-திருநின்றவூர் கே.ரவிகுமார்
பொருள் புதிது- இணையதள ஆசிரியர் குழு உறுப்பினரான திரு. திருநின்றவூர் ரவிகுமார் எழுதிய, சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

பகுதி- 1
“நீங்கள் இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் விவேகானந்தரைப் படியுங்கள்” -ரவிந்திரநாத் தாகூர்
சுவாமி விவேகானந்தரின் நூல்களைப் படிக்கும் எவரும் – அவர் விவேகானந்தர் மீது எந்த ஈடுபாடும் இன்றி அவருடைய சமய, தத்துவக் கருத்துக்கள் குறித்து எந்தவிதமான ஆர்வமும் இன்றி வெகு சாதாரணமாக படித்தாலும் கூட- விவேகானந்தரின் மொழி வளத்தால், வலிமையால் ஈர்க்கப்படுகிறார்கள். அவருடைய பேச்சை நேரில் கேட்டவர்களும் மிகவும் கவரப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் 1893 செப்டம்பர், 11-ம் நாள் பிற்பகலில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய முதல் உரையே அங்கிருந்த அனைவரையும் காந்தமெனக் கவர்ந்துவிட்டது. அவரது முதலிரண்டு விளிச்சொற்களே அங்கிருந்தோரை எழுந்து நின்று கரவொலி எழுப்ப வைத்துவிட்டது. இத்தனைக்கும், அதே விளிச்சொற்களை அவருக்கு முன் பேசிய வேறு இருவரும் பயன்படுத்தியிருந்தனர். அவர்களுடைய அந்த வார்த்தைகள் எந்தவிதச் சலனமும் ஏற்படுத்தவில்லை.
வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட சுவாமி விவேகானந்தர் முற்றிலும் அந்நிய மொழியான ஆங்கிலத்தில், அது வேற்றுமொழி என்ற உணர்வே சிறிதும் இன்றி உரையாற்றினார். அது சிறப்பாக இருந்தது என்பது மட்டுமல்ல, அங்கு திரண்டிருந்த குட்டி உலகமே அதை ஏற்றுக் கொண்டது. அது சாதாரண விஷயம் அல்ல. அதை இறையருள் என்கின்றனர் பலர். இருக்கலாம். ஆனால் சுவாமிஜி ஆரம்பத்தில் ஆங்கிலம் கற்கவே விரும்பவில்லை. அதை எதிர்த்தார். பிறகும் கூட மிகவும் முயன்று அதை கற்றார் என்பதை அறியும்போது, சிகாகோவில் நடந்தது சாதாரண விஷயமல்ல என்பது புரியும்.
ஆங்கிலப் புலமை அடைந்தது எப்படி?
சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 12-ஆம் நாள் பிறந்தார். அவர் ஆரம்பக் கல்விக்குப் பிறகு 1871-ஆம் ஆண்டு பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற பிரபல அறிஞர் நடத்திய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆங்கில மொழி ஒரு பாடமாக இருந்தது. சுவாமிஜிக்கு அப்போது பெயர் நரேந்திரன்; ஜாதிப் பெயரைச் சேர்த்தே எழுதும் பழக்கத்தால் நரேந்திர நாத் தத்தா. மெட்ரோபாலிடன் பள்ளியில் அவர் சேர்ந்தபோது அவருக்கு வயது 8. அது அந்நிய மொழி. தாய்மொழியான வங்காள மொழியில் புலமை பெறுவதே முதலும் முக்கியமானதும் ஆகும்; எனவே ஆங்கிலம் வேண்டாம் என்று கூறிவிட்டார்.
சுவாமிஜியின் தந்தை விஸ்வநாத தத்தர் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்தார். எனவே ஆங்கிலத்தின் தேவையைப் புரிந்து கொண்டவர். அவர் ஆங்கில மொழியைக் கற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். சுவாமிஜியின் தாய் புவனேஸ்வரி தேவியும் சுவாமிஜிக்கு, ஆங்கிலம் கற்க வேண்டுமென எடுத்துரைத்தார். ஆனால் சுவாமிஜி மசியவில்லை.
எனவே அவரது பெற்றோர் நரேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவரான நரசிம்ம தத்தாவிடம் விஷயத்தைக் கூறினார்கள். நரசிம்ம தத்தர் அவர்களது உறவினர்; நரேந்திரனுக்கு தாத்தா முறை. சிறுவன் நரேந்திர தத்தா, தாத்தா நரசிம்மருடன் மிகவும் நெருக்கம். அவரும் நரேந்திரருக்கு ஆங்கில மொழியைக் கற்பதன் அவசியம் பற்றி அறிவுரை கூறினார். ஆனாலும் நரேந்திரன் அதையும் ஏற்கவில்லை; மறுத்துவிட்டார்.
சில மாதங்கள் இவ்வாறே கடந்தன. பிறகு மெதுவாக, தானாகவே நரேந்திரன் ஆங்கிலம் கற்க ஆரம்பித்தார். ஆனாலும் சமஸ்கிருதம், ஹிந்தி, வங்காளி கற்றதைப் போல ஆர்வத்துடன் கற்றதாகத் தெரியவில்லை.
பிறகு 1880-இல் அவர் பிரஸிடென்சி (மாநில) கல்லூரியில் படிக்கும்போது தான் மிகவும் முயன்று ஆங்கிலம் கற்றார். ஆங்கிலத்தில் பேசுவது, விவாதிப்பது போன்ற கலையை அவர் அங்கு தான் முயன்று கற்றுத் தேர்ந்தார். சுவாமிஜி ஆங்கில மொழியில் துறை போகியவர் என்றும், அவருடைய ஆங்கில சொல்வளம் மிகவும் சிறந்தது என்று பலரும் வியந்து பாராட்டியுள்ளனர். சுவாமிஜியின் ஆங்கில மொழி வளமையை இன்றும் அவரது நூல்களைப் படிக்கும் யாவரும் தெரிந்துகொள்ள முடியும்.
இளைஞர்களை ஈர்த்த ஆங்கிலப் பேச்சாற்றல்:
ஹேமசந்திர கோஷ் என்ற புரட்சிவீரர் தானும் தன் நண்பர்களும் தேச விடுதலைப் பணியில் ஈடுபட்டதற்குக் காரணம் சுவாமி விவேகானந்தர் தான் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல. இன்று பங்களாதேஷ் என்ற நாடு அன்று கிழக்கு வங்க மாநிலமாக பாரதத்தில் ஒரு அங்கமாக இருந்தது. அதன் தலைநகரான டாக்கா நகருக்கு சுவாமிஜி 1901-ஆம் ஆண்டு விஜயம் செய்தார். அவருக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹேமசந்திர கோஷ் அப்போது கல்லூரி மாணவராக இருந்தார். அவரும் அவரது நண்பர்களும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இரண்டு நாள் கழித்து அவர்கள் சுவாமிஜியை அவர் தங்கியிருந்த வீட்டில் சென்று நேரில் சந்தித்து உரையாடினார்கள். அப்போது சுவாமிஜி அவர்களுக்கு அளித்த அறிவுரையின்படியே அவர்கள் அனைவரும் தேசவிடுதலைப் பணியில் ஈடுபட்டார்கள்; சிலர் உயிர்த் தியாகமும் செய்தனர்.
அந்தச் சந்திப்பை நினைவுகூர்ந்து அவர் 1971-இல் பதிவு செய்த ஒரு நேர்காணலில், அவர்கள் சுவாமிஜியின்பால் ஈர்க்கப்பட்டது எவ்விதம் என்பதைக் குறிப்பிடுகிறார்:
“ஒரு வங்காளி அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆங்கிலேயர்களே வியக்கும்படி ஆங்கிலத்தில் உரையாற்றிப் புகழ் பெற்றார் என்பதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தோம். அவருடைய ஆங்கிலப் பேச்சை நேரில் கேட்க வேண்டும்; அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம். அதற்காகவே அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓர் ஓரத்தில் நின்று அவரை தரிசித்தோம். மறுநாள் அவர் தங்கியிருந்த இல்லத்திற்குச் சென்று அவரைப் பார்த்துப் பேசினோம்” என்றும், அதன்பின் அந்தச் சந்திப்பினால் தங்கள் வாழ்க்கைப் பாதை மாறியது எப்படி என்பதையும் அந்த நேர்காணலில் பதிவு செய்துள்ளார்.
முதன்முதலில் அந்த இளைஞர்கள் சுவாமிஜியைச் சந்திக்க விரும்பியது, அவருடைய ஆங்கில மொழிப் புலமைக்காகவும் அவரது குரல் வளத்திற்காகவும் தான் என்பது கவனிக்கத்தக்கது. அவரது குரல் ஆழ்ந்த கம்பீரமாகவும் தெளிவாகவும், தங்களை மனோவசியம் செய்யக்கூடிய அளவு தெய்வீகமாகவும் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அத்துடன் அவரது ஆங்கில மொழிப்புலமை அந்தக் கல்லூரி மாணவர்களை ஈர்த்ததில் வியப்பொன்றும் இல்லை.
இதையே சுவாமிஜியின் நூல்களைப் படிக்கும்போது தனக்கு ஏற்பட்டதாகக் கூறும் பிரஞ்சு நாட்டைச் சேர்ந்தவரும் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவருமான ரோமெய்ன் ரோலண்ட், ‘சுவாமிஜியின் பேச்சை நேரில் கேட்பவர்கள் மிகவும் பாக்கியசாலிகள்’ என்று வியந்து கூறுகிறார்.
‘கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி இந்தியாவுக்கு அளித்த கொடை ஆங்கிலம்’ என்று ராஜாஜி கூறுவார். ஆங்கிலத்திற்கு சரஸ்வதி அளித்த கொடை சுவாமி விவேகானந்தர் என்றால் மிகையாகாது.
வங்கமொழிப் புலமையும் நினைவாற்றலும்:
சுவாமிஜியின் தந்தை விஸ்வநாத தத்தர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் கல்கத்தாவில் மட்டுமே தொழில் புரியாமல் வெவ்வேறு ஊர்களிலும் தொழில் செய்தார். அதனால் சுவாமிஜியின் குடும்பம் அவ்வப்போது பல்வேறு ஊர்களுக்குச் சென்று வசிக்க வேண்டிய நிலை இருந்தது. அவ்வாறு 1877-இல் விஸ்வநாத தத்தர் ராய்ப்பூரில் தொழில் செய்தார். நரேந்திரனும் அங்கு போய் வசித்தார். அங்கு அப்போது பள்ளிக்கூடம் இல்லை. எனவே நரேந்திரனின் பள்ளிக்கல்வி பாதியில் நின்றுவிட்டது. எனவே தந்தையுடன் அவரது நண்பர்கள் சந்தித்து உரையாடும்போது நரேந்திரனும் அவர்களுடன் பேச்சில் கலந்து கொள்வான். விஸ்வநாத தத்தருக்கு தொழிலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம் மற்றும் இசையிலும் ஈடுபாடு இருந்தது. எனவே அத்துறை சார்ந்த பல பிரபலங்களும் அவர் வீட்டிற்கு வந்து கலந்துரையாடிச் செல்வது வழக்கம்.
அவ்வாறு வந்தவர்களில் ஒருவர் வங்கமொழி இலக்கியத்தில் ஆழ்ந்து கற்று துறை போகியவர். அவருடன் கலந்துரையாடலின் போது நரேந்திரன் வங்க இலக்கியங்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை வரி பிசகாமல் பத்தி பத்தியாக எடுத்துக் கூறினார். அவரது தந்தையும் அதை ஊக்குவித்தார். நரேந்திரனின் வங்கமொழிப் புலமையையும் நினைவாற்றலையும் கண்டு வியந்தார் அந்தப் பெரியவர். விடைபெறும்போது அவர், “மகனே, ஒருநாள் நீ புகழ்பெற்றவனாக வருவாய்” என வாழ்த்திச் சென்றார்.
தாய்மொழியில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருந்த சுவாமிஜி, பிற்காலத்தில் தாய்மொழியில் தான் கல்வி கற்க வேண்டுமென வலியுறுத்தியதில் வியப்பேதும் இல்லை.
அதேவேளையில் பல்வேறு மொழிகளைக் கொண்ட இந்தியாவில் பொதுமொழியாக எந்தவொரு மொழியையும் திணிப்பதில் உள்ள சிக்கலையும் அவர் உணர்ந்தே இருந்தார். எனவேதான் அவர், ‘பொதுமொழி என்பது விரும்பத்தக்கது போலத் தோன்றினாலும் அதில் ஒரு குறையாடு உள்ளது. அதனால் ஏற்கனவே உள்ள பல்வேறு மொழிகளில் வளமை, சாரம் நீர்த்து போய்விடும்’ (தொகுப்பு: 4) என்று எச்சரித்துள்ளார்..
பன்மொழி வித்தகர்:
சுவாமி விவேகானந்தர் பரிவ்ராஜகராக இந்தியாவைச் சுற்றிவந்தார். அப்போது 1891 ஜூன் மாதத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தார். அங்குள்ள ‘மவுண்ட் அபு’ என்ற அபு மலையில் கேத்ரி மகாராஜா அஜித் சிங்கைச் சந்தித்தார். ராஜாவுக்கு அபு மலையில் கோடைக்கால அரண்மனை இருந்தது. அப்போது அவருடன் ஜோத்பூர் ராஜா ஹர்தயாள் சிங்கும் உடன் இருந்தார்.
சுவாமிஜி அவர்களுடன் கல்வி, சமயம், தத்துவம் ஆகியவை பற்றி நீண்ட உடையாடல்களை நிகழ்த்தினார். அந்த உரையாடல்கள் பொதுவாக ஆங்கிலத்திலும் சில வேளைகளில் சமஸ்கிருதத்திலும் இருந்தன. சுவாமிஜியின் கருத்தாலும் குரலாலும் மொழியாலும் கவரப்பட்ட கேத்ரி மகாராஜா தன் வாழ்நாளின் கடைசியில் அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார்; பல உதவிகளைச் செய்தார்.
தமிழகப் பகுதியில் சுவாமிஜி சுற்றித் திரிந்த பொழுதில், சென்னை அடையாறிலுள்ள பிரம்மஞான சபையின் தமைமையிடத்தில் இரண்டு உரைகளை நிகழ்த்தியுள்ளார். அதுபற்றி பிரம்மஞான சபையின் மாத இதழில் டபிள்யூ.ஆர்.ஓல்டு என்பவர் எழுதியுள்ள குறிப்பில், ‘சுவாமிஜிக்கு பாலி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்கு தெரிந்திருக்கிறது’ என்று உள்ளது. சுவாமிஜிக்கு ஹீப்ரு மொழி தெரியுமா என்பது சந்தேகம் தான். ஆனால் திரு.ஓல்டுவின் கட்டுரைப்படி அவர் பன்மொழி வித்தகர்; இதில் சந்தேகம் இல்லை.
இதே போன்றதொரு குறிப்பை சுவாமிஜியை நேரில் சந்தித்த ஹரிபாதமித்ரா என்பவர் குறிப்பிடுகிறார். 1892-இல் அவர் கர்நாடகப் பகுதியில் உள்ள பெல்காமில் காட்டிலாகா அதிகாரியாகப் பணியாற்றினார். அப்போது அக்டோபர் மாதத்தில் சுவாமிஜி பேராசிரியர் பாத்தே என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். அப்போது மித்ரா வீட்டிற்கு சுவாமிஜி சென்றார். அதுபற்றி கூறும் மித்ரா, ‘சுவாமிஜிக்கு ஆங்கிலம், ஹிந்தி, வங்காளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் தெரியும். அவர் பாத்தேவின் வீட்டிலிருந்து கிளம்பும்போது அவரது பொருட்களை எடுத்து வந்தோம். அதில் பிரெஞ்சு இசை பற்றிய நூல் ஒன்றும் இருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமிஜி 1896-இல் குஜராத் மாநிலத்தில் சுற்றி வந்திருந்தார். ஒவ்வொரு ஊரிலும் தன் மனதில் அப்போது தோன்றும் ஒரு பெயரால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சுவாமிஜி, குஜராத்தில் தான் ‘விவேகானந்தர்’ என்ற பெயரை முதல்முதலில் பயன்படுத்தினார். பின்னர் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
$$$
பகுதி- 2
“சுவாமிஜியின் நூல்களைப் படிக்கும்போது என்னுடைய தேசபக்தி பன்மடங்கு அதிகரித்தது” -மகாத்மா காந்தி
சமஸ்கிருதத்தில் பெரும் அறிவு:
தனது குஜராத் பயணத்தின்போது சுவாமிஜி போர்பந்தர் நகருக்குப் போயிருந்தார். அங்கு திவான் பண்டிட் சங்கர் பாண்டுரங்கர் என்பவரது வீட்டில் தங்கியிருந்தார். திவான் ஒரு வேத விற்பனர். சுவாமிஜி அவருடன் தங்கிய காலத்தில், அவர் வேதத்தை மொழிபெயர்த்துக் கொண்டிருத்தார். சுவாமிஜியின் சமஸ்கிருத அறிவைக் கண்டு அவர் மகிழ்ந்தார். தன்னுடைய மொழிபெயர்ப்புப் பணிக்கு உதவிட வேண்டுமென சுவாமிஜியை வேண்டிக் கொண்டார். சுவாமிஜி அதை ஏற்றுக் கொண்டார். திவானின் வேத மொழிபெயர்ப்புப் பணிக்கு வெகுவாக உதவினார்.
சுவாமிஜி ஒரு வேதரிஷி. எனவே வேத மொழிபெயர்ப்பில் அவர் ஈடுபட்டது மிகவும் பொருத்தமானது. வேதரிஷி என்று எப்படி கூறுகிறோம்? அதை இரண்டு விஷயங்கள் மூலமாக முடிவுசெய்ய முடியும்.
சுவாமிஜி ராமகிருஷ்ண பரமஹம்ஸரோடு தொடர்புக்கு வந்த பிறகு, ஒருநாள் அவரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் ராமகிருஷ்ணர். அங்கு அவரை அமரவைத்து அவருடன் மெதுவாகப் பேசிக் கொண்டே சுவாமிஜியின் மார்பைத் தடவினார். அந்த ஸ்பரிச தீட்சையால் சுவாமிஜி தன் உணர்வு இழந்தார்; சிறிது நேரம் பேரானந்தத்தில் திளைத்திருந்தார். பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது ராமகிருஷ்ணர் அவரை புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் இந்த நிகழ்வு பற்றி ராமகிருஷ்ணர் குறிப்பிடுகிறார். அதில் சுவாமிஜி பற்றியும், தன்னைப் பற்றியும், தங்கள் பணி பற்றியும் எடுத்துரைத்துள்ளார். ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார்:
“ஒரு பேரொளி வெள்ளத்தைப் பார்த்தேன். எங்கும் அந்த ஒளியே நிரம்பி இருந்தது. அப்போது என்னிலிருந்து ஒரு ஒளி புறப்பட்டது. அந்த ஒளி மெதுவாக ஒரு குழந்தை வடிவு கொண்டது. அக்குழந்தை தவழ்ந்தபடி ஒளி வெள்ளத்தில் புகுந்தது. அங்கு ஏழு முனிவர்கள் தவக்கோலத்தில் அமர்ந்திருந்தனர். தியானத்தில் இருந்த அவர்களில் ஒருவரின் முழங்காலின் மீது அக்குழந்தை ஏறி அமர்ந்தது. திடுக்கிட்டு அந்த ரிஷி, தவத்திலிருந்து விழித்து அக்குழந்தையை நோக்கினார். அக்குழந்தை அவரிடம் நான் போகிறேன், நீயும் வருகிறாயா? என்று கேட்டது. அதற்கு அந்த ரிஷி தலையசைத்து சம்மதம் தெரிவித்தார். பின்பு தன் கண்களை மூடிக்கொண்டு தவத்தில் மூழ்கிவிட்டார். அந்த ரிஷிதான் நரேந்திரன். நானே அந்தக் குழந்தை.”
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மேற்படிக் கூற்றின்படி சுவாமி விவேகானந்தர் சப்தரிஷிகளில் ஒருவர். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரது பணியைச் செய்யவே உலகிற்கு வந்தவர் என்று தெரிகிறது..
மொழிபெயர்ப்பில் நிபுணர்:
சமஸ்கிருத வாசகங்களை, வேத, உபநிடத வாக்கியங்களை மொழிபெயர்ப்பதில் சுவாமிஜி புதிய முறையைக் கையாண்டுள்ளார். அவர் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்காமல் அதன் சாரத்தை நவீன மொழியில் எளிமையாகக் கூறிவிட்டார். சாதாரண குருமார்கள் எவரும் செய்ய பயப்படுகின்ற ஒரு விஷயத்தை, அசாதாரணமாக சுவாமிஜி மொழிபெயர்த்துள்ளதைப் பார்க்கும் போது, அது வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் மிக கச்சிதமான ரிஷி வாக்கியமாகவே இருப்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக சில வாக்கியங்களைப் பார்க்கலாம்.
‘சா வித்யா யா விமுக்தையே’ என்ற உபநிடத வாக்கியத்தை சுவாமிஜி ‘மனிதனுக்குள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே கல்வி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘உத்திஷ்டத ஜாக்ரத பராப்ய வரன் நிபோதத’ என்ற கடோபநிஷத வாக்கியத்தை சுவாமிஜி, ‘எழு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை நில்லாது செல்’ என்று கச்சிதமாகக் கூறிவிட்டார்.
‘தத்வம் அஸி’ என்ற சாந்தோக்ய உபநிஷத வசனத்தை ‘ஒவ்வொரு ஜீவனும் தெய்வீகமே’ என்கிறார்.
‘அமிர்தஸ்ய புத்ர’ என்ற ஸ்வேதாஸ்வதர உபநிஷத் கோஷத்தை ‘அமரத்துவத்தின் குழந்தைகளே’ என்று விளிக்கிறார். இப்படித் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம்.
வேதரிஷியான சுவாமிஜி தேவமொழியான சமஸ்கிருதம் பற்றிக் கூறியுள்ளதை இங்கு கவனிப்பது நல்லது.
‘அனைவரும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும். அது பண்பட்ட மொழி மட்டுமல்ல, நம் பண்பாட்டு மொழி. சமஸ்கிருதத்தை கற்பதன் மூலமாக நம்முடைய செறிவார்ந்த பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமன்றி, அதன்மூலம் நம் மீதே நமக்கு நம்பிக்கையையும் உறுதியும் ஏற்படும். இவை இரண்டும் இன்று நம்மிடையே இல்லாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. சமஸ்கிருத வார்த்தைகளின் ஒலியே நம் சமுதாயத்திற்கு கௌரவத்தையும் சக்தியையும் வலிமையையும் அளிப்பதாக உள்ளது’
-என்று சுவாமிஜி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.
போர்பந்தரில் திவான் பண்டித சங்கர் பாண்டுரங்கருடன் தங்கியிருந்தபோது, திவானின் வற்புறுத்தலால் பிரெஞ்சு மொழியை மேலும் ஆழமாகக் கற்றார். திவான் பிரெஞ்சு மொழியை நன்கறிந்தவர். ஐரோப்பாவின் பண்பாட்டு மொழியாக பிரெஞ்சு கருதப்படுகிறது. சுவாமிஜி ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்தபோது பிரெஞ்சு மொழியில் பேசியுள்ளார்.
ஹிந்தி மொழியிலும் அபார லாவகம்:
இந்தியாவில் பெருவாரியான மக்கள் பேசும் மொழி ஹிந்தி. சுவாமிஜிக்கு ஹிந்தி நன்றாகத் தெரியும். 1897 ஜூலை மாதம், 27-ஆம் நாள் ஹிமாசலத்தில் உள்ள அல்மோராவில் ‘வேத சூத்திரங்களும் அதன் நடைமுறைகளும்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். முழுக்கவும் ஹிந்தி மொழியில் அந்தப் பொழிவு நடந்தது.
அந்நிகழ்ச்சிக்கு பல கல்வியாளர்களும் வேதம் கற்றவர்களும் வந்திருந்தனர். சுவாமிஜி தலைப்பை மட்டுமல்ல, ஹிந்தி மொழியைக் கையாண்ட விதமும் அந்த அறிஞர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
சுவாமிஜி காஷ்மீரப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்தபோது காஷ்மீர் மகாராஜாவைச் சந்தித்தார். 1889 அக்டோபர் இறுதி வாரத்தில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மகாராஜாவுடன் அவரது இளைய சகோதரர்கள் இருவரும், அரசு அதிகாரிகள் பலரும் இருந்தனர். சுவாமிஜி அவர்களுடன் ஹிந்தியில் சரளமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
சுவாமிஜியின் கருத்துக்களால் கவரப்பட்ட மகாராஜா, அடுத்தநாள் பொதுமக்களிடையே உரையாற்ற வேண்டினார். அதன்படி சுவாமிஜி பொதுமக்களிடையே வேதங்கள், புராணங்கள், பக்தி ஆகியவற்றை சுலபமாகப் புரியும்படி விளக்கினார். அந்த ஹிந்திச் சொற்பொழிவு இரண்டு மணிநேரம் நடந்தது. மக்கள் அதை வெகுவாக வரவேற்றனர். மக்களிடையே கிடைத்த வரவேற்பைக் கண்ட மகாராஜா சுவாமிஜியிடம் அதை கட்டுரையாக எழுதித் தரும்படி வேண்டினார். சுவாமிஜியும் அதை ஏற்றுக்கொண்டு ஹிந்தியில் எழுதிக் கொடுத்தார்.
பிறகு சியால்கோட் பகுதியில் வழக்கறிஞர் மூல்சந்த் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு அவரது உரை ஆங்கிலத்தில் இருந்தது. அதன் முடிவில் ஆங்கிலம் தெரியாதவர்களுக்காக தன் பேச்சின் சாரத்தை ஹிந்தி மொழியில் சுருக்கமாக சுவாமிஜி எடுத்துரைத்தார். அடுத்த நாள் பெண்கள் பலர் அவரைச் சந்தித்தனர். அவர்களுடன் இரண்டு பெண் சன்யாசினிகளும் வந்திருந்தனர். அவர்களிடம், பெண்களுக்கான பள்ளிக்கூடம் துவங்க வேண்டியது குறித்து சுவாமிஜி அறிவுறித்தினார். அந்தப் பெண்களிடையே ‘பக்தி’ என்ற தலைப்பில் ஹிந்தியில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார்..
விடுதலை வீரர்களைக் கவர்ந்த பேச்சாற்றல்:
காங்கிரஸ் மாநாடு 1901-ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதி வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. அம்மாநாட்டிற்கு வந்திருந்த காங்கிரஸ் ஊழியர்கள் பலரும் சுவாமிஜியைச் சந்திக்க மடத்திற்கு வந்திருந்தனர். மாநாட்டுச் சமயத்தில் பல தலைவர்களும் சுவாமிஜியை மடத்தில் சந்தித்திருந்தனர். காங்கிரஸ் ஊழியர்களிடையே சுவாமிஜி தனது மனத்திற்கு மிகவும் பிடித்தமான பாரதத்தைப் பற்றியும் அதன் மறுமலர்ச்சி பற்றியும் உரையாற்றினார்.
சிங்கமென இங்குமங்கும் மெதுவாக உலவியபடியே அவர் உரையாற்றினார். அவரது தோற்றமும் குரலும் கம்பீரமாக ஒலித்தன. அவர் பேசிய ஹிந்தியோ மிகவும் தூயதாகவும் உயர்வானதாகவும் இருந்தது. அவரது உரை தங்களுக்கு எழுச்சியும் ஊக்கமும் அளிப்பதாக இருந்தது என்று காங்கிரஸ் ஊழியர்கள் குறித்துள்ளனர். உயர்வான கருத்துக்களை உயர்வானவர்கள் பேசும்போது அந்த மொழியும் உயர்வடையத் தானே செய்யும்?
கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்த திலகர் பெருமான், அப்போது சுவாமிஜியைச் சந்தித்து கலந்துரையாடியரையும் அவருடன் தேநீர் அருந்தியதையும், அந்தச் சந்திப்பு பற்றி தன் மனவுணர்வுகளையும் பின்னாளில் எழுதியுள்ளார்.
மாநாட்டை ஒட்டி காந்திஜி கொல்கத்தாவில் ஒன்றரை மாதம் தங்கியிருந்தார். அவர் சுவாமிஜியைச் சந்திக்க மடத்திற்குச் சென்றார். அப்போது உடல்நலக் குறைவு காரணமாக சுவாமிஜி கொல்கத்தா நகரை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதனால் காந்திஜி அவரைச் சந்திக்க முடியவில்லை. ‘சுவாமிஜியின் நூல்களைப் படிக்கும்போது தன்னுடைய தேசபக்தி பன்மடங்கு அதிகரித்தது’ என்று காந்திஜி குறிப்பிட்டுள்ளார்.
பிரதானமான இந்திய மொழிகளை சுவாமிஜி சரளமாகக் கையாள முடிந்தது. அதனால் தான் அவர் பரிவ்ராஜகராக நாட்டைச் சுற்றி வலம் வரவும், இந்தியாவை சரியாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. இந்தியாவின் உயர்வையும் அதன் பிரச்னைகளையும் புரிந்துகொள்ளவும், அதற்கு சரியான தீர்வு கூறவும் அவரால் முடிந்தது.
அதேபோல உலகில் பெருவாரியானோர் பேசக் கூடிய மொழிகளிலும் சுவாமிஜிக்கு புலமை இருந்ததால் இந்தியாவைப் பற்றியும் இந்து மதத்தைப் பற்றியும் உண்மையான வகையில் உலகிற்கு எடுத்துரைக்க அவரால் முடிந்தது..
மொழியும் சிந்தனையும்:
நாம் உலகைப் புரிந்து கொள்வதே மொழியால் தான். சிந்தனையும் மொழியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். கடந்த நூற்றாண்டு வரை மொழிக்கும் சிந்தனைக்கும் தொடர்பிருக்கிறதா, என்ன? என்று மேற்கத்திய உலகம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது. இப்போதுதான், ஆம் என்று ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் நம் நாட்டினர் இதைப் புரிந்து கொண்டது மட்டுமல்ல, மொழியையும் மனதையும் மிக ஆழமாக ஆராய்ந்துள்ளார்கள்.
ஒருவரது மொழி அவரது சிந்தனையை வெளிப்படுத்துகிறது. மேற்கத்திய சிந்தனைக்கும் நமது சிந்தனைக்கும் உள்ள வேறுபாட்டை சுவாமிஜி அழகான எடுத்துக்காட்டால் குறிப்பிடுகிறார்: ‘மேற்கத்தியர்கள், ஒருவர் இறந்துவிட்டால் அதை உயிர் பிரிந்தது என்பார்கள். நாமோ அவர் உடலை உகுத்தார் என்போம். அவர்களுக்கு உடல் முக்கியம், நமக்கோ ஆன்மா பிரதானம்’ சிந்தனையின் மாறுபாடு மொழியில் வெளிப்படுவதைக் காணலாம்.
இந்தியாவில் பல்வேறு மொழிகளும் பழக்கவழக்கங்களும் இருந்தபோதிலும், இது உடைந்து போகாமல் ஒரே நாடாக இருப்பதற்குக் காரணம் சிந்தனை முறையில் ஒன்றுபட்டிருப்பது தான். இது நுட்பமான இணைப்பு. கண்ணுக்குத் தெரிவதில்லை; தெரிவதெல்லாம் வேற்றுமை தான். அந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்துத்துவம். இது சுவாமிஜியின் சிந்தனைகளிலும் அவரது வார்த்தைகளிலும் வெளிப்படுவதைக் காணலாம். சுவாமிஜியின் மொழியும் கருத்தும் இந்தியா, இந்து என்பதேயாகும்.
இதையே மகாகவி பாரதி,
முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்!
-என்று (எங்கள் தாய் – பாடல்) பாடுகிறார்.
அமரர் டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் குடியரசுத் தலைவர்; இன்று நம்மிடையே வாழ்ந்து மறைந்த சிறந்த தேசியவாதிகளில் ஒருவர். அவர், ‘சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளும் கருத்துக்களும் இன்றைக்கும் பொருத்தமானவை. அவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும்; கல்வி நிறுவனங்களில் கற்பிக்கவும் வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
$$$