-திருநின்றவூர் ரவிகுமார்
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது எட்டாம் நாள்…

8. மஹாகௌரி
ஶ்வேதே வ்ருʼஷே ஸமாரூடா⁴ ஶ்வேதாம்ப³ரத⁴ரா ஶுசி꞉ மஹாகௌ³ரீ ஶுப⁴ம்ʼ த³த்³யான் மஹாதே³வப்ரமோத³தா³
பொருள்: வெள்ளை எருதின்மேல் அமர்ந்தவள், வெள்ளை ஆடையை அணிந்தவள், தூய்மையான, பளிங்கு போன்ற ஒளிவீசுபவள், மகாதேவனுக்கு (சிவன்) ஆனந்தம் அளிப்பவள். அந்த மஹாகௌரி எனக்கு நன்மை செய்வாளாக!
(வடமொழியில் கௌரீ என்றே எழுதப்படும்).
அவளின் தேக நிறம் மிகவும் வெண்மையானது. அதனால் அவளை சங்கின் ஒளி, நிலவின் ஒளி, முல்லை மலரின் வெண்மை ஆகியவற்றோடு ஒப்பிடுகின்றனர். அவள் எப்போதும் எட்டுவயது சிறுமியாகவே (பாலாவாக) காணப்படுவாளென்று — “அஷ்டவர்ஷா ப⁴வேத்³ கௌ³ரீ” எனக் கூறப்படுகிறது.
அவள் அணியும் ஆடைகளும், ஆபரணங்களும் அனைத்தும் வெள்ளை நிறமே. அவளுக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவளின் வாகனம் எருது. வலது மேல் கரம் -அஞ்சாமை தரும் அபயமுத்ரை, வலது கீழ் கரம் – திரிசூலம் இடது மேல் கரத்தில் உடுக்கையும், இடது கீழ்க் கரம் — வரம் வழங்கும் நிலை. அவளின் தோற்றம் மிகவும் சாந்தமும், அமைதியும் நிறைந்ததாகும்.
பார்வதி வடிவில், அவள் மிகவும் கடினமான தவங்களைச் செய்தாள். அதன் நோக்கம், “இன்னொரு தேவனையும் வேண்டேன்; மகாதேவன், சிவன், சங்கரன், சம்புவையே என் கணவராகப் பெறுவேன்” [வியே(அ)ஹம் வரத³ம் ஶம்பு⁴ம் நான்யம் தே³வம்ʼ மஹேஶ்வராத்] என்பதே.
இப்படி கடுமையான தவங்கள் செய்ததால் அவளின் உடல் கருமையானது. இறுதியில் மகாதேவன் மகிழ்ந்தார். அவர் தாமே கங்கைத் தீர்த்தத்தால் அவளின் உடலைக் கழுவினார். அப்பொழுது அவளின் நிறம் மின்னலின் பளபளப்பைப் போன்ற ஒளிவீசும் வெண்மையாக மாறியது. அதிலிருந்தே அவள் மஹாகௌரி என அறியப்படுகிறாள்.
நவராத்திரி பூஜையின் எட்டாவது நாளில் மஹாகௌரியை வழிபடுவது மரபு.
அவள் தப்பாமல் உடனடியாக பலன் அளிப்பவள். அவளின் அர்ச்சனை மூலம் பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குகின்றன. ஸஞ்சிதம் என்ற முற்பிறவிகளின் பாவங்களும், இந்த பிறவியில் அனுபவித்துத் தீர்க்க வேண்டியவைகளான பிராரப்தத்தையும், வரும் பிறவிகளில் துய்க்க வேண்டியதான ஆகாம்ய கர்மாக்களையும் அவள் நீக்குகிறாள். அன்னையின் பக்தர்களை எந்த துன்பமும் அணுகுவதில்லை. அவர்கள் தூய்மையானவர்களாக மாறி அழியாத இன்ப நிலையை இப்போதே அடைவர்.
மஹாகௌரியை எப்போதும் நாம் தியானிக்க வேண்டும். அவளின் அருளால் தெய்வீக சித்திகள் பெறப்படுகின்றன. ஒரு பக்தன் அவளின் திருவடிகளை மனம் ஒன்றி தியானிக்க துன்பங்களிலிருந்து நிச்சயமாக நீங்குவான். அவளின் திருவடி அர்ச்சனை, துன்புற்ற பக்தர்களுக்குச் சாத்தியமில்லாத காரியங்களும் சாத்தியமாக்குகிறது. ஆகையால் அனைவரும் எவ்விதத்தாலும் அவளின் திருவடியில் சரணாகதி அடைய வேண்டும்.
அவள் பக்தர்களின் சிந்தனைகளை நல்வழிப்படுத்தி, பரத்தில் (மேலான பிரம்மம்/சிவம்) நிலைபெறச் செய்கிறாள்.
(தொடர்கிறது)
$$$