-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
அநுபந்தம் 4
பாராட்டு
மாணாக்கர் முதலியவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் முதலியவற்றில் இவரைப் பாராட்டிய பகுதிகள் வருமாறு :
அழகிரிசாமி நாயகர்
“துங்கநற் குணமீ னாட்சிசுந் தரனென் தோமறுத் தருள்செய்தே சிகனே.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
ஆறுமுகத் தம்பிரான்
“எங்கடுறை சையையடைந்தம் பலவாண தேவனடி இனிது சூட்டத்
துங்கமுடி வாய்ந்துசிவ ஞானகலை யகங்கைநெல்லித் தோற்றத் தாய்ந்து
கங்கைதரித் தருள்சடையோன் பலதலத்து மான்மியந்தன் கருத்தி னோர்ந்து
சங்கையில்செந் தமிழின்மொழி பெயர்த்தியற்றுங் கடப்பாட்டிற் றலைமை யானோன்.”
“மின்னுமர னடியன்றிக் கனவிலும்வே றெண்ணாத விரதம் பூண்டோன்
இன்னுமெம்போ லியர்பலருக் கிலக்கியமு மிலக்கணமும் எளிது தந்தோன்
அன்னவன்பேர் மீனாட்சி சுந்தரநா வலவனென ஆய்ந்தோர் யாரும்
பன்னுபுகழ் பூதலமு மீதலமும் பாதலமும் பரவ நின்றோன்.”
(சேக்கிழார் பிள்ளைத்தமிழ்)
காஞ்சீபுரம் இரகுநாதையர்
“பொன்னனைய மலர்க்கடுக்கைச் சடிலவா னவன்போற்
புலவர்களின் முதலானோன் புனிதனைப்போற் றுதலிற்
தன்னிகர்தா னாயவன்மீனாட்சிசுந் தரமால்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்
“விதிமருவு சகலகலை யுணரும்வித ரணவிபவ வித்வஜன சேகரனிதம்
மேதகுஞ்சீர் கொண்டதிரி சிரபுரத்தி னான்மீனாட்சி சுந்தரப்பேர் விசயன்.”
(காசிரகசியம்)
இராமசாமி பிள்ளை
“எளியேன் றீமை, மண்ணியசீர் மீனாட்சிசுந்தர தேசிகன்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
காஞ்சீபுரம் இராமானுஜ பிள்ளை
“அருஞ்சிர புரஞ்செய் மாதவத் துதித்த அண்ணல்செந் தமிழ்க்குயர் கந்தன்
அவிர்பதி பசுபா சப்பொருண் முடிபை அடியடைந் தவர்க்கரு டூயன்
அறஞ்செய்மீ னாட்சி சுந்தரப் பெயர்கொ ளறிஞன்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
ஆறைமாநகர் ஐயாசாமி முதலியார்
“பவமிலார் துதிக்குந் தமிழ்க்கட லுண்டு பாவல ரெனும்பயிர் தழைக்கப்
பனூன்மழை பொழிமீ னாட்சிசுந் தரப்பேர் படைத்திடு கருணைமா முகிலே.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
நாகபட்டினம் இராம – அ. கிருஷ்ணசாமி உபாத்தியாயர்
“பேரெட்டா மீனாட்சி சுந்தரவே ளெனவுலகம் பேச மேவி
ஈரெட்டாண் டினுக்குளிலக் கியக்கடனீத் திலக்கணவா ரிதியை யெற்றிச்
சீரெட்டா மூர்த்தனெழிற் கைலாய பரம்பரையாம் செல்வம் வாய்ந்த
காரெட்டா விகௗடருந் தண்டுறைசை மடாலயத்தைக் கலந்து நாடி”
“அறந்தழீஇ யமருமெய்யம் பலவாண தேசிகன்பால் அரிய ஞானத்
திறந்தழைக்குங் கலைமுழுதுஞ் செவ்விதினோர்ந் துயர்தீக்கைத் திருவ நீடி
நிறந்தழைக்கும் தமிழ்ச்சங்க மெவ்விடத்து நிறுவியருள் நிமலன் றாளுக்
கிறந்துபடாப் பாமாலைப் பல்வகைய பிரபந்தம் இசைத்துப் போற்றி.”
(திருநாகைக் காரோணப் புராணம்.)
குப்பு முத்தா பிள்ளை
“எனையாண், ஞானநன் மணிமீ னாட்சிசுந் தரப்பேர் நாவலன்.”
“தண்டமிழ்க் குருமீ னாட்சிசுந் தரமால்,”
“……………… புலமை முதிருமீ னாட்சிசுந் தரப்பேர் எந்தை “
“………………………………………………………. மன்னு மின்பம்
நல்குதமிழ்த் தேசிகனெம் மீனாட்சி சுந்தரப்பேர் நாதன்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
காஞ்சீபுரம், சபாபதி முதலியார்
“…………. ………….. அகிலாண்ட வல்லி
புங்கமுறு கின்றபிள் ளைக்கவிதை யாமமுது
புலவர்மகிழ் கொண்டருந்தப்
பொற்புட னளித்தனன் மீனாட்சி சுந்தரப்
பொன்னிறங் கொண்ட மாலே.”
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்)
புரசை, சபாபதி முதலியார்
“… சிவநெறி சற்றும் பிறழ்விலாக்
குரிசில் திரிசிர புரமுறை புனிதன்
…………………………………………
நளிகடற் றிசைதொறும் நனிதன் னிசைநிறூஉ
மேனாட் பெருந்தமிழ் விரகரும் விழைதகு
மீனாட்சி சுந்தர விற்பன சிகாமணி
ஓதுமா வடுதுறை யாதீன வித்துவான்.”
(காசி ரகசியம்.)
புதுவை, சவராயலு நாயகர்
“மீனாட்சி சுந்தரவென் னாசான்.”
“மீனாட்சி சுந்தர தேசிகன்.”
“…முக்கணன் வாழிதயனிந்த
மண்கணுற்றோர் தொழுதேத்தெம் மீனாட்சி சுந்தரமால்.”
“ஏர்குடிகொண் டோங்கிவளர் மீனாட்சி சுந்தரப்பே ரெங்க ளாசான்.”
“……… தடமலி சிராமலை தனில்வாழ்,
தகுதிபெற் றொளிர்செந் தமிழ்முனி யென்னத்
தக்கமீ னாட்சிசுந் தரமால்.”
“தேசுற வொளிருஞ் சிரகிரி வாணன்
நற்குண மேன்மை நல்லொழுக் குடைமை
பொற்புறு வாய்மை பொலிவுறு தூய்மை
புண்ணியஞ் சீலம் பொறைநிறை தேற்றம்
உண்ணிறை யறிவிவை யொருங்கு திரண்டு
வந்தென வொளிரு மாதவப் புனிதன்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
சவேரிநாத பிள்ளை
1. “புண்ணியமென் கோபொறையே பொருவிலா வடிவெடுத்த புதுமை யென்கோ
கண்ணியவின் தமிழ்மொழிசெய் நற்றவத்தின் பயனென்கோ கருது வார்க்குள்
அண்ணியமா விருளகற்றி யருண்ஞான விளக்கென்கோ அறையப் புக்கால்
நண்ணியபல் படியுநீத் தவிர்கின்ற திருமேனி நயந்து ளானால்.”
2. “அலரடியி லிடுவாரு மகநெக்கு நெக்குருகி அருளா யென்றே
புலர்வுறநாத் துதிப்பாரும் பொன்னடியே புகலென்று புகன்று நாளும்
உலர்வறவந் தடைவாரு முளராக வடியேற்கும் உணர்வு கூட்டிக்
கலர்காணாக் கழனேர்ந்து கடைக்கணித்தாட் கொண்டவொரு கருணை மூர்த்தி”
3. “சீர்பூத்த நாவலருங் காவலருஞ் செழுமறைதேர் திறலு ளாரும்
நார்பூத்த ஞானநிறை மாதவரும் போதவரும் நாளும் போற்றப்
பார்பூத்த நம்பெருமான் பஃறலமான் மியந்தமிழாற் பாட வல்லான்
வார்பூத்த சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(திருவம்பர்ப் புராணம்.)
திருவீழிமிழலை, சாமிநாத கவிராயர்
“தொல்காப் பியமும் பல்காப் பியமுமாம்
இலக்கண விலக்கிய மெனும்பெருங் கடலிற்
திளைத்தினி தாடுஞ் செந்தமிழ்க் குஞ்சரம்
மடிமையேன் போல்வார் மனத்திரு ளகல
அருளொளி விடுத்துநல் லறிவை விளக்க
வந்த ஞான வரோதயப் பருதி
தென்பான் மலயத் திருமுனி யிருந்தாங்
கன்பார் வடபாற் கருண்முனி யானோன்
சைவசித் தாந்தத் தனிப்பெருஞ் சாகரம்
பொய்ம்மை யில்லாப் புலவர் சிகாமணி
கல்லாக் கலராங் கரிகளை வெல்ல
வல்ல வீர வாளரிக் குருளை
கங்கைச் சடையெங் கண்ணுதற் பெருமான்
வடாது கைலையாம் வரையினை யொரீஇத்
தெனாது கைலையாஞ் சிரகிரி யதனிற்
றமிழ்க்கர சியற்றத் தான்வந் ததுபோற்
றானாட்சி யாகிய தலைவன்
மீனாட்சி சுந்தர விமலநா வலனே”
“… திருச்சிரா மலையில் வாழெந்தை யருள்சேர்
மாட்சிமை விளங்குமீ னாட்சிசுந் தரமுகில்.”
“நீர்கொண்ட வேணிக் கறைக்கந்த ரத்தெந்தை நிலவுஞ் சிராமலையிடை
நிலைமைசேர் செந்தமிழ்ப் புலமையை நடாத்திநெறி நீதிசெய
வந்தகோமான்
ஏர்கொண்ட தண்டா மரைத்திரு வடிக்கடிமை யென்னவெனை யாண்டபெம்மான்
இருநிலம் பரவுமீ னாட்சிசுந் தரனென்னு மினியநா வலவரேறே.”
”மருத்திகழ் கமல முகத்தினா ருலவு மாடநீ டிரிசிரா மலையின்
வழுத்தரும் புகழ்மீ னாட்சிசுந் தரமால் வஞ்சனே னெஞ்சகச் சிலையிற்
குருத்தினி தலருந் தாமரைத் தாளன்.”
“தூநிலாத் தவழுஞ் சிரிகிரி யதனிற் றுளவணி யலங்கலாற் பொருவும்
சொல்லரும் புகழ்மீ னாட்சிசுந் தரப்பேர்த் தூயநா வலர்சிகா மணியே.”
“ஆரணி சடிலத் தெந்தைவீற் றிருக்கும் அருட்சிரா மலையில்வா ழெம்மான்
அருந்தமிழ்க் கிறைமீ னாட்சிசுந் தரமால்.”
”……………… துயர்மாற் றிடுஞ்சீர்ச் சிரகிரியிற் தங்கும் புகழ்நற் செந்தமிழ்க்குத்
தலைமைப் புலமை நடத்துபெருந் தகைமீ னாட்சி சுந்தரமால்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
சி. சாமிநாத தேசிகர்
“சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின் மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்”
(திருக்குடந்தைத் திரிபந்தாதி.)
உ. வே. சாமிநாதையர்
{அநு4.8}
“அத்தகைய பெருங்கீர்த்திக் கவிநாதன் யாவனெனின் அமலை யோடும்
நித்தனுறை பலதலமான் மியமினிய செந்தமிழில் நிகழ்த்தி னோனங்
கைத்தலவா மலகமெனத் தனையடைந்தோர் பலர்க்குமின்ன கால மென்னா
தெத்தகைய பெருநூலு மெளிதுணர்த்திப் பயனு றுத்தும் இணையி லாதோன்.”
{அநு4.9}
“அருத்திமிகு மெனையருகி விருத்தியருந் தமிழ்நூல்கள் அறைந்து பின்னர்த்
திருத்துறைசை யமர்தருசுப் பிரமணிய வருட்கடலின் திருமுன் சாரப்
பொருத்தியனை யான்கருணைக் கிலக்காக்கி யிருபயனும் பொருந்தச் செய்தோன்
மருத்தபொழிற் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(உறையூர்ப் புராணம்.)
“எண்ணிய பலவு மாணவர்க் கன்பி னீந்திடு நிதிதமிழ் விளங்க
நண்ணிய புகழ்மீ னாட்சிசுந் தரநன் னாவலன்.”
“தேனாட்சி செய்கவி யானின் செயன்முற்றுஞ் செப்புமுன்னே
மீனாட்சி சுந்தர வள்ளலை யெங்கள் விழுப்பொருளை
வானாட்சி செய்யப் புரிந்ததென் னோமன் வடிவுகொடு
தானாட்சி செய்திரு வாரூர்த் தியாகசிந் தாமணியே.”
(தியாகராசலீலை முகவுரை)
“பூமலி துணர்ச்சினைக் காமலி கூலப்
பொன்னிமா நதிபாய் சென்னிநாட் டிடைவளம்
நிறையூ ராய வுறையூர்க் குணபாற்
கருமுதிர்ந் தயர்வுறு மொருமக ளஞரறத்
தாயான செல்வந் தங்குமாத் தலமாய்த்
துரிசிரா திலங்குந் திரிசிரா மலையில்
உதித்தொளி மிகுத்தே கதித்துறு மணியும்
மலர்தொறு நறவுகொள் வண்டின மேய்ப்பப்
பலரிடைக் கல்வி பயின்றோங் கண்ணலும்
யாவரு மென்று மேவரும் புலமை
வாய்ந்துநூல் பலமிக வாய்ந்துகிள ரேந்தலும்
சுவைசெறி பனுவல்க ளவைபல வியப்ப
எளிதிற் பாடிய வளிகிளர் குரிசிலும்
புவித்தலம் வியப்பச் சிவத்தல புராணம்
பலசெய் தோங்குசீர் படைத்தசீ ரியனும்
நலமா ணாக்கர் பலபேர்ப் புரந்தே
அன்னர் குழாத்திடை நன்னர் மேவி
நூல்பல பயிற்றிச் சால்புறு பெரியனும்
அருத்திகூ ரெனையரு கிருத்திநூல் பலசொற்
றல்ல லகற்றிய நல்லிசைப் புலவனும்
நன்றிபா ராட்டுநர் நடுநா யகமும்
நிலமலை நிறைகோல் மலர்நிக ராய
மாட்சிசால் புகழ்மீ னாட்சிசுந் தரப்பேர்
உடையனுங் குவளைத் தொடையனுஞ் சுவைசெறி
இதிலுள நூலெலா மியம்புமா கவிஞனும்.”
(பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, உரிமையுரை)
சென்னை, சின்னசாமி பிள்ளை
“மலையமுனி தவப்பேறோ கலைமகளின் தவப்பேறோ மறிநீர் வைப்பிற்
றலைமைபெறு மிவன்சனன மெனப்பலபிள் ளைத்தமிழைச் சாற்றும் வல்லோன்
குலைவில்புகழ் மீனாட்சி சுந்தரநா வலரேறு.”
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்)
சுந்தரம் பிள்ளை
“………… நளிர்சிர புரத்தில் வந்த ஞானசம் பந்தனிகர் மீனாட்சிசுந்தரந லாரியன்.”
“அடியார், கண்ணிய தருண்மீ னாட்சிசுந்தரநங் கடவுள்.”
“நாற்கவிக் கிறைமீனாட்சி சுந்தரன்.”
“என், அல்லறீர்த் தாண்மீ னாட்சி சுந்தரமால்.”
“மெய்ஞ்ஞானக் கடலெனையாண் மீனாட்சி சுந்தரமால்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
தி. சுப்பராய செட்டியார்
“மின்னுமணிக் குடந்தையுமை தமிழைச் சொன்ன மீனாட்சி
சுந்தரநா வல்லோன் றன்பாற்
றன்னமில்சீர்த் தலைமைதழைத் தோங்கும் பிள்ளைத்
தமிழ்பிள்ளைத் தமிழாகித் தயங்கிற் றன்றே.”
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்)
“பெரும்பொரு ளுளார்க்கே பெரும்பொரு ளுறல்போல்
ஈண்டுபுகழ் செறிய வாண்டுவரு பெரியோன்
பிறைமுடிப் பெம்மா னுறைதரப் பெற்ற
நறையூர் பொழில்சூ ழுறையூர்ப் புராணமும்
சுரும்புபடிந் துண்ண வரும்புக டோறும்
மட்டவிழ் குறுக்கைவீ ரட்டப் புராணமும்
உற்ற பவஞ்சப் பற்றகன் றவர்பலர்
துற்றொளிர் வாளொளி புற்றூர்ப் புராணமும்
உடைத்தெழும் வயன்மடை யடைத்திடக் கருப்புக்
கட்டி யிடும்விளத் தொட்டிப் புராணமும்
சேற்றூர் விளைவய லாற்றூர்ப் புராணமும்
எயிலை யுடுத்தொளிர் மயிலைப் புராணமும்
கமலைத் தியாக ரமல லீலையும்
ஊழியும் பேராக் காழிக் கோவையும்
எருதூர் பரனிடை மருதூ ருலாவும்
மேவுபுக ழானைக் காவி னிடத்தருள்
பூண்டமர்ந் தருளகி லாண்டநா யகிக்கும்
உருத்தவத் துறைதெறுந் திருத்தவத் துறைவளர்
கருப்புகல் கடிபெருந் திருப்பிராட் டிக்கும்
முன்னவி லுறையூர் மன்னிய வடியவர்
ஏந்திமதி யமைக்குங் காந்திமதி யுமைக்கும்
தருப்பெரு மணந்தரு திருப்பெரு மணத்துறை
போற்றுவார்க் கருடிரு நீற்றுமை யவட்கும்
பெருவிடைப் பரனரு டிருவிடைக் கழியமர்
தருமரு கனுக்கும், திருமுரு கனுக்கும்
காவடுத் துறைதிரு வாவடு துறையில்
நம்பல மாக நயந்தெழுந் தருளும்
அம்பல வாண வருட்குரு பரற்கும்
பெருநயந் துவன்றிய பிள்ளைத் தமிழும்
அரதனா சலத்துறை வரதனுக் கும்மேற்
சொன்னகுரு பரற்கும் பன்னுகலம் பகமும்
விற்குடி கொளுமுடிக் கற்குடிப் பரற்கும்
இதம்புகல் கலைசைச் சிதம்பரேச் சுரற்கும்
சொற்றவா னைக்கா வுற்றவன் னைக்கும்
தருமையில் வளர்தருஞ் சச்சிதா னந்த
குருபர னுக்குமேர் தருதமிழ் மாலையும்
அறைதுறை சையுமரு ணிறைசிராப் பள்ளியும்
அமரம லற்குநல் யமக வந்தாதியும்
நீலி வனத்துறை நிமலனுக் கும்முரற்
காலிப வனத்துமுக் கட்பரஞ் சுடர்க்கும்
விரிபொருள் கிடந்த திரிபந் தாதியும்
சீருறை பூவா ளூருறை யரற்கும்
நாருறை யூறை நண்ணிய பரற்கும்
தண்டபா ணிக்கும் வண்டமிழ் மதுரை
ஞானசம் பந்த நற்றே சிகற்கும்
உத்தமப் பதிற்றுப் பத்தந் தாதியும்
நறும்பலாச் சோலை யெறும்பி யூரின்
மேவுசோ திக்குவெண் பாவந் தாதியும்
நவின்றமா மதுரையிற் கவின்றருள் ஞானசம்
பந்ததே சிகற்கா னந்தக் களிப்பும்
ஒருகவி யேனு மொழிதர லின்றி
இருளகன் றொளிரு மெல்லாக் கவிகளும்
சொன்னலம் பொருணலஞ் சுவைமிகு பத்திமை
நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து
முழங்குற வெளிதின் மொழிபெரு நாவலன்
குலத்திற் குடியிற் குணத்திற் குறையா
நலத்தின் மாண்பி னகுசிவ பத்தியில்
வாய்மையிற் பொறையின் மலிதரு நிறையிற்
தூய்மையிற் கொடையிற் றுகளரு நீதியின்
மயங்குறு பிறப்பி லுயங்கெனை யாண்ட
தயங்குபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்தோன்
சந்த மலிந்த செந்தமிழ்க் கரசா
வந்தமீ னாட்சி சுந்தர வாரியன்.”
(திருத்தில்லை யமகவந்தாதி)
“மூர்த்திதலந் தீர்த்தமான் மியமுமந்த மூர்த்தியருண் முறையுங் குன்றா
தார்த்திகொள்பா யிரமுதலா நைமிசம்வா ழறவர்பூ சித்த தீறாப்
பாத்தியபஃ றுறைப்படுபா வாற்புலவ ரியற்றுநூற் பண்பு தேர்வான்
சேர்த்தியநன் னிறைகோலாப் பலசெய்தோன் புராணமொன்று செய்தா னன்றே.”
“அன்னவன்யா ரெனினறைதுங் கேண்மினக லிடத்தளவாக் கல்வி யொன்றாற்
றன்னனைய ருளரெனினும் பொறையினாற் றனக்குநிகர் தானாக் கற்றோன்
பொன்னனைய கவிபாடும் புலமையினாற் பாடுநரும் புவியி லுண்டோ
என்னெனயா முரைப்பமெனப் புலவர்தம்மு ளெடுத்துரைப்பப் பாடத்
தேர்ந்தோன்.”
“சின்னூலி னுணர்ச்சியுளோ ரஃதிலோர் செவிதெவிட்டச் செறிந்து கேட்பிற்
பன்னூலு நனியுணர்ந்தோ ரிவரெனயா வருமதிப்பப் பழுத்த செஞ்சொல்
முன்னூலும் பின்னூலூந் தலையெடுப்பப் பிரசங்க மொழிய வல்லோன்
எந்நூலு மிவன்பினெவர் மொழியவல்லா ரெனக்கற்றோர் இசைப்ப மிக்கோன்.”
“அருள்கனிந்த பரசிவமே பொருளெனத்தேர்ந் துலகனைத்தும் அருகா துய்யத்
தெருள்கனிந்த சைவநெறி நடையாலு முரையாலும் தெரிக்குந் தூயோன்
இருள்கனிந்த வென்மனத்து மிடையறா தொளிபரப்பி இருப்போன் கங்கைப்
பொருள்கனிந்த குலதீபன் மீனாட்சி சுந்தரனாம் புலவ ரேறே.”
(திருநாகைக் காரோணப் புராணம்.)
சி. தியாகராச செட்டியார்
“நீரேறு செஞ்சடில நின்மலனே பதியென்று நிலவச் சாற்றும்
நாரேறு ஞானகலை முதலியநற் கலைபலவு நன்கு தேர்ந்தோன்
காரேறு மகத்தெனையுங் கற்றோர்சே ரவைக்களத்தோர் கடையிற் சேர்த்தோன்
சீரேறு மீனாட்சி சுந்தரநா வலரேறு.”
(திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்)
“…………… பற்றா வெனக்கு மறிஞர்
பரவவையி லிடமருளு மீனாட்சி சுந்தரப் பைந்தமிழ்ப் புலவரேறே.”
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்.)
“…. கல்லா
இருள்பழுத்த மனத்தினரை யெவ்வறிவு முடையரென இயற்றுந் தூய்மைத்
தெருள்பழுத்த மீனாட்சி சுந்தரநா வலன்.”
(பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி)
“…… …….. …….. ……. …… ……….. நாயேன்
தொண்டிருக்குங் கழற்பெரியோன் மீனாட்சி சுந்தரப்பேர்த் தூய்மை யோன்வெண்
பெண்டிருக்கு நாவனன்றி மற்றொருநா வாற்புகழ்ந்து பேச லாமோ”
(சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை.)
“என்னவதி சயநம்பா லிருந்தபெரும் புண்ணியமென் றிதுவு மெம்மான்
தன்னனைய வருளாயிற் றடையெவனோ வெனவுவகை சார்ந்து நின்று
சொன்னயமும் பொருணயமுந் துலங்குபல வணிநயமும் தூய பத்தி
நன்னயமு மினிதார்ந்து நனிவிளங்கப் புனைவித்து நல்கி னானால்.”
“அனையபெரி யோன்யாவ னெனிற்புகல்வாஞ் சிராப்பள்ளி அமர்ந்து வாழ்வோன்
கனைகடல்சூ ழுலகிற்றன் பெயர்நிறுவி னோனெல்லாக் கலையு மோர்ந்து
தனையனைய னாயடைந்தோர் சரணாகி யொளிர்புனிதன் தக்கோர் போற்றி
வனைபுகழ்ப்பூம் படாம்புனைந்த மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(திருநாகைக்காரோணப் புராணம்)
“முன்னுளபல் புலவருளும் பின்னுளபல் புலவருளும் முதியீர் செஞ்சொன்
மன்னுபன்னூ லொன்றொடொன்று தோலாது மாண்புபெற வகுப்பார் யாரே
என்னினிவர் தமைக்குறிப்பே மினையனே யெனக்குறிப்ப இசைமை வாய்ந்து
துன்னுநய குணமேலோன் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(மாயூரப் புராணம்.)
ச. தெய்வநாயகம் பிள்ளை
“விண்ணுலகத் தமர்ந்துதனை யடைந்தோர்க்கு விரைந்தழியும் வெறுக்கை நல்கிக்
கண்ணுறுசிற் றின்புறச்செய் தறக்கழிவு கண்டிடுகற் பகம்போ லாது
மண்ணுலகத் தமர்ந்தடைந்தோர்க் கழிவில்கல்விப் பொருள் வழங்கி வனைபே
ரின்பம்
நண்ணுறச்செய் தறம்பெருக்கு மீனாட்சி சுந்தரப்பேர் நல்லோ னன்பால்”
“என்னறிவா லின்னவென வறிந்தறிந்து வகுத்துவகுத் திசைத்தல் கூடாப்
பன்னலமு நனிசிறந்து விளங்கவனைந் தணிந்தபா மாலை யாய
நன்னலஞ்சே ரொருபிள்ளைத் தமிழ்.”
(அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்)
வல்லூர்த் தேவராச பிள்ளை
“அண்ட வுருவா யவிர்விராட் புருடனுக்
கெண்டகு சென்னியா விலகுகா ரணத்தாற்
சென்னிப் பெயர்பெறுந் திருநா டதனில்
அம்முடிக் கென்று மழகுறக் கவித்த
பன்மணி முடியிற் பாங்குற வொளிரும்
திரிசிர கிரியெனுந் திருநக ராளி
கலையுணர்ந் திடலாற் கற்பவ ருளத்தில்
நிலைமுக் குற்ற நிசியைத் துரத்தலாற்
சைவ சமயத் தாமரை மலர்த்தலாற்
புறமதத் துகினம் புறமிடக் கடிதலால்
மதிஞரிற் சிலரின் மார்த்தாண்ட னென்றும்
புலவருக் குக்கலை பொலிதரத் தரலாற்
கலாநிதி யாகலிற் கவினளி செயலால்
அறிஞரிற் சிலரிவ னம்புலி யென்றும்
செந்தமிழ் பரப்பலாற் சிவன்புகழ் பாடலால்
ஆகம மனைத்து மறிந்துயர்ந் திடலால்
ஆய்ந்தவர் சிலரிவ னகத்திய னென்றும்
மனநனி மகிழ்ந்து வழங்குவ ரென்ப
கதிரவன் வெய்யோன் கழறிவன் றண்ணியோன்
நகையிழந் தவனவ னகையிழ வானிவன்
எல்லிடை யுறானவ னெப்போழ்து முனிவன்
ஆதலி னவனிவற் கன்றிணை யென்ப
மதிகலை தேய்பவன் வளர்கலை யானிவன்
அவன்மா பாதக னிவன்மா புண்ணியன்
அவன்வெந் நோய னிவன்மிகு தூயன்
அவன்பக லவனிடை யவிரொளி பெறுவான்
இவனியற் கையினி லென்று மிலகுவான்
ஆதலி னவனிவற் கன்றிணை யென்ப
கும்ப முனியோ குறியவ னாகும்
நம்பனைப் பணியிவ னவிலரும் பெரியோன்
முன்னொர்நற் சீடனை முனிந்தவன் சபித்தனன்
சீடர்செய் பிழையெலாஞ் சிந்தி யானிவன்
ஆதலா னவனிவற் கன்றிணை யென்ப
… … … … … …
… … … … … … …
பகர்சுதந் திரனாம் பரசிவ முதலே
என்போன் றவருக் கின்னருள் புரிவான்
கடுவர வொடுசெழுங் கடுக்கை தவிர்த்து
மடலவிழ் குவளை மலர்த்தா ரணிந்து
பாலலோ சனமும் பனிமதிக் கோடும்
களத்திடைக் கறையுங் காணாது மறைத்துச்
சிதம்பர வேண்முனஞ் செய்தமா தவத்தான்
மகிதல முற்றும் வாழ்த்துறச் சுதனா
வந்தன னெனலே வாய்மையா மென்று
தூயவ ரெவருஞ் சொற்றிடுந் தக்கோன்
மீனாட்சி சுந்தரப் பெயர்ச்செவ் வேளே.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
பாலகுரு உபாத்தியாயர்
“…………. ………… நல்லறிஞ ரேத்தும்
தங்கியசீர் மீனாட்சி சுந்தரதே சிகனெனும்பேர்த் தமிழ்ச்சிங் கேறே”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
தி. க. பெரியண்ணம் பிள்ளை
“நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே.”
(திருக்குடந்தைத் திரிபந்தாதி)
மெய்யூர் பொன்னம்பல நாயகர்
“கணிவளர் கூந்தற் பரையொடு பரமன் களித்துவாழ் திரிசிர புரியான்
கங்கையங் குலத்தான் செந்தமிழ் வாரிக் கரைகண்ட நாவலர் பெருமான்
திணிவளர் சைவச் செழுமதம் விளங்கத் திருவவ தாரஞ்செய் பெரியோன்
செய்யமீ னாட்சி சுந்தர நாமம் திகழ்தரப் பெற்றசெவ் வேளே.”
(சித்திரச்சத்திரப் புகழ்ச்சிமாலை)
புரசை பொன்னம்பல முதலியார்
” ……………. ……….. சிறந்தசைவ சமயமோங்கத்
தகரநறுங் குழல்பாகன் றிருவருளாற் சிராப்பளியென் தலத்தில் வாழ்வோன்
சிகரவட வரைப்புயத்தெம் மீனாட்சி சுந்தரமால் திருந்தெந் நூலும்
பகர வலோன்.”
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்)
மழவை மகாலிங்கையர்
“சிரபுரக்கோன் மீனாட்சி சுந்தரவேள் தன்பெயரின் சீர்மைக் கேற்ப
வரனுறுநற் பிரபந்த விடயத்து முயர்ந்தெல்லாம் வல்லோ னானான்.”
(அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்)
காரைக்கால் முத்துசாமிக் கவிராயர்
“போராட்டச் செயலுணரா மீனாட்சி சுந்தரனாம் புலவன்.”
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் )
மாயூரம் ந. முத்துசாமி பிள்ளை
“கொத்துமலர்ப் பொழிற்றிருவா வடுதுறையம் பலவாண குரவன் பாலே
முத்தர்களும் புகழ்ந்தேத்து மூவகைத்தீக் கையுமுறையே முற்றப் பெற்றுத்
தத்துவமெய்ஞ் ஞானகலை முதலாய பல்கலையிற் றழைந்து மேலும்
எத்தலமு மதிக்கவரும் புகழோங்கு நாவலர்கள் இனிதாப் போற்றும்.”
“பொன்னாட்டிற் சுவைமிகுநல் லமுதினுமின் கவிமாரி பொழியு மேகம்
கன்னாட்டும் புயத்தரசர் முடிதுளக்கப் பேசுகவி வாண னாய
தென்னாட்டிற் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரப்பேர்த் திறல்வல் லோன்.”
(திருநாகைக்காரோணப் புராணம்)
“இலங்குறுமெய்ஞ் ஞானகலை முதலியபல் கலையுணர்ச்சி ஏய்ந்து தூய
நலங்குலவு பொறைவாய்மை யருளடக்க முறவாய்ந்து நலத்தி னின்றும்
விலங்குறுமென் னையுந்தனது மெய்யடியார் குழுவினிடை மேவச் சேர்த்தோன்
வலங்குலவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(மாயூரப் புராணம்)
முருகப்பிள்ளை
“……… எளியேன் றீமை
மண்ணியசீர் மீனாட்சி சுந்தரதே சிகன்.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை)
நாகபட்டினம் வீரப்பசெட்டியார்
“பூமேவு திருநாகைக் காயாரோ கணப்பெருமான் புராணஞ் சொற்றான்
தேமேவு வீரசைவ சிகாமணியப் பாத்துரைமால் சிறப்பிற் கேட்கக்
காமேவு சிராமலைவாழ் சைவசிகா மணிஞான கலைமுற் றோர்ந்து
மாமேவு துணிபமைந்த மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே.”
(திருநாகைக் காரோணப் புராணம்)
திரிசிரபுரம் வீரராகவ செட்டியார்
“இப்புவிசெய் தவந்தானோ தந்தைதாய் செய்தவமோ இசைத்த வாசான்
செப்பமுடன் செய்தவமோ மீனாட்சி சுந்தரவேள் செனன மாகி
ஒப்பிலியர் கல்வியுஞ்சற் குணமுநிறைந் தகிலாம்பை உபய பாத
வைப்பிலன்பா லினியபிள்ளைத் தமிழுரைத்தான் புலவரெலாம் மகிழத் தானே.”
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்)
தாராநல்லூர் வீராசாமி நாயகர்
“அவ்விய மடியார்க் கறுத்தருள் புரிமீ னாட்சிசுந் தரகுரு பரனே.”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை)
குளத்தூர் ச. வேதநாயகம் பிள்ளை
“வாதவூ ருதித்தந்நா டிருக்கோவை யுரைத்த மாணிக்க
வாசகரே சிரபுரத்தி லிரந்நாள்
ஆதவனிற் றோன்றிமீ னாட்சிசுந் தரனென் றரும்பெயர்பூண்
டொருகோவை யறைந்தனர்கா ழிக்கே
ஏதமில்தில் லைக்கோவை யாயுவதின் மூத்த தென்னினுங்கற்
பனைநயத்தி லிக்கோவை முன்னாம்
மூதறிஞர் வைகலும்பா டப்பாட வாக்கின் முதுமைகொள்வா
ரெனவுலக மொழியுமொழி மெய்யே.”
(வேறு)
“திருவமர்கோ வையைமகிழ்ந்து வாதவூ ரரைத்தன்பாற் சேர்த்துக் கொண்ட
பொருவில்சிதம் பரநாதன் பின்னுமொர்கோ வைக்காசை பூண்டன் னாரை
மருவுசிர புரத்தீன்று மீனாட்சி சுந்தரப்பேர் வழங்கிக் காழிக்
கொருகோவை செய்வித்தான் சிதம்பரநா தன்சேயென் றுரைத்தன் மெய்யே.”
“வித்தகமார் மீனாட்சி சுந்தரவே ளேயொருநூல் விளம்பு மென்னைப்
புத்தமுதார் நின்வாக்காற் றுதித்தனைநீ பாடியதிப் பொருணூ லொன்றோ
எத்தனையோ கோவைகண்மற் றெத்தனையோ புராணமின்னும் எண்ணி னூல்கள்
அத்தனையு மித்தனையென் றெத்தனைநா விருந்தாலும் அறையப் போமோ.”
“பன்னூலு மாய்ந்தாய்ந்தோர் பயனுமுறா துளம்வருந்தும் பாவ லீரே
நன்னூலோர் மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் காழிக்
கந்நூலு ளொருபாவி லோரடியி லொருசீரை ஆய்வீ ராயின்
எந்நூலுங் கற்றவரா யிகபரமும் பெற்றவரா யிலகு வீரே.”
(வேறு)
“தண்டமிழுன் பாலுணர வாசைகூ ரனந்தன் தனமீய வகையின்றி நின்சேட னாகிக்
கொண்டனனந் நாமமே யகத்தியன்றான் றன்னைக் கூடாம லுனைமேவிக்
குலாவுதமி ழதனை
அண்டலரின் முனிந்ததனாற் றமிழ்முனிவ னெனும்பேர் அடைந்தனனா
தலினகிலத் தியாவருனை நிகர்வார்
வண்டமர்தார் மீனாட்சி சுந்தரவே ளேநீ வளப்புறவக் கோவைசொலின்
வியப்பவரா ரையா.”
(வேறு.)
“நலம்விளக்கு மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் சண்பைத்
தலம்விளங்க வவற்குநாம் புரிகைம்மா றெவனழியாத் தனமே கங்கா
குலம்விளக்குங் கற்பகமே குருமணியே திருவணியே குணக்குன் றேயிந்
நிலம்விளக்குந் தினகரனே யெனவவனை வாழ்த்திடுவாய் நிதமு நெஞ்சே.”
“கானோடு மிளிர்தாரான் மீனாட்சி சுந்தரமால் காழிக் கோவை
தேனோடு பாலோடு நிகருமவன் பிரதாபம் சீர்த்தி யோங்கி
வானோடு மண்ணோடு மற்றோடும் வகையின்றி வடிவி ரண்டாய்
மீனோடு வான்றிரியும் பானுமதி யென்றுலகோர் விளம்பு வாரால்.”
“தண்டமிழ்முந் நீர்பருகி மீனாட்சி சுந்தரப்பேர்த் தருமக் கொண்டல்
தொண்டர்கள்சூழ் சிரபுரத்திற் பொழிகோவை யெனுமமுதத் தூய மாரி
மண்டலமும் விண்டலமுங் கரைபுரண்டு திரைசுருண்டு வருத னோக்கி
அண்டர்தொழும் புகலியிறை தோணியுற்றா னஃதின்றேல் அமிழ்ந்து வானே”
“தேவேநேர் மீனாட்சி சுந்தரக்கோ னொருகோவை செப்பிப் பாரிற்
றாவேயில் புகழ்படைக்கி னமக்கென்ன வவற்குமவன் தமர்க்கும் பாடாம்
நாவேகா தேமனனே யவன்சீரைச் சொலிக்கேட்டு நனியிங் குன்னி
ஓவேயி லாதருங்கா லங்கழித்தீர் பிறவினைமற் றொன்றி லீரோ.”
(சீகாழிக்கோவை)
வைத்தியலிங்க பத்தர்
“தூமேவு தன்னடிய ரொடுநாயி னேனையும் துரிசறச் சேர்த்தருள்செயும்
சுகுணசிர புரமேவு விமலவெம் மீனாட்சி சுந்தரப் பேர்க்குரவனே.”
“ஏர்கொண்ட நதிகுலச் சலதிவந் தமரர்மிக் கேத்துசிர கிரியுதித்தன்
பெஞ்சலின லடியவ ருளத்தஞா னத்திமிரம் இரியச் சவட்டியருள்செய்
தார்கொண்ட சிவஞான பானுமீ னாட்சிசுந் தரகுரு பரன்”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை)
-இரண்டாம் பாகம் நிறைவு-
(மகாவித்துவான் சரித்திர முற்றிற்று).
$$$