சிவகளிப் பேரலை – 33

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

33. பக்திக்கு எளியவன்

.

நாலம் வா ஸக்ருதேதேவதஸ்ஸேவா நதிர்வா நுதி:

பூஜா வா ஸ்மரணம் கதாச்’ரவண மப்யோலோகனம் மாத்ருசா’ம்/

ஸ்வாமின்னஸ்திர தேவதானுஸரணாயாஸேன கிம் லப்யதே

கா வா முக்திரித: குதோ வதி சேத் கிம் ப்ரார்த்தனீயம் ததா//

.

நின்சேவை நமக்காரம் துதிபூசை தியானம்

நின்கதை தரிசனம் ஒருமுறையே போதாதா

என்போன்றோர் ஈடேற? வேறென்ன வேண்டுவதோ?

பின்னொரு பொய்த்தேவு புகுவதேன் சிவனே?

.

     கடையனையும் கடைத்தேற்றும் மகாதேவன், சிவபெருமான். அப்பேர்ப்பட்ட சிவபெருமானுக்கு சேவையாற்றுவதோ, நமஸ்காரம் செய்வதோ, துதிப்பதோ, பூஜை செய்வதோ, தியானிப்பதோ, அவரது புண்யக் கதைகளைக் கேட்பதோ, தரிசனம் செய்வதோ, ஒரே ஒரு முறை என் போன்றவர்களால் செய்யப்பட்டால் போதாதா? இந்தப் பிறவி அது ஒன்றினாலேயே ஈடேறிவிடுமே? இப்படி ஓர் எளிய முறையிலேயே பிறவிப் பயனாகிய முக்தி கிடைத்துவிடுகின்ற நிலையில், வேண்டிக்கொள்வதற்கு வேறு என்னதான் இருக்கிறது? 

     மேலும், வாழ்வின் பரிபூரணமாகிய முக்தியை சிவபெருமானிடமிருந்து பெற்றுவிடக் கூடிய நிலையில், நிலையில்லாத வேறு பொய்த் தெய்வங்களை வணங்கும் முயற்சியில் எதற்காக இறங்க வேண்டும்? என்றும் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ஏனெனில், சிவபெருமானை பூஜிப்பது மிகவும் சுலபம். ஒரு வில்வ தளமோ அல்லது எருக்கம்பூவையோ எடுத்து சிவார்ப்பணம் என்று பூஜித்தாலே மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியவர் சிவபெருமான். எல்லாம் வல்ல பெரியாண்டவன் எளிய வழிபாட்டுக்கே இறங்கிவரும்போது ஏன் வேறு பொய்த் தெய்வ வழிபாடுகளுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று வினவுகிறார்.

$$$

Leave a comment