-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
39. நற்பலன் தரும் சிவராஜ்யம்
.
தர்மோ மே சதுரங்க்ரிகஸ்-ஸுசரித: பாபம் விநாச’ம் கதம்
காமக்ரோத-மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷ்க்ருதா:/
ஜ்ஞானானந்த-மஹௌஷதி: ஸுபலிதா கைவல்யநாதே ஸதா
மான்யே மானஸபுண்டரீக நகரே ராஜாவதம்ஸே ஸ்த்திதே//
.
மனக்கமல நகரினிலே மாண்புடை மன்னராம்
தனிக்கோமான் வீற்றலால் நாற்காலறம் ஒழுகலாம்
காமவெகுளிச் செருக்கொழிய பாவமழிய இன்பத்தைக்
காலம்தர ஞானப்பயிர் நற்பலன் கொடுக்குமே.
.
மனிதர்கள் நடத்தும் அரசாங்கங்களிலே குறைகள் இருக்கும். ஆனால், இறைவன் நடத்தும் தர்மராஜ்ஜியத்தில் எல்லாமே நிறைவாகத் தானிருக்கும். அது வெளியே எங்கோ இல்லை. நமது மனத்திலிருந்துதான் மலர்கிறது. நமது மனம் தூய்மையாக இருந்தால் அங்கு ஏகச் சக்ரவர்த்தியாக விளங்கும் சிவபெருமானைத் தரிசிக்கலாம். அப்படிப்பட்ட மனமாகிய தாமரை என்னும் நகரினிலே மாண்பு நிறைந்த மன்னராகிய சிவபெருமான் கோலோச்சுகிறார். அந்த நகரினிலே எல்லோராலும் பூஜிக்கப்படுகின்ற தனிப்பெரும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
அவரது ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன. இவ்வாறு அறம் பேணப்படுவதால், காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது. “மனத்திலே இறைவனை இருத்தி விட்டால் குணத்திலே உயர்வு தானே வரும்” என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். இருப்பது சிவமானால் இல்லையோர் அவம்!
$$$