சிவகளிப் பேரலை- 25

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

25. விடையேறிய திருக்காட்சி

.

ஸ்தவைர் ப்ருஹ்மாதீனாம் ஜயஜய வசோபிர் நியமினாம்

ணனாம் கேலீபிர் மகல மஹோக்ஷஸ்ய ககுதி/

ஸ்திதம் நீலக்ரீவம் த்ரிநயன முமாச்’லிஷ்ட வபுஷம்

தா த்வம் பச்’யேயம் கரத்ருத-ம்ரும் கண்பரசு’ம்//

.

விருமன் துதித்திட விரதிகள் போற்றிட

கணங்கள் களித்திட காளையின் மேல்வீற்று

கண்மூன்றும் கருங்கழுத்தும் கவிழுமை மேனியொடு

மான்மழு வேந்துமுனை காண்பதுவும் எக்கணமே?

.

     நமது துக்கங்களுக்கும், பிறவிப் பெருந்துயருக்கும் விடை தருபவர் சிவபெருமான். ஆகையால் அவர் விடை (காளை) மீது வீற்றிருக்கிறார். காளை வாகனத்தில் சிவபெருமான்  அமர்ந்திருக்கும் திருக்காட்சி பெரும் பேறு தரவல்லது. பிரம்மன் ஒருபுறம் துதித்திட, கடும் விரதங்களைப் பூண்டுள்ள முனிவர்கள் மறுபுறம் போற்றிட, பூதங்கள், தேவர்கள் உள்ளிட்ட கணங்கள் களிப்புற, காளையின் மேலேறி அய்யன் வருகிறார். அவருக்கு மூன்று நேத்திரங்கள் உள்ளன. அவரது நெற்றியில் உள்ள மூன்றாவது கண், தீமையைப் பொசுக்கிவிடும் நெருப்புக் கண் மட்டுமல்ல, ஞானக் கண்ணும்கூட. இது அவரது பராக்கிரமத்தையும், பேரறிவையும் காட்டுகிறது.

     சிவபெருமானின் கழுத்து, பிரபஞ்சத்தைக் காப்பாற்றுவதற்காக ஆலகால விஷமுண்டதால் கருநீலமாக இருக்கிறது. இது அவரது தியாகத்தை நினைவுறுத்துகிறது. மேலும், தம்மேல் உமாதேவி ஆலிங்கனம் செய்த (தழுவியபடியான) கோலத்தில் அல்லவா  சிவபெருமான் காட்சி தருகிறார். பெண்மைக்குச் சரிபாதி தந்த பெருமையை இது உணர்த்துகிறது. தமது ஒரு கையிலே மானையும், மறு கையில் மழு (கோடரி) ஆயுதத்தையும் தாங்கியபடி சிவபெருமான் உள்ளார். அப்பேர்ப்பட்ட பெருமைமிகு திருக்கோலத்தை எப்போது தரிசிப்பேன்? என்று சிறு பக்தனுக்காக பக்தியால் விம்முகிறார் ஆதிசங்கரப் பெருந்தகை.

சங்க இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூறு நூலுக்குக் கடவுள்வாழ்த்து பாடிய பெருந்தேவனார், “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று சிவசக்தி ஐக்கியக் காட்சியைக் கூறுகிறார். நீல மேனியையும், ஒளிவீசும் நகைகளையும் கொண்ட அம்பிகையை ஒருபுறத்தில் கொண்டவர் சிவபெருமான் என்பது இதற்குப் பொருள்.

$$$

Leave a comment