-திருநின்றவூர் ரவிகுமார்
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஏழாம் நாள்…

7. காலராத்ரி
ஏகவேணீ ஜபாகர்ணபூரா நக்³ரா க²ராஸ்தி²தா | லம்போ³ஷ்டீ² கர்ணிகாகர்ணீ தைலாப்⁴யக்தஶரீரிணீ || வாமபாதோ³ல்லஸல்லோஹலதாகண்டகபூ⁴ஷணா | வர்த⁴னமூர்த⁴த்⁴வஜா க்ருʼஷ்ணா காலராத்ரிர்ப⁴யங்கரீ ||
பொருள்: ஒற்றைச் சடைமுடியில் செம்பருத்தி மலர்களால் காதுகளை அலங்கரித்தவள். ஆடைகளற்று, கொடூரமான உருவம் கொண்டவள். நீண்ட உதடுகளும், தாமரை மொட்டு போன்ற கூரான காதுகளும், எண்ணெய் தடவியது போல் பிசுபிசுப்பான மேனியும் உடையவள். இடது பாதத்தில் இரும்பாலானது போல் அரக்கு (மர) முட் கொடிகளை (கிளைகளை) (சிலம்பு போல) அணிந்தவள். [அரக்கைக் கக்கும் சிவந்த பூச்சிகளால் செய்த ஆபரணம் என்றும் கொள்ளலாம்]. முடியை விஞ்சிய கொடியோடு, கருத்த தேகமுடையவள், (தன் அடியார்களுக்கு கேடு செய்பவர்களை) பயங்கொள்ளச் செய்பவள். ஊழிக்காலத்து இருட்டு போல் அனைத்தையும் அடங்கச் செய்பவள் அல்லது (தன்னுள்) அடக்கியவள். அதனால் ‘காலராத்ரீ’ என்று போற்றப்படுகிறாள்.
நவராத்திரிப் பூஜையில் ஏழாவது நாள் துர்கையின் வடிவான காலராத்திரி வணங்கப்படுகிறாள்.
அவளின் உடல் நிறம் அடர்ந்த இருள் போலக் கருமையானது. சிதறிய கூந்தலுடன் காணப்படுகிறாள். மின்னல்போல ஜொலிக்கும் ஒரு ஹாரத்தை கழுத்தில் அணிந்திருக்கிறாள். அவளின் மூன்று கண்கள் பிரபஞ்ச முட்டை (பிரம்மாண்டம்) போல நீள் வட்ட உருண்டை வடிவில் திகழ்கின்றன; அவை எப்போதும் மின்னல் போன்ற ஒளிக் கதிர்களைப் வெளிப்படுத்துகின்றன. அவள் மூக்கின் வழியே மூச்சு விடும் போதும் இழுக்கும் போதும் பயங்கரமான தீப்புகை உருவாகிறது.
உயர்த்திய வலது கை, எப்போதும் யாவருக்கும் அஞ்சாமை அளிக்கும் அபய ஹஸ்தம். வலது கீழ் கை, அருள் வரம் கொடுக்கும் வர ஹஸ்தம். இடது மேல் கையில் இரும்பாலான முள் முனைகள் உள்ள ஆயுதம். இடது கீழ் கையில் குத்து கத்தியும் இருக்கிறது. அவளின் வாகனம் கழுதை.
காலராத்திரி அஞ்சும் தோற்றம் உடையவள். ஆனால் அவள் தரும் பலன்கள் எப்போதும் சுபமயமானவை. அதனால் அவளுக்குப் பெயர் சுபங்கரி (நல்லதைச் செய்வவள்). எனவே பக்தர்கள் அவளைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை.
நவராத்திரியின் ஏழாவது நாளில் காலராத்திரியின் பூஜை செய்வது மரபு. அன்றைய தினம் சாதகரின் மனம் சஹஸ்ரார சக்கரத்தில் நிலைகொள்கிறது. அந்தச் சாதகருக்கு பிரபஞ்சத்தின் அனைத்து சித்திகளுக்கும் கதவுகள் திறக்கத் தொடங்குகின்றன. அவர் முழுமையாக காலராத்திரியின் உணர்வில் ஒன்றிப்போகிறார். தன்னில் அவளைக் கண்ட சாதகர் வெளியிலும் காண்கிறார். அன்னையின் அருளால் பக்தனின் பாவங்களும், தடைகளும் முற்றிலும் அழிகின்றன. அவன் அழியாத உயர்ந்த நிலையை அடைகிறான்.
காலராத்திரி அசுரர்களையும், தீய சக்திகளையும் அழிக்கிறாள். தானவர்கள், தைத்தியர்கள், ராட்சஸர்கள், பூதங்கள், பிரேதங்கள் முதலிய தீய சக்திகள் அவள் பக்தனை நெருங்காது காக்கிறாள். பக்தன், அவளை நினைத்தவுடனேயே தீமைகள் பயந்து ஓடிவிடுவது கண் கூடு. கிரகதோஷங்களையும் அவள் போக்குகிறாள். அவளை வணங்குகிறவனை, அக்கினி, நீர், காட்டு மிருகங்கள், எதிரிகள், இரவு போன்ற எதுவும் தீங்கு செய்யாது. அவள் சத்ருவின் புத்தியை நிலைகுலையச் செய்பவள். அவள் அருளால் எப்போதும் அச்சமற இம்மமையிலும், மறுமையிலும் வாழ்வாங்கு வாழ முடியும்.
அவளின் உருவத்தை மனதில் நிறுத்திக் கொண்டு தியானம் செய்து அவளைத் தூய மனத்தோடு ஒருமுகமாகப் பூஜிக்க வேண்டும். யமம், நியமம், சம்யமம் (ஒழுக்க விதிகள்) அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். மனம், சொல், உடல் ஆகியவற்றின் பரிசுத்தம் அவளின் பூஜையில் அத்தியாவசியம். அவள் சுபங்கரி; அவளை வணங்குவதால் கிடைக்கும் சுபபலன்கள் எண்ணற்றவை.
(தொடர்கிறது)
$$$