பாரத முருகன்- 2

-ஆதிசைவன் இரா.இராம்குமார்

தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 2…
திருப்பரங்குன்றம் முருகன்

காண்க: பகுதி-1

முருக வழிபாடு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா, இல்லை பாரதம் முழுமைக்கும் பொதுவானதா என்று ஆராய்ந்து பார்க்கையில், பெரும் வியப்பிற்குரிய செய்தி ஒன்று காணக் கிடைக்கிறது.  

புலன் அழுக்கற்ற அந்தணனாளன், பொய்யா நாவிற் கபிலன் என்றழைக்கப்படும் சங்கப் புலவர் கபிலர் இயற்றிய தொன்மை வாய்ந்த நூல்  ‘குறிஞ்சிப் பாட்டு’ என்பதாகும். அதில் குறிஞ்சி நிலத்தின் அழகினை, வீரத்தினை, நாகரிகத்தினை, பண்பினை, தொன்னூற்றொன்பது வகையான அரிய பூ வகையினைக் காணலாம். இந்நூலினை அவர் இயற்றுவதற்கான காரணம் யாதெனில், வடதேசத்து அரசன் பிரகதத்தன் என்பவன் தென்தேசத்துப் புலவர் பெருமானாகிய கபிலரிடம் தமிழ் கற்றான். அவனுக்கு நம் தமிழின் நயங்களைப் புலப்படுத்துவதற்காகவே குறிஞ்சிப் பாட்டு என்றொரு நூலை இயற்றினார் கபிலர். 

இதை இங்கே கூறக் காரணம் கபிலரை ஆதரித்த குறிஞ்சி நில மன்னனின் பெயர் வேள்பாரி. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். 

இக்குறிஞ்சிப் பாட்டில் குறிஞ்சி நிலத்தின் தலைவனான வேள்பாரியின் வரலாற்றினைக் கூறுகிறார் கபிலர். இதில்தான் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. 

அது என்னவென்றால் “இருங்கோவேளின்” முன்னோர்கள் 49 தலைமுறைகளாக துவரை என்னும் துவாரகை நகரை ஆண்டு வந்ததாக செய்தி தெரியவருகிறது. அதாவது மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தை ஆண்டவனும், முருகப் பெருமானை தங்கள் நிலத்தின் தெய்வமாகக் கொண்டவனும், சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு நிகரான கடையேழு வள்ளல்களுமாகிய தமிழ் வேளிர்கள் என்பவர்கள் ஆதித் தமிழர்களே இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்.

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், பிராமண சமுதாயமும் அச்சமுதாயத்தைச் சேர்ந்த பலரும் சங்க காலத்திலிருந்தே தமிழுக்கு பெருந் தொண்டாற்றியுள்ள தமிழர்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. 

வேளிர் குலத்தினர் வட பாரதத்தின் துவாரகை (துவாரபதியை) ஆண்ட யாதவ மரபில் தோன்றியவர்கள் என்றும், அகத்திய முனிவரின் வழிகாட்டுதலின்படி தென்னகம் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் என்றும் அறிஞர் மு.ராகவையங்கார் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தில் புகழ் பெற்ற ‘கடை ஏழு வள்ளல்கள்’ எனப்பட்ட பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி ஆகிய அனைவரும் வேளிர் குடியைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

யாதவ குலத்தின் ஒரு கிளையினராக கருதப்படும் இவர்கள் வடபாரதத்தின் “யௌதேய” சமுதாயத்தைச் சேர்ந்த படைவீரர்கள் ஆவர். பாணினியின் ‘அஷ்டாத்யாயி’ மற்றும் மகாபாரதத்தில் யௌதேயர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

யௌதேயர் என்போர், கங்கை மற்றும் சிந்து நதிச் சமவெளிகளுக்கு இடையே, தற்கால ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் வாழ்ந்த பண்டைய வீரக் குலத்தினர் ஆவர். ‘போர்வீரர்கள்’ எனப் பொருள்படும் ‘யுத் அல்லது யோதா’ என்ற சொல்லிலிருந்து தோன்றிய இவர்கள், யெளதேய மற்றும் யாதவ என்று மருவி அழைக்கப்படுகின்றனர்.

ஸ்கந்தக் கடவுளை தங்கள் தெய்வமாக வழிபட்டு வந்த இவர்கள் முருகக் கடவுளுக்கு (கார்த்திகேயன்) முதன்முதலில் நாணயங்களை வெளியிட்டவர்களாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அந்த நாணயங்களில் முருகப் பெருமானின் திருவுருவமும் மயிலும் யானையும் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் யாதவர்களில் ஒரு கிளையினர் என்றும், இம்மக்களின் தலைவர் யது குல மன்னர்களில் ஒருவரான சாத்யகி என்றும் அவர் பகவான் கிருஷ்ணருடைய உறவாகவும் கருதப்படுகிறார்.  

இலக்கண அறிஞர் பாணினி, யௌதேயர்களை ‘ஆயுதஜீவி சங்கம்’ (ஆயுதங்களை நம்பி வாழும் போர்வீரர்களின் கூட்டமைப்பு) என்று குறிப்பிடுகிறார். இவர்கள் “கோ ஹரனம்” எனும் “ஆநிரை கவர்தலில்” ஈடுபட்டு வந்தனர் என்ற குறிப்பும் காணக் கிடைக்கின்றன. இவர்கள் வெளியிட்ட செப்பு நாணயங்களில் பிராமி எழுத்துமுறையில் “யௌதேய கணஸ்ய ஜெய” (Yaudheya Ganasya Jaya) என்று பொறிக்கப்பட்டுள்ளது.இதன் பொருள் “யௌதேய குடியரசுக்கு வெற்றி” என்பதாகும். ஒரு தனி மனித மன்னரின் பெயரைப் பொறிக்காமல், ஒட்டுமொத்தக் குடியரசின் பெயரைப் பொறித்தது இவர்களின் ஜனநாயகத் தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாகும். 

ஆக, மிகச் சிறந்த போர் படை வீரர்களாகிய இவர்களே….

கார்த்திகேயனை தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வந்த இவர்களே….

பகவான் கிருஷ்ணருடைய சொந்தமாகக் கருதப்பட்ட இவர்களே….

மகாபாரத காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் வந்து குடியேறி களம் அமைத்து வெறியாட்டம் ஆடி முருகனை வழிபட்டு வந்த வேளிர் சமுதாயம் என்பது தெரிய வருகிறது.

இச்சமுதாயம் தமிழ் நாட்டிற்கு கடையேழு வள்ளல்கள் மூலமாகவும் பல தமிழ் இலக்கிய நூல்களை உருவாக்கியதன் மூலமாகவும் பெருந் தொண்டாற்றி உள்ளது என்பதனை மறந்துவிடுதல் கூடாது. 

‘பெருங்கதை’ நூலாகிய உதயணன் கதையை எழுதிய ‘கொங்குவேள்’ என்பவர் இந்தக் குலத்தைச் சேர்ந்தவரே ஆவார். இடைச் சங்க காலத்தைச் சேர்ந்த இக்கதையை இயற்றிய இவர் மூலம் இந்த யாதவ (யௌதேய) வேளிர் சமுதாயமானது இடைச் சங்க காலத்திற்கு முன் இருந்தே தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பதுவும் தெரிய வருகிறது. 

அதேபோல வடமலையாள நாடுகள் கொங்கு தேசப் பகுதிகளில் கூட இந்த வேலன் வழிபாடு நடந்து வருவது கண்டு ஆராயும் போது கொங்கு நாடு என்பது கங்கை நாட்டின் மருவிய சொல்லே என்பதும் இங்கு வாழும் ‘கவுண்ட’ எனும் இன மக்கள் ‘கெளட’ என்ற இன மக்களே என்றும் இவர்கள் கெளட தேசம் எனக் கூறப்படும் கங்கைச் சமவெளியில் தற்போதைய பிகார், வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்த குடிகள் என்றும் தெரியவருகிறது.

தமிழகத்தில் தலைக்காடு (தளக்காடு) எனும் பகுதியை மையமாக கொண்டு ஆண்டு வந்த இவர்கள் கங்கர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் சீயகங்கன் எனும் அரசன் நன்னூல் ஆசிரியர் பவணந்தி புலவரை ஆதரித்து வந்தான் என்பது செய்தி. இவர்களும் கூட போர்த் தொழிலை செய்து வந்தனர் என்பதுவும், ஆநிரை கவர்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர் என்பதுவும் தெரிய வருகிறது. 

அடுத்ததாக வேலன் வழிபாட்டு முறையில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தொன்மையான இனம் தீயர் இனம். இவர்களைப் பற்றிய வரலாற்றினை அறியும் போதும் கூடுதல் வியப்பு மேலிடுகிறது. காரணம் தீயர்கள் எனப்படுபவர்கள் தற்போதைய ஈழவ ஜாதியினரே ஆவர். இவர்களும் கூட வடபாரதத்து குடிகளே ஆவர்.

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற ‘சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலஜி’ [CSIR-CCMB] ஆய்வு நிறுவனம், கேரளம் மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய போர்க்குடி சமூகங்களின் மரபணுக்கள் குறித்து விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியது.

விஞ்ஞானி டாக்டர் குமாரசாமி தங்கராஜ் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு: 

1. வடமேற்கு இந்தியத் தொடர்பு:

கேரளாவின் தீயர் அல்லது ஈழவர் கர்நாடகாவின் பண்ட்ஸ், ஹொய்சாளா ஆகிய சமூக மக்களின் ரத்த மாதிரிகளை (213 நபர்கள்) கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சமூகங்கள் மரபணு ரீதியாக தங்களுக்கு அருகில் வாழும் பிற தென்னிந்திய மக்களை விட, வடமேற்கு இந்தியாவில் (பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்) வாழும் மக்களுடன் அதிக நெருக்கத்தைக் கொண்டுள்ளனர்.

2. ஈரானிய வம்சாவளி:

தீயர் மற்றும் நாயர் சமூகத்தினருக்கு வடமேற்கு இந்தியாவின் கம்போஜ் மற்றும் குஜ்ஜார் சமூகங்களைப் போலவே ஈரானிய மரபணுப் பின்னனி அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

வெண்கலக் காலம் அல்லது அதற்கு முந்தைய காலகட்டத்தில் மத்திய ஆசியா/ஈரான் பகுதியிலிருந்து வடமேற்கு இந்தியாவுக்கு வந்த குழுக்களின் மரபணுத் தாக்கம் இவர்களிடம் உள்ளது. 

3. பெண்களால் வழிநடத்தப்பட்ட இடப்பெயர்வு:

மனிதர்களின் தாய்வழி மரபைக் காட்டும்  ‘மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ’ சோதனையில், இவர்களிடம் மேற்கு யூரேசிய தாய்வழி மரபணுக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. 

பொதுவாக ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் படையெடுத்துச் செல்லும் ஆண்கள் மட்டுமே இடம்பெயர்வார்கள். ஆனால், தீயர் சமூகத்தினர் தங்களது ஒட்டுமொத்தக் குடும்பத்துடனும் (பெண்களுடனும்) வடமேற்கிலிருந்து தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்துள்ளனர் என்பதை இது காட்டுகிறது. 

4. இடப்பெயர்வு பாதை:

இந்த மக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து மத்திய இந்தியாவின் கோதாவரி ஆற்றுப் படுகை வழியாகப் பயணித்து, கர்நாடகா மற்றும் கேரளாவின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியான மலபார் மற்றும் கொங்கண் மண்டலங்களை வந்தடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சங்க கால செய்தியின் அடிப்படையில் தீயர்களும் ‘கழகம்’ எனும் களம் அமைத்து முருக வழிபாடு செய்து வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் தாராளமாக இருக்கின்றன.

எனவே உண்மை ஒன்றுதான். அது யாருடைய விருப்பத்திற்காகவும் மாறாது.

முருகன் என்ற தெய்வம் தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி பாரதம் முழுவதும் பல பெயர்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழிபடப்பட்டு வருகிறார். வட பாரதத்தில் அவர் ஸ்கந்தன், கார்த்திகேயன், குமாரன், சுப்பிரமணியன், ஷண்முகன், மகாசேனன் போன்ற பல திருநாமங்களால் போற்றப்படுகிறார்.

வேதங்களிலும், இதிகாசங்களிலும், புராணங்களிலும் முருகன் பற்றிய குறிப்புகள் பல உள்ளன. கீதையில் கிருஷ்ணர் “சேனைத் தலைவர்களில் நான் ஸ்கந்தன்” என்று கூறுகிறார்.

 மகாபாரதம், ஸ்கந்த புராணம், சிவ புராணம், காளிதாசனின் குமார சம்பவம் உள்ளிட்ட நூல்கள் அவரை பாரத தேசத்தின் தெய்வமாகவே எடுத்துரைக்கின்றன. தமிழகத்தின் திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் கந்த புராணமும் அவ்வாறே பறைசாற்றுகின்றன. 

அருணகிரிநாதர், சிதம்பரம் சுவாமிகள், கச்சியப்ப சிவாச்சாரியார், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள் என,  வள்ளலார் முதல் கிருபானந்த வாரியார் வரை முருகனையே ஸ்கந்தனாகவும் கார்த்திகேயனாகவும் சுப்ரமணியனாகவும் வழிபட்டு நற்கதி அடைந்த வரலாற்றை நாம் மறந்து விடக் கூடாது.

மேலும் இது யாருடைய கற்பனையும் அல்ல; நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் மரபின் சாட்சி.

மேலும், வடக்கு இமயத்தில் இருந்து தென்னக குமரி வரை, மேற்கே துவாரகையில் இருந்து கிழக்கே பூரி வரை முருகனின் ஆலயங்கள் அமைந்துள்ளன. காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முருக வழிபாடு இன்று வரை தொடர்கிறது. பெயர்கள் மாறியிருக்கலாம்; ஆனால் வழிபடும் தெய்வம் ஒருவரே.

அப்படியிருக்க, “முருகன் தமிழ்நாட்டிற்கு மட்டும் சொந்தமானவர்” என்று கூறுவது நியாயமா? அல்லது அறியாமையா? இல்லை திட்டமிட்ட வரலாற்றுத் திரிப்பா? இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டியவர்கள், அந்த அயோக்கியத்தனமான கருத்தைப் பரப்புபவர்கள்தான்.

தமிழர்களுக்கு முருகன் மீது தனித்துவமான பக்தி இருப்பது உண்மையே. சங்க இலக்கியங்கள் அதனைப் பெருமையாகவும் பதிவு செய்கின்றன. ஆனால் தமிழர்களின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதற்காக முருகனை பாரதத்தின் பிற பகுதிகளிலிருந்து பிரித்துக் காட்டுவது வரலாற்றுக்கும் தமிழரின் அறிவுச் சிறப்பிற்கும் எதிரான செயல்.

உண்மையை ஏற்க மறுப்பவர்கள் ஆதாரங்களை மறைக்கலாம்; ஆனால் ஆதாரங்களை அழிக்க முடியாது. சான்றுகளும் ஆதாரங்களும் கோவில்களில் இருக்கின்றன; புராணங்களில் கூறப்படுகின்றன; இலக்கியங்களில் பேசப்படுகிறன; நமது வழிபாட்டின் சாட்சியாக இருக்கின்றன. 

எனவே, உணர்ச்சியால் அல்ல, ஆதாரங்களால் பேசுவோம். கருத்துக்களால் அல்ல, சான்றுகளால் நிரூபிப்போம். முருகன் தமிழரின் இதயத் தெய்வம் மட்டுமல்ல; பாரதம் முழுவதும் போற்றப்படும் சநாதன மரபின் ஒளிவிளக்காக விளங்கும் பாரத தெய்வம் என்பதே வரலாறு பதிவு செய்த உண்மை.

“தோள் வற்றி இறந்து போனாலும் சான்றாண்மை குன்றாமை தமிழனின் இயல்பு” என்பதனை உணர்ந்து தக்கது எது தகாதது எது என்று சிந்தித்து அறிவுடைய சமுதாயமாக நாம் வாழ்வது நம் முன்னோர்களுக்கு செய்யும் நன்றிக் கடன்.

“என் பெறினும் பால் பற்றிச் சொல்லா விடுதல்” என்ற நடுவிநிலைமையைக் கைக்கொண்டு எத்தனை பெரிய ஆதாயமோ அல்லது வெகுமதியோ தனக்கு கிடைக்கும் என்று தெரிந்தாலும் கூட ஒருதலைப் பட்சமாக, பாரபட்சமாக இல்லாமல் நீதி தவறாமல் வாழ்வதும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழனின் பெருமையைப் பார் போற்றும் படி செய்து வாழ்வதும் நம் கடமையே ஆகும். 

வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
வாழ்க வாழ்க வாரணத்துவசம்!
வாழ்க வாழ்க வேலாயுதனார்!
வாழ்க வாழ்க செந்தமிழ் வாழ்க!
வாழ்க வாழ்க நற்றமிழினம் வாழ்க!
வாழ்க வெல்க பாரத மணித் திருநாடு!!

(நிறைவு)

$$$

Leave a comment