சிவகளிப் பேரலை- 26

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

26. பாத சேவையே பரமானந்தம்

.

தா வா த்வாம் த்ருஷ்ட்வா கிரீச’ தவ வ்யாங்க்ரியுளம்

க்ருஹீத்வா ஹஸ்தாப்யாம் சி’ரஸி நயனே வக்ஷஸி வஹன்/

ஸமாச்’லிஷ்யாக்ராய ஸ்புடஜலஜ ந்தான் பரிமளா

நலப்யாம் ப்ரஹ்மாத்யைர்மு மனுவிஷ்யாமி ஹ்ருயே//

.

உனைக்கண்டு மலையோனே உன்னிரு திருவடிகள்

என்னிரு கரம்பிடித்து தலைமார்பில் வைத்தணைத்து

ஆரத்தழுவி அன்றலர்ந்த மலர்போலே மணநுகரும்

அமரர்க்கும் அரியதாம் அனுபவமும் எக்கணமே?

.

     இறைவனின் திருவடிகளே இன்பத்தின் எல்லை. பக்தனுக்கு பகவான் பாத சேவையே பரமானந்தம். பேரருளாளனைச் சரண் புகுந்தபின் பேரின்ப மயந்தானே! எதிரிகளால் சுண்ணாம்புக் காளவாயில் இடப்பட்ட சமயத்தில்கூட, “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டுறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று பாடினார் அப்பர் பெருமான். அதனால் எதிரிகளின் கொடுமைகளால் வெந்துபோகாமல் வெளிவந்தார் அவர். அப்பேர்பட்ட மகிமை வாய்ந்தவை சிவபெருமானின் திருப்பாதங்கள்.

     மலையில் வசிக்கின்ற கிரீசனாகிய சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு, தமது கரங்களாலே மெல்லப் பிடித்து, தலையிலும் மார்பிலும் வைத்துக் கொண்டாடி அணைத்து, மனமாரத் தழுவுவது எக்கணமோ? என்று பக்தனுக்காக ஏங்குகிறார் ஆதிசங்கரர். சிவபெருமானின் திருவடிகள் அப்போதுதான் மலர்ந்த மலர்போல மணம் வீசுகிறதாம். அப்படிப்பட்ட மணம் வீசும் திருவடிகளை அணைத்து, வாசத்தை நுகர்ந்து, தேவர்களுக்குக்கூட கிடைக்காத அந்தப் பேரின்பத்தை எப்போது அடைவேன்? என்று நமக்காகக் கேட்கிறார். “வைத்திடுங் காலைப் பிடித்து கண்ணில் மார்பில் வைத்தணைத்துக் கொண்டு கையால் வளைத்துக் கட்டிச் சித்திமிசை புக இருத்திப் பிடித்துக் கொண்டு, தியக்கமற இன்பசுகஞ் சேர்வதென்றோ?” என்று தாயுமானவர் வினவியதை இதனோடு ஒப்பிட்டலாம்.

$$$

Leave a comment