பாரதியாரும் விவேகானந்தரும்

– சுவாமி அபிராமானந்தர் 

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளையே பாரதியார் கவிதை வடிவில் பல இடங்களில் கூறினார் என்றார் அது மிகையல்ல.  சகோதரி நிவேதிதை  மூலமாக பாரதியாருக்கு சுவாமிஜியின் தாக்கம் ஏற்பட்டது.  பாரதியே கூறுகிறார்:

“….சுவாமி விவேகானந்தர் ஓர் ஆன்மிகவாதியாகவே, தம் வாழ்நாளைக் கழித்த போதிலும், தேசபக்தி  எழுச்சிக்கு அவர் ஒரு பெரிய  மூலாதாரமாக நின்றார்.  அவர் காலம் சென்ற பிறகும், அவரது சீடர்களுள் பலர் தேசபக்தி எழுச்சிக்காகப் பேருதவி செய்து வருகிறார்கள்.  அவ்வாறு விளங்கும் சிஷ்ய ரத்தினங்களில் சிறப்பானவர் சகோதரி நிவேதிதை ஆவார்.

“விபீஷணன், சற்குணமூர்த்தியான ராமசந்திரமூர்த்திக்கு பெரும் துணையாக  நிற்கவில்லையா? அதுபோல் இந்த மாதரசி வெள்ளைக்காரக் குலத்தில் தோன்றிய போதிலும், விவேகானந்தருக்குத் துணையாக நின்றார்.”

கொல்கத்தாவில் டம்டம் என்ற இடத்தில் 1906-ஆம் ஆண்டு நிவேதிதையை பாரதியார் முதன்முதலில் சந்தித்தார்.  அப்போது, “உங்களுக்கு மணமாகிவிட்டதா?” என நிவேதிதை கேட்டார்.

“எனக்குத் திருமணமாகி ஒரு பெண் உள்ளாள்” என்றார் பாரதி.  அதற்கு நிவேதிதை, “பின் ஏன் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வரவில்லை?” என்று கேட்டார்.

“எங்கள் சமூகத்தில் மனைவியைப் பொது இடத்திற்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை” எனறார் பாரதி.

அதைக் கேட்டதும், “சமூகத்தில் ஒரு பாதி அடிமைப்பட்டுப் கிடக்கும்போது  மறுபாதி எப்படி விடுதலை பெற முடியும்?  உங்களது மனைவிக்கே உங்களால் சுதந்திரம் பெற்றுத் தர முடியவில்லை? நாட்டிற்கு  எப்படி நீங்கள் சுதந்திரம் பெற்றுத் தர முடியும்?  இனியும் நீங்கள் அவள் தனி என நினைக்காது, உங்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாக நினைத்து, அவளைத் தேவியாகப் போற்றுங்கள்.  பெண்களை இருட்டில் தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைக்கு வந்துவிட முயலுவது வீண்” என்றார் நிவேதிதை.

“சமுதாயம் என்பது ஒரு பறவையைப் போல! அதற்கு இரண்டு இறக்கைகள்! ஒன்று ஆண்,அடுத்து பெண்.  ஓர் இறக்கையால் மட்டும் பறவை பறக்காது” என்ற சுவாமி விவேகானந்தரின் கருத்தைத் தான் சகோதரி நிவேதிதை

பாரதிக்குச் சொன்னார்.  இதை பாரதி இவ்வாறு பாடுகிறார்:

“பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர் நீதி
    பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளீர்!
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
    மனையாளும் தெய்வம் அன்றோ! மதி கெட்டீரே!
விண்ணுக்குப்  பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
    விடுதலை என்பீர், கருணை வெள்ளம் என்பீர்,
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்
    பின் இந்த உலகிலே வாழ்க்கை இல்லை“. 

பாரதியார் தமது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை நிவேதிதைக்கு சமர்ப்பித்தார்.  அதில் அவர் எழுதினார்:

 “எனக்கு ஒரு விநாடியில் மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவின் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்த நூலைச் சமர்ப்பிக்கின்றேன்“.

விவேகானந்தரை, ‘பகவான் விவேகானந்தர்’ என்று பாரதி மட்டுமே கூறினார்.  சகோதரி நிவேதிதையின் சந்திப்பு, பாரதியின் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்புமுனை.  விவேகானந்தர் மற்றும் அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

பன்மொழிப் புலமை:

பாரதிக்கும் விவேகானந்தருக்கும் உள்ள ஒற்றுமைகள் பல. இருவருமே மிகப் பெரிய அறிஞர்கள், பல மொழிகள் தெரிந்தவர்கள்.  விவேகானந்தர் ஆங்கிலத்தில் உரையாற்றிய போது, ‘ Speaking English like a Webster’ என்றும், ‘Walking Encyclopedia’ என்றும் அமெரிக்கப் பத்திரிகைகள் கூறின.

பிரான்ஸ் நாட்டில் ஒரு கருத்தரங்கில் பிரெஞ்சு மொழியிலேயே உரையாற்றினார் சுவாமிஜி.  சம்ஸ்கிருதத்திலும் புலமைமிக்கவர் அவர்.

பாரதியாருக்கும் பல மொழிகள் தெரியும்.  தெலுங்கிலும் மலையாளத்திலும் அவர் உரையாற்றினார்.  வங்க மொழியிலிருந்து தாகூரின் ஏழு கதைகளை மொழிபெயர்த்தார். சம்ஸ்கிருதத்தில் மூன்று கவிதைகள் எழுதினார்.  உருதும் பேசுவார்.  ஆங்கிலத்தில் நிறைய எழுதினார்.  ஜெர்மன், பிரெஞ்சு, அல்ஜீரியன், அரேபிய மொழிகளிலும் பரிச்சயம் மிக்கவர் அவர்.

ஆங்கில வழிக் கல்வி மறுப்பு:

இன்று எல்லோரும் ஆங்கில வழிக் கல்வியை நாடி ஓடுகிறார்கள்.  தமிழ் மொழியைப் படிப்பதில்லை.  இந்தியர்களின் வரலாற்றைப் பற்றி அறிவதில்லை.  அவ்வாறு அறியாவிட்டால் நாம் எவ்வாறு நம் மூதாதையர்களின் பெருமையை அறிந்து கொள்ள முடியும்?

பாஸ்கராச்சாரியார் நட்சத்திரங்களை அளந்தார்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சூரியனும் சந்திரனும் எவ்வளவு தூரத்தில் உள்ளன என்று கூறினார்; அவரைப் பற்றி நம் பாடத்தில் உள்ளதா?  மிலேச்சர்களைத் துரத்தியடித்த சிவாஜியின் வீர வரலாறு கற்றுத் தரப்படவில்லையே!  நமது கலாச்சாரம் பற்றி நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை என்று பாரதியார் அந்தக் காலத்திலேயே அங்கலாய்க்கிறார்.

‘கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்…

…அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

மேலும் பாரதியார் தமது ஆங்கிலப் படிப்பு பற்றிக் கூறினார்: ‘ செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது; தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன….’

100 வருடத்திற்கு முன்பே தந்தை ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது.  நமது பண்பாடு இக்கல்வியில் கற்றுத் தரப்படாததால் தீது  பல்லாயிரம் சேர்ந்தது என்கிறார் பாரதி.

சுவாமிஜி இதைத் தான், ‘இன்றைய பள்ளிகளில் நம் பிள்ளைகளுக்கு என்ன கற்றுத் தருகிறார்கள்?  முதலாவது, உன் பாட்டனார் ஒரு பைத்தியக்காரன்.  அடுத்து, உன் ஆசிரியர்கள் எல்லாம் நயவஞ்சகர்கள். பிறகு உங்களது சாஸ்திரங்கள் எல்லாம் பொய்க்குவியல்கள். இத்தகைய எதிர்மறைக்கல்வி, சாவைவிட மோசமானது‘ என்றார்.

குடும்பப் பின்னணியும் பிரார்த்தனையும்:

‘ பிறரது துன்பங்களை ஏற்றுக் கொள்வதற்காக நான் மீண்டும் மிண்டும் பிறக்க வேண்டும்‘என்றார் சுவாமிஜி.  எதற்காக? உலகில் இருக்கக்கூடிய ஒரே ஒரு கடவுளை வணங்குவதற்காக.

அக்கடவுள் யார்?  உலகிலுள்ள எல்லா ஆன்மாக்களும் சேர்ந்த ஒட்டுமொத்தமான மனித குலமே அக்கடவுள்.

‘துன்பப்படுபவர்களின், ஏழைகளின் துன்பங்களை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லா ஜாதியின், எல்லா மதத்தின், எல்லா நாட்டின் துன்பங்களையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்‘  என சுவாமிஜி கூறுகிறார்.

சுவாமிஜி எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கிறார். உணவிற்குக்கூட வழியின்றித் தவித்தார்.  தான் மிகவும் கஷ்டப்படுவதாக  ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சொன்னார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தரை, “தேவியிடம் போய் வேண்டு” என்றார்.  சுவாமிஜியும் காளிதேவியிடம் போய் நின்றார்.  ஆனால் பொருள் கொடு, பணம் கொடு என ஒன்றும் கேட்கவில்லை, ‘விவேக, வைராக்கியத்தைக் கொடு, ஞானமும் பக்தியும் கொடு’ என வேண்டிவிட்டு வந்தார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் வந்தபோது, ” அட, பொருளையும் பணத்தையும் கேட்க மறந்துவிட்டாயா? லோகமாதாவிடம் மீண்டும் போய் கேள்” என்றார்.  இரண்டாம், மூன்றாம் முறையும் பக்தியையும் ஞானத்தையுமே கேட்டார் சுவாமிஜி.

பாரதியார் வீட்டிலும் பட்டினி.  என்றைக்கோ ஒருநாள் அரிசி கிடைத்தது, அதைக் கொண்டு போய் குருவிகளுக்குப் போட்டுவிட்டு, ‘காக்கை குருவி எங்கள் ஜாதி….’ என்று பாடினார் அவர்.

விவேகானந்தரைப் போலவே பாரதியாரும் இறைவனிடம் என்ன கேட்கிறார் தெரியுமா?

பேசாப் பொருளைப் பேச  நான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்,
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞான ஆகாசத்து நடுவே நின்று நான்
பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமும் இடிமையும் நோவும்
சாயும் நீங்கிச் சார்ந்த பர்ருயிரெல்லாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்!  இதை நீ
திருச்செவிகொண்டு திருஉளம் இரங்கி
‘அங்ஙனமே ஆகுக’ என்பாய்!’

– என வேண்டினார்.

புற்பூண்டு, பூச்சிகள், விலங்குகள், பறவைகள், மக்கள் யாவரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை வேண்டினார் பாரதி.

இருவரும் அறியாதது அச்சம்:

புதிய ஆத்திசூடியில் பாரதியார் எடுத்ததும் ‘அச்சம் தவிர்’ என்றார்.  விவேகானந்தரும், ‘அபீ: அபீ: பயமே எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணம்‘ என்றார்.

‘அபயம் (அச்சமின்மை),  அஹிம்சை,  அசங்கம் (பற்றின்மை),  ஆனந்தம் – இந்த நான்கே எல்லா இந்து மத சாஸ்திரங்களின் சாரம்’ என்றார் விவேகானந்தர்.

பிரிட்டிஷ்காரர்களின் தொல்லை தாங்காமல், பாரதியார், அரவிந்தர் போன்றோர் பாண்டிச்சேரிக்குச் சென்றுவிட்டனர்.  தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.  பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டினரால் ஆளப்பட்டிருந்தது.  அங்கிருந்தும் அவர்களைத் துரத்த நினைத்து ஆங்கிலேயர்கள் ஒரு சட்டம் இயற்றினார்கள்.

அதன்படி பாண்டிச்சேரியில் போய் இருக்கக்கூடிய இந்தியர்கள் ஒரு வருடத்திற்குள் ஐந்து மேஜிஸ்திரேட்டுகளிடமிருந்து கையொப்பம் வாங்கவேண்டும். பின் அதை பிரெஞ்சு அரசிடம் காண்பிக்க வேண்டும்.

ஒரு நாள்  அரவிந்தரும் மற்றும் பலரும் “இப்படி ஆகிவிட்டதே, நமக்கு யாரையும் தெரியாதே” என வருந்திக் கொண்டிருந்தனர். “எனக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள்” என்று பாரதியார் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

மறுநாள் சங்கரன் செட்டியார் என்பவரிடன் சென்றார்.  செட்டியார் ஊரில் பெரிய மனிதர்.  சில மணிநேரத்தில் ஐவரிடம் கையொப்பம் வாங்கிக் கொண்டு வந்தார் அவர்.

அப்போது செட்டியார், பாரதியிடம் ஒரு கவிதை பாடும்படி கேட்டுக் கொண்டார், உடனே, ‘ஜெயமுண்டு பயமில்லை மனமே’ எனப் பாடினார்,

பிறர் துன்பம் கண்டு துவளும் மனம்:

சுவாமி அபிராமானந்தர்

சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில் இருந்தபோது ஒருநாள் இரவு  தூங்காமல் பரபரப்பாக இருந்தார்.  அதைக் கவனித்த விஞ்ஞானானந்தர் சுவாமிஜியிடம் சென்று விசாரித்தார்.  அதற்கு விவேகானந்தர், “மக்கள் பலர் எங்கோ துன்பப்படுகிறார்கள். அதனால் எனக்குத்  தூக்கம் வரவில்லை” என்று கூறி வருந்தினார்.

விஞ்ஞானானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை.  அவர் உறங்கச் சென்றுவிட்டார்.

மறுநாள் செய்தித்தாளில், ‘பிஜித் தீவில் பூகம்பம் ஏற்பட்டுப் பல  நூறு பேர் அங்கு இறந்துவிட்டனர் ‘ என்ற செய்தி வந்திருந்தது, அந்தத் துன்பம் தாளாமல் தான் சுவாமிஜியின் இதயமே  SeismoGraph ஆக மாறி ரிக்டர் அளவில் அறிந்தவர் போல் தவித்துக் கொண்டிருந்தார்.

‘பிஜித்  தீவினிலே இந்து ஸ்திரீகள்’ என்ற பாரதியின் கவிதை, சுவாமிஜி போல அவரும் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் துடித்தார் என்று தெளிவுறக் காட்டுகிறது பாருங்கள்.

‘கரும்புத் தோட்டத்திலே – அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்துகின்றனரே! – ஹிந்து
மாதர் தம் நெஞ்சு கொதித்து கொதித்து மெய்
சுருங்குகின்றனரே! – அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்து இதற்கில்லையோ? செக்கு
மாடுகள் போல் உழைத்து ஏங்குகின்றார் அந்தக்

                 (கரும்புத் தோட்டத்திலே)

சுவாமிஜி பிறந்த நாளன்று,

‘தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாட பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல் – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?'

– என்று எழுதி, தனது 39-வது வயதிலேயே மறைந்தார், சுவாமி விவேகானந்தரின் சீடரான மகாகவி பாரதியார்.

சுவாமி விவேகானந்தரும் 39 வருடம், 174 நாட்களில் மகாசமாதி அடைந்தார்.  இவர்கள் இருவரும் காட்டிய வழியில் இந்தியா சென்றால்,  நிச்சயம் ஒரு புதிய பாரதம் உருவாகும்.

குறிப்பு:

அமரர் பூஜ்யஸ்ரீ  சுவாமி அபிராமானந்தர், ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அகில இந்திய உதவி பொதுச்செயலாளராக இருந்தவர். 

நன்றி: விவேகானந்தரைக் கற்போம்!- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை வெளியீடு.

$$$

Leave a comment