எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!

-டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

‘பாரத ரத்னா’  மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பாரதத்தின் 11-வது ஜனாதிபதியாக இருந்தவர்; இளைஞர்களின் எழுச்சி நாயகர். சுவாமி விவேகானந்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் கலாம். அன்னாரது உரை இங்கே கட்டுரை வடிவில் வெளியாகி இருக்கிறது….

* மதுரையில் தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் – சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு 2010  டிசம்பர் 3 ,4 ,5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  அதன் அறிமுக விழா நிகழ்ச்சி 2010 மே 20-ஆம் நாள் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர், மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்  நிகழ்த்திய சொற்பொழிவில் சில பகுதிகள் இவை…..

அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும், இங்கு குழுமியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள், என்னுடைய வணக்கம்.

இன்றைய தினம், தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் –  விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்களையெல்லாம் சந்தித்து உரையாடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

உங்கள் அனைவருடைய அயராத சேவைகளைப் பற்றி நினைக்கும்போது – எனக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1836-இல் பிறந்தார். அவர் ஆன்மிக ஞான ஒளி பெற்று, அறிவு தாகம் கொண்ட இளைஞர்களை உருவாக்கினர்; அவர்களின் முதன்மைச் சீடராக சுவாமி விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் நாடு தோறும் சென்று, இந்திய இளைஞர்களைச் சிறந்த முறையில் பக்குவப்படுத்தினார் பண்படுத்தினார். அதன் காரணமாக அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் இன்றைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஈடுபட்டு வருகிறது. இதைப் பார்க்கும்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் பணி எவ்வளவு ஒரு மகத்தான பணி என்று நினைத்துப் பார்க்கிறேன்.

சுவாமி விவேகானந்தர் கூறிய இரண்டு கருத்துகள் என் நினைவுக்கு வருகின்றன. சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:

“My name should not be made prominent. My ideas that i want to be seen realized.”

“என்னுடைய பெயருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். என்னுடைய கருத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” 

-என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

சுவாமி விவேகானந்தர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்:

“All power is within you. You can do anything and every thing. Believe in that. do not believe that you are weak; Do not believe that you are half-cracy lunatics,as most of us do nowadays. Stand up and express the divinity within you.”

அப்படி என்றால், உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப் பார். எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து. உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின் – அறிவு சக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும். என்ன ஓர் அருமையான கருத்து!

இளைஞர்கள் தான் இந்தியாவின் பெரிய சொத்து. மனஎழுச்சி கொண்ட இளைஞர்களே  – மனதில் ஊக்கமும் உற்சாகமும் உடைய 54 கோடி இளைஞர்களே – இந்தியாவின் மிக பெரிய சொத்து.

நாட்டின் சவால்களைச் சமாளிப்பதற்கு, நமது இளைய தலைமுறையினர்  எழுச்சி பெற வேண்டும். அதற்கேற்ப கல்வி நிறுவனங்கள் மாணவ – மாணவிகளின் அறையும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்க வேண்டும். அவ்விதம் வளர்த்தால்- மாணவர்களின் படைப்புத் திறனையும்,  ஆக்கபூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே  கற்கும் திறனை அடைவார்கள்.

ஆனால் நாட்டில் 90 சதவிகிதம் பேர், படிப்பின் பல்வேறு நிலைகளில் போதிய கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள், மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர்.

நாட்டில் இன்றைய சூழ்நிலையில்,  1 . பல்வேறு கவனச் சிதறல்கள், 2 . வறுமை, 3. படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமை 4.  வேலைக்கு ஏற்ற படிப்பு, 5. சிறப்பு பயிற்ச்சிகள் பெற இயலாத சூழ்நிலை, 6. உலகமயமாக்கல் காரணமாக ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் 7. வேற்றுமை, 8. மாறி வரும் குடும்பச்சூழல் 9. மாற்று கலாச்சார மாற்றம் ஆகியவை – நம் இளைஞர்களை வேகமாக மாற்றும்  சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் நிலவுகிறது.

இத்தனையும் தாண்டி – நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம்,  நமது நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு,  நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் உன்னத பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு – இந்தக் காலமுறைக்கு ஏற்புடையது போல நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும்.

அதே சமயத்தில் – நாம் நமது முகவரியை இழக்காமல் – நாம் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்

லட்சியம் பற்றிய ஒரு கவிதை:

இந்த சமயத்தில் – நான் ஒரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றிப் பாடிய – ஒரு கவிதையின் வரிகள் என் நினைவுக்கு வருகிறது.  அந்த கவிதையின் தலைப்பு ‘லட்சியம்.’ அந்தக் கவிதை இது….

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா!
நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா!
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்.
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா!
இறைவா, இறைவா! நூறு கோடி இந்திய மக்கள் லட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக!

இந்தக் கவிதையின் கருத்து என்ன?

நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம், பணி செய்து கொண்டிருக்கிறோம். நாம் இவற்றைச் செய்யும்போது, நமக்கு வாழ்க்கையில் ஓர் லட்சியம் வேண்டும்.

இதைப் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார்:

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது 
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

       (குறள் -  596)

பொருள்:  “ஒருவர் தான் செய்யக் கருதும் எதையும் உயர்ந்ததாகவே நினைக்க வேண்டும். அதைச் செய்து முடிக்க முடியாவிட்டாலும், அந்த முயற்சி அந்தச் செயல் கைகூடியதற்கு ஒப்பாகவே மதிக்கப்படும்.”

அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் லட்சியங்கள் நம் மனதில் தோன்றும்; நமக்கு பெரும் லட்சியம் இருந்தால், அருமையான எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும்.நமது எண்ணம் உயர்ந்தால், நாம் செய்யும் பணிகள் எல்லாம் உயர்ந்தாக இருக்கும்.

‘அறிவுப் புதையல் எங்கு இருக்கிறது? அமைதிக் கடல் எங்கிருக்கிறது?’ என்ற தேடல் என்னுள்ளே எழுந்தது. அந்த தாகம் வற்றாமல் இன்றும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறேன். அந்தத் தேடலில் நான் காண்பது என்ன?

வள்ளுவர் காட்டும் வளமான  நாடு

திருவள்ளுவரின் குறள் நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதாவது,

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

      (குறள் – 738 )

பொருள்: “நோய் இல்லாமல் இருத்தல், செல்வம், விலைபொருள் வளம், இன்ப வாழ்க்கை, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவார்கள்.”

ஒரு நாடு நல்ல வளமான நாடக இருக்க வேண்டும் என்றால் – அந்த நாட்டில் நோயின்மை, செலவச்செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதி,  சுமுகமான பாதுகாப்பு ஆகியவை அந்த நாட்டில் நிலவ வேண்டும்’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். இப்படி என்ன அருமையாக – ஒரு வளமான நாட்டைத் திருவள்ளுவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாருங்கள்!

நாம் எல்லோரும் முறையாக உழைத்துத் தான்,  நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.

அமைதியைத் தேடி:

சுமுகமான, மேடு பள்ளம் இல்லாத அமைதியான, மகிழ்ச்சியான, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்’ என்பது என்னுடைய தேடல். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக நான் தேடிக்கொண்டே இருக்கிறேன்.

பௌத்த மடம் வழங்கிய செய்தி:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். அங்கு நான் ஒருமுறை 2003 – ஆம் ஆண்டு, 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ‘தவாங்’ என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு நாள் முழுவதும் அங்கு இருந்து, புத்த பிட்சுகளைச் சந்தித்தேன்.

அங்கு கடுமையான குளிரும், வாழ்வதற்கு மிகவும் சிரமம் இருக்கக் கூடிய சூழ்நிலையும் இருந்தது. அப்படிப்பட்ட குளிர் மிகுந்த சூழ்நிலையில், அங்கு இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் – புன்னகை தவழ வீற்றிருப்பதைப் பார்த்தேன்.

‘இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும், சாந்தியும் நிலவுகிறது?’ என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே நான் அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம், ” இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது? இது எப்படி சாத்தியமாகும்” என்று கேட்டேன்.

அதற்கு அவர் என்னிடம்,  “நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினார்.

நான் விடவில்லை, ” இல்லை, இல்லை! நீங்கள் எனக்குப் பத்தி சொல்ல வேண்டும்: என்று கேட்டு வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் சொன்னார்:  “இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு பிரச்னைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூகப் பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலம் வன்முறை ஆகியவை நிலவுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பௌத்த மடம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொரும் ‘நான், எனது’ என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றினால் – நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும்; தற்பெருமை மறைந்தால் – மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வெறுப்பு அகலும்; வெறுப்பு நம் மனதைவிட்டு அகன்றால் – வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும்; வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால் – அமைதி நம் மனதைத் தழுவும்”  என்று பதிலளித்தார்.

என்ன ஓர் அருமையான விளக்கம்! அவர் ஒரு  சமன்பாட்டைக்  கொடுத்துவிட்டார்.

ஆனால்,  ‘நான், எனது’ என்ற எண்ணத்தை, நம் மனதிலிருந்து எப்படி அகற்ற முடியும்? இதை அகற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்! இதற்கு உரிய பக்குவமான நல்ல கல்விமுறையை எப்படி நாம் கொண்டு வருவது? என்பது தான்,  இப்போது நம்மிடையே உள்ள கேள்வி –  நம் முன்னால் இருக்கும் சவால்.

‘அந்தச் சவாலை எப்படி சமாளிப்பது? அமைதியை எப்படி அடைவது’ என்ற என் கேள்விக்கு, விடை தேடும் என் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கிறிஸ்தவ பாதிரியார் வழங்கிய செய்தி

நான் பல்கேரிய நாட்டிற்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவர்களுக்கு உரிய ஒரு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கு 90 வயதுடையவர்கள் இருந்தார்கள்.

‘தவாங்’கில் எனக்கு கிடைத்த சேதியின் தொடர்ச்சியாக, அங்கு இருந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் எனக்கு ஒரு வாக்கியம் அளித்தார். அந்த வாக்கியம், “மன்னிப்பு!” என்ன உன்னதமான வாக்கியத்தை பாதிரியார் எனக்குத் தந்தார்!.

அங்கு, ‘மன்னிப்பு என்பது, எப்படி மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் – பக்குவப்படுத்தும்’ என்பது பற்றிய, ஓர் அருமையான விளக்கம் பெற்றேன்.

விவேகானந்தர் பிறந்த இடத்தில்…

அதன் தொடர்ச்சியாக நான், கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த இடத்திற்குச் சென்றேன். எனக்கு கிடைத்த அனுபவங்களை,  அங்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சந்நியாசிகளுடன் நான் பகிர்ந்துகொண்டேன்.

அப்போது அங்கு எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால், “கொடை” அதாவது, கொடுக்கும் குணம். “கொடையுடன், புத்த பிட்சுவும், கிறிஸ்தவ பாதிரியும் கூறிய அத்தனை குணங்களும் சேர்ந்திருந்தால் – அது நாட்டில் அமைதிக்கு வித்திடும்” என்பதாகும்.

சூபி மகான்:

இந்தத் தகவலோடு அஜ்மீர் ஷரீப் சென்றேன். அங்கு நான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சூபி மகானிடம் என்னுடைய அதே கேள்வியைக் கேட்டேன்.  அதற்கு அவர், “ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு, சைத்தானும் உண்டு. நல்ல  எண்ணங்கள்  – நல்ல செயல்களுக்கு வித்திடும். நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும். அன்பு- அமைதிக்கு வித்திடும்” என்றார்.

காந்திஜி வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி

நல்ல செயல்களைப் பற்றி நினைக்கும்போது, காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை நான் இங்கு மாணவர்களிடமும் – இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். காந்திஜியின்  9 –வது வயதில், அவரது தாயார், காந்திஜிக்கு ஓர் அறிவுரையைத் தந்தார்.

அந்த அறிவுரை இதுதான்:

“மகனே நீ உன் வாழ்க்கையில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி – அவரைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் – நீ மனிதனாகப் பிறந்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்போதும் உனக்கு அருள் செய்வார்.”

இந்த அறிவுரை, இந்த பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஓர் அறிவுரையாகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இவ்விதம் சிறு வயதில் இளம் மனதில் விதைக்கும் விதை, மிகவும் நல்ல பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் இருக்கின்றன.

எனவே தான், நாம் நமது இளைஞர்களைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித் தாயார் செய்தால் தான், நாம் நமது லட்சியமான வளமான இந்தியாவை 2020 – க்குள் * மாற்ற முடியும் – இன்னும் 10 ஆண்டுகளில் நாம் மாற்ற முடியும்.

இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்:

‘இந்தியா 2020-ல் வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்பது தான், நம் நாட்டின் குறிக்கோள். வளமான நாடு என்றால் பொருளாதார வளம் மிக்க 100  கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது நாட்டின் லட்சியம்.

‘இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி – நல்ல வேலை, நல்ல கல்வி,  நல்ல பயிற்சி  உடைய நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன.  இளைய சமுதாயம், எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் – நம் நாட்டின் ஓர் அரும் பெரும் செல்வமாகும்.

“2020  – இல் எப்படி இந்திய ஒரு வளமான நாடாக மாற்ற வேண்டும்” என்ற எண்ணத்தை, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன்.

உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால் – உங்கள் செயல்கள் ஒன்றுபட்டால், ‘வளமான இந்தியா உருவாக வேண்டும்’ என்ற லட்சியம் நிறைவேறும். அந்த லட்சியம்  என்ன?

ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!

1 . கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும், சமூக – பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

2 . சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் – எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் நாடாக மாற்ற வேண்டும்.

3. விவசாயம், தொழில்கள், சேவைத் துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

4. சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி – பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

5. விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக – ஏற்ற ஓர் இடமாக – இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.

6. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான உஊழல்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு,  பெண்களுக்கும் குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாருக்கும்  ‘நாம் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

9. ஓர் இனிமையான வளமான பாதுகாப்பு மிகுந்த அமைதியான சுகாதாரமான வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடு நடை போடக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.

10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும்.

சுவாமி விவேகானந்தரின் கனவு:

இப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க வேண்டுமானால் – எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவது தான் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் லட்சியம்.

“எழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும்” என்பது தான் சுவாமி விவேகானந்தரின் கனவு. சுவாமி விவேகானந்தர் விரும்பிய அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் தாங்கள் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும். என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன. ஒரு காட்சியில் 20 வயதிற்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல கல்வியின் பயனாக – அவர்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோருக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாகவும் திகழ வேண்டும்.

‘இளைய சமுதாயத்தை, எப்படி அறிவார்ந்த சமுதாயத்திற்கு அழைத்து செல்வது?’ என்பது மிகவும் பெரிய ஒரு பணி.

“அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன? அதை அடைய வேண்டும் என்றால், அதற்கு உரிய அறிவின் இலக்கணம் என்ன?” என்று, இப்போது பார்ப்போம்.

அறிவின் இலக்கணம்:

அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா? அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது? அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அதற்கு உரிய ஒரு சந்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அறிவு = கற்பனைச் சக்தி + மனத்துய்மை + மனஉறுதி.

கற்பனைச் சக்தி

கற்பது கற்பனைச் சக்தியை வளர்க்கிறது,
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறமையைத் தூண்டுகிறது,
சிந்தனை அறிவை வளர்க்கிறது,
அறிவு உன்னை மகானாக்குகிறது.

கற்பனைச் சக்தி உருவாவதற்குக் குடும்பச் சூழ்நிலையும், பள்ளிச் சூழ்நிலையும் தான் மிகவும் முக்கிய காரணங்களாக அமையும். அந்தச் சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும்? ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.

மனத்தூய்மை

உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது, எனக்கு ஒரு தெய்வீகப் பாடல் நினைவுக்கு வருகிறது.

(அதைத் தொடர்ந்து டாக்டர் கலாம், பின்வரும் பாடலை ஒவ்வொரு வரியாகக் கூறினார். அவர் கூறியதை, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினார்கள்.)

எண்ணத்தில் தூய்மை இருந்தால்,
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்,
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்,
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால்,
உலகத்தில் அமைதி நிலவும்.

‘எல்லாவற்றிற்கும் அடிப்படை மனத்தூய்மை’ என்பதை, இந்த சிறிய கவிதை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன். மனத்தூய்மை எங்கிருந்து வரும்? இதை நாம் மூன்றே மூன்று பேரிடமிருந்து தான் கற்றுக்கொள்ள முடியும்.

அவர்கள் யார்? அவர்கள் 1. தாய், 2. தந்தை, 3. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்கள் தான்.

மனஉறுதி

“புதிய எண்ணங்களை உருவாக்கும் மன உறுதி இன்று என்னிடம் மலர்ந்திருக்கிறது. ‘எனக்கு’ என்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, அதில் நான் பயணம் செய்வேன். ‘முடியாது, முடியாது, முடியாது’ என்று எல்லோரும் சொல்வதை, ‘என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி என்னிடம் உருவாகிவிட்டது.

“புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி, என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த மன உறுதிகள்  அனைத்தும் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரமாகும்.”

“இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து  வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.”

இளைய பாரதத்தினாய் வா, வா, வா!

அப்துல் கலாம்

நண்பர்களே! ‘உள்ளத்தில் உறுதி வேண்டும்’ என்று சொன்னேன். அந்த மனஉறுதி எப்படி வரும்? யார் மூலம் வரும்?

நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவை மனதை உறுதி பெற வைக்கும். இந்த மனஉறுதி – ‘நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும்’ என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.

மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள் – நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள்.

‘அதாவது, 2020 – க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்ற லட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் – அது இந்தியாவின் 54  கோடி இளைஞர்களின் பங்களிப்புடன் தான் சாத்தியமாகும்.

அனைத்துத் துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, முதலில் அறிவார்ந்த இளைஞர்களை நாம் தயார்செய்ய வேண்டும்.

இளைஞர்களின் பொன்னான நேரம் – நல்ல திறமையை, நல்ல அறிவை,நல்ல ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும். எனவே இத்தகைய இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் சீரிய முயற்சிகள் வெற்றியடைவதற்கு என் நல்வாழ்த்துகள்.

ஜெய் ஹிந்த்!

 • நன்றி: மீனாட்சி மலர் – 2010

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s