பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் விவேகானந்தரின் சிந்தனைகள்

-பேரா.ப.கனகசபாபதி

கோவையைச் சார்ந்த  மேலாண்மைத் துறை பேராசிரியரும் பாஜக மாநிலத் துணத் தலைவருமான பேரா. ப.கனகசபாபதி அவர்களின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...

சுவாமி விவேகானந்தரது பொருளாதாரக் கருத்துகள் தனித்தன்மை வாய்ந்தவை. காலத்தை மீறிய தாக்கத்தைக் கொண்டவை.

சுவாமிஜி அக்காலத்திய பிரபலமான சர்வதேசப் பொருளாதர நிபுணர்கள் பலரின் கோட்பாடுகளை நன்கு படித்திருந்தார்.

1893-ஆம் வருடத்தில் அமெரிக்காவில் அறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வெள்ளி நாணய முறை பற்றித் தமது கருத்துகளை எடுத்து வைத்தார்!

சுவாமிஜி பல பொருளாதாரவாதிகளைப் போல வசதியான அறைகளில் அமர்ந்து கொண்டு கருத்துகளை உதிர்த்தவர் அல்ல.

அவரது காலத்தில் பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்த தொழில்களும் வாழ்வாதாரங்களும் ஆங்கிலேயர்களால் நசுக்கப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் பசியும் பட்டினியும் மக்களை வாட்டின. 1875 முதல் 1900 வரை மட்டும் நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டிருந்தன.

விவேகானந்தர் அந்தச் சமயத்தில் விவசாயி, தொழிலாளி, அரச குடும்பத்தினர், சாமானியர் எனப் பல தரப்பட்ட மக்களையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளை நேரில் கேட்டறிந்தார்.

மேலும் இந்தியா மற்றும் பிற நாடுகளின் கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை முறைகள் மற்றும் வரலாறுகள் குறித்த அவரின் ஆழ்ந்த அறிவின் மூலம் பொருளாதாரம் குறித்து ஒரு மிகத் தெளிவான பார்வையை வகுத்துக் கொண்டார். எனவே அவரது பொருளாதார சிந்தனைகள் ஒட்டுமொத்த முன்னேற்றம், தேசநோக்கில் வளர்ச்சி, அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் நோக்கு, உயர் நெறிகள் ஆகியவற்றை மையமாக வைத்து அமைந்துள்ளன.

பொதுவாக ஆன்மிகத் தலைவர்கள் பொருளாதாரம் பற்றிப் பேசுவதில்லை. ஆனால் சுவாமிஜி, நம் மக்களின் பசிப்பிணி ஒழிய வேண்டும்; உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளான கல்வி, முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஆகியன அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; அவற்றைப் பூர்த்தி செய்வதுதான் மற்ற எல்லாவற்றையும் விட தேசத்துக்கு அத்தியாவசிய குறிக்கோளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஏனெனில் ஏழைகளின் வறுமையைப் போக்கி அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத எந்தப் பொருளாதாரச் சிந்தனை முறையும் அறம் சார்ந்ததல்ல. அறமில்லாத எந்தவொரு முறையும் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

1980-களின் இறுதியில் ரஷ்யாவில் கம்யூனிசம் தோல்வியுற்றது. பின் சந்தைப் பொருளாதாரக் கருத்துகளே உலக முழுமைக்கும் பொருத்தமானது என அமெரிக்கா மற்றும் அதே சிந்தனையைக் கொண்ட நாடுகள் அறிவித்தன.

ஆனால் அண்மைக் காலமாக மேற்கத்திய சந்தைப் பொருளாதார முறைகள் அவர்களின் நாடுகளிலேயே பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு, முறையற்ற வளர்ச்சி, பெரும்பான்மை மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கும் செயல்பாடுகள், சுற்றுச் சூழல் சீரழிவு என்பதெல்லாம் அவர்கள் சித்தாந்தத்தின் தாக்கம் என்பது தெளிவாகி வருகிறது.

மேற்கு நாடுகளின் பொருளாதாரத்துக்குச் சரியான ஆதாரமில்லை எனவும் அதனால் அவர்களின் வளர்ச்சி நிலைத்த தன்மையுடையது அல்ல எனவும் சுவாமிஜி அப்போதே அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். அவர்களின் வாழ்க்கை முறையில் ஆன்மிகமும் உயர் நெறிகளும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார்.

100 வருடங்களுக்கு மேலான பின் அக்கருத்துகளின் ஆழத்தை இப்போதுதான் அவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

மேலும் பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்க வேண்டும். அதையே இன்று பொருளாதார நிபுணர்கள் உள்ளடக்கிய வளர்ச்சி (Inclusive Growth) என்று சொல்கின்றனர்.

இந்தியா தொன்மைக் காலம் தொடங்கி 18-ஆம் நூற்றாண்டுவரை உலகில் சிறப்பாக விளங்கி வந்ததையும் அந்நிய ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்டதையும் சுவாமிஜி நன்கு அறிந்திருந்தார். எனவே இந்தியப் பொருளாதாரத்தைச் சொந்த முயற்சிகள் மூலமே சீரமைக்க வேண்டும் என விரும்பினார்.

பொருளாதாரத்தில் நமது நாட்டுக்கென்று உள்ள விவசாயம் சார்ந்த தனித்தன்மைகள் குறித்து கூச்சப்பட வேண்டியதில்லை என்றார். பொருளாதாரம் என்றாலே விவசாயத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தொழில் துறை மற்றும் சேவைத் துறைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதே நல்ல அணுகுமுறை என்பது போன்ற எண்ணம் நவீன பொருளியல்வாதிகளால் பரவலாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் பல வருடங்களாகவே நமது நாட்டில் விவசாயத்துக்குப் போதிய கவனம் தரப்படாததால் விவசாயிகளின் தற்கொலைகள் நடக்கின்றன.

விவசாயத் துறையை ஒதுக்குவதால் ஏற்படப் போகும் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் போட்டிகள் நிறைந்த இக்காலத்தில் உணவுத் தேவைகளுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பது ஆபத்தில் போய் முடியும். மேலும் உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள நமக்குப் போதிய அளவு உணவு தயாரிக்க எந்த நாடுமில்லை.

தொழில் துறையில் இந்தியா வளர வேண்டும் எனவும், மேல்நாட்டுத் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், பல நாடுகளுக்கு ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும் எனவும் சுவாமிஜி பல முறை கூறினார்.

கடந்த 60 ஆண்டுகளில் இந்தியா முன்னேறி வருவதற்கான காரணம் நமது மக்கள் தங்களின் கடுமையான உழைப்பினால் தொழில்களைப் பரவலாக்கியதுதான். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 2500-க்கும் மேற்பட்ட தொழில் மையங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் நமது கிராமிய மற்றும் கலைத்திறன் நிறைந்த பொருள்கள் மேலை நாடுகளில் விற்கப்பட வேண்டும்; அதன் மூலம் இந்தியக் கிராமங்களும் சிறுதொழில்களும் வளர வேண்டும் என அவர் விரும்பினார். வாராணசி சேலைகளும் மூங்கில் பொருள்களும் வெளிநாட்டுத் தெருக்களில் விற்கப்பட வேண்டும் எனக் கனவு கண்டார்.

அந்தக் கருத்தின் ஆழத்தை, இந்தியக் கலை மற்றும் கிராமியப் பொருள்களுக்கு உலக முழுவதும் இன்றுள்ள வரவேற்பைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்னமும் நமது கலைநயமிக்கப் பல பொருள்களின் சிறப்புகளைத் தெரிந்து கொள்ளாமலும், அவற்றை முறையாக உற்பத்தி செய்து நமது நகரங்களிலும் வெளிநாடுகளிலும் விற்கப் போதுமான முயற்சிகளை எடுக்காமலும் நாம் இருக்கிறோம். மேலும் அவற்றை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும் தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

1893-ஆம் வருடம் ஜாம்ஷெட்ஜி டாடாவுடன் நடந்த உரையாடலில், இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் நாட்டுக்கு விளையக்கூடிய நன்மைகளை விளக்கியது, சுவாமிஜியின் கருத்துகளின் ஆழத்தையும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள வேகத்தையும் காண்பிக்கின்றது.

கடந்த பத்து வருடங்களில் இந்தியப் பொருளாதாரம் அதிக அளவில் வளர்ச்சியைக் கண்டது. அதனால் சராசரி வளர்ச்சி 8% அளவு இருந்தது. ஆனால் அது சென்ற வருடம் குறைந்து 5%- ஐத் தொட்டது. நடப்பு வருடமும் குறைந்த அளவு வளர்ச்சிதான் இருக்குமெனக் கணிக்கப்படுகிறது. வளர்ச்சி குறைந்ததற்கான முக்கிய காரணம் அளவுக்கதிகமான இறக்குமதியே ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கத்திய நாடுகள் கடந்த இருநூறு வருடங்களாக, தங்களின் சுயலாபத்திற்காகப் பிற நாடுகளை மையமாக வைத்தே பொருளாதாரக் கருத்துகளை அமைத்துக் கொண்டு வருகின்றன.

அந்த வகையில் 1980-களில் உலக மயமாக்கல் கோட்பாட்டை மையமாக வைத்து உலக முழுவதும் ஒரே சந்தை என்று கூறினார்கள். அதனால் சுலபமாகத் தங்களின் பொருள்களைப் பிற நாடுகளுக்கு விற்க வழி செய்தனர். தொடர்ந்து பிற நாடுகளும் தமது பொருள்களையும் சேவைகளையும் குறைந்த செலவில் கொடுக்க ஆரம்பித்த பிறகு அவர்களுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன. வளர்ந்த நாடுகள் தம் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இன்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.

பொருளாதாரக் கோட்பாடுகள், செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் என்றாலே அவை எல்லாம் மேற்கத்திய நாடுகள் சம்பந்தப்பட்டவை என்கின்ற எண்ணம் பரவலாக நம் அறிவுஜீவிகளின் மனதில் ஆழமாக உள்ளது. ஆனால் உண்மை என்ன?

இந்தியாவுக்கென்று பல்லாயிரம் ஆண்டு காலப் பொருளாதார வரலாறு உள்ளது. கடந்த இரண்டாயிரத்துப் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு, புது யுகத் தொடக்க காலத்தில், உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தன் வசம் வைத்து இந்தியா மிகப் பெரிய வல்லரசாக விளங்கி வந்தது. இந்த உண்மைகளை ஏஞ்சஸ் மாடிசன் உள்ளிட்ட பொருளாதார வரலாற்றாசிரியர்கள் விவரமாக எழுதியுள்ளனர்.

இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சுரண்டித் தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டன.

19-ஆம் நூற்றாண்டில் அவர்கள் மேலெழுந்து வந்தபோது உலகின் பிற பொருளாதார முறைகளை அழித்தனர். அதனால் தொன்மையான பொருளாதாரமான இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் இயற்கையான செயல்முறைகள் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

அதனால் ஐரோப்பியரின் பொருளாதாரச் சிந்தனைகளும் செயல்முறைகளுமே உலக முழுமைக்கும் பொதுவானதாக ஆக்கப்பட்டது. எனவே அவர்களால் உருவாக்கப்பட்ட முதலாளித்துவமும் சோஷலிசமுமே உலகின் இரு பெரும் பொருளாதாரச் சித்தாந்தங்களாக உருவாகின.

பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் உலகின் முதல் நிலைப் பொருளாதாரமாக அமெரிக்கா தலையெடுத்த பின்னர், அவர்களின் கருத்துகளும் கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெற்றன.

எனவே நமது நாட்டிலும் பல அறிவுஜீவிகள் மற்றும் மெத்தப் படித்த மேதாவிகள் வெளிநாட்டுக் கருத்துகளையும் வழிமுறைகளையுமே சரியென நம்புகின்றனர். இந்தியாவின் பொருளாதார வரலாறு பற்றி அவர்களுக்குத் தெரிவதில்லை.

1950-களில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேல் சோஷலிச சித்தாந்தமே அரசின் கொள்கைகளுக்கு ஆதாரமாக இருந்தது. பின்னர் அந்தக் கோட்பாடு உலக அளவில் பெரும் தோல்வியைத் தழுவியது. நம் பொருளாதாரத்திலும் சிக்கல்கள் எழுந்தன.

பேரா.ப.கனகசபாபதி

பிறகு உலக மயமாக்கல் மற்றும் சந்தைப் பொருளாதாரக் கருத்துகளை ஒட்டிக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதனால் விவசாயமும், சிறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கம் நுகர்வுக் கலாச்சாரம் பெருகி மறுபக்கம் வேலையின்மையும் வறுமையும் வளர்கிறது.

2008-ல் உலகப் பொருளாதாரத்தில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. அதனால் மேற்கத்திய மற்றும் பணக்கார நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அதிலிருந்து அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இன்னும் மீண்டு வரவில்லை.

ஆனால் இந்தச் சமயத்திலும் இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் வலுவான அடிப்படைகளுடன் உள்ளது. தவறான கொள்கைகள், மேல் மட்டத்தில் குழப்பங்கள் எனப் பல பிரச்னைகளையும் மீறி நமது பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது.

அதற்குக் காரணம் நமது மக்களின் கடின உழைப்பு, அதிக சேமிப்புகள், குடும்ப அமைப்பு முறை மற்றும் அவற்றையெல்லாம் தாங்கிப் பிடிக்கும் நாட்டின் சமூக, கலாச்சார அடிப்படைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாடு அதிக வளர்ச்சியடைந்து போதிய முன்னேற்றம் பெறுவதற்குத் தேவையான வளங்களும் வாய்ப்புகளும் நம்மிடமே நிறைந்துள்ளன. அப்படியிருந்தும் நாம் முக்கிய பிரச்னைகளைக்கூடத் தீர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை தேசத்தின் அடிப்படையில் வகுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான்.

அதைத்தான் சுவாமி விவேகானந்தர்,  ‘எனது லட்சியம் தேச நோக்கில் வளர்ச்சி, விரிவாக்கம் மற்றும் முன்னேற்றம்’ என்றார்.

தேச நோக்கில் நமக்குத் தேவையான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் வகுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது சுவாமி விவேகானந்தர் விரும்பியபடி பாரத தேவி அரியாசனத்தில் அமர்ந்து உலகுக்கு வழி காட்டும் உன்னத நிலையை நம்மால் உருவாக்க இயலும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s