சுவாமிஜியின் பெருந்தன்மை!

-கே.பத்மாவதி

திருமதி கே.பத்மாவதி, தொலைதொடர்புத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசிக்கிறார்; தகவல் தொழில்நுட்ப வல்லுனரான காம்கேர் கே. புவனேஸ்வரியின் அன்னை;  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும்  சென்னை ‘ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை’யின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே….

அமெரிக்காவில் சிகாகோவில் உரையாற்றிய போது, சுவாமி விவேகானந்தர் இடையிடையே தன் நகைச்சுவை உணர்வாலும், பெருந்தன்மையினாலும், சின்னஞ்சிறு கதைகள் மூலமும் பிரமாண்ட விஷயங்களையும் சாமானியர்களுக்குப் புரிய வைத்தார். அவற்றில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு எடுத்துரைப்பதில்  மகிழ்ச்சியடைகிறேன்.

அந்த சர்வசமய பேரவையின் இறுதிநாள் அன்று அவர் சொன்ன கருத்துக்கள் உலக மக்கள் அனைவருக்கும் அன்றும், இன்றும், என்றும் அவசியமானவை.

ஏராளமான மதங்கள் இருந்தாலும், மதங்களுக்குள் நல்லிணக்கத்தைக்  கொண்டு வர முடியும். இதற்கு ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவராக மாற வேண்டும் என்பதில்லை. கிறிஸ்தவர் இந்துவாகவோ, பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அதுபோல இந்து பெளத்தராகவோ, கிறிஸ்தவராகவோ மாற வேண்டியதில்லை. ஒவ்வொரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையை பாதுகாத்துக் கொண்டு தன் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும் என்று அவர் உரையாற்றினார்.

இதற்கு ஓர் இயற்கை நிகழ்வை அழகாக உதாரணமாக்கினார். விதை தரையில் விதைப்பட்டு, மண்ணும் நீரும் அதைச் சுற்றிப் போடப்படுகின்றன. காற்றும் தன் பணியை அவ்விதை வளர உதவி செய்கிறது. விதை வளர மண்ணும், நீரும், காற்றும் உதவி செய்தாலும், அது மண்ணாகவோ, நீராகவோ அல்லது காற்றாகவோ மாறிவிடுகிறதா என்ன? இல்லை அல்லவா? அது செடியாகத் தானே வளர்கிறது? தன் வளர்ச்சி நியதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும், நீரையும், மண்ணையும் தனதாக்கிக் கொண்டு தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக்கிக் கொண்டு விதையானது செடியாக வளர்கிறது.

இதைப் போலவே தான் மதங்கள் ஒவ்வொன்றும், தங்கள் நிலையில் இருந்து மாறாமலேயே தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க முடியும். இதற்கு ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவராக மாற வேண்டும் என்பதில்லை. மற்ற மதங்களில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கிரஹித்துக் கொண்டு, அவற்றை துவேஷிக்காமலேயே நட்பாக இருக்க முடியும்.

இவ்வாறு ஓர் அற்புதமான கருத்தை ஒரு விதை செடியாகும் இயற்கையை எடுத்து உதாரணமாக்கினார் சுவாமிஜி.

சிகாகோவில் நடந்த மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தியபோது, அவரது பேச்சுக்கு கைதட்டல்களும், ஆரவாரங்களும், ஆதரவுகளும் பெரிதளவில் கிடைத்தாலும், அவ்வப்போது சிலரின் கூக்குரல்கள் அவர்களின் அதிருப்தியைக் காண்பித்தன. அதையும் சுவாமிஜி மிகவும் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார் என்பதை அவரது இறுதிநாள் உரையில் அவர் சொன்ன கருத்துகள் விளக்கின.

 ‘என்மீது ஒருமித்த அன்பு காட்டியதற்காகவும், மதங்களுக்குள் இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காக நான் கூறிய கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும், அறிவு சார்ந்த இந்த சபையில் கூடியிருக்கும் பெருமக்களுக்கு மிக்க நன்றி. இந்த இன்னிசையின் நடுநடுவே சில அபஸ்வரங்களும் கேட்டன. அவர்களுக்கும் என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால் இன்னிசையை மேலும் இனிமையாக்கினர்.’

சுவாமிஜியின் பெருந்தன்மைக்கு இதைவிட வேறேதும் உதாரணம் வேண்டுமா?

கே.பத்மாவதி

உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்று ஒன்று உருவாக வேண்டும் என்பது தான் சுவாமிஜியின் கனவு. சுவாமிஜி விரும்பிய உலகம் தழுவிய மதம் எப்படி இருக்கும் தெரியுமா?

அது இடத்தாலும், காலத்தாலும் எல்லைப்படுத்தப்பட்டதாக இருக்கும். அந்த மதம் யாரைப் பற்றி பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்கும். சூரியனின் ஒளிக்கற்றைகள் உலக மக்கள் அனைவர் மீதும் ஒரேமாதிரி சமமாக வீசுவதைப் போல, அது இந்து பக்தர்கள், கிறிஸ்தவ பக்தர்கள் என்று எல்லோரையும் சமமாகப் பார்க்கும்.  அது இந்து மதம், கிறிஸ்தவ மதம், பெளத்த மதம், முஸ்லிம் மதம் என்று தனித்தனியாக இருக்காமல், இவை அனைத்தின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய இடம் உள்ளதாக இருக்கும்.

மனிதர்களைப் பிடித்துள்ள மதம் என்ற ‘மதம் பிடித்த காட்டுமிராண்டித் தனம்’ முற்றிலும் அகற்றப்பட்டிருக்கும். மனிதர்கள் அறிவாலும், பண்பாலும், செயல்பாட்டினாலும் உயர்ந்து,  உலக மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற செயல்பாடு நிறைந்ததாக அது இருக்கும். அது மனிதர்கள் ஒருவரை ஒருவர் துன்புறுத்தாது. எல்லோரிடத்திலும் இறைத்தன்மை இருப்பதை ஒப்புக் கொள்ளும். எல்லோரும் சமம் என்ற பேருண்மையை உலக மக்களுக்கு உணர்த்துவதாக இருக்கும்.

சுவாமிஜியின் கனவு நிறைவேறியுள்ளதா? நாம் தான் சிந்திக்க வேண்டும்.

 $$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s