சத்திய சோதனை- 5(31-35)

-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்

31. மறக்க முடியாத அந்த வாரம்! – 1

     தென்னிந்தியாவில் சில நாட்கள் சுற்றுப்பிரயாணம் செய்து விட்டு பம்பாய் போய்ச் சேர்ந்தேன். அது ஏப்ரல் 4-ஆம் தேதி என்று நினைக்கிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்களுக்கு நான் பம்பாயில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஸ்ரீ சங்கரலால் பாங்கர் எனக்குத் தந்தி கொடுத்திருந்தார்.

ஆனால், இதற்கு மத்தியில் டில்லி, மார்ச் 30-ஆம் தேதியே ஹர்த்தாலை அனுஷ்டித்து விட்டது. காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி, ஹக்கீம் அஜ்மல்கான் சாகிப் ஆகிய இருவர் சொல்லுவதுதான் அங்கே சட்டம். ஹர்த்தால் தினம் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்ற தந்தி அங்கே தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. அதைப் போன்ற ஹர்த்தாலை டில்லி அதற்கு முன்னால் என்றும் கண்டதே இல்லை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே மனிதனைப்போல் ஒன்றுபட்டுவிட்டதாகவே தோன்றியது. ஜூம்மா மசூதியில் கூட்டத்தில் பேசும்படி சுவாமி சிரத்தானந்தஜியை அழைத்திருந்தார்கள். அவரும் போய்ப் பேசினார். இவைகளெல்லாம் அதிகாரிகள் சகித்துக்கொண்டு விடக் கூடியவை அன்று. ஹர்த்தால் ஊர்வலம் ரயில்வே ஸ்டேஷனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது போலீஸார் தடுத்துச் சுட்டதால் பலர் மாண்டு காயமும் அடைந்தார்கள். அடக்குமுறை ஆட்சி டில்லியில் ஆரம்பமாயிற்று. சிரத்தானந்தஜி, டில்லிக்கு அவசரமாக வருமாறு என்னை அழைத்தார். பம்பாயில் ஏப்ரல் 6-ஆம் தேதி வைபவங்கள் முடிந்தவுடனேயே நான் டில்லிக்குப் புறப்படுவதாக அவருக்குப் பதில் தந்தி கொடுத்தேன்.

டில்லியில் நடந்த அதே கதையே லாகூரிலும், அமிர்தசரஸிலும் சில வித்தியாசங்களுடன் நடந்தன. அமிர்தசரஸிலிருந்த டாக்டர் சத்தியபாலும், டாக்டர் கிச்சலுவும் உடனே அங்கே வருமாறு வற்புறுத்தி என்னை அழைத்தார்கள். அச்சமயம் அவர்களுடன் எனக்குக் கொஞ்சமும் பழக்கமே இல்லை. என்றாலும், டில்லிக்குப் போய்விட்டு அமிர்தசரஸுக்கு வர உத்தேசித்திருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரிவித்தேன்.

ஆறாம் தேதி காலை பம்பாய் நகர மக்கள் கடலில் நீராடுவதற்காகச் சௌபாத்திக்கு ஆயிரக்கணக்கில் சென்றனர். நீராடிய பிறகு ஊர்வலமாகத் தாகூர்துவாருக்குப் போனார்கள். ஊர்வலத்தில் ஓரளவுக்குப் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். முஸ்லிம்களும் ஏராளமாக ஊர்வலத்தில் கலந்துகொண்டார்கள். ஊர்வலத்திலிருந்த எங்களில் சிலரை, முஸ்லிம் நண்பர்கள், தாகூர் துவாருக்குப் பக்கத்திலிருந்த மசூதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே என்னையும் ஸ்ரீமதி நாயுடுவையும் பேசும்படியும் செய்தார்கள். சுதேசி விரதத்தையும் ஹிந்து- முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞையையும் மக்கள் அந்த இடத்திலேயே எடுத்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும் என்று ஸ்ரீ விட்டல்தாஸ் ஜேராஜானி யோசனை கூறினார். ஆனால் அந்த யோசனைக்கு நான் சம்மதிக்கவில்லை. பிரதிக்ஞைகளை அவசரத்தில் கூறி, அவற்றை மக்கள் மேற்கொள்ளும்படி செய்யக் கூடாது என்றும், இதுவரையில் மக்கள் செய்திருப்பதைக் கொண்டே நாம் திருப்தியடைய வேண்டும் என்றும் சொன்னேன். ஒருமுறை செய்துகொண்டு விட்ட பிரதிக்ஞையை மீறி நடக்கக் கூடாது. ஆகையால், சுதேசி விரதத்தின் உட்கருத்துக்களை மக்கள் தெளிவாக அறிய வேண்டும் என்றும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிய பிரதிக்ஞையினால் ஏற்படக் கூடிய பெரும் பொறுப்புக்களைச் சம்பந்தப்பட்ட எல்லோரும் முற்றும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறினேன். முடிவாக ஒரு யோசனையும் சொன்னேன். பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள விரும்புகிறவர்கள், அதற்காக மறுநாள் காலையில் திரும்பவும் அங்கே கூட வேண்டும் என்றேன்.

பம்பாயில் ஹர்த்தால் பூரண வெற்றியுடன் நடந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை ஆரம்பிப்பதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். இதன் சம்பந்தமாக இரண்டு, மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. பொதுமக்களால் எளிதில் மீறக் கூடியவைகளாக இருக்கும் சட்டங்கள் விஷயத்தில் மாத்திரமே சட்ட மறுப்புச் செய்வது என்று முடிவாயிற்று. உப்பு வரி மீது மக்களுக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது. அச்சட்டத்தை ரத்துச் செய்யும்படி பார்க்க வேண்டும் என்பதற்கு பலமான இயக்கம் ஒன்றும் கொஞ்ச காலமாக நடந்துவந்தது. ஆகையால், உப்புச் சட்டங்களை மீறி மக்கள் தங்கள் வீடுகளிலேயே கடல்நீரைக் கொண்டு உப்புத் தயாரிக்கும்படி செய்யலாம் என்று யோசனை கூறினேன். என்னுடைய மற்றொரு யோசனை, அரசாங்கம் தடுத்திருக்கும் பிரசுரங்களை விற்கலாம் என்பது. நான் எழுதிய புத்தகங்களில் இரண்டு ‘ஹிந்த் ஸ்வராஜ்’, ‘சர்வோதயா’ (ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் என்ற நூலைத் தழுவிக் குஜராத்தியில் எழுதியது) இவை இரண்டையும் அரசாங்கம் தடுத்திருந்தது. இக்காரியத்திற்கு அவ்விரு புத்தகங்களையும் உடனே எடுத்துக் கொள்ளலாம். அவற்றை அச்சிட்டுப் பகிரங்கமாக விற்பனை செய்வது, சாத்விகச் சட்டமறுப்புச் செய்வதற்கு எளிதான வழி என்று தோன்றியது. ஆகவே, இதற்குப் போதுமான பிரதிகள் அச்சிடப்பட்டன. பட்டினி விரதம் முடிந்த பிறகு அன்று மாலை நடக்கவிருந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் அப்புத்தகங்களை விற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி ஆறாம் தேதி மாலை, தடுக்கப்பட்டிருந்த அப்புத்தகங்களைப் பொதுமக்களிடையே விற்பதற்கு அப் பிரசுரங்களுடன் ஏராளமான தொண்டர்கள் வெளிவந்தனர். ஸ்ரீமதி சரோஜினி தேவியும் நானும் மோட்டாரில் வெளியே சென்றோம். எல்லாப் பிரதிகளும் உடனே விற்றுப்போயின. விற்று வந்த பணத்தைச் சட்ட மறுப்பு இயக்கத்திற்காகவே செலவிடுவது என்பது ஏற்பாடு. இவ்விரு புத்தகங்களுக்கும், பிரதி நான்கு அணா என்று விலை வைத்தோம். ஆனால், அந்தப் பிரதிகளை என்னிடமிருந்து யாரும் நாலணா மாத்திரமே கொடுத்து வாங்கியதாக எனக்கு நினைவு இல்லை. ஏராளமானவர்கள் தங்கள் கையிலிருந்த பணம் முழுவதையும் அப்படியே கொடுத்துவிட்டு, அப்புத்தகங்களை வாங்கினார்கள். ஒரு பிரதியை வாங்க ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுகள் வந்து குவிந்தன. ஒரு பிரதியை ஐம்பது ரூபாய்க்கு நான் விற்றதாகவும் நினைவிருக்கிறது! தடுக்கப்பட்டிருக்கும் இப்புத்தகங்களை வாங்குவதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்படக் கூடும் என்பதும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. ஆனால், அத் தருணம் அவர்கள், சிறை செல்லும் பயம் முழுவதையுமே அடியோடு ஒழித்திருந்தார்கள்.

தான் தடுத்திருந்த இப்புத்தகங்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டது சம்பந்தமாக அரசாங்கம் தனக்குச் சௌகரியமானதோர் கருத்தை மேற்கொண்டது என்பதை நான் பிறகே அறிந்தேன். உண்மையில் விற்கப்பட்ட புத்தகங்கள் தன்னால் தடுக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல என்றும், ஆகவே நாங்கள் விற்றவை ‘தடுக்கப்பட்ட புத்தகங்கள்’ என்ற விளக்கத்தின் கீழ் வந்தவை என்று கருதப்படவில்லை என்றும் அரசாங்கம் கருதியதாம். புதியதாக அச்சிட்டது, தடுக்கப்பட்டிருந்த புத்தகத்தின் மறுபதிப்பேயாகையால், அவற்றை விற்பது சட்டப்படி குற்றமாகாது என்று அரசாங்கம் கருதியது. இச்செய்தி பொதுவாக ஏமாற்றத்தையே அளித்தது.

மறுநாள் காலை சுதேசி, ஹிந்து- முஸ்லிம் ஒற்றுமைப் பிரதிக்ஞைகளைச் செய்து கொள்ளுவதற்காக மற்றோர் கூட்டம் நடந்தது. மின்னுவதெல்லாம் தங்கம் ஆகிவிடாது என்பதை முதல் தடவையாக விட்டல்தாஸ் ஜேராஜானி உணர்ந்து கொண்டார். அக்கூட்டத்திற்கு மிகச் சிலரே வந்திருந்தார்கள். அச்சமயம் வந்திருந்த சில சகோதரிகளை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அக்கூட்டத்திற்கு வந்த ஆண்களும் ஒரு சிலரே. நான் பிரதிக்ஞை நகலை முன்னதாக தயாரித்துக்கொண்டு வந்திருந்தேன். அப்பிரதிக்ஞையை எடுத்துக்கொள்ளுமாறு வந்திருந்தவர்களிடம் சொல்லுவதற்கு முன்னால், அதன் பொருளை அவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொன்னேன். கூட்டத்திற்குச் சிலரே வந்திருந்தது எனக்கு வியப்பையோ, ஆச்சரியத்தையோ உண்டாக்கவில்லை. ஏனெனில், பொதுஜனப் போக்கிலிருக்கும் வழக்கமான ஒரு தன்மையை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஆவேசம் தரும் வேலையென்றால் பிரியப்படுவார்கள். அமைதியான ஆக்க வேலை என்றாலோ அவர்களுக்கு வெறுப்பு. அந்தத் தன்மை இன்றைக்கும் இருந்து வருகிறது.

ஆனால், இவ்விஷயத்தைக் குறித்து நான் ஓர் அத்தியாயமே எழுத வேண்டும். எனவே, தொடர்ந்து கதைக்கே திரும்புவோம். டில்லிக்கும் அமிர்தசரஸுக்கும் போக 7-ஆம் தேதி இரவு புறப்பட்டேன். 8-ஆம் தேதி மதுராவை அடைந்ததும் நான் கைது செய்யப்படலாம் என்ற வதந்திகள் இருப்பதாக முதன்முதலாக அறிந்தேன். மதுராவுக்கு அடுத்தபடி ரயில் நின்ற இடத்தில் என்னைப் பார்க்க ஆச்சாரிய கித்வானி வந்தார். என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற திடமான செய்தியை அவர் சொன்னதோடு நான் இடும் வேலையைச் செய்யத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார். இதற்காக அவருக்கு நன்றி கூறினேன். அவசியமாகும்போது அவருடைய சேவையைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறமாட்டேன் என்றும் அவருக்கு உறுதி சொன்னேன்.

ரயில், பால்வால் ஸ்டேஷனை அடைவதற்கு முன்னாலேயே எழுத்து மூலமான உத்தரவு ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டு விடுமாகையால் பாஞ்சாலத்தின் எல்லைக்குள் நான் போகக் கூடாது என்று தடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவு கூறியது. ரயிலிலிருந்து இறங்கும்படியும் என்னிடம் போலீஸார் கூறினர். “வற்புறுத்தி அழைக்கப்பட்டிருப்பதன் பேரிலேயே நான் பாஞ்சாலத்திற்குப் போகிறேன். நான் அங்கே போவது அமைதியை உண்டாக்குவதற்கே; அமைதியைக் கெடுப்பதற்காக அல்ல. ஆகையால், இந்த உத்தரவுக்கு உடன்பட என்னால் முடியாமல் இருப்பதற்காக வருந்துகிறேன் என்று கூறி வண்டியிலிருந்து இறங்க மறுத்து விட்டேன்.

கடைசியாக ரயில் பால்வாலை அடைந்தது. மகாதேவ் என்னுடன் இருந்தார். டில்லிக்கு நேரே போய், என்ன நடந்தது என்பதைச் சுவாமி சிரத்தானந்தஜியிடம் கூறி, மக்களை அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளுமாறு அவருக்குச் சொன்னேன். எனக்குப் பிறப்பித்த உத்தரவை மீறி, மீறியதற்குரிய தண்டனையை ஏற்றுக்கொள்ள நான் முடிவு செய்தேன் என்பதையும், எனக்கு எந்தத் தண்டனை விதிக்கப்பட்டாலும், ஜனங்கள் மாத்திரம் பூரண அமைதியுடன் இருந்து வருவார்களானால் அதுவே நமக்கு வெற்றியை அளிக்கும் என்பதையும் மக்களுக்கு அவர் விளக்கிச் சொல்ல வேண்டும் என்றும் கூறினேன்.

பால்வால் ரயில்வே ஸ்டேஷனில் என்னை ரயிலிலிருந்து இறக்கி போலீஸ் பாதுகாப்பில் வைத்தார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் டில்லியிலிருந்து ரயில் வந்தது. என்னை ஒரு மூன்றாம் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். போலீஸ் கோஷ்டியும் என்னுடன் வந்தது. மதுராவை அடைந்ததும் என்னைப் போலீஸ் முகாமுக்குக் கொண்டு போனார்கள். என்னை என்ன செய்யப் போகிறார்கள், என்னை அடுத்தபடி எங்கே கொண்டு போகப் போகிறார்கள் என்பதைச் சொல்ல எந்தப் போலீஸ் அதிகாரியாலும் முடியவில்லை. அடுத்த நாள் காலை 4 மணிக்கு என்னை எழுப்பினார்கள். பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சாமான்கள் ரயில் ஒன்றில் என்னை ஏற்றினார்கள். மத்தியானம் சாவாய் மாதப்பூரில் என்னை இறக்கினர். லாகூரிலிருந்து மெயில் ரயிலில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பௌரிங், இப்பொழுது என்னைக் கண்காணிப்பதை ஏற்றுக்கொண்டார். அவரோடு என்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றினார்கள். நான் சாதாரணக் கைதி என்பதிலிருந்து ‘பெரிய மனித’க் கைதி ஆகிவிட்டேன். அந்த அதிகாரி, ஸர் மைக்கேல் ஓட்வியரைக் குறித்து நீண்ட புகழ் மாலை பாட ஆரம்பித்துவிட்டார். ஸர் மைக்கேலுக்கு என் மீது எந்தவிதமான விரோதமும் இல்லை என்றும், பாஞ்சாலத்திற்குள் நான் போனால் அங்கே அமைதி கெட்டுவிடும் என்றுதான் அவர் பயப்படுகிறார் என்றும் கூறினார். இன்னும் ஏதேதோ சொன்னார். கடைசியாகப் பம்பாய்க்குத் திரும்பிப் போய்விட நானாகவே ஒப்புக்கொண்டு விடுவதோடு பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே வருவதில்லை என்பதற்குச் சம்மதிக்கும்படியும் அந்த அதிகாரி என்னைக் கேட்டுக் கொண்டார். அந்த உத்தரவுக்கு நான் உடன்பட்டுவிட முடியாது என்றும், நானாகத் திரும்பிப் போய்விடவும் தயாராயில்லை என்றும் அவருக்குப் பதில் சொன்னேன். அதன்பேரில் அந்த அதிகாரி, வேறு வழியில்லாது போகவே என் மீது சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வந்ததாக வேண்டி இருக்கிறது என்றார். “என்னை என்னதான் செய்யப் போகிறீர்கள்?” என்று அவரைக் கேட்டேன். அது தமக்கே தெரியவில்லை என்றும், மேற்கொண்டு வரும் உத்தரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார். “தற்போதைக்கு உங்களை நான் பம்பாய்க்கு அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்றார்.

நாங்கள் சூரத் போய்ச் சேர்ந்தோம். அங்கே என்னை மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். நாங்கள் பம்பாயை அடைந்ததும், “இனி நீங்கள் உங்கள் இஷ்டம்போல் போகலாம்” என்று அந்த அதிகாரியே என்னிடம் கூறினார். “ஆனால், நீங்கள் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனுக்கு அருகில் இறங்கி விடுவது நல்லது. உங்களுக்காக அங்கே ரயில் நிற்கும்படி செய்கிறேன். கொலாபாவில் பெருங்கூட்டம் இருக்கக்கூடும்” என்றும் கூறினார். அவர் விருப்பப்படியே செய்வதில் எனக்குச் சந்தோஷம்தான் என்று அவருக்குச் சொன்னேன். அவரும் மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு நன்றியும் கூறினார். அவர் யோசனைப்படியே நான் மாரின் லயன்ஸ் ஸ்டேஷனில் இறங்கினேன். அப்பொழுதுதான் ஒரு நண்பரின் வண்டி அப்பக்கமாகப் போயிற்று. அந்த வண்டியில் ஏறி ரேவாசங்கர ஜவேரியின் வீடு சேர்ந்தேன். நான் கைது செய்யப்பட்ட செய்தி பொதுமக்களுக்கு ஆத்திரத்தை மூட்டி அவர்களை வெறி கொண்டவர்களாகச் செய்திருக்கிறது என்று அந்த நண்பர் கூறினார். “பைதுனிக்கு அருகில் எந்த நேரத்திலும் கலகம் மூண்டுவிடக் கூடும் என்று பயப்படுகிறார்கள். மாஜிஸ்டிரேட்டும் போலீஸாரும் இதற்குள்ளாகவே அங்கே போய்விட்டனர்!” என்றும் அவர் கூறினார்.

நான் ரேவாசங்கரின் வீடு போய்ச் சேர்ந்ததுமே, உமார் ஸோபானியும் அனுசூயா பென்னும் அங்கே வந்து, உடனே பைதுனிக்கு மோட்டாரில் வருமாறு அழைத்தனர். “பொதுமக்கள் பொறுமை இழந்துபோய் அதிக ஆத்திரம் அடைந்திருக்கிறார்கள். அவர்களைச் சாந்தப்படுத்த எங்களால் முடியவில்லை. நீங்கள் வந்தால்தான் அதைச் செய்யமுடியும்” என்றார்கள்.

நான் மோட்டாரில் ஏறினேன். பைதுனிக்கு அருகில் பெருங்கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன். என்னைக் கண்டதும் மக்கள் ஆனந்தத்தால் பைத்தியம் கொண்டவர்களைப் போல் ஆகிவிட்டனர். உடனேயே ஓர் ஊர்வலமும் உருவாகிவிட்டது. “வந்தே மாதரம்” “அல்லாஹோ அக்பர்” என்ற கோஷங்கள் வானை அளாவி ஒலித்தன. பைதுனியில் குதிரைப் போலீஸ் படை ஒன்றைக் கண்டோம். மேலிருந்து கற்கள் சரமாரியாகப் பொழிந்து கொண்டிருந்தன. அமைதியாக இருக்கும்படி கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், கற்கள் மாரியிலிருந்து நாங்கள் தப்ப முடியாது என்றே தோன்றியது. ஊர்வலம் அப்துர் ரஹ்மான் தெருவைத் தாண்டி கிராபோர்டு மார்க்கெட்டை நோக்கிப் போக இருந்த சமயத்தில், திடீரென்று குதிரைப் போலீஸ் படையொன்று எதிர்த்து நின்றது. ஊர்வலம் கோட்டையை நோக்கி மேலும் போகாதபடி தடுக்கவே அப்படை அங்கே இருந்தது. கூட்டமோ அதிக நெருக்கமானது. போலீஸ் அணியைப் பிளந்து கொண்டும் கூட்டம் புகுந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். அப்படிப் பட்ட பிரம்மாண்டமானதோர் கூட்டத்தில் என் குரல் கேட்பதற்கு இடமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில் குதிரைப் படைக்குத் தலைமை வகித்த அதிகாரி, கூட்டத்தைக் கலைக்கும்படி அப்படையினருக்கு உத்தரவிட்டார். உடனே குதிரை வீரர்கள் தங்களுடைய ஈட்டிகளை வீசிய வண்ணம் கூட்டத்தினரைத் தாக்கினர். நானும் காயமடைந்து விடுவேன் என்று ஒரு கணம் தோன்றியது. ஆனால், நான் பயந்தபடி ஆகிவிடவில்லை. குதிரை வீரர்கள் வேகமாகச் சென்றபோது அவர்கள் ஈட்டி எங்கள் மோட்டார்மீதுதான் உராய்ந்தது. ஊர்வலத்தில் மக்களின் வரிசையெல்லாம் சின்னாபின்னமாகி விட்டன. கூட்டத்தில் எங்கும் ஒரே குழப்பநிலை. பிறகு மக்கள், ஓடத் தொடங்கிவிட்டனர். சிலர், குதிரை, மக்கள் இவர்களின் காலடியில் மிதிபட்டுப் போயினர். மற்றவர்களோ, நசுக்குண்டு காயப்பட்டுவிட்டனர். எங்கும் ஒரே ஜன மயமான அக்கூட்டத்திற்கிடையே குதிரைகள் போவதற்கே இடமில்லை. மக்கள் கலைவதென்றால், அவர்கள் வெளியேறுவதற்கும் வழியில்லை. ஆகவே, ஈட்டி வீரர்கள் கண்மூடித்தனமாகக் கூட்டத்திற்குள் புகுந்து சென்றனர். தாங்கள் செய்தது இன்னது என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பதே எனக்குச் சந்தேகம். அங்கிருந்த நிலைமை முழுவதுமே மிகவும் பயங்கரமான காட்சியாக இருந்தது. வெறிபிடித்த குழப்பத்தில் குதிரை வீரர்களும் மக்களும் ஒன்றாகக் கலந்து போய் விட்டனர்.

இவ்வாறு கூட்டத்தைக் கலைத்து அது மேற்கொண்டும் போக முடியாதபடி தடுத்துவிட்டனர். எங்கள் மோட்டாரை மட்டும் போக அனுமதித்தார்கள். கமிஷனர் ஆபீசுக்கு எதிரில் மோட்டாரை நிறுத்தச் செய்தேன். போலீஸாரின் நடத்தையைக் குறித்துக் கமிஷனரிடம் புகார் கூற அதிலிருந்து இறங்கினேன்.

$$$

32. மறக்க முடியாத அந்த வாரம்! – 2

கமிஷனர் ஸ்ரீ கிரிபித்தின் காரியாலயத்திற்குச் சென்றேன். அக்காரியாலயத்திற்குப் போகும் மாடிப் படிக்கட்டுகளிலெல்லாம் சிப்பாய்கள், உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையில் முற்றும் ஆயுதபாணிகளாக இருந்ததைக் கண்டேன். ராணுவ நடவடிக்கைக்குத் தயாராக இருப்பது போல அவர்கள் இருந்தனர். தாழ்வாரத்திலும் சிப்பாய்கள் அதிகம் இருந்தார்கள். உள்ளே செல்ல என்னை அனுமதித்தனர். நான் உள்ளே சென்றபோது ஸ்ரீ கிரிபித்துடன் ஸ்ரீ பௌரிங்கும் உட்கார்ந்திருந்ததைக் கண்டேன்.

நான் நேரில் கண்ட காட்சிகளையெல்லாம் கமிஷனருக்கு விவரித்துச் சொன்னேன். அவர் பின்வருமாறு சுருக்கமாகப் பதில் கூறினார்: “ஊர்வலம் கோட்டைக்குப் போனால், அங்கே நிச்சயமாகக் கலகம் நேர்ந்திருக்கு மாகையால், கோட்டையை நோக்கி ஊர்வலம் போவதை நான் விரும்பவில்லை. கேட்டுக் கொள்ளுவதற்குக் கூட்டத்தினர் செவிசாய்க்க மாட்டார்கள் என்பதைக் கண்டேன். ஆகையால், கூட்டத்திற்குள் புகுந்து தாக்கும்படி குதிரைப் படையினருக்கு நான் உத்தரவிடுவது அவசியமாயிற்று.”

அதற்கு நான் “ஆனால் அதன் விளைவு என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கவே வேண்டுமே. குதிரைகள் மக்களை மிதித்தே தீரும். அந்தக் குதிரைப் படையை அனுப்பியிருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றே நினைக்கிறேன்” என்றேன்.

ஸ்ரீ கிரிபித் கூறியதாவது: “அதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. உங்கள் உபதேசத்தினால் மக்களிடையே என்ன பலன் ஏற்படும் என்பதை உங்களைவிட போலீஸ் அதிகாரிகளாகிய நாங்கள் நன்கு அறிவோம். ஆரம்பத்திலேயே கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை யென்றால் நிலைமை மீறிப் போய்விடும். உங்கள் கட்டுக்கும் ஜனங்கள் அடங்காதவர்களாகப் போய்விடுவது நிச்சயம் என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன். சட்டத்தை மீறி நடப்பதென்பது வெகு சீக்கிரத்தில் அவர்களுக்குப் பிடித்தமான தாகிவிடும். ஆனால், அமைதியாக இருக்க வேண்டிய கடமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியாது. உங்களுடைய நோக்கங்கள் நல்லவையே என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் பொதுஜனங்கள் அவற்றைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களுடைய இயற்கையான சுபாவத்தை அனுசரித்துத்தான் அவர்கள் நடப்பார்கள்.”

“இதில்தான் உங்கள் கருத்துக்கு நான் மாறுபடுகிறேன். பொதுஜனங்கள் இயற்கையாகவே அமைதியானவர்களே அன்றி பலாத்கார சுபாவம் உடையவர்கள் அல்ல” என்றேன்.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதித்தோம். முடிவாகக் கிரிபித், “உங்கள் போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாகத் தெரிந்து கொள்ளுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.

“எனக்கு நிச்சயமாகத் தெரிந்தால் சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைத்துவிடுவேன்” என்றேன்.

“அப்படியா சொல்லுகிறீர்கள்? நீங்கள் விடுதலையானதுமே பாஞ்சாலத்திற்குப் போவீர்கள் என்று ஸ்ரீ பௌரிங்கிடம் கூறினீர்களே” என்று ஸ்ரீ கிரிபித் கேட்டார்.

“ஆம். அடுத்த ரயிலிலேயே புறப்பட்டுவிட விரும்பினேன். ஆனால், இன்று அது ஆகாத காரியம்.”

“நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களாயின், உங்கள் போதனைகளை மக்கள் கேட்கவில்லை என்ற நிச்சயம் உங்களுக்குக் கட்டாயம் ஏற்படும். அகமதாபாத்தில் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அமிர்தசரஸில் என்ன நடந்திருக்கிறது? எல்லா இடங்களிலுமே மக்கள் வெறி கொண்டுவிட்டார்கள். எல்லா விவரங்களும் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. சில இடங்களில் தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களுக்கெல்லாம் பொறுப்பு உங்களையே சாரும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார், ஸ்ரீ கிரிபித்.

அதற்கு நான் பின்வருமாறு கூறினேன்: “அவ்வாறு நான் கண்டால், அதன் பொறுப்பைத் தயங்காமல் நான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ஆனால், அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்தன என்று நான் கண்டால் மிகவும் மனவேதனை அடைவதோடு ஆச்சரியமும் படுவேன். அமிர்தசரஸில் நடந்தது பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை. அங்கே நான் போனதே இல்லை. அங்கே யாருக்கும் என்னைத் தெரியாது. ஆனால், பாஞ்சாலத்தைப் பற்றியும் கூட ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக அறிவேன். பாஞ்சாலத்திற்குள் நான் போவதை பாஞ்சால அரசாங்கம் தடுக்காமல் இருந்திருக்குமாயின், அங்கே அமைதி நிலவும்படி செய்வதற்கு நான் பெருமளவு உதவியாக இருந்திருப்பேன். என்னைத் தடுத்ததன் மூலம் அனாவசியமாக மக்களுக்கு ஆத்திரம் மூட்டிவிட்டார்கள்.”

இவ்விதம் மேலும் மேலும் விவாதித்துக்கொண்டே போனோம். இருவர் கருத்தும் ஒத்துப்போவதற்குச் சாத்தியமே இல்லை. சௌபாத்தியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி, அமைதியாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளுவது என்று இருக்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். சௌபாத்திக் கடற்கரையில் பொதுக்கூட்டம் நடந்தது. அகிம்சையின் கடமையைக் குறித்தும், சத்தியாக்கிரகத்தின் எல்லைகளைக் குறித்தும், விரிவாக எடுத்துக் கூறினேன். “முக்கியமாகச் சத்தியாக்கிரகம் உண்மையோ டிருப்பவர்களுக்கே ஆயுதம். சத்தியாக்கிரகி, அகிம்சையை அனுசரிக்கப் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறான். இதை மக்கள் எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் அனுசரித்தாலன்றிப் பொதுஜன சத்தியாக்கிரகத்தை நான் நடத்த முடியாது” என்றும் சொன்னேன்.

அகமதாபாத்தில் கலவரங்கள் நடந்ததாக அனுசூயா பென்னுக்கும் செய்திகள் கிடைத்தன. அவரையும் கைது செய்து விட்டார்கள் என்று யாரோ வதந்தியைக் கிளப்பி விட்டார்கள். அவர் கைதானார் என்ற வதந்தியைக் கேட்டு மில் தொழிலாளர்கள் வெறி கொண்டு வேலைநிறுத்தம் செய்ததோடு பலாத்காரச் செயல்களையும் செய்து விட்டார்கள். ஒரு சார்ஜண்டு அடித்துக் கொல்லப்பட்டு விட்டார்.

நான் அகமதாபாத்துக்குச் சென்றேன். நதியாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தண்டவாளங்களைப் பெயர்த்துவிட முயற்சிகள் நடந்தன என்றும், வீரம்காமில் அரசாங்க அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், அகமதாபாத்தில் ராணுவச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் அறிந்தேன். பொதுஜனங்கள் பயப்பிராந்தியில் இருந்தனர். பலாத்காரச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டு விட்டார்கள். அவர்கள் அதற்கு வட்டியும் சேர்த்து அனுபவிக்கும்படி செய்யப்பட்டுவிட்டனர்.

கமிஷனர் ஸ்ரீ பிராட்டிடம் என்னை அழைத்துக்கொண்டு போவதற்காக ஒரு போலீஸ் அதிகாரி ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருந்தார். கோபத்தினால் அவர் துடிதுடித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரிடம் சாந்தமாகவே பேசினேன். நடந்துவிட்ட கலவரங்களுக்காக என் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். ராணுவச் சட்டம் அனாவசியமானது என்று நான் சொன்னதோடு, அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளிலெல்லாம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் சொல்லி, சபர்மதி ஆசிரம மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிக்கும்படியும் கேட்டேன். இந்த யோசனை அவருக்குப் பிடித்திருந்தது. பொதுக்கூட்டமும் நடந்தது. அது ஏப்ரல் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று நினைக்கிறேன். அன்றோ, அதற்கு மறுநாளோ, ராணுவச் சட்ட ஆட்சியும் ரத்தாயிற்று. பொதுக்கூட்டத்தில் பேசுகையில் மக்கள் தாங்கள் செய்து விட்ட தவறை உணரும்படி செய்ய முயன்றேன். அவர்களுடைய செய்கைகளுக்குப் பிராயச்சித்தமாக மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்றும் தெரிவித்தேன். அதேபோல் ஒரு நாளைக்கு உண்ணாவிரதம் இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டேன். பலாத்காரச் செயல்களைச் செய்துவிட்டவர்கள், தங்களுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு யோசனை கூறினேன்.

என்னுடைய கடமை என்ன என்பது பட்டப்பகல் போல் எனக்கு விளங்கியது. அகமதாபாத் தொழிலாளர்களிடையே நான் அதிக காலம் செலவிட்டிருக்கிறேன். அவர்களுக்குச் சேவையும் செய்திருக்கிறேன். அவர்களிடமிருந்து சிறந்த காரியங்களை நான் எதிர்பார்த்திருக்கும் போது, அத்தொழிலாளர்கள் கலகங்களில் ஈடுபட்டது என்னால் சகிக்க முடியாததாயிற்று. அவர்களுடைய குற்றத்தில் எனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்தேன்.

மக்கள் தாங்கள் செய்துவிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட வேண்டும் என்று அவர்களுக்கு நான் கூறியதுபோலவே, அக்குற்றங்களை மன்னித்து விடுமாறு அரசாங்கத்திற்கும் யோசனை கூறினேன். இரு சாரரும் என் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

காலஞ்சென்ற ஸர் ராமாபாயும், அகமதாபாத் நகரவாசிகள் சிலரும், என்னிடம் வந்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அமைதியின்மையின் படிப்பினையை மக்கள் அறிந்துகொள்ளும் வரையில் சத்தியாக்கிரகத்தை நிறுத்தி வைப்பதென்று நான் தீர்மானித்துக் கொண்டு விட்டதால், அவர்களுடைய வேண்டுகோளுக்கே அவசியமில்லை. அந்த நண்பர்கள் மகிழ்ச்சியுடன் திரும்பினர்.

ஆனால், நான் செய்துவிட்ட இத்தீர்மானத்தைக் குறித்துத் துக்கப்பட்டவர்களும் உண்டு. எல்லா இடங்களிலுமே அமைதி நிலவ வேண்டும் என்று நான் எதிர்பார்த்தால், சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தாக வேண்டிய நிபந்தனை என்று நான் அதைக் கருதுவதானால், பொதுஜன சத்தியாக்கிரகம் என்பதே அசாத்தியமானதாகிவிடும் என்று அவர்கள் கருதினார்கள். அவர்களுடன் மாறுபட்ட கருத்தை நான் கொள்ள வேண்டியிருந்ததற்காக வருந்தினேன். நான் யாருடன் இருந்து வேலை செய்து வந்தேனோ அவர்கள், அகிம்சைக்கும் துன்பங்களை அனுபவிப்பதற்கும் தயாராயிருப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தவர்களே, அகிம்சையை அனுசரிக்க முடியவில்லையென்றால், சத்தியாக்கிரகம் நிச்சயமாகச் சாத்தியமில்லாததே. சத்தியாக்கிரகத்திற்கு மக்களை நடத்திச் செல்ல விரும்புகிறவர்கள், அகிம்சையின் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களை வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியான கருத்துக் கொண்டிருந்தேன். அதே அபிப்பிராயமே எனக்கு இன்றைக்கும் இருந்துவருகிறது.

$$$

33. ஒரு ஹிமாலயத் தவறு

     அகமதாபாத் கூட்டம் முடிந்தவுடனே நதியாத்திற்குச் சென்றேன். ‘ஹிமாலயத் தவறு’ என்ற சொல்லை நான் முதன்முதலில் அங்கேதான் உபயோகித்தேன். அச்சொல் பின்னால் அதிகப் பிரபலமாயிற்று. அகமதாபாத்தில்கூட, நான் செய்துவிட்ட தவறை லேசாக உணர ஆரம்பித்துவிட்டேன். ஆனால், நதியாத்திற்குச் சென்று அங்கே இருந்த உண்மையான நிலைமையைப் பார்த்து, கேடா ஜில்லாவைச் சேர்ந்தவர்கள் ஏராளமாகக் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட பிறகே, நான் பெருந்தவறைச் செய்துவிட்டேன் என்பது திடீரென்று எனக்குப் பட்டது. கேடா ஜில்லாவின் மக்களையும் மற்ற இடங்களில் இருந்தவர்களையும், அதற்கு வேண்டிய பக்குவத்தை அவர்கள் அடைவதற்கு முன்னாலேயே சாத்விகச் சட்டமறுப்பை ஆரம்பிக்கும்படி சொல்லிவிட்டது பெருந்தவறு என்று இப்பொழுது எனக்குத் தோன்றியது. நான் ஒரு பொதுக்கூட்டத்தில் இவ்விதம் கூறினேன். இவ்விதம் தவறை நான் ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் பரிகசிக்கப்பட்டது கொஞ்சமல்ல. ஆனால், அவ்வாறு தவறை ஒப்புக்கொண்டதைக் குறித்து நான் வருத்தப்பட்டதே இல்லை. ஏனெனில், ஒருவர் தாம் செய்யும் தவறுகளைப் பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து, பிறர் தவறுகள் விஷயத்தில் அவ்விதம் பார்க்காமல் இருந்தால் தான், இரண்டையும் நியாயமாக அவர் மதிப்பிட முடியும் என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். அதோடு சத்தியாக்கிரகியாக இருக்க விரும்புகிறவர், இந்த விதியை மனப்பூர்வமாகவும் தவறாமலும் அனுசரித்து வரவேண்டும் என்றும் நான் நம்புகிறேன்.

நான் செய்துவிட்ட ஹிமாலயத் தவறு என்ன என்பதை இனிக் கவனிப்போம். சாத்விகச் சட்ட மறுப்பைச் செய்வதற்கு ஒருவர் தகுதியை அடைவதற்கு முன்னால், அவர் அரசாங்கச் சட்டங்களுக்கு விரும்பி மரியாதையுடன் பணிந்து நடந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில், சட்டத்தை மீறி நடந்து விட்டால் அதற்குரிய தண்டனையை அடைய நேருமே என்ற பயத்தினாலேயே பெரும்பாலும் அத்தகைய சட்டங்களுக்குப் பணிந்து நடக்கிறோம். அதிலும் ஒழுக்க நெறி சம்பந்தப்படாத சட்டங்கள் விஷயத்தில் இது பெரிதும் உண்மையே ஆகும். உதாரணமாக, திருடுவதற்கு எதிரான சட்டம் இருந்தாலும், இல்லாது போனாலும், யோக்கியமும் கௌரவமும் உள்ள ஒருவர், திடீரென்று திருட முற்பட்டுவிட மாட்டார். ஆனால், இவரே, இருட்டிய பிறகு சைக்கிளில் விளக்கு வைத்துக்கொண்டே வெளியில் போக வேண்டும் என்ற விதியை மீறி நடந்து விடுவதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை. இது சம்பந்தமாக அதிக ஜாக்கிரதையாக இருக்கும்படி புத்திமதி கூறினால், அதையாவது அன்போடு ஏற்றுக் கொள்ளுவாரா என்பதும் சந்தேகம். ஆனால், இந்த விதியை மீறினால் குற்றஞ்சாட்டி வழக்குத் தொடரப்படும் அசௌகரியத்திலிருந்து தப்புவதற்கு மாத்திரம், கட்டாயமான இது போன்ற விதியை அவர் அனுசரித்து நடப்பார். அவ்விதம் சட்டத்திற்கு உடன்படுவது, ஒரு சத்தியாக்கிரகி விருப்பத்துடன் தானே உடன்பட வேண்டியதைப் போன்றது ஆகாது. ஒரு சத்தியாக்கிரகி, சமூகத்தின் சட்டங்களுக்குப் புத்திசாலித்தனமாகவும், தமது சுயேச்சையான விருப்பத்தின் பேரிலும் உடன்பட்டு நடக்கிறார். ஏனெனில், அவ்விதம் செய்வது தமது புனிதமான கடமை என்று அவர் கருதுகிறார். இவ்விதம் சமூகத்தின் சட்டங்களுக்கு ஒருவர் தவறாமல் பணிந்து நடந்தால்தான், எந்தக் குறிப்பிட்ட விதிகள் நல்லவை, நியாயமானவை, எவை அநியாயமானவை, பாவமானவை என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கக் கூடிய தகுதி அவருக்கு ஏற்படும். அப்பொழுதுதான் தெளிவான சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் சில சட்டங்களை சாத்வீக முறையில் மீறுவதற்கான உரிமை அவருக்கு ஏற்படும். அவசியமான இந்த எல்லையைக் கவனிக்காமல் போனது தான் நான் செய்த தவறு. இவ்வாறு மக்கள் தங்களைத் தகுதியாக்கிக் கொள்ளுவதற்கு முன்னால் சாத்வீகச் சட்ட மறுப்பை ஆரம்பிக்குமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டு விட்டேன். இத்தவறு, ஹிமாலயத்தைப் போன்று பெரியது என்று எனக்குத் தோன்றுகிறது.

கேடா ஜில்லாவில் பிரவேசித்ததுமே கேடா சத்தியாக்கிரகத்தைப் பற்றிய பழைய நினைவுகளெல்லாம் எனக்குத் திரும்ப வந்தன. எனவே, அவ்வளவு தெளிவான விஷயத்தை நான் எப்படிப் புரிந்து கொள்ளாது போனேன் என்று ஆச்சரியப்பட்டேன். சாத்விகச் சட்ட மறுப்பு செய்வதற்கு வேண்டிய தகுதியை மக்கள் பெறுவதற்கு முன்னால், அதன் ஆழ்ந்த உட்பொருள்களை அவர்கள் முற்றும் அறிந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்பதை நான் தெரிந்துகொண்டேன். எனவே, பொதுஜன அளவில் சாத்விகச் சட்ட மறுப்பைத் திரும்பவும் ஆரம்பிப்பதற்கு முன்னால் நன்றாகப் பண்பட்ட, சத்தியாக்கிரகத்தின் கண்டிப்பான நிபந்தனைகளை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கும், புனித உள்ளம் படைத்த தொண்டர்கள் படை இருக்கும்படி செய்ய வேண்டியது அவசியம். அவைகளை அவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், தூக்கமின்றி உஷாராக இருப்பதன் மூலம் மக்களைச் சரியான வழியில் நடக்கும்படி செய்யவும் அவர்களால் முடியும்.

என் மனத்தில் இவ்விதமான எண்ணங்களுடன் நான் பம்பாய் போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்த சத்தியாக்கிரக சபையின் மூலம் சத்தியாக்கிரகப் படையைத் திரட்டினேன். சத்தியாக்கிரகத்தின் பொருள் சம்பந்தமாகவும், அதன் உள்ளிருக்கும் முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் அறியும்படி செய்யும் வேலையை அத்தொண்டர்களின் உதவியைக் கொண்டு ஆரம்பித்தேன். இவ்விஷயத்தைப் போதிக்கும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு முக்கியமாக இந்த வேலை நடந்தது.

இந்த வேலை நடந்துகொண்டிருந்த போது ஒரு விஷயத்தை நான் காண முடிந்தது. சத்தியாக்கிரகம் சம்பந்தமான சமாதான வேலையில் மக்கள் சிரத்தை கொள்ளும்படி செய்வது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைக் கண்டேன். தொண்டர்களும் பெருந்தொகையில் வந்து சேரவில்லை. சேர்ந்த தொண்டர்களோ, ஒழுங்காக முறைப்படி பயிற்சியைப் பெறவுமில்லை. நாளாக ஆகப் புதிதாக வந்து சேருகிறவர்களின் தொகை அதிகமாவதற்குப் பதிலாகக் குறைந்து கொண்டே போயிற்று. சாத்விகச் சட்ட மறுப்புப் பயிற்சியின் அபிவிருத்தி, நான் ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப் போலத் துரிதமானதாக இருக்கப் போவதில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன்.

$$$

34. ‘நவ ஜீவன்’, ‘எங் இந்தியா’

     இவ்வாறு அகிம்சையைப் பாதுகாப்பதற்கான இயக்கம், மெதுவாகவே எனினும் நிதானமாக, ஒரு பக்கம் அபிவிருத்தி அடைந்து கொண்டுவந்த சமயத்தில், மற்றொரு பக்கத்தில் அரசாங்கத்தின் சட்ட விரோதமான அடக்கு முறைக் கொள்கை அதிகத் தீவிரமாக இருந்து வந்தது. பாஞ்சாலத்தில் அந்த அடக்குமுறை, தனது பூரண சொரூபத்தையும் காட்டி வந்தது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராணுவச் சட்டம் அமல் நடத்தப்பட்டது. அதாவது, சட்டம் என்பதே இல்லை என்றாயிற்று. விசேட நீதிமன்றங்களை அமைத்தார்கள். இந்த விசேட நீதிமன்றங்கள், எதேச்சாதிகாரியின் இஷ்டத்தை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கருவிகளாகத்தான் இருந்தனவே அன்றி உண்மையில் நீதி வழங்கும் மன்றங்களாக இல்லை. நீதி முறைக்கெல்லாம் முற்றும் மாறாகச் சாட்சியத்திற்குப் பொருந்தாத வகையில் தண்டனைகள் விதிக்கப்பட்டன. அமிர்தசரஸில் ஒரு பாவமும் அறியாத ஆண்களும் பெண்களும், புழுக்களைப் போல் வயிற்றினாலேயே ஊர்ந்து செல்லும்படி செய்யப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் கொலையே உலகத்தின் கவனத்தையும், முக்கியமாக இந்திய மக்களின் கவனத்தையும் அதிகமாகக் கவர்ந்ததென்றாலும், இந்த அட்டூழியத்தின் முன்பு அப்படுகொலை கூட என் கண்ணுக்கு அவ்வளவு பெரியதாகத் தோன்றவில்லை.

என்ன நேர்ந்தாலும் பொருட்படுத்தாமல் உடனே பாஞ்சாலத்திற்குப் போகும்படி வற்புறுத்தப்பட்டேன். அங்கே செல்ல அனுமதி அளிக்குமாறு வைசிராய்க்கு எழுதினேன்; தந்தியும் அடித்தேன். ஆனால், ஒரு பலனும் இல்லை. அவசியமான அனுமதியில்லாமல் நான் போவேனாயின், பாஞ்சால எல்லையைத் தாண்டி உள்ளே போக நான் அனுமதிக்கப்பட மாட்டேன். சாத்விகச் சட்ட மறுப்புச் செய்தேன் என்ற திருப்தியோடு இருந்துவிட வேண்டியதுதான். இவ்விதம் என்ன செய்வதென்று தோன்றாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். இருந்த நிலைமைப்படி பார்த்தால், பாஞ்சாலத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை மீறுவது சாத்விகச் சட்ட மறுப்பு ஆகாது என்றே எனக்குத் தோன்றிற்று. ஏனெனில், நான் எந்த வகையான அமைதியான சூழ்நிலையை விரும்பினேனோ அதை என்னைச் சுற்றிலும் நான் காணவில்லை. பாஞ்சாலத்தில் நடந்துவந்த அக்கிரமமான அடக்குமுறையோ மக்களின் ஆத்திரத்தை மேலும் அதிகமாக்கிவிட்டது. ஆகையால், அப்படிப்பட்ட சமயத்தில் நான் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது சாத்தியமென்றாலும், அது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது போன்றே ஆகும் என்று எண்ணினேன். எனவே, போகுமாறு நண்பர்கள் கூறிய போதிலும், பாஞ்சாலத்திற்குப் போவதில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். இத்தகைய முடிவுக்கு நான் வர வேண்டியிருந்தது எனக்கே அதிக கஷ்டமாகத்தான் இருந்தது. அட்டூழியங்களையும் அநீதிகளையும் பற்றிய செய்திகள் தினமும் வந்துகொண்டே இருந்தன. ஆனால், நானோ எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்துகொண்டு பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

அச்சமயத்தில் ஸ்ரீ ஹார்னிமனின் கையில் ‘பம்பாய் கிரானிகிள்’ பத்திரிகை பலமான சக்தியாக இருந்து வந்தது. அதிகாரிகள் திடீரென்று அவரைப் பிடித்து வெளியேற்றி விட்டார்கள். அரசாங்கத்தின் இச்செய்கை அதிசயம் நிறைந்த காரியம் என்று எனக்குத் தோன்றியது. அச் செய்கையை இப்பொழுதும் மிக்க அருவருப்பான செய்கையாகவே எண்ணுகிறேன். சட்ட விரோதமான கலவரங்களை ஸ்ரீ ஹார்னிமன் என்றும் விரும்பியதில்லை என்பதை நான் அறிவேன். பாஞ்சால அரசாங்கம் எனக்குப் பிறப்பித்த தடை உத்தரவைச் சத்தியாக்கிரகக் கமிட்டியின் அனுமதியில்லாமல் நான் மீறியது அவருக்குப் பிடிக்கவில்லை. சாத்விகச் சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பது என்ற முடிவை அவர் பூர்ணமாக ஆதரித்தார். சட்ட மறுப்பை நிறுத்தி வைப்பதாக நான் அறிவிப்பதற்கு முன்னாலேயே, சட்ட மறுப்பை நிறுத்தி வைக்குமாறு யோசனை கூறி அவர் எனக்குக் கடிதமும் எழுதினார். நான் அப்பொழுது அகமதாபாத்தில் இருந்ததால், பம்பாய்க்கும் அதற்கும் உள்ள தூரத்தின் காரணமாக நான் அறிவித்த பிறகே அக்கடிதம் எனக்குக் கிடைத்தது. ஆகவே அவர் திடீரென்று நாடு கடத்தப்பட்டது எனக்கு மனவேதனை மட்டுமன்றி ஆச்சரியத்தையும் அளித்தது.

இவ்விதமான நிலைமைகள் ஏற்பட்டுவிடவே பம்பாய் கிரானிகிளின் டைரக்டர்கள், பத்திரிகையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். ஸ்ரீ பிரெல்வி ஏற்கனவே அப்பத்திரிகையில் இருந்தார். ஆகவே, நான் செய்ய வேண்டியது அதிகமில்லை. ஆனால், என் சுபாவத்தை அனுசரித்து இப்பொறுப்பு என்னுடைய சிரமத்தை அதிகமாக்கியது.

ஆனால், எனக்குச் சிரமம் இல்லாதபடி செய்ய வந்தது போல் அரசாங்கமும் முன்வந்துவிட்டது. அரசாங்கத்தின் உத்தரவினால் ‘கிரானிகிள்’ பத்திரிகையை நிறுத்தி வைத்துவிட வேண்டியதாயிற்று.

‘கிரானிகிள்’ நிர்வாகத்தை நடத்தி வந்த நண்பர்களான ஸ்ரீ உமார் ஸோபானியும், ஸ்ரீ சங்கரலால் பாங்கரும், இதே சமயத்தில் ‘எங் இந்தியா’ என்ற பத்திரிகையையும் நிர்வகித்து வந்தார்கள். ‘கிரானிகள்’ நிறுத்திவைக்கப்பட்டு விட்டதால், அதனால் ஏற்பட்டிருக்கும் குறை நீங்குவதை முன்னிட்டு, ‘எங் இந்தியா’வின் ஆசிரியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். வாரப் பத்திரிகையாக நடந்து வந்த ‘எங் இந்தியா’வை, வாரம் இருமுறைப் பத்திரிகையாக்கலாம் என்றார்கள். நானும் அதைத் தான் எண்ணினேன். சத்தியாக்கிரகத்தின் உட்பொருளைப் பொதுமக்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டும் என்று நான் ஆவலோடு இருந்தேன். அதோடு இம்முயற்சியால் பாஞ்சால நிலைமையைக் குறித்தும் ஓரளவுக்கு என் கடமையைச் செய்யலாம் என்றும் நம்பினேன். ஏனெனில், நான் என்ன எழுதினாலும், அதன் முடிவு சத்தியாக்கிரகமே. அரசாங்கத்திற்கும் அது தெரியும். ஆகையால், இந்நண்பர்கள் கூறிய யோசனையை உடனே ஏற்றுக்கொண்டு விட்டேன்.

ஆனால், ஆங்கிலத்தை உபயோகித்து, சத்தியாக்கிரகத்தில் பொது மக்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும்? நான் முக்கியமாக வேலை செய்துவந்த இடம் குஜராத். ஸ்ரீ ஸோபானி, ஸ்ரீ பாங்கர் கோஷ்டியுடன் அச்சமயம் ஸ்ரீ இந்துலால் யாக்ஞிக்கும் இருந்தார். குஜராத்தி மாதப் பத்திரிகையான  ‘நவஜீவனை’ அவர் நடத்தி வந்தார். இந்த நண்பர்கள் அதற்குப் பணவுதவி செய்து வந்தார்கள். அந்த மாதப் பத்திரிகையையும் அந்நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்தனர். ஸ்ரீ இந்துலாலும் அதில் வேலை செய்வதாகக் கூறினார். அந்த மாதப் பத்திரிகை வாரப் பத்திரிக்கையாக மாற்றப்பட்டது.

இதற்கு மத்தியில் ‘கிரானிகிள்’ புத்துயிர் பெற்றெழுந்தது. ஆகையால், ‘எங் இந்தியா’ முன்பு போலவே வாரப் பத்திரிகையாயிற்று. இரண்டு வாரப் பத்திரிகைகளை, இரண்டு இடங்களிலிருந்து பிரசுரிப்பதென்பது, எனக்கு அதிக அசௌகரிய மானதோடு செலவும் அதிகமாயிற்று. ‘நவஜீவன்’ முன்பே அகமதாபாத்திலிருந்து பிரசுரமாகி வந்ததால் என் யோசனையின் பேரில் ‘எங் இந்தியா’வும் அங்கேயே மாற்றப்பட்டது.

இந்த மாற்றத்திற்கு இதல்லாமல் வேறு காரணங்களும் உண்டு. இத்தகைய பத்திரிகைகளுக்குச் சொந்தமாக அச்சகம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை ‘இந்தியன் ஒப்பீனியன்’ அனுபவத்திலிருந்து அறிந்திருந்தேன். மேலும், இந்தியாவில் அப்பொழுது கடுமையான அச்சுச் சட்டங்கள் அமலிலிருந்தன. ஆகையால், என்னுடைய கருத்துக்களைத் தங்கு தடையின்றி வெளியிட நான் விரும்பினால், லாபம் கருதியே நடத்தப் பட்டவையான அப்பொழுதிருந்த அச்சகங்கள், அவற்றைப் பிரசுரிக்கத் தயங்கும். எனவே, சொந்தத்தில் ஓர் அச்சகத்தை அமைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அத்தியாவசியமாயிற்று. அகமதாபாத்திலேயே சௌகரியமாக அச்சகத்தை அமைத்துக் கொள்ளலாமாகையால், ‘எங் இந்தியா’வையும் அங்கே கொண்டு போனோம்.

சத்தியாக்கிரகத்தைக் குறித்துப் பொதுமக்களுக்கு இப் பத்திரிகைகளின் மூலம் என்னால் இயன்ற வரையில் போதிக்கும் வேலையைத் தொடங்கினேன். இரு பத்திரிகைகளுக்கும் ஏராளமானவர்கள் சந்தாதாரர்களாயினர். ஒரு சமயம் ஒவ்வொரு பத்திரிகையும் நாற்பதினாயிரம் பிரதிகள் செலவாயின. நவஜீவன் சந்தாதாரர்கள் தொகை ஒரேயடியாகப் பெருகிய போதிலும் ‘எங் இந்தியா’வின் சந்தாதார்கள் தொகை நிதானமாகவே அதிகரித்தது. நான் சிறைப்பட்ட பிறகு, இரு பத்திரிகைகளின் சந்தாதாரர் தொகையும் அதிகமாக குறைந்து விட்டது. இன்று எண்ணாயிரம் பிரதிகளே போகின்றன.

இப்பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரிப்பதை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவிட்டேன். இதனால் அப்பத்திரிகைகள் எந்த நஷ்டத்தையும் அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இதற்கு மாறாக, அப்பத்திரிகைகள் சுதந்திரமாக இருந்துவருவதற்கு என் தீர்மானம் பெரிய அளவுக்கு உதவியாக இருந்தது என்பதே என் நம்பிக்கை.

என் அளவில் நான் மன அமைதியை அடைவதற்கும் இப்பத்திரிகைகள் எனக்கு உதவியாக இருந்தன. சாத்விகச் சட்டமறுப்பை உடனே ஆரம்பிப்பதற்கு இடமில்லை என்று ஆகிவிட்டபோது, என் கருத்துக்களைத் தாராளமாக எடுத்துக் கூறவும், மக்களுக்குத் தைரியம் ஊட்டவும் அவை உதவியாக இருந்தன. மக்களுக்கு அதிகக் கடுமையான சோதனை ஏற்பட்டுவிட்ட காலத்தில் அவர்களுக்கு இவ்விரு பத்திரிகைகளும் சிறந்த சேவை செய்ததோடு, ராணுவ ஆட்சிக் கொடுமையைத் தணிக்கவும் தங்களாலானதை அவை செய்தன என்று எண்ணுகிறேன்.

$$$

35. பாஞ்சாலத்தில்

     பாஞ்சாலத்தில் நடந்தவைகளுக்கெல்லாம் நானே பொறுப்பாளி என்று ஸர் மைக்கேல் ஓட்வியர் கூறினார். ஆத்திரமடைந்த சில இளம் பஞ்சாபிகளும், ராணுவச் சட்ட அமலுக்குப் பொறுப்பாளி நான்தான் என்றனர். சாத்விகச் சட்ட மறுப்பை நான் நிறுத்தி வைக்காமல் இருந்தால், ஜாலியன் வாலாபாக் படுகொலையே நடந்திராது என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களில் சிலரோ, நான் பாஞ்சாலத்திற்கு வந்தால், என்னைக் கொன்று விடுவதாகப் பயமுறுத்தும் அளவுக்கும் போய்விட்டார்கள். ஆனால், நான் செய்தது சரியானது என்றும், ஆட்சேபிக்க முடியாதது என்றும், எண்ணினேன். புத்தியுள்ளவர்கள் யாரும் அதைத் தவறாகப் புரிந்து கொள்ளுவதற்கில்லை என்றும் கருதினேன்.

பாஞ்சாலத்திற்குப் போக வேண்டும் என்று நான் பரபரப்புடன் இருந்தேன். இதற்குமுன் நான் அங்கே போனதே இல்லை. இதனாலேயே அங்கே போய் நிலைமையை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாயிற்று. பாஞ்சாலத்திற்கு வருமாறு என்னை அழைத்த டாக்டர் சத்தியபால், டாக்டர் கிச்லு, பண்டித ராம்பாஜ் தத் சௌத்ரி ஆகியோர் அச்சமயம் சிறையில் இருந்தார்கள். ஆனால், அவர்களையும் மற்ற  கைதிகளையும் அரசாங்கம் நீண்ட காலம் சிறையில் வைத்திருக்கத் துணிய முடியாது என்று கருதினேன். நான் பம்பாயிலிருந்த சமயங்களில் ஏராளமான பஞ்சாபிகள் என்னை வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதெல்லாம் நான் அவர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தி வந்தேன். அது அவர்களுக்கும் ஆறுதலை அளித்தது. அச்சமயம் எனக்கு இருந்த தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் தொத்திக்கொண்டு விடுவதாக இருந்தது.

ஆனால், நான் பாஞ்சாலத்திற்குப் போவதை அடிக்கடி ஒத்திப்போட வேண்டியதாயிற்று. அங்கே போவதற்கு நான் அனுமதி கேட்கும் போதெல்லாம் வைசிராய், “பொறுங்கள்!” என்று கூறி வந்தார். ஆகையால், நான் போவது காலம் தள்ளிக்கொண்டே வந்தது.

இதற்கு மத்தியில் ராணுவச் சட்டத்தின் கீழ் பாஞ்சால அரசாங்கம் செய்தவை சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு ஹண்டர் கமிட்டி நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ ஸி.எப். ஆண்டுரூஸ் இதற்குள் அங்கே போய்விட்டார். அங்கே இருந்த நிலைமையைக் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் உள்ளத்தைப் பிளப்பனவாக இருந்தன. ராணுவச் சட்ட அமல் அட்டூழியங்கள், பத்திரிகைகளில் வெளியான விவரங்களைவிடப் படுமோசமாக இருக்கின்றன என்ற அபிப்பிராயம் எனக்கு உண்டாயிற்று. உடனே புறப்பட்டு வரும்படி அவர் என்னை வற்புறுத்தினார். அதே சமயத்தில் மாளவியாஜியும், உடனே பாஞ்சாலத்திற்குப் புறப்படுமாறு எனக்குத் தந்தி கொடுத்தார். “இப்போதாவது நான் பாஞ்சாலத்திற்குப் போகலாமா?” என்று மற்றோர் முறையும் வைசிராய்க்குத் தந்தி கொடுத்துக் கேட்டேன். ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதிக்குப் பிறகு நான் பாஞ்சாலத்திற்குப் போகலாம் என்று பதில் வந்தது. எனக்கு இப்பொழுது அத்தேதி சரியாக ஞாபகம் இல்லையென்றாலும், அக்டோபர் 17-ஆம் தேதி என்று நினைக்கிறேன்.

நான் லாகூர் போய்ச் சேர்ந்ததும் கண்ட காட்சியை என் ஞாபகத்திலிருந்து என்றும் அழித்துவிட முடியாது. ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு கோடியிலிருந்து மற்றோர் கோடிக்கு ஒரே ஜனசமுத்திரம். நீண்டகாலம் பிரிந்திருந்து விட்ட உறவினரைச் சந்திப்பதற்குக் கிளம்பி விடுவதைப் போல லாகூர் மக்கள் எல்லோரும் வீட்டைவிட்டுக் கிளம்பி வந்து ஆர்வத்துடன் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனந்த மிகுதியால் அவர்கள் தலைகால் புரியாதவர்களாகி விட்டனர். நான், காலஞ்சென்ற பண்டித ராம்பாஜ் தத்தின் பங்களாவில் தங்கினேன். என்னை உபசரிக்கும் பாரம் ஸ்ரீமதி சரளாதேவிக்கு ஏற்பட்டது. உண்மையில், அது பெரிய பாரமேயாகும். ஏனெனில், இப்பொழுது இருப்பதைப் போன்று அக்காலத்திலும் நான் தங்கும் இடம் பெரிய சத்திரமாகவே ஆகி வந்தது.

பாஞ்சாலத்தின் முக்கியமான தலைவர்களெல்லோரும் சிறையில் இருந்ததால், அவர்களுடைய ஸ்தாபனங்களைப் பண்டித மாளவியா, பண்டித மோதிலால்ஜி, காலஞ்சென்ற சுவாமி சிரத்தானந்தஜி ஆகியோர் பொருத்தமாகவே வகித்து வந்தார்கள். சுவாமி சிரத்தானந்தஜியையும் மாளவியாவையும் இதற்கு முன்பே நான் நன்றாக அறிவேன். ஆனால், மோதிலால்ஜியுடன் முதன்முதலாக இப்பொழுதுதான் நான் நெருங்கிப் பழகினேன். இந்தத் தலைவர்களும், சிறை செல்லும் பாக்கியத்திலிருந்து தப்பிய உள்ளூர்த் தலைவர்களும், தங்கள் மத்தியில் நான் என் சொந்த வீட்டில் இருப்பதாகவே உணரும்படி செய்தனர். இதனால், அவர்களின் நடுவே நான் அந்நியனாக உணரவே இல்லை.

ஹன்டர் கமிட்டியின் முன்பு விசாரணைக்குச் சாட்சியம் அளிப்பதில்லை என்று நாங்கள் ஏகமனதாக முடிவு செய்த விஷயம், இப்பொழுது சரித்திரப் பிரசித்தமானது. இவ்விதம் முடிவு செய்ததற்கான காரணங்கள், அப்பொழுது வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகையால், அவற்றை இங்கே திரும்பக் கூறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒன்றை மாத்திரம் சொன்னாலே போதும். இவ்வளவு காலமான பிறகும் அந்த நிகழ்ச்சிகளைக் குறித்து எண்ணிப் பார்க்கும்போது, அக் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் செய்த முடிவு முற்றும் சரியானதும் பொருத்தமானதுமாகும் என்றே இப்பொழுதும் நான் எண்ணுகிறேன்.

     ஹன்டர் கமிட்டியைப் பகிஷ்கரிப்பதென்று நாங்கள் முடிவு செய்து விட்டதன் விளைவாக காங்கிரஸின் சார்பாக அதேபோல விசாரணையை நடத்த உத்தியோகஸ்தர் அல்லாதவர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நியமிப்பது என்று தீர்மானித்தோம். பண்டித மோதிலால் நேரு, காலஞ்சென்ற தேசபந்து ஸி.ஆர்.தாஸ், ஸ்ரீ அப்பாஸ் தயாப்ஜி, ஸ்ரீ எம்.ஆர்.ஜெயகர் ஆகியோரும் நானும் அக்கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். உண்மையில் எங்களை நியமித்தவர் பண்டித மாளவியாஜியே. விசாரிப்பதற்காக நாங்கள் பிரிந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றோம். கமிட்டியின் வேலைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அதோடு அதிகப்படியான இடங்களில் விசாரிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. இதனால், பாஞ்சால மக்களையும் பாஞ்சாலத்தின் கிராமங்களையும் நெருங்கிப் பழகி அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

இந்த விசாரணையை நான் நடத்தி வந்தபோது பாஞ்சாலத்தின் பெண்களிடமும் நான் நெருங்கிப் பழகினேன். எவ்வளவோ காலமாக ஒருவருக்கொருவர் நன்றாகத் தெரிந்தவர்களைப் போன்றே நாங்கள் பழகினோம். நான் சென்ற இடங்களிலெல்லாம் பெண்கள் ஏராளமாக வந்து கூடினார்கள். அவர்கள், தங்கள் கையினால் நூற்ற நூல்களையும் என் முன்பு கொண்டுவந்து குவித்தார்கள். கதர் வேலைக்கு  பாஞ்சாலத்தில் அதிக இடமுண்டு என்ற உண்மையை, நான் செய்து வந்த விசாரணை வேலையின் மூலம் தெரிந்து கொண்டேன்.

மக்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அட்டூழியங்களைக் குறித்து என் விசாரணையை மேலும் மேலும் நான் நடத்திக்கொண்டு போகப் போக, அரசாங்கத்தின் கொடுமைகளைப் பற்றியும், அதன் அதிகாரிகளின் எதேச்சாதிகார அக்கிரமங்களைக் குறித்தும், ஏராளமான விவரங்களை அறியலானேன். இவற்றையெல்லாம் அறியவே எனக்கு மன வேதனை அதிகமாயிற்று. பாஞ்சாலம், யுத்தத்தின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏராளமான சிப்பாய்களைக் கொடுத்துதவிய மாகாணம். அப்படியிருக்க, இந்த மாகாணம் இவ்வளவு மிருகத்தனமான அட்டூழியங்களுக்கு எப்படிப் பணிந்து பொறுத்துக் கொண்டிருந்தது என்பதே எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. இப்பொழுதுகூட அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கமிட்டியின் அறிக்கையைத் தயாரிக்கும் வேலையும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. பாஞ்சால மக்களிடம் எந்தவிதமான அட்டூழியங்கள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புவோர், இக்கமிட்டியின் அறிக்கையைப் பார்க்கும்படி சிபாரிசு செய்கிறேன். அதைக் குறித்து இங்கே நான் சொல்ல விரும்புவதெல்லாம், அந்த அறிக்கையில் மனமார மிகைப்படுத்திக் கூறப்பட்டிருப்பது ஒன்றுமே இல்லை. அதில் கூறப்பட்டிருப்பது ஒவ்வொன்றும் சாட்சியங்களைக் கொண்டே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான். மேலும், பிரசுரமாகி இருக்கும் சாட்சியங்கள், கமிட்டியினிடமிருக்கும் சாட்சியங்களில் மிகச் சிலவேதான். எங்களிடம் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களில் ஒரு சிறிது சந்தேகத்திற்கு இடமுள்ளதாக இருந்த எதுவும், அறிக்கையில் வர நாங்கள் அனுமதிக்கவில்லை. உண்மை ஒன்றையே, அசல் உண்மையை மாத்திரமே, வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் பேரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆகையால், பிரிட்டிஷ் அரசாங்கம் தன்னுடைய ஆட்சி நிலைத்திருக்கும்படி செய்வதற்காக எந்த அளவுக்குப் போகக்கூடியதாக இருக்கிறது, எவ்வளவு ஜீவகாருண்யமற்ற, காட்டுமிராண்டித்தனமான காரியங்களைச் செய்யக் கூடியது என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்கள் அறிய முடியும். எனக்குத் தெரிந்த வரையில், இந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒரு விஷயமாவது, தவறானது என்று இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s