஒரே வேலைகளைச் செய்து வருவதால் நாட்டின் முன்னேற்றப் பாதை தடைபட்டுள்ளது.
இந்தியாவின் ஏழை எளியவர்களுக்காக, அடக்கி ஆளப்பட்டவர்களுக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக, ஆன்மிக சாதனைகள் மறுக்கப்பட்டவர்களுக்காக , அனைவரது உள்ளம் குழைந்து , நெகிழ்ந்து, மக்களையெல்லாம் மேம்படுத்தாவிட்டால், தர்மம்- அறம் என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? கல்வியாகட்டும் , தொழில்துறையாகட்டும், அரசியாலாகட்டும் – இவை எவற்றிலும் கை மேலோங்கியவர்கள் மக்கள் அனைவரையும் வளரவிடாமல் நசுக்கித் தான் வைத்திருக்கிறார்கள். இப்படி நசுக்கப்பட்டவர்களுக்கெல்லாம் விடுதலை அளிக்கப்பட வேண்டும்.
பொருளாதார பலமும் அதிகார பலமும் பெருகிய அசுர ஆட்சியாளர்களாக நமது ஆட்சியாளர்கள் மாறிவிட்டார்கள். அதில் சேர்ந்த நல்லவர்களும் விரைவிலேயே கறை படிந்து விடுகிறார்கள்.
கல்வி வியாபாரமாகிவிட்டது. விளையாட்டு பணம் சம்பாதிக்கும் கேந்திரமாகிவிட்டது. செல்வம், பெரும்பாலும் தவறானவர்கள் கையில் உள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறிவரும் சூழ்நிலை உருவாகிவிட்டது. ஒழுக்கம், நேர்மை, பண்பு, கலாச்சாரம் ஆகியவை சீரழிக்கப்பட்டு வருகின்றன.
இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் நல்லவர்களாகவும், அன்புள்ளம் கொண்டவர்களாகவும், நெறி சார்ந்த வாழ்வில் நம்பிக்கையுடையவர்களாகவும் இருப்பது இந்த மண்னில் ஆன்மிகம் வேறூன்றியுள்ளது என்பதனை நினைவு படுத்துகிறது. எனவே நம்பிக்கை பிரகாசாமாக இருக்கிறது.
இந்த மண்ணில் மனிதனுக்கு மனிதன் உதவி செய்து கொள்வது, அன்னதானம், கல்வி தானம், மருத்துவ சேவைகள் தனிமனிதர்களாலும், பொதுசேவை அமைப்புகளாலும் செய்யப்பட்டு வருவதால் தான், இன்னமும் ஆட்சியாளர்களின் சுயநலம், ஒழுக்கக்கேடு, வீணாகும் மக்களின் வரிப்பணம், அலட்டல் விளம்பரம், அனாவசியமான அரசியல்வாதிகள் பாதுகாப்பு, வெளிநாட்டுப் பயணங்கள் இவற்றால் வீணடிக்கப்படுவது மற்றும் பல இன்னல்கள் முழுவதுமாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனாலும், தவறுகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். மக்களை வழிநடத்த, உலகுக்கே வழிகாட்ட, சுவாமி விவேகானந்தரின் கனவு நிறைவேற, ஒரு மகாசபை ஆன்றோர், நல்லோர், தேசபக்தர்கள் கொண்ட சபை ஏற்படுத்தப்பட்டு, மக்கள் முன்பு ஆட்சியாளர்களின் தவறுகள், குறைகள் சுட்டிக்காட்டப்பட்டு, நல்ல வழிமுறைகள், ஆலோசனைகளை முன்வைத்தும் நடைபெற வேண்டும்.
அச்சபையில் உள்ள அங்கத்தினர்கள் அனைவரும் சுயநலம், பொறாமை அற்றவர்களாகவும், ஒழுக்கம் உடையவர்களாகவும், துவேஷமற்றவர்களாகவும் இருக்க பிரக்ஞை செய்து கொள்ள வேண்டும். சுவாமி விவேகானந்தர் விடுத்த “எழுமின், விழுமின், குறிசாரும் வரை நில்லாது செல்மின்” அறைகூவலை மறக்கக் கூடாது.
இதோ நமக்காக சுவாமி விவேகானந்தர் அறைகூவுகிறார்:
எல்லா ஆற்றல்களும் உங்களுக்குள் இருக்கின்றன. உங்களால் எதையும் செய்ய முடியும் என்று நம்புங்கள். நீங்கள் பலவீனர்கள் என்று எண்ணாதீர்கள். நமது ஆற்றல், நிறைவு , ஞானம் அனைத்தும் எல்லையற்று வளர்ந்தே தீரும். உங்களிடம் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துங்கள். மற்றவை அதைச் சுற்றி இணையாக ஒழுங்குபடுத்தப்படும். எழுந்திருங்கள், விழித்திருங்கள், இனியும் உறங்காதீர்கள். எல்லாத் தேவைகளையும் துன்பங்களையும் தீர்க்கும் ஆற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது. இதை நம்புங்கள், அந்த ஆற்றல் வெளிப்படும். நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, இறைவனிடத்தில் நம்பிக்கை. இதுவே மகோன்னதத்தின் ரகசியம். லட்சியத்தில் உறுதியும், தூய்மையான நோக்கமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த இரண்டையும் பெற்றவர்கள் சிலராகவே இருந்தாலும் அவர்கள் எல்லாத் தடைகளையும் கடந்து நிச்சயமாக முன்னேறுவார்கள். ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு முயற்சி செய்யாமல் எதையாவது சாதிக்க முடியுமா? பின்னால் பார்க்க வேண்டாம், முன்னோக்கிச் செல்லுங்கள். பலவீனமாகிய மனோவசியத்திலிருந்து விடுபடுங்கள். எழுந்து நின்று போர் செய்யுங்கள். ஓரடி கூடப் பின்வாங்கக் கூடாது. அதுதான் கருத்து. எது வந்தாலும் சரி. நட்சத்திரங்கள் பெயர்ந்து விழட்டும், உலகம் முழுவதும் நம்மை எதிர்த்து நிற்கட்டும், மரணம் என்பது உடையை மாற்றிக்கொள்வது தான். அதை உணர்ந்து போராடுங்கள். வெற்றி வேண்டுமானால் இடைவிடாத முயற்சியும் தீவிர சங்கல்பமும் உங்களிடம் வேண்டும். சங்கல்பம் வலிமையானது . அதற்கு முன்பு எல்லாம் அடிபணிந்தே ஆக வேண்டும். ஏனெனில் அது கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது. தூய ஆற்றல் மிக்க சங்கல்பம் எல்லாம் வல்லது. தூயவன், துணிச்சலானவன், அவன் எல்லாவற்றையும் சாதிப்பான். இந்த உலகம் பெரியதொரு பயிற்சிக்கூடம். நம்மை வலுப்படுத்திக்கொள்வதற்கு நாம் இங்கே வந்திருக்கிறோம். வெறும் கூட்டத்தால் ஆவது ஒன்றுமில்லை. முழு உள்ளத்துடன் உழைப்பவர்களாக, மனப்பூர்வமான ஈடுபாடு உடையவர்களாக ஆற்றல் வேகம் படைத்தவர்களாக உள்ள ஒரு சிலர், ஓராண்டில் பெரும் பாமரக்கூட்டமானது ஒரு நூற்றாண்டில் சாதிப்பதை விட அதிகமாகச் சாதித்து விடுவார்கள். உண்மையான துணிவோடு துவக்கப்படும் நல்ல காரியங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகள் அதை ஆரம்பிப்பவர்களின் ஆற்றலைத் தான் அதிகமாக்கும். நமக்கு வேண்டியது- உணர ஓர் இதயம், சிந்திக்க ஓர் மூளை, வேலை செய்வதற்கு வலிய கைகள். வேலை செய்வதற்கு தகுந்த கருவியாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள். இதயத்திற்கும் மூளைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும்போது இதயத்தைப் பின்பற்றுங்கள். நாட்டின் எதிர்கால நம்பிக்கையே உங்களிடம் தான் உள்ளது. என் ஆர்வத் தீயை நீங்கள் உங்களுக்குள் மூட்டிக்கொள்ள வேண்டும். மனப்பூர்மானவர்களாக இருக்க வேண்டும்.
ஜெய்ஹிந்த்!
$$$