மகர சங்கராந்தியே  பொங்கல்!

  • இளங்கோ பிச்சாண்டி
  • அ.போ.இருங்கோவேள்
தமிழர் திருநாள் என்ற பெயரில் இந்துக்களின் பண்டிகையான பொங்கல் திருவிழாவை மடைமாற்றும் முயற்சி, இந்த ஆண்டு மாநில அரசாலும், இந்து விரோதிகளாலும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை மதச்சார்பற்றதாக மாற்ற பெரும் வேகத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படன. இதற்கு ஆங்காங்கே அறிவுலகினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து மதத்தினரும் பொங்கல் விழா கொண்டாடுவதில் நமக்கு- தமிழ் பேசும் இந்துக்களுக்கு- எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால், பாரம்பரிய வேர்களை வெட்டி வீழ்த்தும் வெறியுடன் இது ஒரு பின்புலத் திட்டத்துடன் இது மேற்கொள்ளப்படுகையில் விமர்சித்தாக வேண்டி இருக்கிறது. 

பிரபல மார்க்சிய அறிஞரும்  ‘அறிவியல் ஒளி’ பத்திரிகை, நியூட்டன் அறிவியல் மன்றம் ஆகியவற்றின் நிர்வாகியும், தொழிற்சங்கத் தலைவரும், அறிவியல் எழுத்தாளருமான திரு. இளங்கோ பிச்சாண்டி, தனது முகநூல் பக்கத்தில்,  'மகர சங்கராந்தியே பொங்கல் திருநாள்’ என்பதை நிலைநாட்டும் அறிவியல் புள்ளிவிவரங்களுடன் கூடிய பதிவுகளை எழுதினார். 

அதேபோல, மருத்துவ சமூகவியலாளரான திரு. அ.போ.இருங்கோவேளும் தனது முகநூல் பக்கத்தில் மடையர்களின் திருகல்வாதத்திற்கு பதிலடி கொடுத்திருந்தார். அவை இங்கே மீள்பதிவாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன…

1. சூரிய வணக்கமே பொங்கல்!

-இளங்கோ பிச்சாண்டி

 பூமியைப் பொறுத்தவரையிலான சூரியனின் பாதை என்று தோற்றமளிக்கும் (apparent path of the sun wrt the earth) பாதையில், பூமியைச் சுற்றியுள்ள அண்டவெளியே (space) ராசி மண்டலம் (Zodiac region) ஆகும். இது ஒவ்வொன்றும் 30 டிகிரி கோணம் உள்ள 12 ராசிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுஷ், மகரம், கும்பம், மீனம்  ஆகியவை தமிழ் மரபுப்படியான பன்னிரு ராசிகள்.  

இந்த ராசி மண்டலத்தில், தனுஷ் ராசியைக் கடந்த பிறகு மகர ராசிக்குள் (from Sagittarius to Capricorn) சூரியன் நுழையும் முதல்நாளே மகர சங்கராந்தி ஆகும். 

சங்கராந்தி என்ற சமஸ்கிருதச் சொல்  ‘நகர்ந்து செல்’ என்று பொருள்படும்.  மகர சங்கராந்தி என்றால்  ‘மகர ராசியில் நகர்ந்து செல்’ என்று பொருள். சூரியன் எந்த நாளில் மகர ராசிக்கு  நகர்கிறதோ அந்த நாளே மகர சங்கராந்தி ஆகும். 

அந்த நாளே தை மாதத்தின் முதல்நாளும் ஆகும். அன்றுதான்   பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மகர ராசி என்பது ஆங்கிலத்தில் Capricorn எனப்படுகிறது. மகரம் என்பது  வெள்ளாட்டைக் குறிக்கிறது. வெள்ளாடு போல் உருவம் உடைய நட்சத்திரக் கூட்டமே மகர ராசி ஆகும். மகர சங்கராந்தி என்ற சமஸ்கிருதச்  சொல்  ‘வெள்ளாட்டு நகர்வு’ என்று தமிழில் பொருள்படும்.

(மகரம் = வெள்ளாடு; சங்கராந்தி = நகர்ந்து செல், நகர்வு). இந்த இடத்தில் மேஷ ராசியின் ஆட்டுடன் மகர ராசியின் ஆட்டை இணைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ராசி மண்டலத்தில், மேஷ ராசிக்கும் (Aries)  மகர ராசிக்கும் (Capricorn) ஆடுதான் சின்னம். இரண்டுமே ஆடுகள்தான். 

என்றாலும், மேஷ ராசியின் ஆடு செம்மறி ஆடு. (a ram or an adult male sheep). மகர ராசியின் ஆடு வெள்ளாடு (a goat or a sea goat with a fish at its tail). பாபிலோனிய கிரேக்க  புராணங்களில் இது கடல்வாழ் வெள்ளாடு (sea goat) என்று சிறப்பிக்கப் பட்டது.

***

பொங்கல் என்றும் மகர சங்கராந்தி என்றும் இன்னும் பல்வேறு பெயர்களிலும் வழங்கப்பட்டாலும், சூரியன் மகர ராசிக்குள் நுழையும் முதல்நாளில்தான் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

எனவே இப்பண்டிகை தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியதல்ல; இந்தியா முழுமைக்குமானது (Pan Indian festival). சூரியனை வணங்குதல் இந்திய மக்கள் அனைவரின் பொதுப்பண்பு. தொல்குடிச் சமூகமாக இருந்த காலந்தொட்டே சூரிய வணக்கம் இந்தியப் பண்பாட்டில் ஊறிய அம்சமாக இருந்து வருகிறது..

சூரியன் இல்லாமல் வேளாண்மை இல்லை, வளம் இல்லை, வாழ்வே இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த தமிழ், இந்தியச் சமூகங்களின் சூரிய வணக்கத்துக்கான பண்டிகையே பொங்கல் (மகர சங்கராந்தி) ஆகும்.

தமிழ்ச் சமூகம் சூரிய வணக்கத்துடன் நின்று விடவில்லை. வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளைச் சிறப்பிக்க, பொங்கலுக்கு அடுத்த நாளை மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடியது. இதன் உச்சமாக அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெற்று வருகிறது. மாட்டுப் பொங்கலும் ஜல்லிக்கட்டும் தமிழருக்கே உரியவை. தமிழ்ப் பண்பாட்டின் தனித்துவத்தை மாண்பை உணர்த்துபவை.

பொங்கல் என்பது ஒரு வானியல் நிகழ்வின் பண்பாட்டுப்பெயர். மகர சங்கராந்தி என்பது அதே வானியல் நிகழ்வின் அறிவியல் பெயர். மகர சங்கராந்தி என்பது தமிழில் வெள்ளாட்டு நகர்வு என்று பொருள்படும். ஆக பொங்கல், மகர சங்கராந்தி, வெள்ளாட்டு நகர்வு ஆகிய மூன்றும்  ஒரே வானியல் நிகழ்வின் வெவ்வேறு பெயர்கள். அவ்வளவே.

பொங்கலானது சூரியனின் கதிர்த் திருப்ப நாளை (solstice) அறிவிக்கும் பண்டிகையாகத்தான் பிறப்பெடுத்தது. இது பொங்கலின் அறிவியல் அம்சம். தொல்தமிழ்ச் சமூகம் இயற்கையை வணங்கிய சமூகமாதலின் சூரிய வழிபாடு பொங்கலில் இடம் பெற்றது. இது பொங்கலின் பண்பாட்டு அம்சம். பொங்கல் இயற்கையோடு இயைந்த பண்டிகை என்பதை அதனுள் பொதிந்துள்ள சூரிய வணக்கம் உணர்த்தும்.

ஆக தொன்மைச் சிறப்புடன் கூடிய பொங்கலே அறிவியல், பண்பாட்டு அடிப்படையில் தமிழர்களின் ஆகச்சிறந்த பண்டிகையாக காலத்தை வென்று நிற்கிறது….

காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம்  போன்ற மாநிலங்கள் உட்பட நேபாளம் இலங்கை  மியான்மர் இந்தோனேஷியா உள்ளிட்ட  வெளிநாடுகளிலும் மகர சங்கராந்தி  கொண்டாடப் படுகிறது. இது தமிழ்நாட்டுக்கு  மட்டும் உரியதல்ல.

(‘அறிவியல் ஒளி’ ஏட்டில் சென்ற ஆண்டு மலரில் எழுதிய கட்டுரையில் இருந்து).

$$$

2. சொப்பு விளையாட்டு போதும்!

-அ.போ.இருங்கோவேள்

நான் ஒரு விவசாய குலத்தில் பிறந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்/ எழுதுகிறேன்.

விவசாயிக்குக் கொடுக்கத்தான் தெரியும். அடுத்தவனிடம் எடுக்க / பிடுங்கத் தெரியாது. எடுக்க / பிடுங்க மாட்டான்.

அதுபோல எந்தப் பன்றிகளிடமும் நன்றி எதிர்பார்க்க மாட்டான். அவனுக்கு நன்றி சொல்லும் திருநாள் பொங்கல் என்று உருட்டாதீர்கள்.

ஆடி முதல் நாள் முதல் மார்கழி நிறைவு நாள் வரையிலான தட்சிணாயண புண்ய காலத்தில் தேவையான அளவு சரியான கோணத்தில் பயணம் செய்து தன் கிரணங்களை சரியாகப் பாய்ச்சி உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருந்த, நவகோள்களின் தலைவனாக விளங்கும் சூர்ய பகவானுக்கு நன்றி சொல்லும் திருநாளே மகர சங்கராந்தி. அன்று பொங்கல் சமைத்து படையலிடுவதால், தமிழகத்தில் மட்டும் வசதிக்காக பொங்கல் என்று சொல்லிக் கொள்கிறோம்.

மற்றபடி என்றைக்கு வேண்டுமானாலும் சர்க்கரைப் பொங்கல் சமைத்து நன்றாகவே மூக்கு முட்டத் தின்னலாம்.

அறிவையும் சிந்தனையையும் ஆசன வாய் வழியாகத் தொலைத்துவிட்டு, பிடுங்கியவர்கள் பேச்சைக் கேட்டு சமத்துவப் பொங்கல், விவசாயிக்கு நன்றி சொல்லும் பண்டிகை என்று சிலம்பமாட வேண்டாம்.

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு. ஆனால் அது மாட்டை துன்புறுத்தும் செயல் என்று மாட்டையும், ஆட்டையும் கொன்று திங்கும் பீட்டா பீடைகளின் சொல் கேட்டு, முந்தைய மத்திய அரசி ன் அயோக்கியத்தனத்தால்தான் தடை செய்யப்பட்டது என்பதை வசதியாக மறந்து போன மந்தைகளும், பீட்டா பீடைகளோடு சமத்துவப் பொங்கல் கொண்டாடுகின்றன.

பொங்கல் என்பதே எல்லையற்ற ஒரு பண்டிகை. யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம்.

ஆனால் உலகின், உயிர்களின் இயக்கத்துக்கு ஆதாரமான சூரிய பகவானுக்கு சகலரும் நன்றி சொல்லும் பண்டிகை.

அதுவும் இன்றைய தினம் சூரியனை வணங்கி, ஏனென்றால் இன்று முதல் சூரியனின் பயணத்தில் ஒரு மாற்றம். இன்று கொண்டாடுவதுதான் பொங்கல்.

இன்றுதான் உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கம்.

ஞாயிறை, ஞாயிற்றின் கிரணங்களை தெய்வாம்சமாக வணங்காதவர்கள் கொண்டாடியது  பொங்கல் பண்டிகை அல்ல. சொப்பு வைத்து  சோறு ஆக்கி விளையாடும் பாப்பாக்களின் விளையாட்டு அவ்வளவே.

தமிழின் முதல் காப்பியத்தின் ஆசான்  இளங்கோவின் வரிகளோடு – இந்தப்  பதிவை நிறைவு செய்கிறேன்:

“ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்”.

$$$

Leave a comment