-கி.சூரியநாராயண ராவ்
கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த அமரர் திரு. கி.சூரியநாராயண ராவ் (1924- 2016), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகராக வழிகாட்டியவர். சுவாமி விவேகானந்தர் கூறிய வழியில் நாட்டைப் புனரமைப்பதற்காக, தனது வாழ்வையே அர்ப்பணம் செய்தவர். தேசிய சிந்தனையாளர்; நாட்டு முன்னேற்றத்துக்கான பல நூல்களை எழுதியிருக்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது அரிய கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக குருவாகவும் , வழிகாட்டியாகவும் விளங்கிய மானுட தெய்வமாகிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சுவாமிஜி நரேந்திரனாக அவரிடம் வந்து சேர்ந்த பொழுது முன் அறிதலுடன் கூறிய வார்த்தைகள் “தனது புத்திக் கூர்மையாலும், தெய்வீக சக்தியாலும் நரேன் இந்த உலகத்தின் அடித்தளத்தை ஆட்டுவிக்கும் வல்லமை பெறப் போகிறான். ஏராளமான பணிகள் அவனால் நிறைவேறக் காத்திருக்கின்றன” என்பது தான்.
மேற்கத்திய நுகர்வோர் கலச்சாரத்திற்கு எதிரான ஹிந்துத்துவத்தின் பதாகையை உயரே தூக்கிப் பிடித்த முதல் மனிதர் சுவாமி விவேகானந்தர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க தேசம் சென்ற சுவாமிஜி தனது ஆழமான கருத்துக்களாலும், இடி போன்ற வார்த்தைப் பிரயோகங்களாலும், பெரும் பதவி வகித்த அமெரிக்க அறிவு ஜீவிகளின் வட்டத்தை அசைத்துப் பார்த்தார். கிரேக்க இலக்கியத்தில் நிபுணராய் விளங்கிய முனைவர் பட்டம் பெற்ற அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட், ‘சுவாமிஜியின் அறிவின் ஆழம் ஒரு கலைக்களஞ்சியம் போன்றது’ எனப் பாராட்டினார்.
சிகாகோவில் நடைபெற்ற மதங்களின் மகாசபையில் ஜான்ஹென்றி ரைட் சபையினருக்கு சுவாமிஜியை இப்படி அறிமுகப்படுத்துகிறார்: “இங்கு நமக்கு கிடைத்திருக்கும் மனிதரின் ஞானத்திற்கு அமெரிக்காவில் உள்ள அனைத்து மொத்த ஞானம் சேர்ந்தால் கூட ஈடாகாது”.
விவேகானந்தரின் மகாசபைப் பேச்சு கால அளவில் மிகவும் சிறியது தான். ஆனால் அதற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று அளித்த வரவேற்பும் , கரவொலியும் மிகப் பெரியது. அமெரிக்கச் செய்தித்தாள்கள் “எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி விவேகானந்தர் மதங்களின் மஹா சபையில் ஒரு மகானாக விளங்கினார்” என்றும், “நமது மதமாற்ற பிரசார மிஷனரியை பூரண ஞானமடைந்துவிட்ட அவருடைய நாட்டிற்கு அனுப்புவது முட்டாள்தனமான செயலாகும்” என்றும், “அவரின் அறிவின் முன்பு நமது பேராசிரியர்கள் அனைவரும் முட்டாள்கள்” என்றும் புகழ்ந்து எழுதின.
இவ்வாறு தான் சுவாமிஜி தன் குருவின் ஞானதிருஷ்டியை மெய்ப்பித்தார்.
இதயமும், மூளையும் சரியான விகிதத்தில் இயங்கப்பெற்ற சரியான வார்ப்பு சுவாமிஜி. நமது பாரத மக்களின் வறிய, பின்தங்கிய நிலை குறித்து அவருக்கு இருந்த அக்கறையும் கவலையும், பல நேரங்களில் கொளுந்து விட்டு எரிந்த ஞானத்தை விஞ்சி இருக்கின்றன.
சர்வ சமய மகாசபையின் மூலம் அவருக்குக் கிடைத்த முக்கியத்துவத்தையும் , பிராபல்யத்தையும் சுவாமிஜி சிறிதளவு கூட தனது சொந்த நலனுக்கு பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவரது இளகிய மனம், பாரத மக்களின் வறிய நிலைக்கு இரங்கி ரத்தக் கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தது. சர்வ சமய மகாசபையில் தனது வாதங்களால் வெற்றி பெற்ற அந்தப் பொன்னான நாளில், அந்தஸ்தும் செல்வாக்குமுடைய அமெரிக்க கணவான் ஒருவரால் சுவாமிஜி அவரது இல்லத்திற்க்கு விருந்தினராக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அமெரிக்கா வந்து இறங்கிய நாட்களில் (சிகாகோ சொற்பொழிவுக்கு முன்) அமெரிக்காவின் ஏச்சுக்களுக்கும் , நகையாடல்களுக்கும் ஆளானார். ஆனால் இப்போது உபசரிப்பும் விருந்தும்! என்ன ஒரு முரண்!
அந்த மாளிகையில் அவருக்கு ராஜமரியாதையுடன் ஓர் இளவரசர் தங்குவதற்கு நிகரான அறை அளிக்கப்பட்டது. அனைத்து ஆடம்பரங்களுடன் கூடிய அறை. அந்த அற்புதச் சூழலில் இன்புற்று இருந்திருக்க வேண்டிய சுவாமிஜி கவலையுடன் காணப்பட்டார். தன் நாட்டு மக்களின் ஏழ்மை நிலை குறித்த சிந்தை வந்த பிறகு, அந்த ஆடம்பர மாளிகையில் அவரால் நிம்மதியாக உறங்க முடியாமல் போனது; பஞ்சு மெத்தை முள் மெத்தையானது; தலையணை அவரது கண்ணீரால் கணக்கத் தொடங்கியது. சுவாமிஜி எழுந்தார். அறையின் ஜன்னல் அருகே நின்று இருளில் பார்வையை ஊடுருவினார். மிகையாக உணர்ச்சிவசப்பட்டு தரையில் வீழ்ந்து சுவாமிஜி கதறினார்:
“தாயே! பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு என் மக்களை மறந்த்தேனோ? என் தாய்த் திருநாடு அங்கே வறுமையின் கோரப்பிடியில் இருக்கும் போது, நான் இங்கே விருந்திற்கும் வரவேற்பிற்கும் மயங்கினேனா? நமது இந்தியர்கள் வறுமை என்ற கொடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு பிடி சோற்றுக்கு அங்கே கோடிக் கணக்கான இந்தியர்கள் தவிக்கும் பொழுது, இவர்கள் இங்கே கோடிக் கணக்கான பணத்தை ஆடம்பரத்திற்கு வாரி இறைக்கிறார்களே! இந்திய மக்களை யார் விழிப்படையச் செய்வது? அவர் பசியை ஆற்றுவார் யார்? எனக்கு வழிகாட்டு தாயே! அவர்களுக்கு என்னால் எப்படி உதவ முடியும்?…”
டிச. 28, 1893ம் ஆண்டு சுவாமிஜி இந்தியாவில் இருந்த ஸ்ரீ ஹரிபாத மித்ராவுக்கு எழுதுகிறார்: “என் ஆர்வத்தினால் இந்த நாட்டுக்கு (அமெரிக்காவுக்கு) வரவில்லை. அல்லது பெயருக்கும் புகழுக்கும் வரவில்லை. ஏதாவது ஒரு வழி- என் மக்களை மேம்படுத்த, அவர்கள் வறுமையை ஒழிக்கக் கிடைக்காத என்ற ஏக்கத்தில் வந்துள்ளேன். ஆண்டவனின் துணை இருக்குமேயானால் அந்த வழி என் கண்களுக்கு கண்டிப்பாகப் புலப்படும்”
ஒரு பரிவ்ராஜராக சுவாமிஜி பாரதம் முழுவதும் அலைந்தபோது, நாட்டின் முழு தரிசனத்தைக் கண்டார். இமயம் முதல் குமரிமுனை வரையிலான பேரலைச்சல் அது. டிச. 1892 ல் அவரது அலைச்சல் இந்திய கண்டத்தின் தென்முனையான குமரியில் முடிவுக்கு வந்தது. கன்னியாகுமரியில், அம்மன் சந்நதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். கடலின் நடுவில் இருந்த பாறை (ஸ்ரீபாத பாறை) ஒன்றின் மீதமர்ந்து தன் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்கினார்.
கன்னியாகுமரி:
பாரத தேசத்தின் இறுதிப்பகுதி. முடிவான பாறை மீது ஒரு முதல் தொடக்கம். தியானத்தில் ஆழ்ந்தவருக்கு பாரதத்தின் மீது அக்கறையும், வருங்காலம் குறித்த கவலையும் ஒருங்கே எழுந்தன. ஒரு தீர்க்கதரிசியின் பார்வையின் தீட்சண்யத்தில் சிகரமாகத் திகழ்ந்த பாரதத்தின் பெருமை எவ்வாறு அதள பாதாளத்தில் வீழ்ந்து மறைந்தது என்பது புரிந்தது. இருளில் ஒரு விடிவெள்ளி முளைத்தது. மனதில் ஒரு உத்வேகம் மிகுந்தந்து.
ஆம்! தான் அமெரிக்கா செல்வது அவசியம். தன் ஞானத்தால் அமெரிக்கரை வென்று பொருளீட்ட வேண்டும். மீண்டும் இந்திய நாட்டிற்கு திரும்பி இங்குள்ள மக்களின் வாழ்வைப் புனரமைக்க வேண்டும். முழுமூச்சாய் முயற்சி; முயற்சி தோற்பின் இறுதி மூச்சு. இதுதான் அவருக்கு ஏற்பட்ட ஞானோதயம். நிர்விகல்ப சமாதியில் ஒரு பரவச நிலை! அப்பர் சுவாமிகளைப் போல ‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என உறுதி பூண்டார். ஆம், கன்னியாகுமரியில் தான் ஒரு ஆன்மீகவாதி தேசியவாதியாக ஒருங்கிணைந்தார். இதன் பின்னால் அவர் தன்னை ஒரு ‘குறும்பாரதம்’ (Condensed India) என்று கூறிக் கொண்டதில் வியப்பேதும் இல்லை. (December 25, 26, 27, 1892)
சேவை ஒரு பாலபாடம்:
1984ம் ஆண்டு நரேந்திரர், பரமஹம்சரைப் பார்க்க தக்ஷிணேசுவரம் வந்திருந்தார். அங்கே மடத்தில் பரமஹம்சர் தன் சீடர்கள் சூழ ஓர் அறையில் அமர்ந்திருந்தார். அப்போது பரமஹம்சர் சில் ஆன்மீக தத்துவங்களை தனது சீடர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். கெளரங்கரின் தாத்பரியத்தை விரிவாகக் கூறத் தொடங்கினார். “இந்த வைணவ மதம் தனது மதப் பற்றாளர்களை மூன்று விஷயங்கள் கடைபிடிக்க நிர்பந்திக்கிறது. ஒன்று பகவான் நாமாவளியை உச்சரித்து அனுபவிக்க சொல்கிறது. இரண்டாவதாக, அனைத்து உயிரினங்களின் மீதும் கருணையுடன் இருக்கச் சொல்கிறது. மூன்றாவது, வைணவத் தொண்டனுக்கு செய்யும் சேவை அந்த நாராயணனுக்கு செய்யும் சேவை” என்றார்.
ஆனால் “அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்ட வேண்டும்” என்ற வாக்கியத்தை உச்சரித்ததும், மோன நிலையில் சமாதியாகிவிட்டார். மீண்டும் சுயநினைவு வந்தவுடன், அவர் கூறிய வார்த்தைகள் “உயிரினங்கள் மீது கருணை! முட்டாள்! மண்ணில் தவழும் அற்பப் புழுவான உன்னால் எப்படி அடுத்தவர் மீது கருணை காட்ட முடியும்? நிச்சயம் முடியாது. கருணை என்ன கருணை? தொண்டு செய்! இறைவனின் சொரூபமாய் விளங்கும் சக மனிதனுக்குச் செய்யும் தொண்டு அந்த ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு”.
பரமஹம்சரின் உள் ஒளியாய் வெளியில் தெறித்த வார்த்தைகளை சுற்றிலும் இருந்த சீடர்கள் காதில் வாங்கிக் கொண்டாலும், அந்த உண்மையான அர்த்தத்தை விவேகானந்தர் ஒருவரே உள்வாங்கிக் கொண்டார். அறையை விட்டு வெளியே வந்த விவேகானந்தர் இவ்வாறு கூறுகிறார்:
“குருவின் வார்த்தைகளில் எத்தனை சிறந்ததொரு ஒளி? வேதாந்த சாரத்திற்கு ஈடாக பக்தியை என்ன அழகாக சமன்படுத்தினார். வறட்டு வேதாந்தம் இல்லை. அதீத ஆன்மீகம் இல்லை. என்ன ஒரு அற்புதமும் இயல்பும் நிறைந்த இனிய சித்தாந்தம்! வேதாந்தம் என்பது ஏதோ வெளியில் சுற்றித் திரியும் சந்நியாசிகளுக்கு மட்டுமன்று. இல்லறத்திலும் கடைபிடிக்கலாம். வேதாந்தத்தின் சாரம் நமது அன்றாட அலுவல்களுடன் ஒன்று கலந்தது. எந்த நிலையில் இருந்தாலும் ஆண்டவன் தான் தன்னையும் படைத்து மனித உயிர்களையும் படைத்தவன் என்ற தெளிவு ஒரு மனிதனுக்கு இருந்தால் போதும் . இறைவன் எங்கும் நிறைந்தவன். அதே நேரம் காட்சிக்கு அப்பாற்பட்டவன். அவனே அனைத்துப் பொருள்களாய் விளங்குபவன். நமது பிரேமையின், பக்தியின் , கருணையின் வடிவம். இருப்பினும் அவன் அவற்றிற்கு எல்லாம் அப்பாற்பட்டவன். இறைவன் சர்வ வியாபி என்ற தெளிவு ஏற்பட்டுவிட்டால் மற்ற உயிரினங்கள் மீது அசூயையோ, பச்சாதாபமோ ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி ஓர் ஆன்மீக மலர்ச்சி ஏற்பட்டுவிட்டால், இருப்பு … அறிவு.. பேரின்பம் இவை அனைத்துமே -இறைத் தோற்றமாய் விளங்கும் சக மானிட சேவைக்காக என்பது விளங்கிவிடும். பின் அவனுக்கு ஓர் இலட்சிய இலக்கை அடைவது எளிதாகிவிடும். இறைவனின் சித்தம் இதுவெனில், என்றாவது ஒரு நாள் இப்பெரிய மானுட சமூகத்திற்கு இதை நான் தெளிவாகப் புரியவைப்பேன். இத்தகைய ஆன்ம மலர்ச்சியை நான் உலகின் பொதுவுடைமை ஆக்குவேன். இந்த ஆன்ம மலர்ச்சி, அறிவாளி- முட்டாள் , செல்வந்தன்- பரம ஏழை , அந்தணன்- பறையன் அனைவருக்கும் பொதுவானது”.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அன்பும் அக்கறையும்:
ராணி ராசாமணியின் மருமகனான மதுரானந்தா பிஸ்வாஸ் என்பவரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர். ராணியின் எண்ணற்ற சொத்துக்களை நிர்வாகமும் செய்து வந்தார். 1968ம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத்திரையை ஏற்பாடு செய்தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங்குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராமகிருஷ்ணர் அளவுக்கதிகமான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.
அவர் மதுரிடம், “ ராணி மாதாவின் அனைத்துச் சொத்துக்களுக்கும் நீங்கள் தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒருவேளைச் சோறும், தலைக்கு சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார். மதுரோ “பகவானே! இந்த யாத்திரைக்கு பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக் கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண்டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்துவிடும்” என்றார்.
மதூரின் மறுமொழியைச் செவியுற்ற பரமஹம்சர் வேதனையில் கதறினார்: “மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கிறேன். இவர்களுக்குக் கவலைப்பட எவருமில்லை. நான் இவர்களை விட்டு நீங்குவதாக இல்லை”.
மதுர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடைகளை கல்கத்தாவிலிருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வாரணாசி நோக்கித் தொடர்ந்தது.
குருவின் பாதையில் சீடன்:
சுவாமிஜி மேலைநாடு சென்று திரும்பிய பின்பு பேலூர் மடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. சுவாமி விஞ்ஞானானந்தா என்பவர் சுவாமிஜியின் அடுத்த அறையில் தங்கியிருந்தார். இவர் சுவாமிஜியின் சகோதர சீடர் ஆவார். ஒரு நாள் சுவாமிஜி அவரது அறையில் வாய்விட்டுக் கதறிக் கொண்டிருந்தார். சுவாமிஜியிடம் விஞ்ஞானானந்தா, “உடல் நிலை சரியில்லையா?” என்று வினவினார்.
அதற்கு, “நீ உறங்கிக் கொண்டிருந்தாய் போலும். எனக்கு உடல்நலக் குறைவு ஏதுமில்லை. என் நாடு தாழ்வுற்றுக் கிடக்கும் போது என்னால் உறங்கிக் கொண்டிருக்க முடியாது. நமது மக்கள் நலம் பெற்று வாழும் காலத்திற்காக நான் பரமஹம்சரிடம் கதறி முறையிட்டுக் கொண்டிருந்தேன்”’ என்றார், சுவாமிஜி. பாரத மக்களின் மேல் கொண்ட கரிசனத்தின் மொத்த உருவமாக சுவாமிஜி விளங்கினார்.
சுவாமிஜியின் அறைகூவல்:
பாரதம் முழுவதும் சென்று வந்த சுவாமி விவேகானந்தர், தான் சென்ற இடங்களில் எல்லாம் – குறிப்பாக இளைஞர்களிடம், ஏழைகளுக்கு தொண்டு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் கூறினார்:
”ஏழைகளுக்கு செய்யும் சேவையே உங்கள் பக்தியின், வழிபாட்டின் உட்பொருளாகும். மக்கள் சேவையே மகேசன் சேவையாகும். ஏழைகளிடமும், நலிந்தோரிடமும், நோயாளிகளிடமும் எவன் ஒருவன் ஈசுவர தரிசனத்தை காண்கிறானோ, அவன் தான் உண்மையான பக்தன். சிலைகளைப் பூஜிப்பது உண்மையான பக்தி இல்லை. ஜாதி, இனம், குலம் என்ற பேதம் பாராது எவனொருவன் ஏழைகளுக்குத் தொண்டு செய்கிறானோ, அவனே உண்மையான பக்தன். சிவபெருமான் அவன் பக்தியில் மட்டும் தான் மனம் மகிழ்கிறார். வெறும் உதட்டளவு மந்திரத்தால் இறைவன் மகிழ்ச்சியடைய மாட்டான்’”. (Complete works of Swami Vivekananda – Volume 3, Page: 141- 142)
“ஏழைகளுக்கு தொண்டு செய்யும் உரிமை மட்டும் தான் நமக்கு உண்டே அன்றி, உதவி செய்ய இல்லை. உதவி என்ற வார்த்தையை உங்கள் மனதிலிருந்து தூக்கிக் கடாசுங்கள். உதவுதல் உங்களால் முடியாது. உதவி என்பது இறைவனைப் பழிப்பதாகும். அவனுடைய விருப்பத்தினால் தான் நாம் இங்கே இருக்கிறோம். அப்படி எனில் அவனுக்கு எவ்வாறு உதவ முடியும்? ஆராதனை செய்யுங்கள், ஒரு நாய்க்கு ஒரு பிடி சோறு அளிக்கும் போது, கடவுள் வடிவில் நீங்கள் அந்த நாயை ஆராதனை செய்கிறீர்கள். அவனே அனைத்தும்; அனைத்திலும் அவனே”. (Complete works of Swami Vivekananda – Volume 5, Page: 246)
சுவாமிஜி ‘தரித்திர நாராயணன்’ என்ற புதிய சொல்லை நெய்தவர். அவர் சொல்கிறார்: “உடல், பொருள், புத்தி- மூன்றையும் உலக நன்மைக்கு அர்ப்பணம் செய்யுங்கள். மாத்ருதேவோ பவ, பித்ரு தேவோ பவ என்பது வேத வாக்கியம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களாவர். ஆனால் நான் சொல்வேன் ‘தரித்திர தேவோ பவ, மூர்க்க தேவோ பவ’. ஏழை, படிப்பறிவற்றவன், அப்பாவி, துன்புற்றவன் ஆகியோரே உனது கடவுளாக இருக்கட்டும். இவர்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். இதுவே உலகின் சிறந்த சமய நெறியாகும்”
(Complete works of Swami Vivekananda – Volume 6, Page: 288)
“ஒரே வார்த்தையில் சொல்வோமென்றால், வேதாந்தத்தின் லட்சியம், தான் யார் என்பதை மனிதன் அறிவது தான். உன்னால், கடவுளின் மறு உருவமான சக மனிதனை வணங்க முடியாவிட்டால், உன்னால் எவ்வாறு கடவுளை வணங்க முடியும்?” (Complete works of Swami Vivekananda – Volume 2, Page: 325-326 )
நமது ஒரே தெய்வம் பாரத அன்னையே: “அடிமை என்ற நினைப்பைத் தூக்கி எறியுங்கள்! உன்னதமான பாரத அன்னையே நமது ஆதார ஸ்ருதி. மற்ற பயனற்ற கடவுள்களை உங்கள் மனதிலிருந்து களையுங்கள். இவளே நாம் வணங்க வேண்டிய கடவுள். நம் இனமே நம் கடவுள். நாம் வணங்க வேண்டிய முழு முதல் கடவுள் நம் இந்திய மக்கள் தான். இவர்களை வணங்க வேண்டும். இவர்களை மறுக்கக் கூடாது. இவர்கள் மீது பொறாமை கொள்ளவும் கூடாது”.
ஏழைகளை நேசியுங்கள்: “வறுமையினாலும், மதத்தினாலும், அடக்குமுறையாலும் நலிவுற்றிருக்கும் பல கோடி இந்தியர்களுக்காக நாம் அல்லும் பகலும் பிரார்த்தனை செய்வோம். நான் ஏழைகளை நேசிக்கிறேன். அவர்கள் மீது அக்கறை செலுத்த யார் இருக்கிறார்கள்? இருபது கோடி மக்களின் அறியாமைக்கும் வறுமைக்கும் மனம் இரங்க யார் இருக்கிறார்கள்? இவர்களே உங்கள் கடவுள்கள். அவர்களுக்காகச் சிந்தியுங்கள்! அவர்களுக்காகப் பணியாற்றுங்கள்! அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்! சர்வவல்லமை பொருந்திய இறைவன் உங்களுக்கு வழிகாட்டுவார். எவன் இதயம் ஏழைகளின் நிலைக்காக குருதி சிந்துகிறதோ அவனே மகாத்மா. ஏனையோர் துராத்மாவே ஆவர். என் இதயம் உணர்ச்சிகளால் அலைமோதுகிறது. எவர்களின் மூலம் கல்வி பெற்றார்களோ அந்த ஏழைகளைப் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள். அவ்வாறு எண்ணாத ஒவ்வொரு மனிதனும் ஒரு நம்பிக்கைத் துரோகியே. ஏழையின் முதுகில் சவாரி செய்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒருவனை நான் துஷ்டன் என்றே அழைப்பேன்”.
சேவையும்:ஆன்மிகமும்: “ஆலயங்கள் பல இருக்கலாம். ஆலயங்களின் ஆண்டவன் ஆராதிக்கப்படலாம். எல்லா ஆலயங்களையும் விட சிறந்த ஆலயம் ஒன்று உண்டு- நமது உடல். ஆண்டவன் குடி கொண்டுள்ள ஒவ்வொரு சகமனிதனையும் தொழாமல் தோன்றாக் கடவுளை வணங்குவதால் என்ன பயன்?” “வாழும் தெய்வங்களான மனிதர்களுக்கு சேவை செய்யுங்கள். பார்வையற்றவனாகவோ, முடமாகவோ, ஏழையாகவோ இறைவன் உங்கள் முன்னால் தோன்றலாம். அவரை பூஜை செய்ய இதுவே அரிய வாய்ப்பு.” உங்கள் நேயத்தையும் , அன்பையும் கருணையையும் வெளிப்படுத்த இறைவன் அளித்த சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறுங்கள். அதனால் நீங்கள் முழுமை அடைவீர்கள்’’. “கைகள் கொடுக்கப் பிறந்தவை. பட்டினியில் வாடினாலும் உங்களிடம் உள்ள ஒரு பிடி சோற்றையும் கொடுப்பதற்கே வைத்திருங்கள். உங்களை மறுத்து அடுத்தவருக்குக் கொடுக்கும் அந்தக் கணத்தில் நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள்; பூரணத்துவம் அடைகிறீர்கள். பிறகென்ன? நீங்கள் தான் கடவுள்”. “சாத்திரங்கள் இதைத் தான் சொல்கின்றன- பிறர்க்கு செய்யும் சேவையே ஜீவன் முக்தி”. “எல்ல மதங்களும், எல்லா ஆன்மீக வழிகளும் ஆத்ம ஞானத்தில் முடிய வேண்டும். மற்ற மனிதர்களுக்குத் தொண்டாற்றும்போது அந்தத் தொண்டின் மூலம் மனம் தூய்மை பெறுகிறது. சக மனிதர்களை நாமாகவே பார்க்கும் பொழுது கிடைக்கும் பூரணத்துவத்தை விடவா, தன்னை அறிதல் மூலம் கிடைத்துவிடப் போகிறது?”
சேவையும் தியாகமும்: “பாரதத்தின் லட்சியங்கள் துறவும் தொண்டுமே. பாரதத்தை இந்த லட்சியங்களில் மூழ்கடியுங்கள். என்ன நடக்க வேண்டுமோ, அது தானாக வந்துசேரும்”. “பாரதம் விலங்குகளின் பலி கேட்கவில்லை. இளைஞர்களின் தியாகமாகிய பலியை கேட்கிறது. சுயநலமற்ற எத்தனை மனிதர்கள் சாவுடன் போராடி புதியதோர் உலகைப் படைக்கப் போராடுகிறார்கள்? பல நூற்றாண்டுகளாக நமது மூதாதையர்கள் அடக்குமுறையில் சிக்கித் தவிக்கும் ஏழை, எளிய நலிந்த மக்களின் மேம்பாட்டிற்காகவும் உணவிற்காகவும் இன்னுயிர் கொடுத்துப் போராடும் மனிதர்கள் எத்தனை பேர்?”
வேலைக்கு ஆட்கள் தேவை: “இளைய பாரதத்தின் மீது எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது. நான் எண்ணியுள்ள உழைப்பாளிகள் அவர்களிடமிருந்து தான் உதிப்பார்கள். சீறிய சிங்கமெனப் புறப்பட்டு அவர்கள் என் பணியை முழுவதும் முடிப்பார்கள். நான் திட்டமிட்டுவிட்டேன். என் வாழ்வை நான் அவர்களுக்காக அர்ப்பணம் செய்யப் போகிறேன்”. “என் திட்டம் பாரதம் முழுவதும் நிறுவனங்களைத் தோற்றுவிப்பது. அவை இளைஞர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக விளங்கும். அனைத்தும் தயார். எனக்குத் தேவை வலிமையும், உத்வேகமும், முடியும் என்ற நம்பிக்கையும் உடைய இளைஞர்களே”.
பணிக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்: “சின்னஞ்சிறு வலையிலிருந்து வெளியே வாருங்கள். மற்ற தேசங்கள் எவ்வாறு பீடு நடை போடுகின்றன எனப் பாருங்கள். மனிதரை நேசிப்பவரா நீங்கள்? உங்கள் தாய்த் திருநாட்டை நேசிப்பவரா நீங்கள்? அப்படி எனில், என்னிடம் வாருங்கள். நாம் உயர்ந்த, உன்னத லட்சியங்களுக்காகப் போராடுவோம். பின் நோக்காதீர்கள். உங்கள் சொந்த பந்தங்கள் கதறினாலும், பின் நோக்காதீர்கள். முன்னால் நிமிர்ந்து நேர்படப் பாருங்கள்”. “சாவது நிஜமே. ஆனால் லட்சியத்திற்காக சாதல் நன்று. வாழ்வின் உன்னத லட்சியத்திற்கு உயிரையும் விடவும் ஆயத்தமாயிருங்கள். வீட்டிற்கு வீடு இந்த லட்சியத்தைக் கொண்டு சேருங்கள். அதனால் நீங்கள் பயனடைவீர்கள்; உங்கள் நாடு பயனடையும். ஆனால் இவை ஏதுமின்றி வீணில் நாட்களைக் கழிப்போரைக் காணுந்தோறும் என் மனம் வேதனைப்படுகிறது. ஆயத்தமாயிருங்கள். இந்த உன்னதமான பணிக்கு ஆயத்தமாயிருங்கள்”. “நம்புங்கள்! நம்புங்கள்! தீர்ப்பு வந்துவிட்டது. இறைவனின் ஆணை கிடைத்துவிட்டது. இந்தியா விழித்தெழ வேண்டும். ஏழைகள் மகிழ்வுற வேண்டும்”.
துறவியின் அறைகூவல்:

“ஆனந்தம் கொள்ளுங்கள், நீங்கள் இறைவனின் கைக்கருவிகள் என்று ஆனந்தம் கொள்ளுங்கள்”
“விழிமின்! எழுமின்! இலக்கை எட்டும் வரை அயராது செல்மின்”.
– இதுவே சுவாமி விவேகானந்தரின் உள்ளக் கிடக்கையாகும். ஏழைகளின் தாழ்வுற்ற நிலைக்கு வருந்திய, நேயமும் அக்கறையும் கொண்ட ஒரு தேசபக்தரின் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து மலர்ந்த சொற்கள் இவை. நமது இளைஞர்களையும் மகளிரையும், சோம்பல் ஒழித்து நமது ஏழை இந்தியனின் நிலையைப் போக்க வருமாறு அவர் அறைகூவல் விடுத்தார்.
‘ஆத்மனோ மோக்ஷர்தம், ஜகத் ஹிதயச்சே’ என்பதே சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடாலய சந்நியாசிகளுக்குப் போதித்தது. ஏழை மக்களின் மேன்மைக்குத் தொண்டு செய்ய வந்தவர்களைத் தூண்டியதுடன், இந்தப் பணிக்கு தாமே ஒரு அற்புதமான முன்னுதாரணமாகவும் அவர் செயல்பட்டார்.
நாம் சுவாமி விவேகானந்தரின் ஆசிகளுடன், அவரது எண்ணப்படி – நமது தாய்த் திருநாட்டைப் புனரமைத்து, முன்பிருந்த மகோன்னதமான புகழின் உச்சிக்கு தேசத்தை உயர்த்தப் பாடுபடுவோமாக!
பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும்!
- தமிழில்: இரா.சத்யப்பிரியன்
$$$