விவேகானந்தரை வணங்குவது இந்தியாவை வணங்குவதற்குச் சமம்!

-ஜி.கே.வாசன்

திரு.ஜி.கே.வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்; முன்னாள் மத்திய கப்பல் துறை அமைச்சர். 26.9.2013 அன்று தஞ்சாவூரில் விவேகானந்த ரதத்தை வரவேற்று ஜி.கே.வாசன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம் இது.

அறிவுச்சுடர், ஆன்மிகப் பேரொளி, இந்தியத் தாயின் இணையற்ற தவப்புதல்வன், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்ட முதல் துறவி. எல்லா மதங்களும் காட்டும் வழி ஒன்றே என்று உலகுக்குச் சொன்ன உத்தமர்.

தெய்வ பக்தியும், தேசபக்தியும் இணைந்த துறவி, தேசியத் துறவி, தோற்றத்தால், பார்வையால், பேச்சால், சிந்தனையால், செயலால், உலகுக்கே வழிகாட்டிய உத்தமர் – அப்படிப்பட்ட வீரத்துறவி சுவாமி விவேகானந்தரை முதலில் நான் வணங்குகிறேன்.

சுவாமி விவேகானந்தரின் புனிதப் பாதங்கள் பட்ட இந்தத் தஞ்சை மண்ணில், அவரது 150-வது பிறந்த ஆண்டு விழாவை, தஞ்சை சிட்டிசன் கமிட்டியும், ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனும் இணைந்து நடத்துவதை நான் பாராட்டுகிறேன்.

இந்த ரத யாத்திரை நிகழ்ச்சிக்கு நீங்கள் பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். சுவாமி விவேகானந்தர் தம் அமெரிக்கப் பயணத்தை முடித்துவிட்டு தமிழகத்திற்கு வந்து, தஞ்சை ரயில் நிலையத்தில் கால் பதித்தபோது எவ்வளவு பெரிய கூட்டம் கூடியிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன்.

விண்ணிலிருந்து விவேகானந்தர் நம்மை வாழ்க! வளர்க! என ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன்.

அன்று தஞ்சையிலிருந்து புறப்பட்ட சுவாமிஜி கும்பகோணத்தில் நடைபெற்ற பெருங்கூட்டத்தில் தான்  ‘எழுந்திரு, விழித்திரு, லட்சியத்தை அடையும் வரை ஓயாதிரு’ என்றார்.

சுவாமிஜி அறைகூவல் விடுத்தது கும்பகோணத்தில் கூடியவர்களுக்காக மட்டுமல்ல! எல்லா சமுதாயத்திற்கும் – குறிப்பாக, இளைஞர், மாணவ சமுதாயத்திற்கும் – விட்ட அழைப்பாகவே எண்ணுகிறேன்.

சுவாமிஜியின் பெயருள்ள வரை, கும்பகோணத்தில் அவர் நிகழ்த்திய பேச்சும் அறிவுரையும் அழியாமல் நிற்கும்.

நண்பர்களே, விவேகானந்தர் 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சேவையை, சமுதாய சீர்திருத்தப் பணியை, சமுதாய மாற்றத்துக்கு வழிகாட்டும் பணியைத் தமது வாழ்க்கையின் கடைசிப் பத்தே ஆண்டுகளில் செய்து முடித்தார். இந்தச் சாதனையைச் சாதாரண மனிதனால் செய்ய முடியாது. இறையருள் பெற்ற சுவாமிஜியால் தான் செய்ய முடிந்தது.

1893, செப்டம்பர் 11 அன்று சிகாகோவில் நடைபெற்ற சர்வ மதப்பேரவைக் கூட்டத்தில் சுவாமிஜி பேசுகிறார். அது சாதாரண அரங்கம் அல்ல, ஆயிரக் கணக்கில் சர்வ சமயத் தலைவர்கள், அறிஞர்கள் அமர்ந்திருந்த அரங்கம்.

அந்த ஒரு சொற்பொழிவு அறிஞர்களை வியக்க வைத்தது. உலகமே சுவாமிஜியை உற்றுப் பார்க்க வைத்தது. அவரது தோற்றமும் அவரது ஆங்கிலமும் அனைவரையும் மயக்கியது. அவரது ஆன்மிகக் கருத்துகள் அனைவரையும் ஈர்த்தன. வந்திருந்தோர் கைதட்டி வாழ்த்தினார்கள். சுவாமிஜி இன்னும் பேச மாட்டாரா என ஏங்கினார்கள்.

இந்தியாவை ஒரு பிற்பட்ட நாடு என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டார்கள்.

இந்தியா ஆன்மிக பலம் நிறைந்த நாடு. அறிஞர்களும், மேதைகளும், சித்தர்களும் ஆன்மிகச் செம்மல்களும் நிறைந்த நாடு. கலையும், இலக்கிய வளமும் நிறைந்த நாடு. கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் உயர்ந்த நாடு என்பதை சுவாமி விவேகானந்தரின் பேச்சுகள் மூலம் உலக மக்கள் உணரத் தொடங்கினர்.

சுவாமி விவேகானந்தரால் இந்திய தேசத்திற்குப் பெருமை. அவரது பணியால், செயலால், சிந்தனையால் மனித சமுதாயத்துக்கே பெருமை என்று கூறினால் அது மிகையாகாது.

சுவாமிஜி ஓர் உண்மையான ஆன்மிகவாதி. அவர் கூறுகிறார்:

மதம் எல்லோருக்கும் பொதுவானது. மக்களை அது இணைக்க வேண்டும். பிரிக்கக் கூடாது. உண்மையான மதம் மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.

மாணவர்களே, இளைஞர்களே, சர்வ மதங்களின் துணை கொண்டு மக்களை இணைப்போம். அதுவே சுவாமி விவேகானந்தருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, மரியாதையாகும்.

சுவாமிஜி ஒரு கல்விப் புரட்சியாளர். சுவாமிஜியைப்போல் கல்விக்குக் குரல் கொடுத்தவர் வேறு யாருமில்லை.

சுவாமிஜி கூறுவார்: என் நாட்டு மக்களுக்குக் கல்வி தாருங்கள், மற்றவற்றை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஏழை, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியைத் தேடி வர மாட்டார்கள், கல்விதான் அவர்களை நாடிச் செல்ல வேண்டும் என்ற சுவாமிஜியின் ஆணையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆகவே தான் இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை இந்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது சுவாமிஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு எடுத்துக்காட்டு.

1951 -இல் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் 18 %

2011 -இல் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் 74 %

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி கற்றவர்கள் 100 % என்ற இலக்கை அடைய முயற்சி எடுத்து வருகிறோம். அந்த 100 % இலக்கை எட்டினால் தான் சுவாமிஜியின் கனவை நாம் நனவாக்கியதாகப் பொருள்.

சுவாமிஜி ஒரு பெண்ணுரிமைப் போராளி. பெண்கள் முன்னேற்றத்தில் தான் தேசத்தின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. அவர்களுக்குக் கல்வியும், பயிற்சியும், வேலை வாய்ப்பும் தரப்பட வேண்டும்.  ஜான்சி ராணி போல் அவர்கள் வீரமங்கையர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

நாம் பெண்களுக்குச் சம உரிமை, சொத்தில் உரிமை, கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பில் உரிமை, பஞ்சாயத்து அமைப்புக்களில் 33% ஒதுக்கீடு ஆகியவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இதுவும் சுவாமிஜியின் தீர்க்கதரிசனத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

ஆனாலும் ஒரு சில இடங்களில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க இளைஞர்களும் மாணவர்களும் அறிஞர்களும் பெரியவர்களும் ஒருசேரப் பணியாற்ற வேண்டும்.

பெண்ணுரிமைக்கு நாம் பாதுகாப்பு அரணாக இருப்பதே சுவாமிஜிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

சுவாமிஜி ஒரு சமூகப் போராளி. சுவாமிஜி எல்லோரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என எண்ணியவர்; அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.

பசியால் யாரும் பரிதவிக்கக் கூடாது, வறுமையால் எவரும் வாடக் கூடாது என்று சொன்ன புதுயுகத் துறவி.

Bread First, Religion Next என்றார்.

எல்லோருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற சுவாமிஜியின் லட்சியத்தை நிறைவேற்றும் சிறந்த குறிக்கோளை மையமாகக் கொண்டு இந்திய அரசு உணவுக்கு உத்தரவாதச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

சுவாமிஜியின் தீர்க்க தரிசனத்திற்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் இதற்கு மேல் எடுத்துக்காட்டு என்னவாக இருக்க முடியும்!

சுவாமிஜி தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக உன்னதமான கருத்துகளையும் செயல்திட்டங்களையும் போதித்தவர். சாதியின் பெயரால் மனிதர்களைத் தள்ளிவைப்பது கொடுமையிலும் கொடுமை. பழங்குடி மக்களை, நலிந்த, தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கியது தான் நமது வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்கிறார் சுவாமிஜி.

விவேகானந்தர் தன்னைப் பற்றி வெளிப்படையாகவே கூறினார்:

நான் ஒரு சோஷலிஸ்ட். காரணம் சோசலிஷம் ஒரு முழுமையான சித்தாந்தம் என்பதால் அல்ல; பட்டினி கிடப்பதைவிட அரை வயிற்றுக்கஞ்சி மேலானது என்பதால் தான்.

நலிந்தவர்களின் நல்வாழ்வே லட்சியம் என்றார் சுவாமிஜி. நலிந்த மக்களின் நலனுக்காக நாம் பாடுபட வேண்டாமா? அடித்தட்டு மக்கள், அறியாமையில் கிடப்பவர்கள், ஏழைகள், படிப்பறிவில்லாதவர்கள், சக்கிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள், இவர்களே இந்நாட்டின் முதுகெலும்பு.

இப்படி எல்லோரையும் ஒன்றாகப் பார்க்க ஓர் உத்தமரால் தானே முடியும்?  அந்த உயரிய பணியை இன்றைய இளைஞர்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என விழைந்தார் சுவாமிஜி.

தேச விடுதலையின் முன்னோடி விவேகானந்தர். இந்தியா தன் பாரம்பரியப் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினார். அக்கருத்தைப் பரப்பவும் செய்தார். அரவிந்தரும், திலகரும், காந்திஜியும், நேதாஜியும் சுவாமிஜியின் சுதந்திர வேட்கையால் ஈர்க்கப்பட்டவர்களே.

அவரது வீர உரையைக் கேட்டவர்கள் தேச பக்தர்களாக மாறினார்கள். விடுதலை வேள்வியில் குதித்தார்கள். இப்படி தேச விடுதலை இயக்கத்திற்கு முன்னோடியாக விளங்கிய சுவாமி விவேகானந்தரை வணங்குவது தேசத்தை வணங்குவதற்குச் சமமாகும்.

சுவாமிஜி ஒரு நாள் தன் சீடர்களிடம் வருங்காலத்தில் இந்தியாவில் என்ன நடக்கும் எனச் சொன்னார். 20 ஆண்டுகளில் உலக யுத்தம் வரும் என்று கூறியதுபோல இரண்டு உலக யுத்தங்கள் வந்தன. 50 ஆண்டுகளில் இந்தியா சுதந்திரம் பெறும் என்றார். இந்தியா சுதந்திரம் பெற்றது.

இந்தியா தொழில் வளம் கொண்ட நாடாக வளரும். வளமான, வலிமையான, வல்லரசாக மாறும் என்றார்.

இன்று நாம் உலக அரங்கில் வல்லரசாக மாறும் நிலையில் உள்ளோம். அமெரிக்கா ஆன்மிகத்தை நாடி, இந்தியாவின் பக்கம் திரும்பும் என்றார். அதுவும் நடக்கிறது.

சுவாமிஜியின் கருத்துகளைப் பரப்ப, அவர் கனவு கண்ட நவீன இந்தியாவை உருவாக்கும் பணியில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக, ஆன்மிக அறிவுசார் தீர்க்கதரிசியின் இதயபூர்வ தேசப்பற்றின் பயணம் என்ற பெயரில் இந்த ரதயாத்திரை விழா சிறப்பாக நடத்தப்படுகிறது.

அண்ணல் காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகத்துக்காக பாதயாத்திரை செய்தார்.

வினோபாஜி பூமிதானம் பெறுவதற்காகப் பாதயாத்திரை நடத்தினார்.

இதற்கெல்லாம் முன்னோடியாக விவேகானந்தர் நாடு முழுவதும் பயணம் செய்து சமுதாயப் புரட்சிக்கும், தேசபக்திக்கும் வித்திட்டார்.

ஒருமுறை ரொமா ரோலா என்ற மேலைநாட்டு அறிஞர், கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்து, இந்தியாவை முழுமையாகத் தெரிந்து கொள்வது எப்படி? என்று கேட்டார்.

ஜி.கே.வாசன்

அதற்கு தாகூர், இந்தியா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால், விவேகானந்தரை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.

சுவாமிஜிக்கு இளைஞர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. ஆகவே அவர் சொல்கிறார்: அர்ப்பணிப்பு உணர்வு உள்ள 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்தியாவின் நிலையை மாற்றிக் காட்டுகிறேன்.

இளைஞர்களே, பெரியோர்களே, சுவாமிஜியின் லட்சியங்களை ஏற்றுக்கொள்வோம். அவரது ஆணையை அப்படியே ஏற்போம். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க இன்று முதல் உழைக்க சபதம் ஏற்போம்.

அதுதான், அந்தத் தியாகசீலருக்கு, தேச பக்தருக்கு, ஆன்மிகச் செம்மலுக்கு, அறிவுலகச் சிற்பிக்கு, வீரத் துறவிக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

  •  நன்றி:  ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 2014)

$$$

Leave a comment