விளக்கு

-மகாகவி பாரதி

 ‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.

10 மே 1917                                                          பிங்கள சித்திரை 28

“எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.”

வாத்தியாரும் சரி, தெய்வமும் சரி. கோயிற் குருக்களைக் கொண்டாடுவது போலே பள்ளிக்கூடத்து வாத்தியாரையும் கொண்டாட வேண்டும். பர்மாவில் ஆயிரம் ஆண் பிள்ளைகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 376 பேர் என்றும்; அதே மாதிரி கணக்கு பரோடாவில் 1000க்கு 175; திருவாங்கூரில் 248; கொச்சியில் 243; வங்காளத்தில் 140 என்றும், சென்னை மாகாணத்தில் எழுத்து வாசனையுடையவர்கள் 1000க்கு 13 பேரென்றும் 1911ஆம் வருஷத்து ஜனக் கணக்கில் தெரிகிறது. பர்மாவில் புத்த குருக்கள் படிப்புச் சொல்லிக் கொடுப்பதை ஒரு கடமையாக வைத்துக் கொண்டிருப்பதால் கொஞ்சம் நல்ல நிலையிலிருப்பதாகத் தோன்றுகிறது.

பரோடாவில் கல்வி விருத்திக்கு வேண்டிய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. திருவாங்கூர், கொச்சி ஸமஸ்தானங்களிலுள்ள சுதேசி அதிகாரிகள் தமது கடமையை பரோடாவுக்கு முந்தியே படிப்பு விஷயத்தில் கொஞ்சம் அதிக சிரத்தையுடன் செலுத்தத் தொடங்கியதாகவும் ஏற்படுகிறது.

இந்த விஷயத்தில் நம்மவர் சர்க்கார் அதிகாரிகளுடைய உதவியை எதிர்பார்ப்பது பயனில்லாத முறை. நாட்டை ஆளுவதிலே மிகுந்த செலவு  உண்டாவதால் படிப்பை விருத்தி செய்யப் பணமில்லை யென்று அதிகாரிகள் எத்தனையோ தரம் ஸாங்கோ பாங்கமாகச் சொல்லி்விட்டார்கள். “படிப்புச் செலவுக்கென்று தனித் தீர்வை போடுங்கள்; ஜனங்கள் சந்தோஷத்துடன் செலுத்துவார்கள்” என்று கோகலே விளக்கி விளக்கிச் சொன்னார். அது சர்க்காருக்கு சம்மதமில்லை. ஆகவே, நமது தேசத்து ஜனங்களை ஐரோப்பாவிலுள்ள ஜாதியாரைப் போலவும் ஜப்பானியரைப் போலும் படிப்பு மிகுந்த ஜனங்களாகச் செய்வதற்கு சர்க்கார் அதிகாரிகளிடமிருந்து பணம் கிடைக்குமென்று நம்பியிருப்போர் நெடுங்காலம் படிப்பில்லாமலே யிருப்பார்களென்பது  “உள்ளங்கை நெல்லிக்கனி போல” விளங்குகிறது. திருவள்ளுவர் சொன்னார்:-

“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.”

படியாதவனுக்கும் படித்தவனுக்கும் தாரதம்யம் எத்தனை யென்றால், மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ளதத்தனை.

கூடித் தொழில் செய்

இங்கிலீஷ், ஸம்ஸ்க்ருதம், தமிழ் என்ற பாஷைகளில் ஏதேனும் ஒன்று படித்து யாதொரு உத்தியோகமுமில்லாமல் சும்மா இருக்கும் பிள்ளைகளுக்கு நான் ஒரு யோசனை கண்டுபிடித்துக் கொடுக்கிறேன். இஷ்டமானால் அனுசரிக்கலாம். அனுசரித்தால் லாபமுண்டு. 

கூடி வினை செய்வோர்
கோடி வினை செய்வார்

கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து, கிராமந்தோறும் யாத்திரை செய்யுங்கள். ஊரூராகப் போய்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதே கைங்கரியமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வண்டிச் செலவுக்குப் பணமில்லையானால் நடந்து போகவேண்டும். மற்றபடி ஆஹார வ்யவஹாரங்களுக்கு நமது பூர்வ மதாசார்யார்களும், தம்பிரான்மாரும், ஞானிகளும், சித்தர்களும், பக்தர்களும் செய்தபடியே செய்யுங்கள். எங்கே போனாலும் உயர்ந்த மதிப்பும்,  உபசாரங்களும் ஏற்படும். கூட்டத்துக்கு விருந்து காட்டிலேகூடக் கிடைக்கும். அங்கங்கே திண்ணைப் பள்ளிக்கூடங்களும், குடிசைப் பள்ளிக் கூடங்களும் போட்டுத் திறமையுடையோரை வாத்தியாராக நியமித்துக்கொண்டு போகலாம். யாத்திரையின்பம், தேசத்தாரின் ஸத்காரம், வித்யாதான புண்யம், சரித்திரத்தில் அழியாத கீர்த்தி இத்தனையும் மேற்படி கூட்டத்தாருக்குண்டு.

படிப்பு  எல்லா மதங்களுக்கும் பொது. எல்லா தேசங்களுக்கும் பொது. எல்லா ஜாதிகளுக்கும் பொது. திருஷ்டாந்தமாக, ஐரோப்பியர் அதிகப்  பயிற்சி செய்திருக்கும் ரஸாயனம் முதலிய சாஸ்திரங்கள் நமக்கு மிகவும் அவஸரம். எவ்விதமான  பயிற்சிகளும் தேச பாஷைகள் எழுதவும் படிக்கவும் செய்விப்பதே ஆதாரமாகும். அதை முதலாவது வேரூன்றச் செய்ய வேண்டும்.

ஹிந்துப் பிள்ளைகளே, உங்களுக்குக் கோடி புண்ணியமுண்டு. கூட்டங் கூடி நாட்டைச் சுற்றுங்கள். தமிழ் வளர்ந்தால் தர்மம் வளரும். பிராமணர் முதலாகப் பள்ளர் வரையிலும், எல்லா ஜாதிகளிலும், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதிப்பட்டால், அநாவசியப் பிரிவுகள் நிச்சயமாகக் குறைவு படும். நமக்குள் கைச்சண்டை மூட்டி விடுவோரையும், பாஷைச் சண்டை, சாதிச் சண்டை மூட்டிவிடுவோரையும் கண்டால் ஜனங்கள் கை கொட்டிச் சிரிப்பார்கள். ஹிந்துக்களாகிய நாமெல்லாரும்  ஒரே கூட்டம், ஒரே மதம்,  ஒரே ஜாதி, ஒரே குலம், ஒரே குடும்பம், ஒரே உயிர் என்பதை உலகத்தார் தெரிந்து கொள்ளுவார்கள். அதனால் பூமண்டலத்துக்கு ஷேமமுண்டாகும்.

  • சுதேசமித்திரன் (10.05.1917)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s