சிவகளிப் பேரலை – 4

-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்

தமிழ் வடிவமும் விளக்கமும்)

*

4. உயர்தனி இறைவன்

.

ஸஹஸ்ரம் வர்தந்தே ஜகதிவிபுதா: க்ஷுத்ரதா

ந மன்யே ஸ்வப்னே வா ததனுஸரணம் தத்க்ருதலம்/

ஹரி-ப்ரஹ்மாதீனாமபி நிகடபாஜா-மஸுலம்

சிரம் யாசே ச’ம்போ சி’வ தவ பதாம்போஜனம்//

.

ஆயிரம் தெய்வமுண்டு அற்பமாம் வரம்தர

ஆழ்கனவிலும் நினையேன் அவர்தம் தொழுகை

அரிபதுமன் அருகிருந்தும் அறியவொண்ணா சாம்பனே

அரிதாம்நின் திருவடி தொழுதலை வேண்டுவனே.

.

     மனிதர்கள் வழிபடுகின்ற ஆயிரக்கணக்கான கடவுளர்கள் இருக்கிறார்கள். அந்தத் தெய்வங்கள் எல்லாவற்றிலும் சிவரூபமே உயர்வானது என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைத்தன்மையின் முழுமையான வடிவமே சிவம். பெண்மைக்குச் சரிபாதி தந்தவர் சிவபெருமான். அனைத்துத் தேவர்களின் உறைவிடமாகத் திகழ்பவரும் அவரே. உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று விதங்களிலும் வழிபடப்படுகின்ற ஒரே இறைவன் சிவன் மாத்திரமே. வரம் கொடுப்பதிலும் சிவபெருமானுக்கு ஈடு இணையில்லை. ஏனென்றால் பிற தெய்வங்கள்கூட அவரது வரங்களால்தான் உயர்ந்துள்ளன, உய்கின்றன. இதனை உணர்ந்துதான், அற்பமான வரங்களைத் தர ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும் ஆழ்கனவில்கூட அவர்களை நினைத்துப் பார்க்க மாட்டேன் என பழுத்த சிவபக்தராக ஆதிசங்கரர் கூறுகிறார்.

     விஷ்ணுவும் தாமரையில் வீற்றிருக்கும் பிரும்மாவும் சிவபெருமானுக்கு மிக அருகிலே இருந்தும்கூட அவர்களாலும் அறியப்படாத திருவடித் தாமரைகள் சிவபெருமானுடையவை. அத்தகு சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் திருவடிகளை மனத்தால் நினைந்து தொழுவதையே யான் வேண்டுவேன். வேறு தெய்வங்களை நினைத்தும் பாரேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ‘சிவனொடு ஒக்குந் தெய்வம் தேடினும் இல்லை’  என்று திருமந்திரம் மொழிவதையும், ‘ஐயனே உனையன்றி ஒருதெய்வம் கையினால் தொழவும் கருதேன் கண்டாய்’ என தாயுமானவர் பகர்வதையும், ‘தொழுவேனோ பிறரைத் துதிப்பேனோ’ என்று திருவாசகம் வினவுவதையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.

(அலைகள் தொடரும்)

$$$

Leave a comment