ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்

-மகாகவி பாரதி

பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....

இந்த மூன்று மந்திரங்களே கீர்த்தி மிக்க பிரெஞ்ச் அரசாட்சியைப் பாதுகாத்து வருகின்றன. உலகத்தில் மனித சமூஹ முழுமையும் இம் மூன்று பதங்களின் தர்மத்தையே முக்கிய தர்மமாகக் கொண்டொழுகி வரும் காலத்தைத்தான் ஞானிகள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். அந்தக் காலம் விரைவில் வரவேண்டுமென்றே பரமாத்மாவைப் பெரியோர்கள் கைவிடாது தொழுது வருகின்றார்கள்.

ஸ்வதந்திரம்

இவற்றுள்ளே, ஸ்வதந்திரமாவது யாதெனில், ஒவ்வொருவனும் தனது சொந்த நலத்திற்கேனும் பிறர் நலத்திற்கேனும் அனுகூலமான காரியஙக்ளைச் செய்வதில் (அவனுடைய செய்கைகள் மற்றவர்களுக்கு அக்கிரமமான இடையூறுகள் விளைவியாதிருக்கும் வரை) முழு உரிமை பெற்றவனாக, அவனுக்கு எவ்விதமான தடைகளேனும் இமிசைகளேனும் மற்றவர்களினால் ஏற்படக்கூடா தென்ற தர்மம்.

ஒவ்வொருவனும் தனது சுயேச்சைப்படி என்ன வேண்டுமென்றாலும் செய்ய உரிமை பெற்றவனாகுதலே ஸ்வதந்திரத்துவம் என்று சில ஐரோப்பிய ஆசிரியர்கள் கருதுகிறார்கள். ‘ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்’ என்பவர் ஓர் கீர்த்திபெற்ற ஆங்கிலேய ஞானி.

இவர் சொல்லுகிறார்:

‘ஒவ்வொருவனும் தனக்கு இஷ்டமான எந்தச் சொய்கைகளையும் செய்ய ஸ்வதந்திரமுடையவனாகிறான் – அதாவது மற்றவர்களுக்குள்ள அதேவித ஸ்வதந்திரத்தில் அவன் தலையிடுமளவும்’ என்கிறார்.

இதை நாம் அங்கீகரிக்கிறோம். ஆனால், எந்த செய்கைகளையும் என்பதற்கு மாறாக எந்த நற்செய்கைகளையும் என்ற பிரயோகம் வேண்டுமென்பதே நமது கருத்து.

ஏனென்றால், பிறர்களைக் கெடுக்க ஒருவனுக்கு எப்படிப் பாத்தியமில்லையோ அதுபோலத் தன்னைத்தானே கெடுத்துக்கொள்ளவும் பாத்திய மில்லாதவனா யிருக்கிறான்.

விராட்புருஷ வடிவமாகிய ஜனஸமூகமே யஜமானாகும். அதற்கு ஒவ்வொரு மனிதனும் தொண்டனாவான். எவன் அனைவரிலும் சிறந்தபடி அந்தத் தொண்டு புரிகிறானோ அவனே மற்றெல்லோரிலும் சிறந்த ஸ்வதந்திர புருஷனாகிறான்.

‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரர்கள்’ என்று நமது பெரியோர்களால் தொழப்படும் பிரமஞானிக ளெல்லாம் மேலே கூறியபடி முற்றிய தொண்டர்களே யல்லாது வேறல்லர்.

“நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நீ யார் கேட்பதற்கு?” என்று கூறுதல் ஸ்வதந்திர வசனமாக மாட்டாது. தற்கொலை புரிந்துகொள்ள உனக்கு எவ்விதமான உரிமையும் கிடையாது. உனது வாழ்க்கை உன்னுடைய சொந்தமன்று. எனது உள்ளத்திலும் அன்றி மற்றெல்லாச் சராசரங்களிலும் மறைந்து நடனம் புரிகின்ற ஸர்வேசனுக்கே சொந்தமாகும். அவன் உனக்கு இந்த வாழ்க்கையைத் தர்ம பரிபாலனத்துக் குரியதோர் கருவியாகக் கொடுத்திருக்கின்றான். அக் கருவி பயனற்றாதாகும்பொழுது அவனே உடைத்து விடுவான். அதை உடைக்க உனக்குப் பாத்தியதை இல்லை.

இனி, இந்த ஒரு நிஷேதத்தை மட்டிலும் வைத்துக் கொண்டால் மற்றப்படி மேலே ஸ்பென்ஸரிடமிருந்து காட்டப்பட்டிருக்கும் ஸுத்திரம் உயர்ந்ததோர் உண்மை யுடையதாகும்.

அவனவன் தன் தன் தர்மத்தைச் செய்வதில் மற்றவர்கள் பிரவேசிக்கலாகாது. பிராமணர்களுக்கள்ளே ஒருவன் கிறிஸ்து மார்க்கத்திலே சேர்கிறான். அவனால் மற்ற பிராமணனர்களுக்கு எவ்விதமான கெடுதியும் இல்லாத வரை அவனைப் பழிப்பதும், கஷ்ட நிஷ்டூரங்களுக்கு உட்படுத்துவதும் பாவச் செய்கைகளாகும். அவனுக்குச் சாத்தியமென்று தோன்றுவதை அவன் அங்கீகரித்து ஒழுகுவதில் எவனும் தடைசெய்யக் கூடாது. எவருக்கும் கேடு நினைக்காமல் பாரததேச ஜனங்களின் க்ஷேமத்தையே நோக்கமாகக் கொண்டு ஒருவன் பத்திரிகை நடத்துகிறான். அதைத் தடுக்க உத்தேசிக்கும் அதிகாரிகளின் சிந்ததை பாதகச் சிந்தை யாகும். இதுபோலவே மற்றெல்லா விஷயங்களிலும் கொள்க.

இங்கு ஸ்வதந்திர தர்மத்தின் லக்ஷணங் கூறினோம்.

இனி, ஸமத்துவம், ஸகோதரத்துவம் என்ற தர்மங்களைப் பற்றிப் பிரஸ்தாவனை செய்வோம்.

  • இந்தியா: 10.10.1908

$$$

ஸமத்துவம்

முந்திய முறை ஸ்வதந்திரத்தைப் பற்றி எழுதினோம். இனி இரண்டாவதாகிய ஸமத்துவம் என்பதைக் குறித்து ஆராய்ச்சி செய்வோம்.

‘எல்லோரும் சமம்’ என்ற ஓர் கருத்தின் பொருட்டாக ஐரோப்பாவில் நடந்திருக்கும் குழப்பங்கள் ஸாமானியமல்ல. முக்கியமாக, பிரான்ஸ் தேசத்தில் இந்த உண்மையை வழக்கத்திற்குக் கொண்டுவரும் பொருட்டாக எத்தனையோ ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டன. பிரெஞ்சு ராஜ்யத்தின் மஹாக்ராந்தி (பெரும் புரட்சி) இக் கருத்தையே ஆதாரமாகக் கொண்டு தோன்றிற்று.

‘அரசன், குடி, செல்வன், ஏழை, கற்றோன், கல்லாதோன் எனத் தோன்றும் வேறுபாடுக ளெல்லாம் குணங்களை யொட்டிய வேறுபாடுகளே யல்லாது ஆத்மாவை யொட்டிய வேறுபாடுகளில்லை’ யென்று பொதுப்படையாகக் கூறினால் இதை எல்லோரும் ஒப்புக்கொள்ளுவார்கள். ஆனால் வழக்கத்தில் இவ் வுண்மையை முற்றிலும் மறந்து போய்விடுகிறார்கள்.

திரான்ஸ்வாலிலே இந்தியா தேசத்தவன் பொது ரஸ்தா வழியாக நடக்கக்கூடா தென்று சொல்லும் ஆங்கிலேயனும், மலையாளத்திலே சோவச் சாதியானைத் தான் நடக்கும் வாராவதியையே தீண்டாமல் விலகி நிற்கவேண்டு மென்று கூச்சல்போடும் நம்பூரிப் பார்ப்பானும், நூற்றுக்கணக்கான பெண்களைக் கோட்டைக்குள்ளே அடைத்து, அலிகளைக் காவல் வைத்துவிட்டு மனமகிழ்ச்சியோடு வெளியே உலவும் மகமதிய அரசனும் முறையே அந்த இந்தியனுக்கும், அச்சோவனுக்கும், அவ்வந்தப்புர மாதர்களுக்கும், ‘நித்திய, நிர்மல நிர்விகார’மாகிய ஆத்மா உண்டென்பதையே மறந்து நடக்கிறார்கள்.

திருநெல்வேலி ஜில்லா கலெக்டராகிய மிஸ்டர் விஞ்சு, நயினார் குளத்தருகே சிறிய குடில்களில் வாழும் ஏழை ஜனங்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை யறிய மாட்டான்.

எத்தனையோ வீடுகளில் மாமிக்குத் தனது மருமகளும் தன்னைப் போன்ற ஒரு ஸ்திரீ யென்பது ஞாபகமிராது. தாசில்தாருக்குக் கிராமக் கணக்கன் மனிதனென்பது தெரியாது. கிராமக் கணக்கனுக்கு ஏழைக் குடியானவன் மனிதனென்பது தோன்றவே செய்யாது. ஓர் தொழிற்சாலை முதலாளி அச் சாலையிலே கூலி வேலை செய்யும் ஸ்திரீ புருஷர்களையும், தனது யந்திரங்களோடு சேர்த்துக் கணக்கிடுவானே யல்லாது, தன்போன்ற மனித ஜாதியாராகக் கருத மாட்டான்.

‘சூத்ரம் அக்ஷர ஸம்யுக்தம், தூரத பரிவர்ஜயேத’ என்ற மனு எழுதியதாகச் சிலர் நினைக்கிறார்கள். அவ் வசனம் மனுபகவானால் எழுதப்பட்டதன்று. ‘எழுத்துத் தெரிந்த சூத்திரனை நெடுந்தூரத்தில் களைந்து விடுக’ என்ற பொருள் கொண்ட மேற்படி வசன மெழுதியவன் யாவனே யென்றாலும், அவன் சூத்திர ஜாதியாரும் பரமாத்மாவின் அமிசங்களென்பதைக் கனவிலும் எண்ணி யிருக்க மாட்டான்.

திருஷ்டாந்தங்களை ஏன் பெருக்கிக் கொண்டு போகவேண்டும்? மானுஷிக ஸமாஜத்தில் பெரும்பாலும் ஸமத்துவ தர்மத்திற்குப் பங்கங்களே அதிகமாக ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள்ளே சில பங்கங்கள் பொறுக்கக் கூடியவையாகும். சில பொருக்க முடியாதபடி அத்தனை அதர்மஞ் செறிந்தவை யாகும். இவ்வித அதர்ம ஏற்பாடுகளை எதிர்த்து நாசம் செய்ய வேண்டு மென்ற பிரயத்தனம் ஐரோப்பா கண்டத்தில் சென்ற மூன்று நூற்றாண்டுகளாக வெகுமும்மரத்துடன் நடைபெற்று வருகிறது.

கொடுங்கோலரசர்கள் தம்மைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகக் கருதுவதை நீக்கவேண்டுமென்று க்ராம்வெல் (Cromwell) என்ற மஹாபுருஷனுக்கு எண்ண முண்டாயிற்று; எனவே, சார்லஸ் என்ற இங்கிலீஷ் ராஜனுடைய தலை பகிரங்கமாக வெட்டுண்டு வீழ்ந்தது. இது ஒரு தர்மச் செய்கை.

பிரான்ஸ் தேசத்தார்கள் லூயி என்ற ராஜனைக் குடும்பத்தோடு நாசம் செய்தது குரூரத் தொழிலென்று சிலர் நினைக்கக் கூடும். அப்படி நினைப்பது தப்பு.

வேனன் என்ற கொடுங்கோலரசனை ரிஷிகள் வந்து நாசம் செய்து விட்டுப்போன விஷயத்தை ஆரிய வேதங்கள் புகழ்ந்து பாடவில்லையா? பரசுராமன் க்ஷத்திரியர்களை வேரறுக்க முயன்றது பிழையாகுமா?

‘எல்லோரும் ஸமம்’. இது ஸத்தியம். இதை அஸ்திவாரக் கல்லாகக் கொண்டு கட்டப்பட்ட ராஜ்யங்களும், ஸமாஜங்களுமே நிலைத்திருக்கும். மற்றவை சீக்கிரம் அழிந்து போய்விடும். ஆரிய ஜனஸமூஹம் சென்ற 6000 வருஷமாக அழியாமலிருந்தது. இந்தப் பெரிய அற்புதத்திற்குக் காரணமென்ன? அந்த ஜனஸமூஹம் ஸர்வஜன ஸமத்துவத்தைத் தழுவி அமைக்கப்பட்டிருந்தது.

இடைக்கிடையே ஜனங்கள் அவ் வுண்மையை மறந்தபோது ஜனசமூஹம் அசைந்து விழக்கூடிய நிலைமைக்கு வந்து விடும். அப்போது மஹான்கள் வந்து தோன்றி மறுபடியும் தர்ம ஸ்தாபனம் செய்து ஜனசமூஹத்தைக் காப்பாற்றி விட்டுச் செல்வார்கள்.

ஸ்ரீ கவுதம புத்தர், ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் முதலிய ஆரிய ரிஷிகளெல்லாம் மேற்கூறியவாறு தர்ம ஸ்தாபனம் செய்ய வந்தவர்களே யாவர்.

சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஆரிய ஜனசமூஹத்தார், மறுபடியும் ஸமத்துவ தர்மத்தை மறந்து சில பகுதியார் கர்வங் கொண்டு நடக்கவும், மற்றப் பகுதியார் அதிகக் கஷ்டங்களடையவும் நேரிட்டது. எனவே, நமது ஜனசமூஹம் என்ற கோட்டை அஸ்திவார பலம் தளர்ந்து போய் பல இடங்களில் பிளவுகள் உண்டாய் இடிந்தும் தகர்ந்தும், வீழ்ந்து நாசமடைந்து விடும்போலத் தோன்றியது.

அத்தருணத்தில் ஸ்வாமி விவேகாநந்தர் அவதரித்து நமக்கு தர்மோபதேசம் செய்தார். இப்போது அவரைப் பெரும்பாலார் அறியாவிட்டாலும், நாளுக்கு நாள் அவர் செய்துவிட்டுப் போன உபகாரம் பரவிப் பலமடைந்து, நமது ஜனசமூஹத்தை ரக்ஷிக்கவல்லதாகும்.

‘எல்லோரும் ஸமம்’ என்றால், தந்தை சொன்ன கட்டளைக்கு மகன் பணிய வேண்டாம். செங்கோலரசனைக் குடிகள் மதிக்க வேண்டாம். ஆசானை மாணக்கர்கள் பொருட்டாக நினைக்க வேண்டாம். கற்றுணர்ந்த ஞானிக்கும் கல்லாத மிருகத்திற்கும் பேதமில்லை என்பதாகச் சிலர் விபரீதப் பொருள் கொண்டு மேற்படி ஸமத்துவ தர்மத்தை நிந்தனை புரிகின்றார்கள். அப்படி அர்த்தமில்லை.

எல்லோரும் ஈசனுடைய அமிசமென்றால், நாம் குருவைத் தொழாமல் குடித்து, திருடி, காமத்திலுழன்று, கொலைத் தொழில் செய்யும் ஓர் விலங்கொத்த மனிதனைத் தொழவேண்டு மென்று பொருள் கொள்ளுதல் பொருந்துமா?

ஸகல ஜனங்களும் லக்ஷியத்திலே ஸமமாவார்கள். லக்ஷணத்திலே தார தம்மியமுண்டு; தாரதம்மியங்களை நாம் ஒப்புக்கொண்டே நடக்கவேண்டும்.

ஆனால், அனாவசியமான நிஷ்டூரங்களுக்கு இடந்தரலாகாது. தாரதம்மியம் ஸ்தூலம்; ஸமத்துவம் ஸுஷ்மம்; தாரதம்மியம் மேல் தரையைச் சேர்ந்தது; ஸமத்துவம் ஆழ்மையி லுள்ளது. தாரதம்மியம் க்ஷணபங்குரமாகும். ஸமத்துவம் நித்தியமானது. தாரதம்மியம் செயற்கையால் ஏற்படுவது; ஸமத்துவம் இயற்கையி லுள்ளது. தாரதம்மியத்தைக் கவனிக்க வேண்டும்; ஸமத்துவத்தை ஆராய்ந்தறிந்து கொள்ள வேண்டும். இதை மற்றொரு தடவை திருஷ்டாந்தங்களுடன் விவகரிப்போம்.

  • இந்தியா: 24.10.1908

$$$

சகோதரத்துவம்

நாம் முன்னமே ஸவதந்திரம், ஸமத்துவம் என்ற தர்மங்களைப் பற்றி எழுதிவிட்டோம். மூன்றாவது தர்மமாகிய ‘ஸஹோதரத்துவம்’ என்னவென்பதை இங்கு ஆராய்ந்து பார்ப்போம்.

ஜனங்களின் க்ஷேமத்திற்கும் அபிவிர்த்திக்கும் இன்றியமையாத இம் மூன்று மூலதர்மங்களில் முற்கூரிய இரண்டும் சட்ட திட்டங்களால் ஸ்தாபிக்கப்படக் கூடயவையாம். அதாவது பறையனும் பிராமணனும் ஆட்சி முன்னிலையில் ஸமம் என்ற சட்டங்கள் ஏற்படுத்தலாம். பறையன் திருடினாலும், பார்ப்பான் திருடினாலும ஒரே குற்றந்தான் என்றும் அதற்கு ஒரே தண்டனைதான் என்றும் சட்டம் சொல்லும்.

ஆனால் ஜனங்களுக்குள் ஸகோதரத்துவம் ஏற்பட வேண்டுமானால், அதற்காகச் சட்டங்களையும் விதிகளையும் உற்பத்தி செய்வதாற் பயனில்லை. ராஜாங்க விதிகாளல் சகோதரத்துவத்தை உண்டுபண்ண முயல்வது நரிக்கொம்பைத் தேடி அலைவதை யொக்கும்; சஹோதரத்துவத்தை ஜனங்களில் ஒருவருக்கொருவர் அனுசரித்து வர, சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் ஸ்தாபிக்க ஏற்பட்ட சட்ட திட்டங்கள் உதவியாய் இருக்கலாம்.

சகோதரம் என்ற வார்த்தை சக உதரம் என்ற இரண்டு சமஸ்கிருத பதங்களாலானது ‘சக’ என்றால் ஒப்பான என்றும், சகோதரரர்கள் என்றால் ஒரே இரக்தத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள்படும். மனிதர்கள் நிறத்தாலும், சாமுத்திரிகா இலக்ஷணங்களாலும், உடையாலும், நடையாலும், பாக்ஷையாலும், சமயத்தாலும் வேறுபட்டிருப்பினும் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான்.

கடவுள் முன்னிலையில் ஏற்றத் தாழ்ச்சி யில்லாமலே நாம் நடத்தப்படுவோம். நிற வித்தியாசம் சீதோஷ்ணத்தால் உண்டாகிறது. உஷ்ண பிரதேசங்களில் உள்ளவர்கள் கறுத்தும் குளிர்ச்சியான விடங்களில் வசிப்பவர்கள் வெளுத்தும் இருப்பார்கள். சாமுத்திரிகா இலக்கண பேதங்களும் சீதோஷ்ணத்தையும் செய் தொழிலையும் ஆகாராதிகளையும் பொறுத்தே ஏற்படுகின்றன. பரம்பரையாய்ப் பல்லக்குத் தூக்கிப் பிழைப்பவர்களுக்குக் கால்கள் உறுதியாயும் பலமாயும் சரியான பருமனாயும் இருக்கும். கனத்த செம்மட்டி யெடுத்துத் தலைமுறை தலைமுறையாய் இரும்படிக்கும் கருமானுக்குப் புஜங்கள் பருத்து பலத்திருக்கும். ஆபிரிக்கா முதலான வனாந்தரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் நீரில்லாக் குறையால் அடிக்கடி வறண்டுபோகும் உதடுகளை நாவால் நனைத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால் பருத்த உதடுகளும் நாக்குகளும் அவர்களுக்குண்டு.

உடை வித்தியாசங்களும் இவ்வாறே ஏற்படுகின்றன. ஒரு ஐரோப்பிய ஸ்திரீக்குத் துணிகளாலும், இறகுகளாலும், கடுதாசிகளாலும் செய்யப்பட்ட ஆபரணங்களே மனமொப்பத் தக்கவையாய் இருக்கின்றன. ஒரு கிழக்கத்திய ஸ்திரீக்கு பொன் வெள்ளி பவளம் முத்து ரத்னங்களாலாகிய ஆபரணங்களே மனதிற்குகந்தவையாய் இருக்கின்றன.

எத்தனையே ஆயிரங்கள் விலைபெற்ற ஆபரணங்களை அணிந்திருக்கும் ஒரு கிழக்கத்திய ஸ்திரீயைக் கண்டால், ஒரு மேற்கத்திய ஸ்திரீ அவ்வித ஆபரணங்கள் அழகைக் கெடுத்துவிட்டன என்று அபிப்பிராயப்படுகிறாள்.

தையற்காரனுக்கு ஆயிரக்கணக்காய்ப் பணத்தைக் கொடுத்து தைத்த உடைகளையும் டொப்பிகளையும் தரித்துக் கொண்டு ஒரு மேல்நாட்டுப் பெண் வெளி வந்தால் ‘இதென்ன கோலம், காது மூளி, கழுத்து மூளி, மூக்கு மூளி, கை மூளியாய் இருக்க இவளை அழகுள்ளவள் என்று எப்படிச் சொல்வ’தென்று நம் நாட்டுப் பெண்கள் அவமதிப்பாய்ப் பேசுகிறார்கள். இதில் மேன்மை – தாழ்வு எப்படி ஏற்படும்?

இத்தியாதி பேதங்களால் ஏற்றத் தாழ்ச்சி ஏற்பட்டுவிட்டதென்று கருதி ஒருவரிடத்தில் ஒருவர் நட்பையும் மதிப்பையும் இழந்து வாழ்தல் கேவலம் அநாகரீகத்தையும் அறியாமையையும் காட்டுகின்றதே ஒழிய வேறல்ல. நாம் எல்லோரும் ஒரே ரக்தமுடையவர்கள்தான்; ஒரே ஸ்வபாவமுள்ள ஆத்மாவை யுடையவர்கள்தான்; ஒரே ஈசனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்தான்; சூரிய சந்திரர்கள் எல்லாருக்கும் சமமாகவே உஷ்ணத்தையும் ஒளியையும் வீசி வருகிறார்கள். காற்றும் நிரந்தரமாய் எல்லா ஜீவகோடிகளும் சமமாய் உஜ்ஜீவிக்கும்படி அடித்து வருகிறது.

இவ்வித ஞானம் உதயமான பொழுதே நட்பென்னும் பயிர் தழைத்தோங்கும். நட்பு வளர வளர சகோதரத்துவம் ஸ்திரமாய் மானிடர்க்குள் நிலைத்துவிடும். மதிப்புக் குறைவான அறியாமையினடியாய்ப் பிறந்த வித்தியாசங்களால் நாம் சதோதரத்துவத்தை யிழந்து பரஸ்பரம் பகைமை பாராட்டி நடந்துகொள்வது சாஸ்திர சம்மதத்தையும் ஈச்வர சம்மதத்தையும் பெறாது.

எவ்வகையாலும் இவ்வித வித்தியாசங்களை வேரறுத்து அன்பாலாகும் சகோதரத்துவத்தை நாம் செழித்தோங்கச் செய்யவேண்டும். அதுவே நமது சிரேஷ்ட கடமை.

  • இந்தியா: 21.11.1908

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s