-மகாகவி பாரதி

11. சுதேசமித்திரன் 06.11.1916
பதினாறு வயதிருக்கும்; பிராமணப் பிள்ளை; வைஷ்ணவன். இவன் போன தீபாவளிக்கு மறுநாள் தராசுக் கடைக்கு வந்தான். வழக்கம்போலே முகவுரைகள் பேசி முடிந்த பிறகு தராசினிடம் பின்வரும் கேள்வி கேட்டான்.
பிராமணப் பிள்ளை:- “எனக்கு பள்ளிக்கூடத்துச் சம்பளம் மூன்று மாதத்துக்கு ஒன்பது ரூபாய் வேண்டும். நாளைக் காலை சம்பளம் கொடுக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டுமென்று பெரிய வாத்தியார் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
எனக்குத் தெரிந்த பணக்காரர், என் பிதாவுக்கு அறிமுகமான பணக்காரர். எங்கள் குடும்பத்திலே நல்லெண்ணமுடைய சில நண்பர்களுக்குப் பழக்கமான பணக்காரர்- எல்லா விதமான பணக்காரர்களிடத்திலும் பலவிதங்களிலே கேட்டுப் பார்த்தாய்விட்டது. பயன்படவில்லை. சம்பளமோ அவசியம் கொடுத்துத் தீர வேண்டும். எனக்கு இந்த ஒன்பது ரூபாய் எங்கே கிடைக்கும்? எப்படி கிடைக்கும்? யார் கொடுப்பார்கள்!” என்றான்.
“விதி கொடுக்கும்” என்று தராசு சொல்லிற்று.
பிராமணப் பிள்ளை சிரித்தான். சொல்லுகிறான்:- தராசே, விதியை நம்புவது பிழை. ஐரோப்பியர் விதியை நம்புவதில்லை. ஆசியாவிலுள்ள மகமதிய ஜாதியாரும் ஹிந்துக்களுந்தான் விதியை மும்மரமாக நம்புகிறார்கள். இதனால் இந்த ஜாதியாரெல்லாம் வீழ்ச்சியடைந்தார்கள். ஐரோப்பியர் நாகரீகத்திலும் செல்வத்திலும் ஓங்கி வருகிறார்கள். முயற்சி செய்பவன் நல்ல ஸ்திதிக்கு வருவான். விதியை நம்பினவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடப்பான்.
இங்ஙனம் பிராமணப் பிள்ளை சொல்லியதைக் கேட்டுத் தராசு சிரித்தது.
“தம்பி, ஐயங்காரே, உன் பெயரென்ன?” என்று தராசு கேட்டது.
“லக்ஷ்மீ வராஹாசார்யர்; வடகலை; ஸ்வயமா சார்ய பூருஷர் வகுப்பு” என்றான்.
இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கையிலே, ஒரு பாட்டி வந்தாள். இந்தப் பாட்டிக்கு வயது அறுபத்தைந்து அல்லது எழுபதிருக்கும். தெலுங்குப் பிராமணர்களிலே நியோகி என்ற பிரிவைச் சேர்ந்தவள். கையிலே, ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்தாள். மூன்று வயதுக் குழந்தை, தராசினிடம் கேள்விகள் கேட்கவிருப்பதாக இந்த அம்மையார் சொல்லியதற்குத் தராசு சம்மதித்தது. ஐயங்கார்ப் பிள்ளையைக் கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு முதலாவது இந்தப் பாட்டி விஷயத்தை முடிவு செய்தனுப்புவோம் என்று தராசு தீர்மானித்தது.
பாட்டி சொல்லுகிறாள்:- ருக்மணி கர்ப்பமாயிருக்கிறாள்.
“ருக்மணி யார்?” என்று தராசு கேட்டது. “என்னுடைய இரண்டாவது பேத்தி” என்று பாட்டி சொன்னாள். “அவளுக்கு ஏழெட்டு மாசமாய்விட்டது. மூத்தவளுக்கு நாலைந்து மாதம். இரண்டு பேருக்கும் புருஷக் குழந்தை பிறக்க வேணும். மூத்தவள் புருஷனுக்கு சர்க்காரில் 150 ரூபாய் கொடுக்கிறார்கள். செலவுக்குத் தட்டத்தான் செய்கிறது. அவன் சம்பளம் உயர வேணும். வீட்டிலே காளிபடம் வைத்துப் பூஜை பண்ணுகிறாள். அந்தப் படம் வீட்டிலிருந்தால் நல்லதில்லை என்று சொல்லுகிறார்கள். அவனிடம் சொல்லிப் பார்த்தேன்; கேட்கவில்லை. இந்தக் குழந்தைக்கு அடிக்கடி மாந்தம் வருகிறது. பேய் பிசாசுகளின் சேஷ்டை ஏதேனும் இருக்கலாமோ என்னவோ தெரியவில்லை. மாரியம்மனுக்குப் பூஜை செய்விக்க வேண்டுமென்று பூஜாரி சொல்லுகிறான். எனக்கு அந்த எலிக்கடி விஷம் இன்னும் உடம்பை விட்டுப் போகவில்லை. அடிக்கடி சுரம் வந்து கொண்டிருக்கிறது. எல்லா தோஷங்களும் நீங்குவதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டும். தராசைக் கேட்டால் எல்லா சங்கடங்களுக்கும் தீர்ப்புச் சொல்லுமென்று காலேஜ் வாத்தியார் கண்ணாடி நாராயணசாமி ஐயர் சொன்னார். ஏதேனும் ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும்” என்று பாட்டி ப்ரசங்கத்தை முடிவு செய்தாள்.
“விதிப்படி நடக்கும்” என்று தராசு சொல்லிவிட்டுச் சும்மா இருந்தது.
நானும் தராசினுடைய மன நோக்கத்தைத் தெரிந்து கொண்டு, “பாட்டியம்மா, வருகிற வெள்ளிக்கிழமை காலையிலே நாலு பிள்ளைகளுக்கும் சாப்பாடு போட்டுவிட வேண்டும். பேத்திகள் இருவரையும், தினந்தோறும் கோயிலுக்குப் போய் சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு வரும்படி செய்ய வேண்டும். உங்களுடைய கஷ்டங்களெல்லாம் நிவர்த்தியாகும்” என்று சொல்லிப் பாட்டியைப் போகச் சொல்லி விட்டேன்.
பிறகு, லக்ஷ்மீ வராஹன் என்று வைஷ்ணவப் பிள்ளையை நோக்கித் தராசு பின்வருமாறு சொல்லுகிறது:-
“கேளாய், மகனே, விதிப்படிதான் இந்த உலகமெல்லாம் நடக்கிறது. மனித வாழ்க்கை இவ்வுலகத்தின் வாழ்க்கையிலே ஒரு சிறு பகுதி. விதி தவறி ஒன்றும் நடக்காது. பூர்வகாலத்து மகமதியர்களும் ஹிந்துக்களும் விதியை முற்றிலும் நம்பியிருந்தார்கள். அரபியாவிலே உண்டான மகமதிய மதம் மத்திய ஆசியா முழுவதிலும் பரவிற்று; அத்துடன் அற்புதமான சாஸ்திரங்களும் பரவின; ஐரோப்பாவில் தென் பகுதியை வியாபித்தது; ஸ்பெயின் தேசத்திலே போய் அரசாண்டது. ஐரோப்பா முழுவதிலிருந்து பண்டிதர்கள் ஸ்பெயின் தேசத்துக்கு வந்து சாஸ்திரங் கற்றுக் கொண்டு போனார்கள். இப்போது ஐரோப்பாவிலே ஓங்கி நிற்கும் நவீன சாஸ்திரங்களிலே பலவற்றின் வேர் அங்கே மகமதியரால் நாட்டப்பட்டது. மகமதியர் பாரத நாட்டை ராஜபுத்ரரிடமிருந்த வென்றனர்; சிங்கத்தினிடமிருந்து காட்டை வெல்லுவது போலே. இங்ஙனமே ஜாவா முதலிய தென்கடல் தீவுகளைப் பற்றிக் கொண்டனர். வட ஆபிரிகா, தென் ஆபிரிகா, மத்திய ஆபிரிகா, சீனம், ருஷியா என மனிதனுக்குத் தெரிந்த நாகரிக தேசங்ளெல்லாவற்றிலும், அல்லாவின் குமாரர் வெற்றியும் புகழுமெய்தி விளங்கினர். அக்காலத்தில், இவர்களுக்கு விதி நம்பிக்கை இப்போதைக் காட்டிலும் குறைவில்லை. பூர்வ ஹிந்து ராஜாக்களின் புகழ் திசையெட்டுக்குள் அடங்கவில்லை. அவர்களெல்லாம் விதியைப் பரிபூரணமாக நம்பியிருந்தார்கள். முதலாவது மொகலாயச் சக்ரவர்த்தியாகிய பாபர்ஷா விதியை நம்பி ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுத்தான். அவன் யோசித்தான்:- ‘அரே! அல்லா உலகத்துக்கு நாயகன். அவனுடைய விதி, அவன் உண்டாக்கிய ஒழுங்கு, அதற்குக் கிஸ்மத் (விதி) என்று பெயர். கிஸ்மத்படி எல்லாம் நடக்கிறது. ஒருவனுக்குச் சாக விதியில்லை என்றால், அவன் போர்க்களத்திலே அம்புகளின் சூறைக்கு நடுவிலே போய் நின்றாலும் சாக மாட்டான். அவன் மேலே அம்பு தைக்காது. விதி கொல்ல வேண்டுமானால் வீட்டிலே கொல்லும். இடி விழாமல் நம்மால் தடுக்க முடியுமா? சாகாத வைத்தியனுண்டா? விதிப்படி நடக்கும் ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுத்துப் போவோம். விதியின் அனுகூலமிருந்து வெற்றி கிடைத்தால், உலகத்து மண்டலாபதிகளிலே முதன்மையடையலாம். அங்கே இறந்தோமானால் நம்முடைய சதையைக் காக்காய்கள் தின்னும். நம்மாலே சில ஜீவன்களுக்கு வயிற்றுப் பசி தீர்ந்து சந்தோஷம் சிறிது நேரமுண்டாகும். எல்லாம் ஒன்றுதான். விதியே துணை. ஹிந்துஸ்தானத்தின் மேலே படையெடுப்போம்’ என்றான். ஆள் பலமில்லை; பணமில்லை. ராஜபுத்ர ஸ்தானத்து க்ஷத்திரியர்களை வெல்லுவதென்றால் சாதாரணமான காரியமன்று; ஒவ்வொரு ராஜபுத்ரனும் ஒவ்வொரு மஹா சூரன். எப்படியோ! பாபர்ஷா வென்று விட்டான், விதியை நம்பி, விதி வெற்றிக்குத் துணையாகும். விதியை நம்பி விதை போடமலிருந்தால், பயிர் விளையாது. விதியை நம்பி உழைத்தால் அநேகமாக விளையும்” என்று தராசு சொல்லிற்று.
என் கையிலிருந்த ஒரு தர்ம நிதிப்பணம். அதில் ஒன்பது ரூபாய் எடுத்து அந்தப் பையனிடம் கொடுத்தேன். “விதி உண்மைதான்” என்று சொல்லி லக்ஷ்மீ வராஹன் ஒப்புக் கொண்டு போனான்.
- சுதேசமித்திரன் (06.11.1916)
$$$