மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

-அரவிந்தன் நீலகண்டன்

தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர்.  ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...

ஆண்டு 1872. காந்திக்கு வயது மூன்று. ராபர்ட் நைட் எனும் பிரிட்டிஷ் அதிகாரி எழுதினார்:

நம்முடைய அறுதியான நம்பிக்கை என்னவென்றால் இந்தியா தன்னுடைய வீழ்ச்சிக்கு காரணமான தன்னுடய பொய்யான மதத்தை இழந்து கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்ளும் வரை அதற்கு நாம் சுயராஜ்ஜியத்தை அளிக்க முடியாது.

ஒரு விதத்தில் காந்தியின் விடுதலைப் போராட்டமும் மதத்தில்தான் தொடங்கியது. இங்கிலாந்தில் காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் அவர் கிறிஸ்தவராக மதம் மாற பெரும் அழுத்தத்துக்கு உள்ளானார். அவரது அன்னை அவருக்கு அளித்த வைணவ மாலை ஒன்றை அவர் கழற்றிவிட வேண்டும் என்றும் ஒரு பண்பட்ட மனிதனுக்கு அத்தகைய மூடநம்பிக்கை அழகல்ல என்றும் ஒரு மிஷனரி கூறியபோது அவர் பெரும் மனவருத்தம் அடைந்தார். அந்தக் காலகட்டத்தில் அவருக்கு ஹிந்து தர்மத்தில் வேரூன்றி நிற்க பெரும் வலிமை அளித்தவர் ராஜ்சந்திரா என்கிற இளைஞர். 

ஜைனரான இவர் காந்தியிடம் சனாதன தர்மத்தின் பெருமையை விளக்கினார். பின்னாட்களின் காந்தியின் வாழ்க்கை ராஜ்சந்திராவின் வாழ்க்கையையே பிரதி எடுத்தது. 1900-இல் தம் இளவயதில் ராஜ்சந்திரா இறந்துவிட்டார். உண்மை என்பது ஒற்றைத்தன்மை கொண்டது அல்ல என்பதே மேற்கத்தியப் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கிய கிறிஸ்தவத்துக்கும் இந்தியப் பண்பாட்டின் அடிநாதமாக விளங்கும் ஹிந்து தருமத்துக்குமான அடிப்படை வேறுபாடு என்பதை காந்தி உணர்ந்துகொண்டார். ஆனால் இதனை வெறும் தத்துவமாக உணராமல், ஒவ்வொரு வாழ்க்கை வெளிப்பாட்டிலும் அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர் ராஜ்சந்திராவிடமே கண்டடைந்தார். பிரிட்டனில் இளைஞனாக கிறிஸ்தவ மிஷனரிகள் “நீ ஏன் இன்னும் ஹிந்துவாக இருக்கிறாய்?” என கேட்டதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பெரும் மன வருத்ததுக்குள்ளான காந்தி பின்னாட்களில் எழுதினார்:

ஹிந்து தர்மமே மதங்கள் அனைத்திலும் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம். சித்தாந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து ஹிந்து தர்மம் தரும் சுதந்திரம் சுய வெளிப்பாட்டுக்கான மிகப் பெரிய வெளியை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. புறந்தள்ளும் தன்மை கொண்டதாக இல்லாத ஒரு தருமம் ஆனதால், ஹிந்து தருமம் பிற மதங்களை மதிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் நல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளவும் உட்கொள்ளவும் வழி வகுக்கிறது. அஹிம்சை என்பது எல்லா மதங்களிலும் உள்ளதுதான். ஆனால் ஹிந்து தர்மத்திலேயே அது அதன் மிகச் சிறந்த விதத்தில் வெளிப்படுகிறது. ஹிந்து தர்மம் மானுடம் மட்டுமல்லாது அனைத்து உயிரும் ஒன்று எனும் ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துகிறது.

சூழலியல் சிந்தனை வட்டங்களில் இன்றைக்கு காந்தியக் கருத்துகளுக்கு பெரும் மதிப்பு உண்டு. பல சூழலியல் சிந்தனைகளின் முன்னோடித்தன்மையை காந்தியில் காணலாம். இதற்கு ஒரு முக்கிய காரணம் காந்தியின் உண்மையின் பன்மைத்தன்மை குறித்த அறிதலாகும். இந்த அறிதல் அவருக்கு ஆபிரகாமிய மதங்களின் ஒற்றைத்தன்மைக்கும் ஹிந்து ஞான மரபின் பன்மைத்தன்மைக்குமான போராட்டத்தைக் குறித்த அடிப்படையான அறிதலிலிருந்தே கிடைத்தது. ஹிந்து சிந்தனையை -ஒற்றைத்தன்மையற்ற பார்வையை- அவர் மானுடத்தின் சமுதாயப் பிரச்னைகளுக்குப் பயன்படுத்தினார். இதனால் கிடைத்த சாத்தியக்கூறுகளின் விதைகள் இன்னும் காந்திய சிந்தனையில் புதைந்து கிடக்கின்றன. அதனால், பணபலமும் அதிகாரபலமும் இல்லாமல் தர்மத்தை மட்டுமே நம்பிப் போராடும் எந்த மக்கள் கூட்டத்துக்கும் அவை மிகச் சிறந்த ஆயுதங்களாக உதவக் கூடியவை. இந்த விதத்தில் இன்றைய ஹிந்து சமுதாயத்துக்கு அவை இன்றியமையாதவை ஆகும்.

சூழலியல் சிந்தனைக்கான காந்தியப் பங்களிப்பைக் குறித்து பேசும் எவரும் அவரது நகர்ப்புற நாகரிகத்துக்கான எதிர்ப்பு, இயந்திரங்களுக்கான அவரது எதிர்ப்பு ஆகியவற்றை மறக்காமல் குறிப்பிடுவார்கள். மேற்கத்தியச் சூழலில் தொழில் புரட்சியின் காலகட்டத்தில் ஏற்பட்ட இயந்திர வெறுப்பு, இயற்கை சார்ந்த வாழ்க்கைக்கான உடோப்பிய கனவுகள் ஆகியவற்றுடன் காந்தியின் இயந்திர வெறுப்பும் கிராமியக் குடியரசுக்கான கனவும் இணைத்துப் பேசப்படும். 1904 களில் தென்னாப்பிரிக்காவில் டர்பன் அருகே காந்தி அமைத்த ஆசிரமம் இதற்கான தொடக்கப்புள்ளியாகக் கருதப்படும். தென்னாப்பிரிக்காவில் காந்தி, டால்ஸ்டாயின் போதனைகளால் பெரிதும் கவரப்பட்டிருந்ததைக் காண முடியும். ஆனால் காந்தி இந்திய பாரம்பரிய ஆன்மிக மரபை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றச் செய்த முயற்சியின் வெளிப்பாடே அவரது டால்ஸ்டாய் பண்ணை. இந்தியா வந்து அவர் மேற்கொண்ட பெரும் இந்தியப் பயணத்திலிருந்தே அவரது சமுதாய- சூழலியக் கோட்பாடுகளின் பரிணாமத்தை நாம் முழுமையாகக் காண முடியும். காந்தி அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் முன்னேற்றத்தையும் மறுக்கவில்லை என்பதையும், ஒரு பழமையான வாழ்க்கைக்கு நம் தேசத்தை அழைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை என்பதையும், நாம் அவரது சிந்தனையோட்டத்தில் காண முடியும்.

காந்தி பாரம்பரியத்தின் வலிமைகளைக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். மேற்கத்திய முன்னேற்றமே முன்னேற்றத்துக்கான ஒரே மாதிரி என்பதை அவர் மறுத்தார். பொருளாதார, சுகாதார, ஆன்மிக மேம்பாட்டை மாற்றுவழிகளில் அடைய முடியும் என்பதை அவர் திட்டவட்டமாக உரைத்தார். உதாரணமாக பசுப் பாதுகாப்பு குறித்து அவர் பேசும் போது, இந்தியாவெங்கும் மத நிறுவனங்களால் பாரம்பரியமாக நிர்வகிக்கப்படும் பசுக்களின் சரணாலயங்கள் (பசு மடங்கள்) கால்நடை ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் செயல்பட வேண்டும் எனக் கோரினார். இதன்மூலம் இந்தியாவின் பால் உற்பத்தியை அபரிமிதமாக அபிவிருத்தி செய்ய முடியுமென அவர் கருதினார். காந்திய சுதேசியின் ஒரு முக்கிய கோட்பாடாக அவர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தினார். ராட்டை ஒரு குவித்தன்மையற்ற தொழில்நுட்பத்தின் குறியீடாக அமைந்தது. அந்த ராட்டையின் செயல்திறமையை மேம்படுத்தும் மாதிரிகளுக்கான போட்டிகள் அவரால் நடத்தப்பட்டன. மில் துணிகள் இந்த தேசத்தின் இயற்கை வளம், தொழிலாளர்நலம் ஆகியவற்றின் மீது செலுத்தப்பட்ட காலனிய ஆக்கிரமிப்பு என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டால் அவரது ராட்டை எத்தகைய ஒரு தொழில்நுட்ப எதிர்ப்புச் சின்னமாக விளங்கியது என்பது புரியும். சாண எரிவாயு, சூரிய ஒளி தொழில்நுட்பம் ஆகியவை காந்தியின் கனவுகளின் தொழில்நுட்ப வெளிப்பாடாகும்.

ஜேம்ஸ் லவ்லாக் இன்று ஒரு முக்கியமான உயிரியலாளராகக் கருதப்படுபவர். இந்த உலகின் புவியியல் மற்றும் உயிரியியல் செயல்பாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து முழுமையான ஒரு அதி- உயிரித்தன்மையுடன் செயல்படுவதை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தார். இது Gaia என அழைக்கப்படுகிறது. இக்கருதுகோள் பலத்த சர்ச்சைக்குள்ளாயிற்று என்ற போதிலும் உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இது ஒரு நல்ல புரிதல் சட்டகமாக இன்று விளங்குகிறது. இந்தக் கோட்பாட்டினை விளக்கும் அண்மை நூலில் லவ்லாக் இந்த புவி எனும் அதி-உயிரி இன்று எப்படி நோயடைந்திருக்கிறது என்பதையும், அந்த நோய்க்குக் காரணம் மானுடத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள் என்பதையும், இதனால் பல இயற்கைப் பேரிடர்கள் மானுடத்துக்கு ஏற்படும் என்பதையும் விளக்குகிறார். இதற்கான தீர்வில் நாம் என்ன பங்களிக்க முடியும் எனும் கேள்விக்கு அவர் கூறுகிறார்:

நமது பங்கு நம் வாழ்க்கையின் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்துவதே ஆகும். முழுக்க முழுக்க மானுட விஷயங்களில் அவ்வாறு வாழ்வது எப்படி என்பதை காந்தி நமக்குக் காட்டினார். நமது நவீன சூழலுக்கான காந்திய மாதிரிகள் ஆழ்-சூழலியல் இயக்கத்திலிருந்து வரக்கூடும்.

‘நியூ சயிண்டிஸ்ட்’ பத்திரிகை ஜேம்ஸ் லவ்லாக்கின் கோட்பாட்டை காந்தியின் தத்துவங்களுடன் ஒப்பிட்டது. அரசியலில் காந்தி கண்டடைந்ததைப் போலவே ஜேம்ஸ் லவ்லாக்கும் சூழலியல் உண்மைகளைக் கண்டடைந்திருப்பதாக அப்பத்திரிகை எழுதியது.

சூழலியல் மட்டுமல்ல, வரலாறு, மானுடவியல் ஆகியவற்றிலும் காந்தியின் உள்ளுணர்வு சார்ந்த சில கருத்தாக்கங்கள் -அன்றைய காலனிய சூழலில் அறிவியலுக்கு பொருந்தாதவை போலத் தெரிந்தவை- இன்று மிகப் பெரிய மாற்று உண்மைகளை நமக்குக் காட்டும் ஒளிவிளக்குகளாகியுள்ளன. உதாரணமாக, இந்தியாவின் கல்வியறிவு வெள்ளையரின் காலனியாதிக்கத்துக்கு முன்னால் எவ்வாறு இருந்தது என்பதனைக் குறித்த தரம்பாலின் விரிவான ஆராய்ச்சி, இங்கிலாந்தில் காலனிய ஆட்சியாளர்களுக்கு காந்தி அளித்த பதிலின் குறிப்புகளிலிருந்தே தொடங்குகிறது.

வனவாசிகளுக்கும் ஏனைய ஹிந்து சமுதாயத்துக்குமான மறுக்கவியலாத உறவை காந்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். காலனிய மக்கட்தொகை அதிகாரிகளால் வேண்டுமென்றே மறுக்கப்பட்டு வந்த தொடர்பு அது. பின்னாட்களில் இந்தியா விடுதலை அடைந்தும் கூட ஆரிய இனவாதக் கோட்பாட்டு அறிதலின் அடிப்படையில் அந்தப் பிளவு பெரிதுபடுத்தப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய மரபணுவியல் கோட்பாடுகளும். சமூகவியல் ஆராய்ச்சிகளும் காந்தியின் புரிதலின் சரித்தன்மையை உணர்த்துகின்றன.

சமுதாயத்தின் அடிப்படை அலகாகவும் சமுதாயத்தின் ஆகச்சிறந்த மாதிரியாகவும் காந்தி முன்வைத்த மற்றொரு உருவகம் பேராழி வட்டம் (Oceanic Circle) என்பதாகும். மேற்கத்திய மனம் எதையும் ஒரு கீழ் மேலான கூம்பு பிரமிடாகவே வகைப்படுத்துகிறது, சமுதாய உறவுகள் முதல் சூழலியல் மாதிரிகள் உளவியல் கருத்தாக்கங்கள் ஆகிய அனைத்துமே பிரமிடுகளாகவே அமைக்கப்படுகின்றன. அடித்தளத்தில் சக்தியற்ற பெரும்பான்மையும், மேலே சக்தி-அதிகாரம்- அதீத அனுபவித்தல் ஆகியவை கொண்ட சிறுபான்மையுமாக அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் அவை. காந்தி இக்கட்டுமானத்தை அடிப்படை அலகாகவும் ஆதார மாதிரியாகவும் கொள்ள மறுத்தார். பாரதப் பண்பாட்டின் உருவகங்களிலும் குறியீடுகளிலிமிருந்து பெறப்பட்ட அவரது பார்வை பின்வருமாறு:

இந்த அமைப்பில் எண்ணற்ற கிராமங்கள் இருக்கும். அவை விரிந்த படி இருக்கும் வட்டங்களாக இருக்குமேயன்றி ஒன்றின் மேல் ஒன்று ஏறுபவையாக இருக்காது. வாழ்க்கை என்பது அடிப்பகுதியால் தாங்கிப் பிடிக்கப்படும் உச்சிக் கூம்பு கொண்ட பிரமிடாக இருக்காது. ஆனால் அது ஒரு பேராழி வட்டமாக அமையும். அதன் மையமாக என்றென்றும் தனிமனிதன் இருப்பான். அவன் அவனைச் சுற்றி அமையும் கிராமத்துக்காகவும் ஒவ்வொரு கிராமமும் அக்கிராமங்களை சுற்றி அமையும் பிற கிராமங்களுக்காகவும் அமையும். இவ்வாறாக அனைத்தும் ஓருயிராக ஆணவத்தால் ஏற்படும் ஆக்கிரமிப்பு இல்லாததாக தன்னடக்கதுடன் பேராழி வட்டத்தின் மகோன்னத்தத்தின் பங்காளிகளாக, அதன் இணைபிரியாத உறுப்புகளாக அமையும்.
அரவிந்தன் நீலகண்டன்

அப்துல் கலாமின் புரா (PURA) இந்த பேராழி வட்டத்தின் தொழில் நுட்ப பரிமாணமே. காந்தியின் இந்த பார்வை அவரது அனைத்துயிரையும் ஒன்றாக காணும் சனாதன ஹிந்துவின் பார்வையே. இன்றைக்கும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வளரும் நாட்டின் சமயமாக விளங்கும் ஹிந்து தருமத்தின் தொடர்ந்த ஜீவிதத்துக்கும், ஆக்கிரமிப்பு ஆங்கார இறையியல்களில் சிக்கித்தவிக்கும் மானுடத்தின் மீட்சிக்கும் காந்தியின் இந்த ஹிந்து தர்ம பார்வையை எல்லா துறைகளிலும் செயல்முறை படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.

$$$

One thought on “மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்

Leave a comment