திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்!

முருகனை எதிர்த்தவர்கள் உச்ச நீதிமன்றத்தால் வதம்

-வ.மு.முரளி

திருப்பரங்குன்றம் தீப வழக்கு  திருமுருகன் திருவருளால் அதிரடியான திருப்பம் கண்டுவிட்டது. மலையுச்சியில் ஒருமுறை தீபம் ஏற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை ஆணவத்துடன் மீறிய தவெக அரசு, நீதியின் முன்பு தலை குனிந்து நிற்கிறது. இறுதியாக, இப்போது, திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் நாளை (நவ. 28ஆம் தேதி) கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும், அதற்கு உதவும் வகையில் சி.ஆர்.பி.எஃப். மத்தியப் படைகள் திருப்பரங்குன்றம் மலையின் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தீபம் ஏற்ற மறுத்த, அதற்கு உடந்தையாக இருந்த அனைவரும் டிச. 15ஆம் தேதி நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். இது முருகனின் திருவருள். 

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத் தூணில் நாளை திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். முருக பக்தர்களின் நூறாண்டுகாலப் போராட்டம் இத்துடன் சுபமான முடிவுக்கு வருகிறது.

ஒரு முன்னோட்டம்…

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில்  நவ. 20ஆம் தேதி ஒருநாள் மட்டும் கார்த்திகை தீபத் திருநாளன்று கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டிருந்தது. ஆனால்,  பல கோடி முருக பக்தர்களின் நம்பிக்கையை மிதிக்கும் வகையில் இந்த ஆண்டும் தீபத் தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. சென்ற ஆண்டைப் போலவே  திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலின் மோட்சதீப மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

இந்த விஷயம், சட்டத்தின் ஆட்சிக்கு தமிழக அரசே சவால் விடுவதாக அமைந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசே மீறினால், சாமானிய மக்கள் நீதித்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.  ஒரு மாநில முதல்வரே, நீதிமன்றத் தீர்ப்புகளைப் புறந்தள்ளி ஒரு தரப்பினருக்கு (ஹிந்துக்களுக்கு) எதிராக பாரபட்சமாக நடப்பாரானால், அனைவருக்கும் சமமான நிர்வாகம் என்ற பதவிப்பிரமாண உறுதிமொழி பொய்தானா என்று ஹிந்து மக்கள் வெம்பினர்.

நீதிக்குத் தலைவணங்கி அமைதியாக இருப்பதுதான் ஹிந்து பக்தர்கள் செய்யும் பிழையா? யாருக்கும் கட்டுப்படாத வன்முறையாளர்களுக்கு மட்டும் தான் அரசு நிர்வாகம் செவி சாய்க்குமா? இவ்வாறெல்லாம் கேள்விகள் எழுந்தன. தமிழகத்தில் கவிந்திருக்கும் போலி மதச்சார்பின்மையின் ஆபத்தான விளைவை திருப்பரங்குன்றத்தில் தமிழக அரசு அரங்கேற்றியது. தறிகெட்டுத் திரியும் இந்த முட்டாள் அசுரனுக்கு மூக்கணாங்கயிறு போடும் வாய்ப்பாகவே அந்த மோசடிச் சம்பவம்  நிகழ்ந்தது என்பதை இப்போது எம்பெருமான் கார்த்திகேயன் உணர்த்தி இருக்கிறார்.

தொடரும் போராட்டம்:

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று ஹிந்து பக்தர்கள் பல்லாண்டுகளாகப் போராடி வருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. அண்மையில், 1990களில் இந்தப் போராட்டம் மீண்டும் உயிர்பெற்றது. கடந்த ஆண்டு  மதுரையைச் சேர்ந்த ராம. ரவிகுமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடுத்தபோது, இந்த விவகாரம் திருப்பம் கண்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரரின் கோரிக்கையை கோயில் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு டிச. 1-ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், அந்த உத்தரவை முந்தைய திமுக அரசு நிறைவேற்றாமல் நயவஞ்சகம் செய்தது.

மேலும் அந்தத் தீர்ப்பை எதிர்த்து, மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜி. ஜெயசந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டன. விசாரணையின் நிறைவில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, இரு நீதிபதிகள் அமர்வு கடந்த 2026 ஜன. 6-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாறியதால் காட்சிகள் மாறும் என்று முருக பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்; தவெக அரசு முந்தைய திமுக அரசு போல ஹிந்துக்களுக்கு  ஓரவஞ்சனை காட்டாது என்றே நம்பி இருந்தனர். அந்த நம்பிக்கையில் ஜோசப் விஜய் அரசு மண்ணள்ளிப் போட்டது.

கார்த்திகை தீபம் நெருங்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிர்வாகம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்டவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த்குமார், விபுல் எம். பஞ்சோலி அமர்வில் விசாரிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக விசாரிக்க நேரமின்மையைக் கருதி, தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், என்றபோதும் “நிகழாண்டு கார்த்திகை தீப திருநாளன்று (நவ. 24) மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கோயில் நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும்” என கடந்த நவ. 20ஆம் தேதி இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரிக்கப்படவே இல்லை. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்பாட்டு நிலுவையில் இருந்தது; மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது. திருப்பரங்குன்றத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படும் என முருக பக்தர்களும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முடக்கும் விதமாக, திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் போலீஸைக் குவித்து, முந்தைய திமுக அரசு போலவே நாடகமாடியது.

இந்நிலையில்,  மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை எதிர்த்து தாக்கலான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி கொண்ட அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியரும் அதற்கு ஆவன செய்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தார்.

எனினிம், தீபத்தூணில் தீபம் ஏற்றாமல், தவெக அரசு மோசடி செய்தது. நவ. 24ஆம் தேதி, கார்த்திகை தீபத் திருநாளில், தீபத் தூண் பக்கமே ஒருவரும் செல்லாத வகையில் அரசு செயல்பட்டதுடன், உச்ச நீதிமன்ற உத்தரவையும் காலில் போட்டு மிதித்தது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டியும், அறங்காவலர் குழுவின் முடிவைக் காட்டியும் இந்த வரலாற்றுத் தவறை ஜோசப் விஜய் அரசு செய்தது.

நமது மக்களாட்சி முறையில் உச்ச நீதிமன்றம் உயர்ந்த அதிகாரம் படைத்தது. இந்திய அரசியல் சாசனத்தின் உண்மையான காவலர் உச்ச நீதிமன்றம் தான். அந்த நீதிமன்றத்தின் உத்தரவையே தவெக அரசு தமிழகத்தில் காலடியில் போட்டு மிதித்தது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, திட்டமிட்ட மோசடியும் கூட. நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால் இது.

முந்தைய திமுக அரசு உயர் நீதிமன்ற உத்தரவை 2025இல் மதிக்கவில்லை. என்றபோதும், அதற்கு உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பிருந்ததால் உச்சகட்ட சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிப் பிழைத்தது. அதேசமயம் உயர் நீதிமன்ற அவமதிப்பிற்காக மாநில அரசு அதிகாரிகள் மதுரை அமர்வில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை மறக்க முடியாது. தற்போது தவெக அரசு 2026இல் செய்தது உச்ச நீதிமன்ற அவமதிப்பு. எனவேதான் சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி:

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தமிழக அரசும் மதுரை மாவட்ட ஆட்சியரும் அவமதித்ததை அடுத்து, பல்வேறு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை நவ. 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் தமிழக அரசை மிகவும் கடுமையாக விமர்சித்தனர்.

“தற்போதைய சூழலில், ‘ஐயோ!’ (ALAS!) என்ற சொல்லைப் பயன்படுத்துவதே மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. இதற்கான காரணங்களை நாங்கள் கீழே விளக்குகிறோம்; மிகுந்த வேதனையுடனும் மன உளைச்சலுடனும் இதைக் குறிப்பிடுகிறோம். இந்தச் சூழல் அரசியலமைப்புச் சார்ந்த குழப்பத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால், இப்போதே இரும்புக்கரம் கொண்டு இதை எதிர்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றுதான் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பையே வாசிக்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் கூறியதாவது:

ஜனநாயகச் சமூகத்தில் ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதே மிக உயர்ந்தது…. இந்திய அரசியலமைப்பின் 144-வது பிரிவு, இந்தியாவின் எல்லைக்குள் உள்ள அனைத்து நிர்வாக மற்றும் நீதித்துறை அதிகாரிகளும் உச்ச நீதிமன்றத்திற்குத் துணை நிற்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது. அரசியலமைப்பு வழங்கிய இந்த ஆணையைச் சிதைக்கும் எந்தவொரு நேரடி அல்லது மறைமுக முயற்சியையும், தேவையற்ற இரக்க உணர்வுக்கு இடமளிக்காமல், மிகக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டும். நீதியின் நீரோடையைக் களங்கப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதே நாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தியாகும்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்பது, பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல. எனவே, ஒரு உத்தரவு மீறப்படும்போது, ​​நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அரசியலமைப்பின் 144-வது பிரிவு, சட்டத்தை மீறுபவர்களை நீதியின் முன்பு நிறுத்த வழிவகை செய்கிறது. ‘நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்’ (Contempt of Court Act) நீதித்துறை மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது; முறையான நீதி நிர்வாகம் அவசியமான சூழலில், அரசியலமைப்பு நீதிமன்றங்களின் கையில் இது ஒரு வலிமையான ஆயுதமாக விளங்குகிறது.

நவம்பர் 20 அன்று நாங்கள் பிறப்பித்த உத்தரவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இடைக்காலத் தடை விதித்தபோதும், ‘தீபத்தூண்’ (Deepathoon) பகுதியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தோம்.

ஆனால், ‘பி.என்.எஸ்.எஸ்.’ (BNSS) சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர்   தடை உத்தரவுகளைப் பிறப்பித்திருந்த நிலையில், அந்தத் தடை உத்தரவுகளை எதிர்த்தும், ‘தீபத்தூண்’ நிகழ்வைக் காண அனுமதி கோரியும் சில பக்தர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,   ‘நவம்பர் 20-ஆம் தேதியிட்ட நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படும்’ என்று உறுதியளித்திருந்தார்.

இருப்பினும், நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு மாறாக, அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தேவஸ்தான நிர்வாகமும் இணைந்து,  உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியிலேயே தீபம் ஏற்றியுள்ளனர். இது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் மீறிய செயல். அரசு நிர்வாக அதிகாரிகளின் இந்தச் செயல், மதுரை மாவட்டத்தில் நிர்வாகச் சீர்குலைவு நிலவுவதையே வெளிப்படுத்துகிறது.

தேவஸ்தான வாரியம், இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை தவறான விளக்கங்கள் மூலம் மீற முயன்றதுடன், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு எதிரான  தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், அறங்காவலர்கள் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இது அவர்களின் தரப்பிலிருந்து நிகழ்ந்த கடுமையான விதிமீறலாகும்; இதற்கு மற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களின் அறிக்கை, வெளிப்படையாகவே உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

நீதிமன்றம் என்பது அரசியலமைப்பின் அதிகாரத்தைக் கொண்டு இயங்கும் அமைப்பு. வேண்டுமென்றே விதிகளை மீறுவதை கவனிக்காமல் விட்டுவிட முடியாது; அது உறுதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தீபத்திருநாளில் விளக்கேற்றத் தவறியது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அப்பட்டமாக அவமதித்ததைத் தான் காட்டுகிறது…

இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரியிருந்தாலும், நடந்த நிகழ்வுகளுக்கான முழுப் பொறுப்பையும் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயன்றுள்ளார். நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு முழுமையான அதிகாரங்கள் உள்ளன. இந்த முதற்கட்ட அறிக்கையில் நாங்கள் திருப்தியடையவில்லை.  இந்த அறிக்கை  ‘முதலைக் கண்ணீர்’ வடிப்பது போல உள்ளது. நவம்பர் 20-ஆம் தேதியிட்ட எங்கள் உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டிருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எனவே, தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர், காவல் துணை ஆணையர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் /செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர், அக்கோயிலின் அறங்காவலர்கள் ஆகியோருக்கு (மொத்தம் 13 பேர்) அறிவிப்பாணை அனுப்ப உத்தரவிடுகிறோம்.  மேற்கூறிய அனைவரும் டிசம்பர் 15 அன்று   நெஅடைபெறும் விசாரனையின்போது நேரில் ஆஜராக வேண்டும் –  என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு:

அது மட்டுமல்ல,  திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் நவ. 28ஆம் தேதி தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அதிரடி (மீண்டும்) உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஏதுவாக திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும்  மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தவும் உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க உள்ளூர் போலீஸ் தவறிவிட்டதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை சிஆர்.பி.எஃப். வீரர்கள் உடனடியாக ஏற்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

உச்சிப்பிள்ளையார் தீப மண்டபத்தில் நவ. 24இல் ஏற்றிய தீபத்தில் இருந்து தீபஒளியை எடுத்துச் சென்று மலையில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிகழ்வில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. சென்ற நவ. 20இல் அளித்த உத்தரவின்போது பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை விதித்த அதே உச்ச நீதிமன்றம் இப்போது, மலைமீது பக்தர்கள் செல்லலாம் என்றும், மலையின் எப்பகுதியிலும் தீபம் ஏற்றலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

மலையுச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற  உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் 2025 டிச. 1ஆம் தேதியிட்ட தீர்ப்பின் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையும் நீக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரிக்கப்பட இருந்த தமிழக அரசின் மேல் முறையீட்டு வழக்கின் முடிவு என்னவாக இருக்கப் போகிறது என்பதை இப்போதே யூகிக்க முடிகிறது. தங்களை முட்டாளாக்க முயன்ற மோசடி அரசியல்வாதிகளின் திமிரால் தான், இந்தப் பதிலடியை உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

மேலும், மாநில அரசால் மோசடியாக நியமிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்துவிட்டது. திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க இரு ஓய்வு பெற்ற  நீதியரசர்களையும் உச்ச நீதிமன்றம் நியமித்து உள்ளது. முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் (மேகாலயா உயர் நீதிமன்றம்) , வி.பாரதி (சென்னை உயர்நீதிமன்றம்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் தர்காவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், எந்தத் தடங்கலும் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதான் சண்முகநாதரின், சுவாமிநாதரின், வடிவேலரின், கந்தசாமியின் திருவுள்ளம். அதிகார ஆணவத்திலும், போலித்தனமான செக்யூலர் கனவிலும், பலகோடி ஹிந்துக்களின் பக்தியையும் நம்பிக்கையும் கொச்சைப்படுத்தி மகிழ்ந்த அசுரர் கூட்டத்திற்கு சம்மட்டி அடியை உச்சநீதிமன்றம் வாயிலாக முருகனே வழங்கியுள்ளார் என்று பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

பக்தர்களின் பல்லாண்டுகால தவம் இப்போது நிறைவேறி இருக்கிறது. இதற்காகப் போராடிவரும் பல லட்சம் ஹிந்து இயக்க செயல்வீரர்களுக்கும், இந்தப் பணியில் தன்னை பலிகொடுத்த ஹிந்து முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் அமரர் ராஜகோபாலன் (1994),  சென்ற ஆண்டு தன்னையே எரித்துக் கொண்ட அமரர் பூரணசந்திரன் ஆகியோரை இந்த நல்ல தருணத்தில் நினைவு கூர்வோம்!

தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் சதி செய்த ஜோசப் விஜய் அரசு இனியும் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதே பலகோடி மக்களின் எண்ணம். உச்ச நீதிமன்றத்தின் அடுத்தகட்ட விசாரணையில் இதற்கான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்று அந்த சரவணபாலனை வேண்டுவோம்!

திருச்செந்தூரில் கடந்த ஐப்பசி சஷ்டியில் சூர சம்ஹாரம் நிகழ்த்தினார் தேவசேனாதிபதி. இப்போது மீண்டும் வேறொரு வகையில் திருப்பரங்குன்றத்தில் சூர சம்ஹாரம் நிகழ்த்தி இருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி. அவரது சூர வதங்கள் தொடர வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

காக்க காக்க கனகவேல் காக்க!

  • நன்றி: விஜய பாரதம்

$$$

Leave a Reply