-தெள்ளாறு கோ.ராமநாதன்
திரு. தெள்ளாறு கோ.ராமநாதன், ஆன்மிக எழுத்தாளர்; சர்வோதய இயக்கத்தில் திரு. எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அவர்களுடன் இணைந்து மது ஒழிப்பு பிரசாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்; தற்போது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்; 13 நூல்களை எழுதி இருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தர் பாரதத்திலும் வெளிநாடுகளிலும் பெரும்பாலும் வேதாந்தத்தின் கருத்துக்களையே பேசினார்.
சுவாமி விவேகானந்தர் ஒரு வேதாந்தி. வேதாந்தி என்றால் வறட்சியாக அதாவது மனதில் ஈரம் இல்லாதவராக இருப்பார்கள் என்று நினைப்பதுண்டு. விவேகானந்தரோ ஒவ்வொரு மயிர்க்கால் தோறும், ஏன் ஒவ்வொரு திசுவிலும் அவர் அதிக ஈரம் உடையவராக அதாவது அதிக இரக்கம் உடையராக இருந்தார்.
வேதாந்தம் சொல்லும் மகா வாக்கியம்: ரிக் வேதம் - ‘பிரக்ஞானம் பிரம்மம்’ - அதாவது தூய அறிவே பிரம்மம். யஜூர் வேதம் - ‘அகம் பிரம்மாஸ்மி’ - நானே அந்த பிரம்மம். சாம வேதம் - ‘தத்வமஸி ‘ - நான் பிரம்மம்; ஆனால் என் எதிரில் நிற்கும் நீயும் அதுவே. அதர்வண வேதம் - ‘அயம் ஆத்மா பிரம்மம் ‘ - இந்த ஆத்மாவே பிரம்மம் என்பதாம்.
ஆத்மா ஒன்றே எல்லா உயிரினங்களிலும் ஒரே ஆத்மசக்தியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்களிடத்தும், மிருகங்களிடத்தும் பறவைகளிடத்தும் உயிர் பொதுவானது.
‘கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
இருதயம் அடித்துக் கொண்டிருப்பதில் ஒரு சப்தம் உண்டாகிறது. அது வெளியில் எங்கேயோ இருந்து வருவதாக மனிதன் எண்ணிக் கொள்வதுண்டு.
உள்ளத்தினுள் தெய்வம் இருக்கிறது. அதை உணர்ந்தாக வேண்டும் என்ற அருள்தாகம் அவனை உயர்ந்த நாட்டத்திலே உந்தித் தள்ளுகிறது.
தெய்வத்தை எங்கு காண்பது என்று மனிதன் தேடிப் பார்க்கிறான். இங்கும் அங்கும் அவன் அதன் பொருட்டு அலைந்து திரிகிறான்.
புண்ணிய க்ஷேத்திரங்களிலும், தீர்த்தங்களிலும், சுவர்க்க லோகத்திலும் தேடியான பிறகு மனிதன் தன்னிடத்துக்கே திரும்பி வருகிறான். புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வரும்பொழுது வட்டமிடுதல் என்னும் செயல் பூர்த்தியாகிறது.
உலகெங்கும் தேடிய பொருள், கதறி அழுது நாடிய பொருள், ஆலயங்களிலே அர்ச்சித்து வணங்கப்பட்ட பொருள், அடியெது முடியெது என்று அறிந்துகொள்ள முடியாத பொருள், அண்டங்களுக்கு அப்பால் உள்ள பொருள் தான் நெஞ்கத்தினுள் இமைப்பொழுதும் நீங்காது குடிகொண்டிருக்கிறது என்பது, ஆத்ம சாதகனால் அறியப்படுகிறது.
தனது உடலுக்கும், உள்ளத்துக்கும், உயிருக்கும் அடிப்படையாக உள்ள ஒண்பொருள் உணரப்படுகிறது. அதுவே மனிதனுடைய நிஜ சொரூபம். தனது ஆத்ம சொரூபத்தையே ஆழ்ந்து எண்ணுதல் வேண்டும். தான் ஆத்ம சொரூபம் என்பதை மனிதனுடைய ஜீவிதம் விளக்க வேண்டும்.
கடவுள் அனந்தம் ஆகியுள்ளவர் – ஆள் அன்று. அவர் எப்பொழுதும் இருப்பவர். மாறாதவர், அழியாதவர், பயமற்றவர், நீங்கள் எல்லோரும் அவரது அவதாரங்கள். அவருக்கு உருவமாக உள்ளவர்கள். இது தான் அத்வைத வேதாந்தத்தின்படி கடவுள் என்று கூறப்பட்டவர்.
உயிருள்ள கடவுள் உங்கள் உள்ளே இருக்கிறார். ஆயினும் நீங்கள் சர்ச்சுகளையும், கோயில்களையும் கட்டிக்கொண்டு, முட்டாள்தனமாக பலவகை கற்பனைகளையும் நம்புகிறீர்கள். வழிபடத்தக்க ஒரே கடவுள் மனிதனின் உடலில் இருக்கின்ற மனிதனின் ஆன்மா.
எல்லாப் பிராணிகளின் உடல்களும் கோயில்கள் தாம். ஆனால் மனித உடல் சிறந்த கோயில். இந்தக் கோயிலில் என்னால் வழிபட முடியாவிட்டால் வேறு எந்தக் கோயிலும் எனக்குப் பயன் இல்லை.
ஒவ்வொரு மனித உடலாகிய கோயிலிலும் இருக்கிற அந்தக் கடவுளை நான் உணர்ந்து கொண்டால் ஒவ்வொரு மனிதனுக்கும் முன்னால் மரியாதையுடன் நின்று அவனிடம் கடவுள் இருக்கிறதைக் கண்டு கொண்டால், அந்த நிமிடமே என் தளைகளிலிருந்து நான் விடுபடுகிறேன். என்னைக் கட்டும் எல்லாத் தளைகளும் மறைந்து விடுகின்றன. ஆதலால் நான் விடுதலை அடைகிறேன்.
நம் ஆத்மாவை ஆராய்வதன் மூலம் நாம் கடவுளை உணர முடியும்.
‘மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்று வெளிநாடுகளில் சொல்கிறார்கள்.
‘மனிதனிலிருந்து எறும்பு வரை எல்லா உயிர்களும் சகோதரத் தன்மை உடையன’ என்று பாரதம் கூறுகிறது.
‘ஞானிகளாயிருப்பவர்கள், ஒரே கடவுள் எல்லா உயிர்களிலும் குடி கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து, அனைவரையும் கடவுளாக வணங்குவார்கள்’ என்று நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்றன.
கடவுள் மனித உள்ளங்களில் குடி கொண்டிருக்கிறார். கடவுள் குடி கொண்டிருக்கும் கோயில்களாக நினைத்து எல்லா உயிர்களையும் வழிபடுவதன் மூலம் ஞானத்தைப் பெறலாம்.
ஆழ்ந்த அன்பிலிருந்து ஞானம் பிறக்கும். ஞானத்தால் அறியாமை மறையும்; அத்துடன் நம் பந்தங்கள் அகன்று ஆத்மா விடுதலை அடையும்.
நமக்கும் அவ்வரூபக் கடவுளுக்கும் உள்ள சொந்தம் என்ன? நாம் தான் அவர். நாமும் அவரும் ஒன்று. எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாக நின்றிலங்கும் பரம்பொருளின் தோற்றங்களே நாம் யாவரும்.
‘கடவுள் அரூபியாக எல்லா உயிர்களிலும் இருக்கிறார்’ என்ற கருத்துத் தான் நீதி சாஸ்திரங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.
நீங்களும் நானும் – சகோதரர்கள் மாத்திரமல்ல, உண்மையில் ஒன்றாகவே இருக்கிறோம்.
எவனொருவன் எல்லா உயிர்களிலும் பரமேஸ்வரனைக் காண்கின்றானோ, எவனெருவன் அழியும் பொருட்களில் அந்த அழியாப் பரம்பொருளைக் காண்கின்றனோ அவனே உண்மையைக் காண்கின்றான். ஏனெனில் அவன் எங்கும் பரம்பொருளை சமமாகப் பார்த்து தன்னுடைய ஆத்மாவைத் தன்னுடைய அறியாமையால் அழித்துக் கொள்ளாமல் யாவற்றினும் உயர்ந்த நிலையை அடைகின்றான்.
‘எவ்வளவோ தவத்திற்குப் பின் நான் இந்த உண்மையை உணர்ந்தேன். கடவுள் ஒவ்வொரு ஜீவனிடத்தும் வியாபகமாயிருக்கிறார்; அதைவிட வேறு கடவுள் இல்லை; மக்களுக்கு சேவை செய்தவன் கடவுளுக்கு சேவை செய்தவன் ஆகிறான்’
உயிர்களுக்குத் தொண்டு புரிவதைவிடப் பெரியதோர் அறம் இல்லை. இந்த தருமத்தைப் பயின்றால் ஒருவனுக்கு ‘முக்தி கரபலாயதே‘ உள்ளங்கை நெல்லிக்கனி போல முக்தி வந்தெய்தும்.
ஒரு உண்மையான மனிதனுடைய நோக்கம், ஆன்மா மோட்சமடைதலும், உலகிற்கு நன்மை புரிதலும் ஆகும். ‘ஆத்மனோ மோட்சார்த்தம் ஜகத் ஹீதாயச’ என்கிறது உபநிஷதம்.
அனைத்திலும் இறைவனைக் கண்டு அன்பு செலுத்தும், சேவை புரியும் மனோ பாவத்தையே ஆலய வழிபாட்டின் மூலம் பெற வேண்டும். அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவமாகும் அது.
‘சர்வம் பிரம்ம மயம்’ என்கிறது வேதம். எல்லாம் பிரம்மமே. விக்கிரகத்தில் மட்டுமே இறைவன் குடியிருக்கிறார் என்ற எண்ணத்தைக் கடந்து செல்ல வேண்டும். அனைத்திலும் இறை சைதன்யத்தைத் தரிசிக்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் ஆலயத்திற்குச் செல்கிறோம் அங்கு ஆரத்தி எடுக்கும்போது கோயிலில் உள்ள இறைவனை மனதார இரு கண்களாலும் கண்டு வணங்குகிறோம். பின்னர் கண்களை மூடி அந்த இறைவனை எல்லாமுமாய் எல்லா உயிர்களிலும் பார்க்க வேண்டும். இதுதான் இறை வழிபாட்டுத் தத்துவம்.
கோயிலில் பார்த்த இறைவன் என் உள்ளத்தில் உள்ளான்; இறைவன் எல்லா உயிரிலும் உள்ளான் என்பது தான் உண்மையான வழிபாடு, பக்தி.
அப்படிப் பார்க்கப் போனால் எல்லாம் இறை சொரூபம் என்பது புலப்படும்.
நீ ஒருவருக்கு செய்யும் உதவி உண்மையில், உனக்கே தவிர வேறு இல்லை.
சர்வமும் பிரம்மம் என்பதால் எல்லோரையும் நேசிக்க வேண்டும். எல்லோரிடமும் அன்பு பாராட்ட வேண்டும். எல்லோரின் துயரங்களையும் உணர்ந்து நம்மால் ஆன அளவில் அவர்களுக்கு அவர்களுக்கு உதவிட வேண்டும். இப்படிப்பட்டவர்களைத் தான் பகவான் விரும்புகிறார்.
இது தான் யாத்திரை:
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் தன் சிஷ்யர்களுடன் கல்கத்தாவிலிருந்து காசிக்கு யாத்திரையாகப் புறப்பட்டார். யாத்திரை செல்லும் வழியில் ஒரு ஊரில் கோயிலின் வாயிலில் குஷ்ட நோயினால் பாதிக்கப்பட்ட பலர் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரிடம் பிட்சை கேட்டுக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட சுவாமி விவேகானந்தரின் மனம் வேதனை அடைந்தது.
தன்னுடன் வந்த சிஷ்யர்களை அழைத்து யாத்திரைக்கு வழிச் செலவுக்கு கொண்டுவந்த தொகையைக் கொண்டு அங்கு நோயாலும், பசியாலும், குளிராலும் வாடி வதங்கிப் போயிருக்கும் மக்களுக்கு உணவும், உடையும் மருந்தும் வாங்கிவரச் சொன்னார்.
சிஷ்யர்களும் அவ்வாறே அந்த தொகையைக் கொண்டு உடையும், உணவும் மருந்தும் வாங்கி வந்தனர்.
அதைக் கொண்டு அவர்களை அருகில் இருந்த குளத்தில் குளிப்பாட்டி, அவர்களின் உடலில் இருந்த புண்களுக்கு மருந்து தடவி, பிறகு புதிய உடைகளைக் கொடுத்து அணிய வைத்து, அவர்களுக்குப் பல வகையான உணவுப் பொருள்களையும் வழங்கி மனம் மகிழ்ந்தார்.
அதன் பிறகு சுவாமி விவேகானந்தர் தனது சிஷ்யர்களைக் கூப்பிட்டு கொல்கத்தாவுக்கே திரும்பிச் செல்வோம் என்றார்.
“காசி யாத்திரை செல்லவே வந்தோம், பாதியில் திரும்பச் சொல்கிறீர்களே ஏன்?” என்றனர் சிஷ்யர்கள்.
நோயாலும் பசியாலும் வாடி வதங்கிய இம்மக்களுக்குச் செய்த சேவை மூலம் நாம் இறைவனை தரிசித்த பயனை அடைந்து விட்டோம். ‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் பூஜை’ என்றார் சுவாமி விவேகானந்தர்.
இதுபோன்ற சேவையை இறைவனின் வழிபாடு எனப் பாவித்துச் செய்யுங்கள். என்னுடைய நன்மைக்காகவே நான் வழிபடுகிறேன். அதுபோல நம்முடைய நன்மைக்காகவே நாம் ஏழை மக்களிடம் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும்.
எவனொருவன் எல்லா உயிர்களையும் தன்னிலும், தன்னை கடவுள் எல்லா உயிர்களிலும் இருப்பதாகக் காண்கிறானோ அவனே ஞானி. எவன் ஒருவன் இந்த வாழ்க்கையிலேயே கடவுளை அனைவரிடத்திலும் சமமாகக் காண்கிறானோ அவனே கடவுளை அடைந்ததாகக் கருதப்படுவான்.
ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.
விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்பநிலையில் உள்ளது.
இப்படிச் சொன்னதால் கோயில்களில் விக்ரகங்களுக்கு பூஜை, வழிபாடு கூடாது என்று கூறினார் என்று பொருள் கொள்ளக் கூடாது.
இதற்காக ஆலய வழிபாட்டை வெறுத்தார் என்பதல்ல. அவரே ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுள்ளார். ஆனால் அதையும் தாண்டி செல்வது தான் உண்மை ஞானம் என்றுரைத்தார்.
‘ஆலயத்தில் பிறப்பது நல்லது. ஆனால் ஆலயத்திலே செத்து மடிவது துரதிருஷ்ட வசமானது ‘ என்றார்.
அதாவது ஒருவரின் உண்மையான ஆன்மிகம் என்பது ஆலய வழிபாடு மாத்திரமல்ல, அதையும் தாண்டி, உயிருள்ள ஒவ்வொரு ஜீவர்களையும் நேசிப்பது, அவர்களுக்கு சேவை செய்வது தான். குறிப்பாக சிவ வழிபாடு என்பது அவனது படைப்பில் உள்ள சகல ஜீவர்களுக்கும் தொண்டு செய்வது தான்.
‘விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது இதுவே எல்லா வழிபாடுகளில் சாரமாகும். ஏழையிடமும், பலவீனரிடமும், நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறவன் ஆகிறான்.
வேதாந்தம் புகட்டுவது ‘யாவற்றிலும் ஈசனே நிறைந்துள்ளான் என்பதை அறிந்து அவனுக்கே அரும்பணியாற்று’ என்பதாம்.
இதுவே சுவாமி விவேகானந்தரின் பார்வையில் உண்மையான ஆன்மிகம்.
$$$