-சேக்கிழான்

(இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்- 19.02.1855)
இன்று நாம் காணும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் பலவற்றை கரையானுக்கு இரையாகாகாமல் பனையேடுகளிலிருந்து நூலாக மாற்றிக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது கடும் முயற்சியும் உழைப்பும் இல்லாதிருப்பின், பல பழந்தமிழ் இலகியங்களை நாம் அறிந்திருக்கவே இயலாது. அவரது சிறப்பை அறிந்து அந்நாளிலேயே மகாகவிகள் இருவர் வாழ்த்துக் கவிதை பாடி மகிழ்ந்துள்ளனர். அது பற்றி இங்கே காண்போம்…
மகாகவி பாரதியின் வாழ்த்து
அந்நாளில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த மணி ஐயர், அந்நாளைய ஆங்கிலேய அரசுக்கு உ.வே.சா.வின் தமிழ்ப்பணிகள் குறித்து கடிதம் எழுதி ‘மகாமகோபாத்தியாய’ பட்டம் பெற உ.வே.சா.வுக்கு இருக்கும் தகுதிகளை சுட்டிக்காட்டியிருந்தார். அதையேற்று அவருக்கு 1906 ஜனவரி முதல் தேதியன்று மகாமகோபாத்தியாய பட்டம் வழங்கப்பட்டது. (இப்பட்டம், தற்போதைய முது முனைவர் பட்டத்துக்கு நிகரானது – பெரும் பேராசான் பட்டம்). அத்துடன் கல்வித்துறை ரூ. 1000 பணமுடிப்பும் வழங்கியது.
அதையொட்டி, மகாமகோபாத்தியாய பட்டம் பெற்ற உ.வே.சா.வுக்கு, அவர் பணியாற்றிய சென்னை மாநிலக் கல்லூரியிலேயே 1906-ஆம் ஆண்டு ஒரு பாராட்டுக் கூட்டம் நடந்தது. ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் விழாவுக்கு வருகை தந்து, வாழ்த்துப் பாடல்களை ஒரு தாளில் பென்சில் கொண்டு அங்கேயே எழுதி வாசித்தளித்தார். இதோ அந்தக் கவிதை…
மகாமகோபாத்யாயர் வாழ்த்து செம்பரிதி ஒளிபெற்றான்; பைந்நறவு சுவைபெற்றுத் திகழ்ந்தது; ஆங்கண் உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று எவரேகொல் உவத்தல் செய்வார்? கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா தப்புலவன் குறைவில் கீர்த்தி பம்பலுறப் பெற்றனனேல், இதற்கென்கொல் பேருவகை படைக் கின்றீரே? 1 அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார் இன்றெம்மை ஆள்வோ ரேனும், பன்னியசீர் மகாமகோ பாத்தியா யப்பதவி பரிவின் ஈந்து பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா தன்றனக்குப் புகழ்செய் வாரேல், முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின் இவன்பெருமை மொழிய லாமோ? 2 ‘நிதிய றியோம், இவ்வுலகத் தொருகோடி இன்பவகை நித்தம் துய்க்கும் கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க; குடந்தைநகர்க் கலைஞர் கோவே! பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயில் துதியறிவாய், அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்கு வாயே. 3 காண்க: பாரதியின் தனிப்பாடல்- 21
***
மகாகவி தாகூரின் வாழ்த்து
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி சென்னைக்கு வந்திருந்தார். அவரைச் சந்திக்கச் சென்ற உ.வே.சா.வுடன் உரையாடிய தாகூர், அவரது பதிப்புப்பணி குறித்து அறிந்து வியந்து உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்கே வந்து உ.வே.சா. பதிப்பித்த நூல்களைப் பார்வையிட்டுப் பாராட்டினார். மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்றே மகாகவி ரவீந்திரநாத் தாகூரும் உ.வே.சா.வைப் பாராட்டி அப்பொழுதே கவிதையும் வரைந்தார். இதோ அந்தக் கவிதை…
தேசிகோத்தம தேமாகரிப்ரணாம் (வங்காளி மூலம்) ஆதிஜூகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி, ஸேஇ மஹத்நிதி, ஹே தேசிகோத்தம தோமார் த்வாரா நா கி பாஹிர்ஹயில்? ஸே காலேர் அகஸ்த்யேர் மதஏஸே தோமார்மாகே ஸிம்ஹாஸனே ரேகே திலே நாகிதுமிஸ ஸம்மானே? ஆர் பாஞ்ச மஹா காவ்யேர் மாஜ்ஜே சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி ஸம்சோதன கரே தாஹார் பத ஜூகலே ஸமர்ப்பணகரிலே நா கிதுமி? ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்.
தாகூர் கவிதையின் தமிழாக்கம்: ஆதி (முந்தைய) யுகத்து இருளில் பனையோலைச் சுவடிகளில் இருந்தது திராவிட நாட்டின் புராதன (பழைய) கீர்த்தி - அந்தப் பெருநிதி, பேராசானே உன்னால் அன்றோ வெளிப்பட்டது? அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெரு மதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்? அம்மட்டோ? ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம் மணிமேகலை முதலானவற்றை (ஆய்ந்து பதிப்பித்து) அந்த அன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவன் நீ அன்றோ? அவற்றுடன் சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த முல்லை என ஒளிர வைத்தவனும் நீஅன்றோ? உன்னை வணங்குகிறேன். (தமிழாக்கம்: த.நா.சேனாபதி, முன்னாள் ஆசிரியர், மஞ்சரி)
தமிழகத்தின் மகாகவி பாரதி, வங்கத்தின் மகாகவி ரவீந்திர நாத் தாகூர் ஆகிய இருவருமே உ.வே.சா. அவர்களை அகத்திய முனிவருக்கு ஒப்பானவர் என்று பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறுமுனி அகத்தியரை தமிழரான மகாகவி பாரதி அறிந்திருந்தது வியப்பல்ல; வங்கக் கவியான தாகூரும் அகத்திய முனிவரை அறிந்திருந்தார் என்பதை இக்கவிதை வாயிலாகக் காண்கிறோம். “செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனிற் சிந்தனை ஒன்றுடையாள்” என்று மகாகவி பாரதி இதைத் தானே கவியாகப் பாடினார்?
இருபெரும் கவிஞர்களும் ஒரு மொழியியல் அறிஞரை, உத்தமமான கல்வியாளரை மிகவும் உயர்த்திப் பாடி இருப்பதும் கவனிக்க வேண்டியதாகும். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் (மூதுரை- 24) என்பதும் உண்மையல்லவா?
$$$