சிவகளிப் பேரலை- 14

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

14. எளியோரின் உறவுக்காரன் பரமசிவன்

.

ப்ரபுஸ்த்வம் தீனானாம் கலு பரமந்து: பசு’பதே

ப்ரமுக்யோsஹம் தேஷாமபி கிமுத ந்துத்வமனயோ:/

த்வயைவ க்ஷந்தவ்யாஸ் சிவ மபராதாச்’ச ஸகலா:

ப்ரயத்னாத் கர்த்தவ்யம் மவனமியம் ந்துஸரணி:

.

பிரபுவேநீ எளியோரின் உறவினனாம் பசுபதியே

பிறரிலும்நான் எளியோனாம் நம்பந்தம் உரையிலதே

என்குறைகள் நின்னாலே பொறுத்தருளக் கூடியதே

என்காப்பு நீயாவாய் உறவினரின் நடைமுறையே.

.

     உலக உயிர்களின் (பசுக்களின்) தலைவனாக (பதியாக) இருப்பவர் சிவபெருமான். அவரே நம்மை ஆளும் பிரபு. அந்தப் பிரபு, எளியவர்களாகிய பக்தர்களுக்கு மிகச் சிறந்த உறவினர். ஆகையால், அந்தச் சிவபெருமானிடம், நீ உறவு கொள்ளத்தக்க மிகவும் எளியவன் நான் என்று நமக்காகக் கூறுகிறார் ஆதிசங்கரர். நமது உறவு, விளக்கிக் கூற இயலாதது, உரைகளில் அடங்காதது என்றும் கூறுகிறார்.

     ஆகையால், எனது மிக நெருங்கிய உறவினராகிய சிவபெருமானே, நமது நட்பின் காரணமாக என்னிடமுள்ள குறைகள் எல்லாம் உன்னால் பொறுத்தருளக் கூடியவைதாம் என்று பக்தனுக்காகக் கூறுகிறார் ஆதிசங்கரர். அதுமட்டுமல்ல, தம்மை அண்டியவனைத் துன்பத்திலிருந்து காப்பாற்றுபவன்தானே, உண்மையான உறவினன், நண்பன். ஆகையால், சிவனே, உன்னை நான் சுற்றம் எனப் பற்றிவிட்டேன், ஆகையால் நீ தான், உனது உறவுக்காரனாகிய என்னை, துன்பங்களில் இருந்து காப்பாற்றியாக வேண்டும் என்றும் நமக்காக வேண்டுகோள் விடுத்து வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

     (ராவணனை வதைத்து, சீதையை மீட்டு, புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்பும் வழியில், ராமபிரான் பிராட்டியிடம் ராமேசுவரத்தைச் சுட்டிக்காட்டிக் கூறிய வார்த்தைகள் இங்கே குறிப்பிடத்தக்கவை: “இந்த இடத்தில்தான், பிரபுவான மகாதேவன், முன்பு எனக்கு அருள் புரிந்தார்” – “அத்ரபூர்வம் மஹாதேவ: ப்ரஸாதமகரோத் ப்ரபு:” என்கிறது வால்மீகி ராமாயணம். சீதையைப் பிரிந்து தீனனாக இருந்த ஸ்ரீராமனுக்கு அருள் புரிந்தவர் மகாதேவன்.)

$$$

Leave a comment