சிவகளிப் பேரலை – 24

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

24. கல்பமும் நொடியாகும்

.

தா வா கைலாஸே கனகமணிஸௌதே ஸஹணைர்

வஸன் ச’ம்போக்ரே ஸ்புடித மூர்தாஞ்ஜலிபுட:/

விபோ ஸாம்ப ஸ்வாமின் பரமசிவ பாஹீதி நிகதன்

வித்யாத்ரூணாம் கல்பான் க்ஷணமிவ விநேஷ்யாமி ஸுகத://

.

கயிலை மலைமேலே கனகமணிக் கூடத்தில்

கணங்களின் நடுவினிலே கரங்களை மேல்தூக்கி

காத்திடுவாய் சாம்பனே சுவாமியே பரமனென்றே

கல்பங்களை நொடிபோலே கழிப்பதெப்போ சிவனே?

.

     சிவபெருமான் காமனை மட்டுமல்ல, காலனையும் வென்றவர். ஆகையால் அவர் காலாதீதன் (கால அதீதன்), அதாவது காலத்தைக் கடந்து நிற்பவர். அப்படிப்பட்ட சிவபெருமான் இயற்கை வனப்பு மிகுந்த கயிலாய மலை மீது நமக்காகக் காட்சி தருகிறார். பக்திப் பெருக்கால் காரைக்கால் அம்மையார், சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமான் நாயனார் போன்றோர் இத் தெய்வீகத் திருக்காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.

     கயிலாய மலை மேலே, பொன்னும் மணியும் நிறைந்த தூண்களால் ஆன மண்டபத்தில், பூத கணங்களின் நடுவே சக்தியுடன் (ச+அம்ப= சாம்ப, அதாவது அம்பாளுடன் கூடியவராய்) சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரைக் கண்டு, இரு கரங்களையும் தலைக்கு மேலை தூக்கி வைத்து, இறைவா, பரமா என்னைக் காத்திடுவாய் என்று தொழுத வண்ணம், கல்ப வருடங்களைக் கூட ஒரு நொடிபோல் கடந்து விடுகின்ற பேறு எனக்கு எப்போது கிட்டும் என்று கேட்கிறார். காலத்தை வென்றவர் சிவபெருமான் என்பதால், அவரது சன்னிதியில், கல்பம்கூட சிறுநொடிபோல் கடந்துவிடும்.

$$$

Leave a comment