மகாவித்துவான் சரித்திரம்- 1(24-இ)

-உ.வே.சாமிநாதையர்

முதல் பாகம்

24C. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்- இ

***


திருநாகைக் காரோணப் புராண அரங்கேற்றம்

நாகைப் புராணத்திற் சுந்தரவிடங்கப் படலத்திற்கு மேலே சில பாகம் ஆனவுடன் விபவ வருடம் (1869) தை மாதக் கடைசியில் அத்தலத்திலுள்ளாரால் அரங்கேற்றுவதற்கு அழைக்கப்பெற்று இவர் நாகபட்டினம் சென்றார். மாணவர்கள் முதலியோரும் உடன் சென்றார்கள். பங்குனி மாதம் அரங்கேற்றம் ஆரம்பமாயிற்று. அப் புராணம் இயற்றுவிக்க முயற்சி செய்தவர்களுள் ஒருவரான முற்கூறிய வீரப்ப செட்டியார் முதலிய அன்பர்களுடைய வேண்டுகோளின்படி முத்தி மண்டபத்தில் அப்புராணத்தை இவர் அரங்கேற்றத் தொடங்கினார்.

அந்நகரில் அப்போதிருந்த கிருஷ்ணஸாமி உபாத்தியாயர் முதலிய தமிழ் வித்துவான்களும், அங்கே ஒரு கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவரும் இவருடைய மாணாக்கருமாகிய புருஷோத்தம நாயுடு என்பவரும் உடனிருந்து அவ்வப்பொழுது வேண்டிய அனுகூலங்களைச் செய்து வந்தார்கள்.

ஒருவருஷகாலம் அந்தப் புராணப்பிரசங்கம் நடைபெற்றது. இடையிடையே சில மாதங்கள் நின்றதுண்டு. பொறாமையுள்ளவர்களாகிய சிலர் இடையிலே ஆட்சேபித்தபொழுது இவருக்குச் சிரமம் கொடாமல் வேதாகமப் பிரமாணங்களோடு தக்க சமாதானங் கூறி உபகரித்தவர் முன்பு தெரிவித்த மகாதேவ சாஸ்திரிகள் முதலியோர்.

ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள்

அரங்கேற்றம் நடைபெற்றுவருகையில், பரமசிவனுடைய ஏற்றத்தை யாவரும் எளிதில் உணரும்படி எங்கும் பிரசங்கித்து வந்தவரும் ஸ்ரீசூத சங்கிதையை ஏழுநாளில் உபந்யஸித்து அதன் பொருளைச் சிவபக்தர்கள் அறியும்படி செய்துவந்தவரும் தமக்குப் பழக்கமுள்ள சிவபக்தர் யாவரையும் ஏகருத்திராட்சதாரணம் செய்து கொள்ளும்படி செய்வித்தவரும் மகாவைத்தியநாத சிவன் முதலியவர்களுடைய மந்திரோபதேச குருவுமாகிய கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் அந்நகர்க்கு வந்திருந்தார்; இவர் புராணம் அரங்கேற்றுவதைக் கேள்வியுற்று உடனே அரங்கேற்றுமிடத்திற்கு வந்தனர்; அவரைக் கண்ட எல்லாரும் உபசரிக்க, அவர் இருந்தார். பிள்ளையவர்கள் அவருடைய வரவை அறிந்து எழுந்து பாராட்டிச் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கியபொழுது அவர் இவரை நோக்கி, “சிவபக்த சிரோமணீ! வித்வத் சிகாமணீ! உங்களைப்போலத் தமிழிற் சிவபுராணங்களையும் சிவஸ்துதிகளையும் நன்றாகச் செய்பவர்கள் இப்பொழுது யார் இருக்கிறார்கள்? நீங்கள் செய்த சூத சங்கிதைப் பாடல்களை அப்பொழுதப்பொழுது மகாவைத்தியநாத சிவனும் திருநெல்வேலி ஐயாஸாமி பிள்ளையும் சொல்லக் கேட்டிருக்கிறேன்; மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. சில சமயங்களில், நான் பிரசங்கம் செய்யுங்காலத்தில் அப்பொழுதப்பொழுது அதிலுள்ள சில பாடல்களை அவர்களையாவது வேறு யாரையாவது கொண்டு சொல்லச் செய்வேன். உங்களைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்தது. இன்று அது ஸ்ரீ காயாரோகணேசுவரர் கிருபையால் நிறைவேறியது. உங்களைப் போன்றவர்களே உலகத்திற்கு உபகாரிகள். நீங்கள் க்ஷேமமாக இருக்க வேண்டும்” என்று பாராட்டி அன்று பிரசங்கம் பூர்த்தியாகும் வரையில் இருந்து கேட்டு மகிழ்ந்துவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.

ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள்

கும்பகோணம் மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக அக்காலத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அப்போது நாகபட்டினத்துக்கு விஜயம் செய்திருந்தார்கள். அந்த மடத்து ஸம்ஸ்கிருத வித்துவான்களால் இவர் அங்கே ஸ்தலபுராணப் பிரசங்கம் செய்வதை ஸ்வாமிகள் அறிந்து இவரைப் பார்க்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டார்கள். அப்பொழுது, இவர் மகாதேவ சாஸ்திரிகளுடன் ஒருநாள் பிற்பகலிற் சென்று தரிசனம் செய்தார். ஸ்வாமிகள் மிகுந்த கருணையுடன் இவருடைய பெருமைகளை அங்கிருந்த கனவான்களுக்கு எடுத்துக் கூறினார்கள். பிரசங்கம் செய்யப்படும் புராணத்திலிருந்து சில பகுதிகளையும் கேட்டுச் சந்தோஷித்தார்கள். அப்பாற் கம்ப ராமாயணத்திலிருந்து ஏதேனும் சொல்ல வேண்டுமென்று ஸ்வாமிகள் கட்டளையிட்டார்கள்; அந் நூலிற் சுவையுள்ள ஒரு பாகத்தை இவர் எடுத்துப் பிரசங்கித்தார். கேட்ட ஸ்வாமிகள் ஆனந்தித்துத் தக்க ஸம்மானம் செய்து இவரை ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.

கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகர்

இவருக்கு இலக்கண விளக்கம் பாடஞ் சொல்லிய கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகர் இவருடைய வேண்டுகோளுக்கு இணங்கிச் சிலநாள் வந்திருந்து புராணப் பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து சென்றார். அவர் வந்திருந்தபொழுது இக்கவிஞர்கோமான் தாம் அவரிடம் பாடங்கேட்ட நன்றியை மறவாமல் மிகவும் மரியாதையாக உபசரித்து யாவருக்கும் அவருடைய பெருமையை எடுத்துக் கூறினார்.

நாகபட்டினத்தில் இருக்கும் பொழுது இக் கவிஞர்பிரானுக்கு வேண்டிய சௌகரியங்கள் முற்கூறிய அப்பாத்துரை முதலியார் முதலியவர்களால் ஒழுங்காகச் செய்யப்பெற்று வந்தன.

திருவாவடுதுறை போய் வந்தது

புராணம் அரங்கேற்றிக்கொண்டு வருகையில் சுக்கில வருடம் (1869) ஆடி மாதம் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் பரிபூரணம் ஆயினாரென்றும், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுக்குப் பெரிய பட்டம் ஆயிற்றென்றும் அறிந்த இவர் இடையில் திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களைத் தரிசித்துக்கொண்டு விடைபெற்று மீண்டும் நாகபட்டினம் வந்தனர்; வந்து அரங்கேற்றிப் புராணத்தைப் பூர்த்தி செய்தார்.

புராணங்கள் அச்சிடப் பெற்றமை

இவர் நாகபட்டினத்தில் இருக்கும்பொழுது, மாயூரத்திலிருந்த அரங்கக்குடி முருகப்பிள்ளையவர்கள் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளையின் உதவியால் மாயூரப் புராணமும், முற்கூறிய அப்பாத்துரை முதலியார் உதவியால் நாகைக் காரோணப் புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய மேற்பார்வையில் சென்னையில் அச்சிடப்பெற்று நிறைவேறின. அரங்கேற்றி முடிவதற்குள்ளாகவே திருநாகைக் காரோணப் புராணம் பதிப்பிக்கப்பட்டது.

நாகைப் புராணம் சிறப்பிக்கப்பெற்றது

புராண அரங்கேற்றம் பூர்த்தியான தினத்தில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப்பெற்று மிக்க சிறப்புடன் ஊர்வலம் செய்யப்பட்டது. அப்பாத்துரை முதலியாரும் அந்நகரத்தாரும் எவ்வளவு உயர்ந்த ஸம்மானங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்து உபசரித்துப் பாராட்டினார்கள்.

பொன்னூசற் பாட்டு முதலியன

இவர் நாகபட்டினத்தில் இருக்கையில் இவரைப் பலவகையாக உபசரித்து ஆதரித்து வந்த அப்பாத்துரை முதலியாருடைய குமாரராகிய தம்பித்துரை முதலியாருக்குக் கல்யாணம் நடைபெற்றது. பிள்ளையவர்கள் கல்யாண காலத்தில் கூட இருப்பதை அவர் ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி மகிழ்ந்தார். அவருடைய பந்துக்களிற் சிலரும் அவரும் இக்கவிஞர் கோமானை, அந்தக் கல்யாணத்திற் பாடுவதற்கேற்றபடி மணமகன் மணமகளாகிய இருவருடைய நல்வாழ்வையுங் கருதிச் சில பாடல்கள் இயற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அப்பாத்துரை முதலியாருடைய தூய அன்பில் இவர் ஈடுபட்டவராதலின் அவருடைய விருப்பத்திற்கிணங்கிப் *17 பொன்னூசல், லாலி, கப்பற்பாட்டு, மங்களம், வாழ்த்து என்பவற்றைப் பாடியளித்தனர். அவற்றை அப்பாத்துரை முதலியாரும் பிறரும் பாடுவதற்குரியாரைக் கொண்டு பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார்கள். ”இப்புலவர் பிரானாற் பாடப்பெறும் பாக்கியம் இந்தத் தம்பதிகளுக்குக் கிடைத்தது இவர்கள் முற்பிறப்பிற் செய்த புண்ணியப் பயனே” என்று சொல்லி யாவரும் பாராட்டினர்.

மாயூரத்துக்குத் திரும்பியது

இவர் நாகபட்டினத்தில் ஒருவருஷ காலத்திற்கு மேல் இருந்து வந்தார். அப்பால், பிரமோதூத வருடம் (1870) ஆரம்பத்தில் மாயூரத்திற்கு வந்து வாசஞ் செய்யலானார்.

திருநாகைக் காரோணப் புராண அமைப்பு

இப்புலவர் கோமான் இயற்றிய புராணக் காப்பியங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம். இவர் மாணவர்களிற் பலர் இப்புராணத்தை இவர்பாற் பாடங் கேட்டனர். மிகவும் உழைத்து எல்லா அழகுகளும் செறியும் வண்ணம் இயற்றப்பெற்றதாதலின் இந்நூலினிடத்து இக் கவிஞருக்கே ஒரு தனி அன்பு இருந்து வந்தது. சிவஞான முனிவர் கச்சியப்ப முனிவர் என்பவர்களுடைய நூல்களில் இவருக்குள்ள அனுபவ முதிர்ச்சியும், கவி இயற்றுவதில் இவருக்குள்ள பேராற்றலும், வியக்கத்தகும் கற்பனா சக்தியும் இந்நூலின்கண் நன்றாக வெளிப்படும். இவர் செய்த நூல்களுள் ஒவ்வொன்றிற் சில சில அமைப்புக்கள் சிறப்பெய்தி விளங்கும். இந்நூலிலோ ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையிற் சிறப்புற்று விளங்கும்.

“உழைகுலாம் நயனத் தார்மாட்
டொன்றொன்றே கருதற் கொத்த
தழகெலாம் ஒருங்கே கண்டால்
ஆரதை யாற்ற வல்லார்”

-என்ற கம்ப ராமாயணச் செய்யுள் இங்கே ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ்க் காப்பியங்களிற் பரந்து கிடக்கும் பலவகை அணி நயங்களும் இதன் கண்ணே ஒவ்வோரிடத்தில் அமைந்து இலங்கும். சொல்லணி, பொருளணி, தொடை நயம், பொருட் சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்திச் சிறப்பு, சிவஸ்தலச் சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் இதன்கண் நிரம்பியுள்ளன. தமிழ்க் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய்ப் பலவகையிலும் நயம் சிறந்து, சுவைப் பிழம்பாக விளங்கும் இக் காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருத்தல் வேண்டும். பல பழைய புலவர்கள் வாக்கினை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தாற் போதும். அந்த அந்தப் புலவர்களின் நடைநயமும் பொருளின்பமும் இடையிடையே இப்புராணத்தில் விளங்கித் தோன்றும். இந்நூலைப் பற்றி எவ்வளவு பக்கம் எழுதினாலும் இதன் பெருமையை ஆராய்ந்து கூறிவிட்டதாக ஆகாது. யார் யாருக்கு எந்த எந்த நயங்களில் விருப்பமோ அந்த அந்த நயங்களை இதன்பாற் கண்டு இன்புறலாம். ஸ்தாலீபுலாக நியாயம் பற்றிச் சில செய்யுட்கள் பின்னே காட்டப்படுகின்றன:

தட்சிணாமூர்த்தி துதி
விருத்தம்

“பதிபசு பாச மென்னப் படுமொரு மூன்றுஞ் சுத்தம்
பதிநிலை யொன்றற் கொன்று பயில்வியாப் பியமா மின்னும்
பதியொடு பசுக்க லக்கும் பண்புமிற் றென்றோர் செங்கைப்
பதிவிர லளவிற் சேர்ப்பிற் பகர்பவற் கடிமை செய்வாம்.”

(இதன்கண் சின்முத்திரையின் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. சுத்தம்பதி நிலை - சுத்தாவஸ்தை. வியாப்பியம் - அடங்கியிருத்தல். இச்செய்யுளுக்கு நிரனிறையாகப் பொருள் கொள்க.)

மாணிக்கவாசகர் துதி

“எழுதிடும் வேலை பூமே லிருப்பவ னியற்றப் போக்கி
எழுதுத லில்லா நூல்சொற் றினிதமர் தருமா தேவை
எழுதெழு தெனப்பல் பாச்சொற் றியைதரப் பெயரு மீற்றில்
எழுதிடச் செய்த கோமா னிணையடி முடிமேல் வைப்பாம்.”

(பூமேலிருப்பவன் - பிரமன். எழுதுதலில்லா நூல் - வேதம்.)

அவையடக்கம்

“காற்றுபல் குறையு மேற்றார் விகாரமுங் கலப்பக் கொண்டார்
வேற்றுமை விலக்கல் செய்யா ரல்வழி விரவி நிற்பார்
சாற்றுமன் மொழியுஞ் சொல்வா ரிலக்கணத் தலைமை வாய்ந்தார்
போற்றுமற் றவர்முன் யானெவ் வேதுவாற் புறத்த னாவேன்.” 

(குறை முதலியன சிலேடை. குறை - ஆறாம் வேற்றுமையும் எச்சமும், குறைவு. விகாரம் - புணர்ச்சி விகாரங்களும் செய்யுள் விகாரங்களும், திரிபுணர்ச்சி. வேற்றுமை - எட்டுவேற்றுமைகள், வேறாந்தன்மை. அல்வழி - அல்வழிச்சந்தி, அறமல்லாத வழி. அன்மொழி - அன்மொழித் தொகை, இடத்துக்குரியதல்லாத மொழி.)
அகத்திய முனிவர் நீலாயதாட்சி அம்மையைச் செய்த துதி
ஆசிரியத்தாழிசை

“ஆய கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
பாய பிறவிப் பரவை கடப்பதற்கு
நேய மலியு நெடுங்கலமே போலும்.”

“ஆன்ற கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
ஏன்ற பிறவி யிருங்காடு மாய்ப்பதற்குக்
கான்ற சுடர்வைக் கணிச்சியே போலும்.”
 
“அன்பார் கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
வன்பார் பிறவித் துணங்கறன் மாய்த்திடுதற்
கின்பா ருதய விரவியே போலும்.”

(கருந்தடங்கணம்மை - நீலாயதாட்சியம்பிகை. கலம் - கப்பல். கணிச்சி - மழுப்படை. துணங்கறல் - இருள்.)

(அகத்தீசப்படலம், 34.)

விளா, தென்னை, நாரத்தை யென்பவற்றின் கனிகள்
கலிநிலைத் துறை

“ஒரும லத்தடை யுயிரினை விளங்கனி யொக்கும்
இரும லத்தடை யுயிரினை யிலாங்கலி யேய்க்கும்
பொரும லத்தடை மூன்றுடை யுயிரினைப் புரையும்
குரும லர்ப்பசுந் தழைவிரி குலப்பெரு நரந்தம்.”

(ஒரு மலத்தடையுயிர் - விஞ்ஞானகலர். இருமலத்தடையுயிர் - பிரளயாகலர். இலாங்கலி - தேங்காய், தடை மூன்றுடையுயிர் - சகலர். நரந்தம் - நாரத்தங்கனி.)

“பலாசு பற்பல செறியுமீ றொழிந்தவும் பலவே
நிலாவு மாண்பல நெருங்குமீ றொழிந்தவு நெருங்கும்
குலாவு தண்புளி மாவுமீ றொழிந்தவுங் கூடும்
அலாத காஞ்சிரைக் குழுவுமீ றொழிந்தவு மமலும்.”

(பலாசு - புரசு; அதன் ஈறொழிந்தது பலா. ஆண் - ஒரு மரம்; அதன் ஈறொழிந்தது ஆ; ஆ - ஆச்சாமரம். புளிமா - ஒரு மரம்; அதன் ஈறொழிந்தது புளி. காஞ்சிரை - எட்டி; அதன் ஈறொழிந்தது காஞ்சி.)

(நைமிசப்படலம், 21 - 2.)

பரவச்சாதி மகளிர் வருணனை
கலிநிலைத் துறை

“அம்ப ரத்தியர் கொங்கையம் பரத்தியர் மருங்குல்
அம்ப ரத்தியர் மற்றது சூழ்பல வன்ன
அம்ப ரத்திய ராள்வழக் கறுத்திடு நெடுங்கண்
அம்ப ரத்திய ரன்னராற் பொலியுமச் சேரி.”

(அம் பரத்தியர் - அழகிய பரவச்சாதிப் பெண்கள். கொங்கை அம் பரத்தியர்; பரம் - பாரம். மருங்குல் அம்பரத்தியர் - இடையாகிய ஆகாசத்தை உடையவர்; அம்பரம் - ஆகாசம். பல வன்ன அம்பரத்தியர் - பல நிறங்களையுடைய ஆடையையுடையவர்; அம்பரம் - ஆடை. கண் அம்பு அரத்தியர் - கண்களாகிய அம்பையும் அரத்தையும் உடையவர்.)

(அதிபத்தப்படலம், 10.)

*18 சுப்பிரமணிய தேசிகர் மாலையும் *19 நெஞ்சுவிடு தூதும்

சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்திற்கு வந்தவுடன் இவர், தம்முடைய அன்பிற்கு அறிகுறியாக அவர் மீது மாலை ஒன்றும் நெஞ்சு விடுதூது ஒன்றும் முறையே இயற்றி அரங்கேற்றினார். அவ்விரண்டு நூல்களாலும் மடத்திலுள்ள சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகருடைய அருஞ்செயல்களும் கல்வி வளர்ச்சியும் பிறவும் விளங்கும். சுப்பிரமணிய தேசிகர் மாலையிலுள்ள செய்யுட்களுட் சில வருமாறு:

விருத்தம்

“ஆன்றநின் கருணை யென்னென வுரைக்கேன்
      ஐயநின் பணிக்கமை நாற்கால்
சான்றபல் பசுவு நின்பொது நாமம்
      தம்முடற் பொறித்திடப் படுவ
ஏன்றவில் விருகாற் பசுவெனு மெங்கட்
      கியைந்தில வவைசெய்புண் ணியமென்
தோன்றவெவ் விடத்துக் கழகமார் துறைசைச்
      சுப்பிர மணியதே சிகனே.”

(திருவாவடுதுறையில் மடத்துப் பசுக்களுக்குப் பஞ்சாட்சர முத்திரை பொறிப்பது வழக்கம். ஆதீனகர்த்தர்களாக இருப்பவர்கள் யாவருக்கும் பொதுநாமம் 'நமச்சிவாய' என்பது.)

“வஞ்சனேன் மலநின் றாட்கெதிர் நமனோ
      வாய்ந்தகைக் கெதிர்விதி தலையோ
மஞ்சவாங் களத்திற் கெதிர்கொடு விடமோ
      மறைந்தகட் கெதிர்சிலை மதனோ
எஞ்சுறா நெடிய சடைக்கெதிர் புனலோ
      இனியவாய் நகைக்கெதிர் புரமோ
துஞ்சன்மே வுதற்கு நவில்பெருந் துறைசைச்
      சுப்பிர மணியதே சிகனே.”

சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூதிலுள்ள சில கண்ணிகள் வருமாறு:

கலி வெண்பா

“ஒருமா னெமக்கொளிக்க வோர்கை அமரும்
ஒருமா னொளித்த வொருவன் - பெருமான்
மதிமறைத்த மாசெமக்கு மாற்றி யருள
மதிமறைத்த மாசடையா வள்ளல் - நிதியம்
இருள்கண்ட யாமவ் விருள்காணா வண்ணம்
இருள்கண்டங் காட்டா திருப்போன் - பொருள்கண்ட
மானிடனே யென்ன மருவி யிருந்தாலும்
மானிடனே யென்ன வயங்குவான்.” (8 - 11.)

(மான் - மகத்தத்துவம், திருக்கரத்தி லேந்திய மான். மதி - புத்தி, பிறை. இருள் - அஞ்ஞானம், விடத்தின் கருமை. மானிடன் - மனிதன், மானை இடக்கரத்திலே உடைய சிவபெருமான். ஆசிரியரைச் சிவபெருமானாகவே எண்ணுதல் மரபு.)

“…நெடியகுணக்
குன்றேமெய்ஞ் ஞானக் கொழுந்தே யருட்கடலே
நன்றே யுயிர்க்கருளு நாயகமே - அன்றே
அடுத்தமல பந்த மகற்றவுருக் கொண்டு
மடுத்த பெருங்கருணை வாழ்வே - படுத்தமைந்த
மைம்மாறு சிந்தை வயங்கு மடியார்பாற்
கைம்மாறு வேண்டாத கற்பகமே - பொய்ம்மாறெம்
பேறேயா னந்தப் பெருக்கேஞா னக்கருப்பஞ்
சாறேமெய் யன்பர் தவப்பயனே - நாறுமருட்
சிந்தா மணியே செழுங்காம தேனுவே
சந்தாபந் தீர்க்குந் தனிச்சுடரே - நந்தா
வரமணியே கோமுத்தி வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகப்பெம் மானே.” (303 - 9)

வேதநாயகம்பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வந்தது

ஒருமுறை வேதநாயகம்பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்கு வந்தார். தரிசித்துவிட்டுத் தாம் அவர் விஷயமாக இயற்றிவந்த சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினர். கேட்ட யாவரும் மகிழ்ந்தனர். அப்பொழுது உடனிருந்த பிள்ளையவர்கள் அவ்விருவரையும் பாராட்டி,

விருத்தம்

“கூடுபுகழ் மலிதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவ ரேறே
பீடுமலி வளக்குளந்தை வேதநா யகமேகம் பெய்யும் பாமுன்
பாடுதிற லாளர்பா வுயிர்முனங்குற் றியலுகரம் படும்பா டெய்தும்
நீடுதிற னின்புகழ்முன் னேனையோர் புகழ்போலாம் நிகழ்த்த லென்னே”

என்னும் செய்யுளைக் கூறினார்.

வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகருடைய இயல்புகளை மேன்மேலும் அறிந்து ஈடுபட்டனர். ஊர் சென்றவுடன் பிள்ளையவர்களுக்கு அவர்,

விருத்தம்

“கற்றவர்சி ரோமணியா மீனாட்சி சுந்தரமா கலைவல் லோய்மா
சற்றுயர்சுப் பிரமணிய தேசிகனைத் தினங்காண அவன்சொல் கேட்க
மற்றவனோ டுரைகூறப் பெற்றநின்கண் காதுநா மண்ணிற் செய்த
நற்றவம்யா தறிதரவென் கண்காது நாவறிய நவிலு வாயே”

என்னும் செய்யுளை எழுதியனுப்பினார்.

அம்பர்ப் புராணம் இயற்றத் தொடங்கியது

சோழநாட்டில் உள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருவம்பரென்னும் தலத்தில் இருந்த வேளாளப்பிரபுவாகிய வேலுப் பிள்ளை முதலியவர்கள் அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தை மொழிபெயர்த்துத் தமிழிற் பாட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். இவர் வடமொழிப் புராணப்பிரதியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது திருமங்கலக்குடிச் சேஷையங்காரைத் தஞ்சைக்கனுப்பி  சரசுவதி மகாலில், தேடிப் பார்க்கச் செய்தார். சேஷையங்கார் இந்த முயற்சியை விபவ வருஷத்திலிருந்தே மேற்கொண்டு பார்க்கவேண்டிய உத்தியோகஸ்தர்களைப் பார்த்து மிகவும் சிரமப்பட்டு அந்தப் புராணம் அங்கே இருப்பதை அறிந்து பிரதிசெய்வித்துப் பெற்றுச் சுக்கில வருடம் (1869) மார்கழி மாதத்தில் அதை இவருக்கு அனுப்பினார். இவர் தக்க வடமொழி வித்துவான்களுடைய உதவியால் அதைத் தமிழ் வசனநடையில் மொழிபெயர்ப்பித்து வைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தார்; அப்பொழுது எழுதிவந்தவர் சிவப்பிரகாசையரென்னும் மாணாக்கர்.

மாயூரத்தில் வீடு வாங்கியது

பிள்ளையவர்கள் தம்முடைய மாணாக்கர்களுக்கு இருக்கவும் படுக்கவும் நல்ல வசதியான இடம் இல்லாமையையறிந்து மாயூரம் தெற்கு வீதியில் திருவாவடுதுறை மடத்திற்கு மேல்புறத்துள்ள இரண்டு கட்டுவீடு ஒன்றைச் சுக்கில வருஷத்தில் 900 ரூபாய்க்கு வாங்கினார். அந்த வீட்டின் தோட்டம் பின்புறத்திலுள்ள குளம் வரையிற் பரவியிருந்தது. அந்தக் குளத்தின் கரையிற் படித் துறையுடன் ஒரு கட்டிடம் கட்டுவித்து அதிலிருந்து பாடஞ் சொல்ல வேண்டுமென்றும் சேமம் முதலியவற்றை அமைத்து அங்கேயிருந்து சிவபூசை செய்ய வேண்டுமென்றும் இவர் எண்ணினார். அதனைக் குறிப்பால் அறிந்த பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை வேண்டிய மரங்களை அனுப்பியதன்றிக் கட்டிடங் கட்டுதற்கு வேண்டிய செலவிற்குரிய பொருளையும் அனுப்பினார். அவர் செயலைக் கண்டு மனமுவந்த இவர் தம்முடைய நன்றியறிவைப் புலப்படுத்தி ஒரு கடிதம் எழுதியனுப்பினார். வழக்கப்படியே அக்கடிதத்தின் தலைப்பில் எழுதப்பெற்ற பாடல் வருமாறு:

(விருத்தம்)

“அருளினாற் பெருங்கடலை யீகையாற் பசுமுகிலை யளவாக் கல்வித்
தெருளினாற் பணியரசைப் புரத்தலாற் றிருமாலைச் சிறுப ழிக்கும்
வெருளினா லறக்கடவு டனைவென்று நன்றுபுரி மேம்பா டுற்றுப்
பொருளினாற் பொலிந்துவள ராறுமுக மகிபன்மகிழ் பூத்துக் காண்க.”

அம் மரங்கள் முதலியவற்றைக் கொண்டு அன்பர்கள் அக் கட்டடத்தை இவர் விருப்பத்தின்படியே பூர்த்திசெய்வித்தனர். அதன் பின்பு அவ்விடத்திலேயே இவர் பாடஞ் சொல்லுதலும் சிவ பூசை செய்தலும் நடைபெற்று வந்தன.

அதுகாறும் திரிசிரபுரத்தில் வசித்துவந்த தம் மனைவியாரையும் புதல்வர் சிதம்பரம் பிள்ளையையும் இப்புலவர்பிரான் வருவித்தனர்; சுக்கில வருஷத்தில் மகர சங்கராந்தியில் அவர்களுடன் புதிய வீட்டிற்குக் குடிவந்து மனமுவந்து அதில் ஸ்திரமாக இருப்பாராயினர்.

*20  திருவிடைமருதூருலா

திருவனந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப் பண்டிதராக இருந்த சாமிநாத தேசிகர் முன்பு இவர்பாற் பாடங்கேட்ட காலத்தில் அவர் தந்தையாராகிய சிவக்கொழுந்து தேசிகர் செய்த திருவிடைமருதூர்ப் புராணம் முதலியவற்றை இவர் அவருக்குப் பாடஞ் சொன்னதுண்டு. அப்பொழுது ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியுடைய திருவருட் செயலிலும் அந்த ஸ்தல சரித்திரத்திலும் இக் கவியரசருடைய மனம் ஈடுபட்டது. ஆதலின் ஏதேனும் ஒரு பிரபந்தம் திருவிடைமருதார் விஷயமாகச் செய்ய வேண்டுமென்ற விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. அது தெரிந்த பலர், “தங்கள் வாக்கினால் இத்தலத்திற்கு ஓருலாச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர். இவர் மேற்கூறிய புராணத்திலும், முன்பு ஞானக்கூத்தரால் அத்தலத்திற்குச் செய்யப்பட்டிருந்த பழைய புராணத்திலும், தேவாரத் திருமுறைகளிலும், திருவாசகத்திலும், பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய மும்மணிக் கோவையிலும் உள்ள தலவரலாறுகளையெல்லாம் அறிந்து உலாவைப் பாட ஆரம்பித்து அரிவைப் பருவம் வரையிற் செய்து வைத்தனர்.

பின்பு தஞ்சாவூருக்கு இவர் ஒரு முறை போயிருந்தபொழுது உடன் சென்றிருந்த முத்துசாமி பிள்ளை என்பவரால் ஞாபகப்படுத்தப்பட்டுக் கரந்தையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்து அவ்வுலாவை நிறைவேற்றி முடித்தார். அந்நூல் பிரமோதூத வருடம் (1870) திருவிடைமருதூர்க் கோயிற் சந்நிதியில் அக் கோயிற் கட்டளை விசாரணை செய்துவந்த ஸ்ரீ சிவதாணுத் தம்பிரானவர்களுடைய முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றது. அப்போது அங்கே வந்து கேட்டு ஆனந்தித்தவர்கள் ஸ்ரீ ராஜா கனபாடிகள் முதலிய வடமொழி வித்துவான்களும் அவ்வூரிலிருந்த அபிஷிக்த வகையினரைச் சார்ந்த பல பெரியோர்களும் சில மிராசுதார்களும் ஆவர். ஒவ்வொருநாளும் உலா அரங்கேற்றுகையில் தியாகராச செட்டியார் கும்பகோணத்திலிருந்து வந்து வந்து கேட்டுவிட்டுச் செல்வார்.
அந்த உலாவிலுள்ள கண்ணிகள்: 721. அவற்றுட் சில வருமாறு:

சிவபெருமான்
(கலிவெண்பா)

“சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி
வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோன் - அல்லற்
சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னம்
குறுகியிருள் கூடவைத்த கோமான்.” (11 - 2.)

(சொல்லமுது - ஸரஸ்வதி. பாகு – பாகன் என்றது பிரமதேவனை; சொல்லப்படுகிற அமிர்தத்தைத் தேம்பாகு வந்து தோயவென்பது மற்றொரு பொருள். கைப்பகழி - திருமால், வில் அமர் பூ நாரி - ஒளி அமர்ந்த பூவிலுள்ள பெண்ணாகிய திருமகள்; வில்லிற் பூட்டிய நாணியை அம்பு மேவவென்பது மற்றொரு பொருள். சிறுவிதி - தக்கன். கண்ணைப் பறித்தமையால் சூரியனுக்கு முன்னே இருள் கூடியது.)
உடன் வருவோர்கள்

“நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
வயங்கு மொருகோட்டு மாவும் - சயங்கொள்சத
கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும்
***
ஆய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
தாய்மனை யென்றழைக்கத் தக்கோனும் - தூயவையை
நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
ஓரும் படியருள்கொ ளொண்மழவும் - தீராத்துன்
பாய கடலமண ராழ வரையொடலை
மேய கடன்மிதந்த வித்தகனும்
***
கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை
ஆய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
வாய்நீர் பொழியன்பு மாமுகிலும்” (198 - 209)

(பலம் - பயன்; பழமென்பது மற்றொரு பொருள். ஒரு கோட்டுமா - ஒரு கொம்பையுடைய விநாயகர்; ஒரு கிளையையுடைய மாமரம். சதகோடி - வச்சிராயுதம். அரசு - இந்திரன். குருந்து - முருகவேள். இப்பகுதியில் மரங்களின் பெயர்கள் தொனிக்கின்றன. தக்கோன் - ஐயனார். மழவு - சம்பந்தமூர்த்தி நாயனார். கைச்சிலம்பின் - யானையின். வைச்சு - இல்லத்தில். வானவன் - சேரமான் பெருமாணாயனார். உமைகை நீர் - கங்கை. முகில் - கண்ணப்ப நாயனார்.)
தோழிமார் கூற்று

“நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம்
போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன
மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர்
தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க
பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி
விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சும்
இருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும்
பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை
வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை
வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை
நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலாம்
நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு
மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரும்
மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல்
வல்லா னவனையன்றி மாலா தியபசுக்கள்
எல்லாம் பிரமமெனப்படுமே - வல்லார்
திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவும்
திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா
வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்போற் பேண - உரனமையா
எல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே
நல்லாயென் சொன்னாய் நகையன்றோ.” (410-420)

(ஏகநாயகரைத் தரிசித்து,  “உமாதேவியாரைப் போல என்னையும் இவரருகே இருக்கச் செய்யுங்கள்” என்ற பெதும்பையை நோக்கித் தோழியர் கூறும் கூற்று இது.)

உலாவை அரங்கேற்றி வருகையில் அதன் அருமையை அறிந்து பலர் பாராட்டினார்கள். அங்கிருந்தவர்களிற் சிலர் பொறாமையால் புறம்பே இவரைப்பற்றித் தூஷித்து வந்தனர். அதையறிந்த தியாகராச செட்டியார் ஒவ்வொரு நாளும் உலா அரங்கேற்றப்பட்ட பின்னர் அங்கே வந்திருந்தவர்களை நோக்கி, ”இதில் எவருக்கேனும் ஏதாவது ஆட்சேபமுண்டா? இருந்தால் நான் சமாதானம் கூறுவேன்” என்று சொல்லுவது வழக்கம். ஒருவரும் ஆட்சேபிக்கவில்லை. அப்பால் அந்நூல் அரங்கேற்றி நிறைவெய்தியது. யாவரும் அந்நூலை மிகப் பாராட்டி, ”இதனைப் போல் வேறோருலாவைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை” என்று சொல்லி இவருக்கு நல்ல ஸம்மானஞ் செய்தார்கள்.

*21  ஸ்ரீ ஆதிகுமரகுருபர ஸ்வாமிகள் சரித்திரம்

திருப்பனந்தாளிலுள்ள ஸ்ரீ காசிமடத்துத் தலைவராகவிருந்த ஸ்ரீ காசிவாசி இராமலிங்கத் தம்பிரானவர்களுக்கும் இவருக்கும் மிக்க பழக்கம் உண்டு. இவரைக்கொண்டு ஸ்ரீ ஆதி குமர குருபர ஸ்வாமிகள் சரித்திரத்தைக் காப்பியச் சுவைபடச் செய்விக்க வேண்டுமென்னும் எண்ணம் அவருக்கு இருந்தது, ஒரு தினம் இவருடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தபொழுது அந்தச் சரித்திரத்தைச் செய்ய வேண்டுமென்றும் அதில் இன்ன இன்ன பாகங்களை இன்ன இன்ன விதமாகப் பாடவேண்டுமென்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார். அவர் சொல்லியவற்றிற் சில இவருக்கு உடன்பாடாக இராவிட்டாலும் மறுத்தற்கஞ்சி அவர் விரும்பியவாறே அந் நூலைச் செய்து நிறைவேற்றினார். அதில் ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகளுடைய இளமைப் பருவ வருணனையும், ஸ்தல யாத்திரையும், திருச்செந்தூராண்டவன் அருளிச் செயலும், பிறவும் மிக நன்றாக அமைக்கப்பெற்றுள்ளன.

அந்நூலிலுள்ள பாடல்கள்: 338. அவற்றுட் சில வருமாறு:

பாண்டிநாட்டு வளம் 
(தரவு கொச்சகக் கலிப்பா)

“சாலெலாம் வெண்டாளந் தளையெலாஞ் செஞ்சாலி
காலெலாங் கருங்குவளை காவெலாங் கனிச்சாறு
பாலெலாங் கழைக்கரும்பு பாங்கெலா மிகத்திருந்தி
நூலெலா நனிவிதந்து நுவல்வளத்த தந்நாடு.” (9)

ஸ்ரீ வைகுண்ட நகரம்

“ஆய்ந்தபுகழ்ப் போர்வையுடை யத்திருநாட் டினுக்கழகு
தோய்ந்ததிரு முகமென்னத் துலங்குநக ரொன்றதுதான்
ஏய்ந்தபெருஞ் சைவர்குழாந் திருக்கயிலை யென்றிசைப்ப
வாய்ந்தவயி ணவர்கடிரு வைகுண்ட மெனுநகரம்.” (12 )

செந்திலாண்டவன் இலை விபூதியின் சிறப்பு
(விருத்தம்)

“இலையமில் குமர வேண்முன் வணங்குவார்க் கென்றுந் துன்பம்
இலையடு பகைசற் றேனு மிலைபடு பிணிநி ரப்பும்
இலையௗ ற் றுழன்று வீழ்த லிலைபல பவத்துச் சார்பும்
இலையென விலைவி பூதி யெடுத்தெடுத் துதவல் கண்டார்.” (44)

(இலையம் = லயம் - அழிவு. நிரப்பு - வறுமை. அளறு - நரகம்.)

சுந்தர நாயுடு

தரங்கம்பாடியில் நீதிபதியாக இருந்த சுந்தர நாயுடு என்பவர் தம் ஊருக்குப் போகும்பொழுது ஒவ்வொரு வருஷத்திலும் திருவாவடுதுறைக்கு வந்து தங்கி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சில தினமிருந்து சம்பாஷித்து விட்டுச் செல்வார். வைஷ்ணவத்திற் பற்றுடையவர். தெலுங்கு மொழியிற் செய்யுள் இயற்றும் வன்மை அவருக்கு உண்டு. ஒருமுறை வழக்கப்படி அவர் திருவாவடுதுறை மடத்திற்கு வந்திருந்தபொழுது தாம் இயற்றிய தெலுங்குப் பத்தியங்களைச் சொல்லிப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். உடனிருந்த பிள்ளையவர்கள் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய குறிப்பையறிந்து உடனே அவர் விஷயமாக,

(விருத்தம்)

“தூமேவு பாகவத சிரோமணியாஞ் சுந் தரப்பேர்த் தோன்றால் நீபின்
பூமேவு மால்பதத்துச் சூரிகளோ டிருத்தறனைப் புலப்ப டுத்தற்
கேமேவு தரங்கையிடைச் சூரிகளோ டவையினில்வீற் றிருக்கப் பெற்றாய்
மாமேவு நினதன்புஞ் சீர்த்தியுமீண் டெடுத்துரைக்க வல்லார் யாரே”

(சூரிகள் - நித்திய சூரிகள், ஜூரி யங்கத்தினர்கள்.)

என்னும் செய்யுளைக் கூறிப் பாராட்டினார். அந்தச் செய்யுளை இவர் விரைவில் இயற்றியதையும் அதில் தம்முடைய உத்தியோகச் செய்தியும் நித்திய சூரிகளைப் பற்றிய செய்தியும் சிலேடையாக அமைந்திருப்பதையும் அறிந்த சுந்தர நாயுடு இவருடைய கவித்துவத்தை வியந்து புகழ்ந்து சென்றனர்.

கல்லிடைக்குறிச்சி போய்வந்தது

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்திற்கு வந்த பின்பு முன்னமே நிச்சயித்திருந்தபடி இவரிடம் படித்துவந்த முற்கூறிய ஸ்ரீ நமச்சிவாயத் தம்பிரானவர்களுக்கு அபிஷேகம் செய்வித்து நமச்சிவாய தேசிகரென்ற பெயருடன் சின்னப்பட்டம் அளித்தனர்; பின்பு வழக்கப்படி கல்லிடைக்குறிச்சி மடத்திற்கு அவரை அனுப்பினார். ஸ்ரீநமச்சிவாய தேசிகர் விரும்பியபடி அவருடன் கல்லிடைக்குறிச்சிக்கு இப்புலவர் பெருமானும் சென்றனர். அங்கே சில நாள் இருந்து அவரை மகிழ்வித்து அவரால் உபசரிக்கப்பெற்று மீண்டும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். அப்பால் அங்கே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அவையை அலங்கரித்து வந்தனர்.

மாயூரவாசம்

தாம் புதிதாக மாயூரத்தில் வாங்கிச் செப்பஞ் செய்திருந்த வீட்டில் வசிக்க வேண்டுமென்ற விருப்பம் இவருக்கு அப்போது உண்டாயிற்று. ஆதலின் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அனுமதி பெற்றுக்கொண்டு மாயூரஞ்சென்று அவ்வாறே இருந்து வருவாராயினர்.

மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. அங்கே இருந்துகொண்டு அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலநாள் அங்கே இருந்துவிட்டு வருவார்.

இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலயமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையில் இவருடைய வேலையாக இருந்தன. எதை மறந்தாலும் தமிழை மறவாத பெருங்கவிஞராகிய இவர் இங்ஙனம் தமிழறிவை வரையாமல் வழங்கிவரும் வண்மையைப் புகழாதவர் அக்காலத்து ஒருவரும் இல்லை. தமிழை நினைக்கும் பொழுதெல்லாம் இக்கவிஞர் கோமானையும் உடனினைத்துப் புகழ்தலைத் தமிழ்நாட்டினர் மேற்கொண்டனர். அவர்களுள்ளும் சோழநாட்டார் தங்கள் ‘சோறுடைய சோணாடு’ தமிழளிக்கும் சோணாடாகவும் இப்புலவர் பிரானால் ஆனமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வந்தனர். அச் சோழநாட்டுள்ளும் மாயூரத்தைச் சார்ந்த பிரதேசத்திலுள்ளவர்கள் தமிழ்த்தெய்வமே ஓர் அவதாரம் ஆகித் தங்களை உய்விக்க வந்திருப்பதாக எண்ணிப் போற்றிவரலாயினர். தமிழ்ப் பயிற்சி இல்லாதவர்கள் கூட இப்புலவர் சிகாமணியைப் பார்த்தல் ஒன்றே பெரும்பயனென்று எண்ணி வந்து வந்து இவரைக் கண்டுகளித்துச் செல்வார்கள். இங்ஙனம் இப்பெரியாருடைய புகழ் தமிழ்மணக்கும் இடங்களிலெல்லாம் பரவி விளங்கியது.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

17.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 5179-5201.
18.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் பிரபந்தத்திரட்டு, 3119 – 3219.
19.  மேற்படி. 3322 – 3.
20.  ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 1705 – 6.
21. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3409 – 3750

$$$

முதற்பாகம் முற்றிற்று

$$$

Leave a comment