பாஞ்சாலி சபதம் – 2.3.10

-மகாகவி பாரதி

இரண்டாம் பாகம்

2.3. சபதச் சருக்கம்

2.3.10. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை

அவையில் பாஞ்சாலியைச் சிறுமை செய்யும் நோக்கில் துச்சாதனன் அவளது சீலையைப் பற்றி இழுக்கிறான். அப்போது வேறு வழியின்றி கண்ணனைச் சரண் புகுகிறாள் துருபதன் மகள்.  “ஆதிமூலமே என்றழைத்த யானைக்காக முதலையை மாய்த்தவன்; காளிங்கன் மீது களி நடனம் புரிந்தவன்; சக்கரமும் சார்ங்கமும் ஏந்தியவன்; தூணைப் பிளந்து நரசிம்மமாக அவதரித்து அகந்தை கொண்ட அசுரனை மாய்த்தவன்; முனிவர் அகத்தில் மிளிர்பவன்; அறிவினைக் கடந்த விண்ணகப் பொருளான கண்ணா, என் மானத்தைக் காப்பாயாக!” என்று மனமுருகி வேண்டி இருகரம் கூப்பினாள்.

அப்போது ஆங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது.  “பொய்யர்தந் துயரினைப்போல், - நல்ல புண்ணிய வாணர்தம் புகழினைப்போல், தையலர் கருணையைப் போல்…” பாஞ்சாலியின் ஆடை வளர்ந்த்து. துச்சாதனன் துகிலுரிக்க உரிக்க, பாண்டவர் ஐவரின் தேவியின் சீலை, புதிது புதிதாய், வண்ணப் பொற்சேலைகளாக வளர்ந்தது. கரம் சோர்ந்து வீழ்ந்தான் கீழ்மகன்…

வேறு


துச்சா தனன்எழுந்தே – அன்னை
      துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ – என்று
      அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் – அந்தப்
      பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; – அன்னை
      உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88

‘ஹரி, ஹரி, ஹரிஎன்றாள்; – கண்ணா!
      அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே – அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், – அன்று
      காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், – கண்ணா!
      பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89

‘சக்கர மேந்திநின்றாய், – கண்ணா!
      சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், – கண்ணா!
      அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், – கண்ணா!
      தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், – அந்தச்
      சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90

‘வானத்துள் வானாவாய்; – தீ
      மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் – தவ
      முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே – தனிக்
      கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, – அவள்
      தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91

‘ஆதியி லாதியப்பா, – கண்ணா!
      அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, – என்றன்
      சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே – நடு
      வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், – கண்ணா!
      சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92

“கம்பத்தி லுள்ளானோ? – அடா!
      காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” – என்று
      மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், – அந்தத்
      தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; – என்னை
      நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93

‘வாக்கினுக் கீசனையும் – நின்றன்
      வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், – என்றன்
      அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், – இங்கு
      நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! — இங்கு
      சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94

‘வையகம் காத்திடுவாய்! – கண்ணா!
      மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே – சரண்.
      ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், – நல்ல
      புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், – கடல்
      சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95

பெண்ணொளி வாழ்த்திடுவார் – அந்த
      பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், – தம்பி
      கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் – அவை
      வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; – அவை
      எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96

பொன்னிழை பட்டிழையும் – பல
      புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் – அவள்
      செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் – தன்னில்
      மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் – கண்டு
      தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97

தேவர்கள் பூச்சொரிந்தார் – ‘ஓம்
      ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று – முன்னை
      ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
      சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், – கொடி
      கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். 98

$$$

Leave a comment