-ஆதிசைவன் இரா.இராம்குமார்
தமிழகம் ஆன்மிகபூமி. இதனை மாற்றத் துடிக்கும் கயவர்கள், இதன் ஆணிவேரான முருகக் கடவுள் மீதே பிரிவினைச்சாயம் ஏற்ற முற்படுகின்றனர். அவர்களின் நயவஞ்சகத்தை இலக்கியங்களின் உறுதுணையுடன் தோலுரிக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினரான ஆதிசைவன் இரா.ராம்குமார். இது பகுதி- 1…

தமிழ்நாட்டில் சில காலமாக பிரிவினை சக்திகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மொழியாலும் இனத்தாலும் மதத்தாலும் இருந்து வந்த பிரிவினை தற்போது வணங்கும் கடவுள் வரை வந்துள்ளது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரிய செய்தி மட்டுமல்ல, இது ஏன் நடக்கிறது என்று ஆழ்ந்து சிந்தித்தற்குரியதுமாகும். காரணம், தற்போதைய தமிழ் மக்கள் தங்கள் கடந்த கால வரலாறுகளை மறந்து அந்நிய மோகத்தில் திளைத்து தங்கள் அடையாளம் யாதென்றே தெரியாத ஒருநிலையில் தந்திரக்கார நரிகளின் சூழ்ச்சியால் அதனிடம் அகப்பட்ட சிங்கக்குருளைப் போன்று ஆகிவிட்டனர்.
கடவுள் மறுப்பாளர்களாகிய இந்தத் தந்திரக்கார நரிகள் சில அந்நிய மதப் பிரசாரகர்களின் தேவைக்கிணங்க இந்த சூழ்ச்சி வலையை விரித்து வருகின்றனர். அவர்கள் விரித்த இந்த சூழ்ச்சி வலை சாத்தியமானால் ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போல அவர்களின் அயோக்கியத் திட்டம் வாகை சூடிவிடும்.
- ஒன்று…. தமிழ்க் குடிகள் கடவுள் வழிபாடு அற்றவர்கள், மாறாக அவர்கள் தென்புலத்தார் வழிபாடு ஒன்றையே செய்து வந்தனர் என்பது.
- இரண்டு…. எப்படி மரியாள் மகன் ஏசுவோ அப்படியே கொற்றவை மகன் முருகன் என்று மத மாற்றத்திற்கான முன்னெடுப்பு.
- மூன்றாவது…. இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு ஒற்றுமை கூட கிடையாது என பிராந்திய வேறுபாட்டை வளர்த்தெடுப்பது.
ஒன்றுபட்ட பாரதத்தில் வேற்றுமை எனும் விஷத்தை தொடர்ந்து கக்கி வரும் இவர்கள் தற்போது உமிழும் கொடும் விஷம் ‘தமிழ் முருகன்’ என்ற பிரிவினை. அதாவது முருகன் தமிழ் நாட்டிற்கே உரியவன்; அவன் கடவுள் இல்லை; நடுகல் வழிபாட்டின் மூலம் நாங்கள் வணங்கி வந்த எங்கள் மூதாதையனே முருகன் என்றும் பிதற்றுகின்றனர்.
“திருந்திய தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சி” என்பதற்கிணங்க குற்றமற்ற பழைய குடிப்பிறப்பில் வந்து பெருமை பெற்ற சந்ததிகள் நாம் என்பதை என்றும் மறக்கக் கூடாது.
குற்றமற்ற நம் மூதாதையர்கள் முருகனை ஸ்கந்தனாகவும் சுப்ரமணியனாகவும் கார்த்திகேயனாகவும் குமரனாகவும் வழிபாடு செய்து வந்ததற்கான ஆதாரங்கள் நம் சங்க கால இலக்கியங்களிலே காணக் கிடைக்கின்றன. அவ்வாறு இருக்கையில், தெய்வத்தினிடையே பிரிவுகளையும் பேதத்தையும் கற்பிக்கும் இவர்களின் செயலானது “பழித்தவை சொல்லுதல் பேதையர் செயலே” என்பதை உறுதிப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட (அரக்கர்களாகிய) பொல்லாதவர்களைப் பொடிப் பொடியாக்கிட, நல்லோர் நினைவினில் நடனம் புரிந்திட, வீரமுரசு, நிசாளம், துடுமை, திமிலைப் போன்ற வீரமுழக்க வாத்தியங்கள் எட்டுத்திக்கும் முழங்கிட, சங்கொலி வானைப் பிளந்திட, “வரவர வேலாயுதனார் வருக! வருக வருக மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசைப் போற்ற! மந்திர வடிவேல் வருக வருக! சரவணபவனார் சடுதியில் வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா வருக! என்னை ஆளும் இளையோன் வருக!” என்று பண்ணிரு கையனும் ஆறுமுகனுமாகிய ஐயன் முருகனைத் துதித்து இவர்களின் இந்த கட்டவிழ்த்து விடப்படும் பொய்களைச் சுட்டெரித்திடும் வகையில் பல வரலாற்று சான்றுகள் மற்றும் ஆய்வுகளை இங்கே பார்ப்போம்.
திரிபு வாதத்தின் மூலம்:
சில அறிவுப் பூரணர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல தமிழ் இலக்கியங்களை சில இடங்களில் தொட்டும் சில இடங்களை விட்டும் உள் நோக்கத்தோடு பல பொய்த் தகவல்களை நயம்பட உரைத்து சமுதாயக் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். அதற்கு இரையாவது நம் தமிழினமே. தமிழினத்தை மெல்ல அரிக்கும் கரையான் போன்றவர்களே இவர்கள்.
இவர்களின் வாதம் என்பது முருகன் வழிபாடு தமிழர்களின் வழிபாடு மட்டுமல்ல, அது மூதாதையர் வழிபாடு, முருகன் என்பவனை குழந்தை வடிவில் வழிபாடு செய்வது தவறு, முருகன் என்பவனை மீசையில்லாத குமரனாக ஆக்கியது தவறு, முருகனை ஸ்கந்தனாகவும் சுப்ரமணியனாகவும் கார்த்திகேயனாகவும் குமரனாகவும் வழிபாடு செய்வது தவறு, முருகன் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவர் என்பது தவறு, முருகனுக்கு மூத்தோன் விநாயகர் என்பது தவறு (காரணம், விநாயகர் வழிபாடு பிற்காலத்தில் வந்தது என்ற பொய்க் கூற்று), இமயமலையில் முருகன் பிறந்தான் என்பது தவறு என்றும் கூறி…. ‘குறிஞ்சி நிலத்தின் கடவுளாகிய முருகன் தமிழர்களின் கடவுள் மட்டுமே’ என்று பிரிவு வாதம் பேசுகிறார்கள்.
உண்மையை ஆராய்வோம்…..
இமயத்தில் பிறந்த முருகன்:
தமிழர்கள் நிலத்தை ஐந்தாகப் பகுத்து அதற்குரிய அடையாளங்களை ஒழுங்குபடுத்தி வைத்தனர். அவ்வகையில் ஐவகை நிலத்தில் முதன்மையாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுளாக முருகனை வைத்து வணங்கி வந்தனர். “சேயோன் மேய மைவரை யுலகமும்” என்கிறது தொல்காப்பியம். இதில் ‘மேய’ என்ற சொல்லுக்கு விரும்பிய, தங்கிய என்று பொருள். ஆக முருகன் விரும்பித் தங்கிய இடம் மலையும் மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலமே ஆகும். ஆகவே மலைகளுக்கெல்லாம் மலையாகிய இமயமலை முருகனின் பிறப்பிடம் என்று கூறுவது ஆராய்தலுக்கு உரியதேயன்றி புறந்தள்ளி கடந்து போகுதல் கூடாது.
ஆண்டு ஆண்டு ஆயினும்ஆக காண்தக முந்துநீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்தி கைதொழூஉப் பரவி காலுற வணங்கி நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ... -திருமுருகாற்றுப்படை: 250 - 255
இப்பாடலின் மூலம் இமயமலையில் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றி, சரவணம் எனும் தருப்பை சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவன் முருகன் என்பது தெரியவருகிறது.
சங்க காலத்திற்குப் பிந்தையது திருமுகாற்றுப்படை நூல் என்று இச்செய்தியை மறுக்கும் சிலர், முருகன் அக்னியைப் போன்றவன் என்ற செய்தி ஐங்குறுநூறு, பரிபாடல், புறநானூறு என பல பாடல்களில் கூறப்பட்டுள்ளதைக் காண வேண்டும். அக்னியைத் தாங்கும் சக்தி இமயம் போன்ற குளிர்ச்சி மிகுந்த இடங்களால் மட்டுமே முடியும். ஆகவே முருகன் இமயத்தில் பிறந்தான் என்பது உண்மையான கருத்தாகவே தென்படுகிறது.
சிவ பார்வதியின் மைந்தன்:
முருகன் கொற்றவையின் புதல்வனே. அவன் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்தவன் அல்ல என்று வாதிடுபவர்களுக்கு….
"ஆல்கெழு கடவுட் புதல்வமால் வரை;
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே;
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
-திருமுருகாற்றுப்படை: 256 - 258
என்பதன் மூலம், ஏறத்தாழ 1,700 ஆண்டுகளுக்கு முன்பே முருகன் சிவபெருமானுக்கும் பார்வதியாகிய கொற்றவைக்கும் பிறந்தவன் என்பது ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது.
மேலும் கொற்றவை சேய், பழையோள் குழவி, காடுகிழாள் குழவி, முதுகோதை என்று முருகனின் தாயைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. இதன் பொருள் கொற்றவை என்பது வனத்தாயாகிய துர்க்கையே ஆகும் என்று தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் சொல்கிறார்.
பழையோன் குழவி, முதுகோதை என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ‘புராதநா’ என்பதையே குறிக்கிறது. காரணம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மூன்று தேவர்களுக்கும் முதலானவள், அவர்களைவிட பழையவள், புராதானமானவள் என்ற செய்தி வடபாரத காவிய காலத்தில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன.
பொருநராற்றுப் படை (51-52 இல்) “காடு உறைக் கடவுள்” என்று வனதுர்க்கையை குறிப்பிடுகின்றது.
கலித்தொகை – “பெருங்காட்டுக் கொற்றி” என்றும், அகநானூறு ‘காடுறை கடவுள் மகன்’ என்னும் பொருளில் “காடுகெளு நெடுவேள்” என்றும் கூறுகிறது.
‘தக்கயாகப்பரணி’யில் பழையோள் எனும் பொருளில் “தொல்லை நாயகி” என்று குறிப்பிடுகிறது. அதேபோல அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் “மூவர்க்கும் மூனாள்” என்று பழையோள் ஆகிய மலைமகளை அழைக்கிறது.
இதுதவிர பரிபாடலில் முருகன் தோற்றத்தைப் பற்றி வரும் கதையானது, மகாபாரதம் சல்யா பருவத்தில் ஸ்கந்தன் பிறப்பு மற்றும் ஆறு நாட்கள் வளர்ச்சி போன்றவற்றை தழுவியே வருகிறது. “மாதிரம் ஆழல; எய்து அமரன் சேர்க்கும் பாகம்” (பரிபாடல்- 5: 26-50) என்பதன் மூலம் மேற்கூறிய செய்தியை அறியலாம்.
புறநானூறு 2 ஆம் பாட்டின் ஆசிரியராகிய முரஞ்சியூர் முடி நாகராயர் என்பவர் முதல் சங்க காலப் புலவர் என்று எண்ணப்படுகிறார். அவர் எழுதிய இப்பாடலில் பாரதப் போர் பற்றிய செய்திக் குறிப்பு காணப்படுகிறது. ஆகையால் முதல் சங்க காலத்தின் போதே பாரதப் போர் நடைபெற்றது என்பதை ஊகிக்கலாம். ஆகையால் மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள ஸ்கந்தன் பற்றிய விஷயங்களை எண்ணித் துணியலாம்.
ஆறுமுகம், பன்னிரு கைகள், ஆறுபடை வீடு:
பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு ஆறு முகங்கள் இருப்பதாகவும் பன்னிரு கைகளைக் கொண்டவனாகவும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
மலைபடுகடாம் மற்றும் பத்துப்பாட்டிலும் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளைப் பற்றிய குறிப்பு வருகிறது.
குறிப்பாக பரிபாடலில் முருகனுக்கு தேவாதி தேவர்கள் கொடுத்த பரிசுப்பொருட்களைத் தன்னுடைய பன்னிரு கைகளில் ஏந்திக் கொண்டான் என்ற செய்தி வடநூல்களில் கூட இல்லை.
பரிபாடல் நூலில், திருப்பரங்குன்றம் கோயில் பற்றியும் அந்தக் கோயிலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பற்றியும், தலங்களுக்கு வழிபாடு செய்ய வருபவர்களுக்கு அத்தல வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அது வரையப்பட்டுள்ளன என்ற குறிப்பும் காணக் கிடைக்கின்றன.
குறிப்பாக திருமுருகாற்றுப்படையில், திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர், திருஆவினன்குடி எனும் பழனி, திருவேரகம் எனும் சுவாமிமலை, சோலைமலை எனும் பழமுதிர்ச்சோலை, குன்றுதோறுமாடல் எனும் திருத்தணி ஆகிய ஆறுபடை வீடுகளைப் பற்றிய தகவல்கள் தாராளமாக இருக்கின்றன.
அதேபோல, திருவேங்கடமாகிய திருப்பதியிலும் கூட முருகப் பெருமானின் ஸ்தலம் ஒன்று இருந்ததாக சில பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. திருமலையில் உள்ள கோனேரி என்பது குகனேரியே ஆகும். அதனை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்றும் சொல்வார்கள்.
மேலும் சேயாற்றங்கரையில் நவிரமென்னும் மலையில் காரியுண்டிக் கடவுளின் கோயிலானது சேனைகளால் சூழப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
காரியுண்டக் கடவுள் என்றால் விஷத்தை உணவாக உண்ட நீலகண்டர். அது நஞ்சுண்ட தேவஸ்தலங்களுள் ஒன்றாகிய நவிரமலையை குறிக்கிறது. (நவிரமலை- பர்வதமலை). நன்னன் என்பவன் அந்த ஸ்தலத்தைப் பாதுகாப்பதற்காகவும் எதிரிகளாலும் அந்நிய மதத்தினராலும் நேரக் கூடிய இடையூறுகளைத் தவிர்க்கும் பொருட்டும், படைகளை அங்கே வைத்திருந்தானாம். பிற்காலத்தில் ஒவ்வொரு ஸ்தலமும் படைவீடாகிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்ற செய்தி நமக்குக் கிடைக்கிறது.
குறுந்தொகையில் முதல் பாட்டும் பரிபாடலில் எட்டுப் பாடல்களும் முருகக் கடவுள் மீது பாடப்பட்ட ஸ்துதி பாடல்கள். முருகனின் மகிமையை அதில் பாடியுள்ளார்கள். மதுரைக் காஞ்சியிலும் பரிபாடலிலும் திருப்பரங்குன்றம் திருவிழா பல இடங்களில் பாராட்டப்பட்டுள்ளது.
பழைய சங்க நூல்களில் திருவேரகம் எனும் சுவாமிமலையில் அந்தணர்களும் வேலன் வழிபாடு செய்பவர்களும் அங்கே வழிபட்டு வந்தனர் என்ற குறிப்பும் காணக் கிடைக்கிறது. இதன்மூலம் அனைத்து சமுதாயத்தினரும் முருகனை வழிபட்டு வந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.
குழந்தை முருகன்; குமரன் முருகன்:
முருகனை குழந்தை வடிவிலும் இளமைத் தோற்றத்துடனான குமரன் வடிவிலும் வழிபடுவது தவறு என்று சொல்வது முற்றிலும் பொருந்தாத விஷயம். காரணம் பல இடங்களில் சங்க நூல்களில் முருகனை “சேய்” என்றும் “சேயோன்” என்றும் “குழவி” என்றும் விளிக்கிறது. ஆகையால் சேய் ஆகிய முருகனை குழந்தை முருகனாக வழிபடுவதிலே எந்தத் தவறும் இல்லை. தாயுள்ளம் கொண்ட அத்துணை பெண்களும் முருகனைத் தங்கள் வீட்டுக் குழந்தையாகவே பாவித்து ஆராதனை செய்கின்றனர்.
அதேபோல முருகன் என்ற சொல்லிற்கு இளமை அல்லது அழகு என்ற பொருள் படும்படி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் ஒரு நூலையே எழுதியுள்ளார். முருகன் என்ற பெயருக்கு வேர்ச்சொல் முரு என்பதாகும். முரு என்ற வேர்ச்சொல்லின் வினைச்சொல் முருக்கிய என்பதாகும். முருக்கிய என்ற வினைச்சொல்லின் பெயர்ச் சொல்லே முருகன் என்பதாகும். உதாரணமாக,
"பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி" - தகடூர் யாத்திரை
"மைந்துடை மல்லன் மதவலி முருக்கி" - புறநானூறு: 80
என்பதில் இருந்து அறியலாம்.
ஆகவே முருகன் என்பவன் முருக்கு ஏறிய இளமைத் தோற்றம் கொண்ட குமரன் பருவத்தினனே என்பது தெளிவாகிறது. ஆனால் மீசை வைத்த முருகனையே வழிபட வேண்டும் என்று ஒரு கூட்டம் கூப்பாடு போடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.
சிவப்பு நிறம்:
அக்னியில் இருந்து தோன்றியவன் என்பதால் முருகனுக்கு சிவப்பு நிறம் அடையாளமாக விளங்கியது. “ஒங்கு பரிபாடல்” என்ற அடைமொழியுடன் சிறப்பிக்கப்படும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பரிபாடலில், முருகன் அணிந்திருந்த ஆடை மற்றும் இடுப்புக் கச்சை சிவப்பு நிறம் என்று தெரிவிக்கின்றது.
கலித்தொகை 105 வது பாடலிலும் சிவப்பு ஆடையை அணிந்தவன் என்றே கூறுகிறது. திருமுருகாற்றுப்படையில் செந்நிற ஆடை, செச்சை மலர், செவ்வலரி மலர், செந்நூல் யாத்து போன்றவை முருகனுக்குப் பிடித்தவையாக செய்தியுள்ளது.
குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடலில் முருகன் குன்றிவிதை போன்ற சிவப்பு நிற ஆடையை அணிந்ததாகக் கூறுகிறது. ஆகவே ஸ்கந்த வழிபாடே முருகன் வழிபாடு என்பது தெளிவு.
யானை, மயில் வாகனம்:
புறநானூறு பாடல் எண் 56 இல், “மணிமயில் உயரிய மாறா வென்றி பிணிமுக வூர்தி ஒண்செய் யோனும் என” என்று வருகிறது. இதன் பொருள் மாறாத வெற்றியையுடைய ஒள்ளிய செய்யோன் மயில் கொடியையும் மயிலை ஊர்தியாகவும் கொண்டிருக்கிறான் என்பதாகும்.
பதிற்றுப்பத்து பாடல் எண்:11-5-6 இல் “சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக் கடுஞ்சின விறல்வேள் களிறுஊர்ந் தாங்கு” என்பதில் இருந்து முருகனுக்கு யானையும் வாகனமாக இருந்தது என்பதை அறிய முடிகிறது. இன்றும் கூட பல தொன்மையான முருகன் கோவில்களில் முருகனுக்கு யானையும் வாகனமாக இருப்பதைக் காணலாம்.
“யானையையும் மயிலையும் ஊர்தியாக உடைய செவ்வேள்” என்று பரிபாடல் (19-26, 8-67) கூறுகிறது.
ஸ்கந்த வழிபாட்டில் கூட முருகனுக்கு மயில் வாகனமாக குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ஸ்கந்தனை வழிபட்ட வடபாரத சமுதாயமான யெளதேயர்கள் யானையை தங்கள் சின்னமாக வைத்திருந்தனர் என்பது கூடுதல் தகவல்.
கழங்கு/ களம்/ கட்டு/ வெறியாடல்/ திரையாட்டம்:
ஐங்குறுநூறில் வெறிப்பத்தில் வரும் பத்து பாடல்களும் முருகன் வழிபாடு செய்யும் வெறியாடல் பற்றிய குறிப்புகளைக் கூறுகிறது. முருகன் என்பவன் போரில் வல்லவன் என்று அகநானூறு மற்றும் புறநானூறு பாடல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வடபாரத ஸ்கந்தனையும் போர்க் கடவுள் என்றே அழைக்கின்றனர். பகைவர்களின் பராக்கிரமத்தைச் சிதைப்பவன், பிணைப்பவன், கட்டுவிப்பவன் என்ற பொருளே தமிழில் வரக்கூடிய கந்தனுக்கும் வடபாரத ஸ்கந்தனுக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிபடுத்துகிறது.
ஆகையால் தான் முருக வழிபாட்டின் போது களம் அமைத்து தெய்வத்தை சாந்தி செய்து வழிபட திரையாட்டம், வெறியாட்டம் ஆடப்படுகிறது. இந்த களம் என்பது 12 கட்டங்கள் கொண்டதாகவும் அதில் அரிசி மற்றும் பிற தானியங்களை ரத்தத்துடன் கலந்து பலியிடுவதாகவும் ஒரு முறை இருக்கிறது. ஆகவே போர்க் கடவுளான (தேவ சேனாதிபதி) முருகனுக்குப் பிடித்த ஒன்று போர்களமே என்பதனை அறியலாம்.
இந்த வேலன் களம் பற்றிய செய்தியை பல இடங்களில் சங்க நூல்களில் காணலாம்.
"வெறியயர் களனும்,
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்,
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்,
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்,...
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்...
-திருமுருகாற்றுப்படை: 218 – 226
-என்ற பாடலின் மூலம் இடைச்சாதியினருக்காக தெய்யாட்டம் ஆடி களம் அமைக்கும் இடத்திற்கு மன்றம் என்ற பெயரும், தீயர்களுக்காகக் களம் அமைக்கும் இடத்திற்கு கழகம் என்ற பெயரும் இன்னும் பல இனங்களால் களம் அமைத்து வழிபடக் கூடிய இடத்திற்கு தரை, காவு, அறை, துருத்தி என்ற பெயர்களும் உண்டு என்பதை அறிய முடிகிறது.
(தொடர்கிறது)
$$$
One thought on “பாரத முருகன் – 1”