-திருநின்றவூர் ரவிகுமார்
நவராத்திரி, விஜயதசமியை முன்னிட்டு தேவி வழிபாடு இங்கே இடம்பெறுகிறது. இது ஒன்பதாம் நாள்…

9. ஸித்திதாத்ரீ
ஸித்³த⁴க³ந்த⁴ர்வயக்ஷாத்³ யைரஸுரைரமரைரபி | ஸேவ்யமானா ஸதா³ பூ⁴யாத் ஸித்³தி⁴தா³ ஸித்³தி⁴தா³யினீ ||..9..
பொருள்: சித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், அமரர்கள் ஆகிய அனைவராலும் எப்போதும் வழிபடப்படும் ‘சித்திதாத்ரீ’ எல்லா சித்திகளையும் அருளுபவள். அவள் எப்போதும் எனக்கு அருள் புரிவாளாக!
ஸித்திதாத்ரி தனது பக்தர்களுக்கு அனைத்து சித்திகளையும் சாதகர்களுக்கு அருள் பவள். தந்திர ஶாஸ்திரங்களின் படி, பரமசிவனுக்கே அந்த சக்திகள் சித்திதாத்ரி தேவியின் அருளால் மட்டுமே கிடைத்தன. அவளுடைய அருளால் தான் பரமசிவன் அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்கிறார்.
ஸித்திதாத்ரி நான்கு கைகளையுடையவள். அவளுடைய வாகனம் சிங்கம். அவள் தாமரையில் அமர்ந்திருக்கிறாள். வலது கீழ் கையில் சக்கரமும், வலது மேல் கையில் கதாயுதமும், இடது கீழ் கையில் சங்கும், இடது மேல் கையில் தாமரையும் தாங்கியுள்ளவள்.
நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அவள் ஆராதிக்கப்படுகிறாள். அந்த நாளில் விதிப்படி, முழு நம்பிக்கையுடன் வழிபடுகிற சாதகர் அனைத்து சித்திகளையும் பெறுவார். பிரபஞ்சத்தில் எதுவும் எட்டாக்கனியாக இருக்காது. உலகத்தை வெல்லும் திறனே அவருக்குக் கிடைக்கும்.
ஒவ்வொருவரும் ஸித்திதாத்ரியைப் போற்றி, அவளுடைய அருளைப் பெற முயல வேண்டும். அவளுடைய அருளாலேயே ஒரு பக்தன் துன்பங்களின் கடலைத் தாண்டி, உலக சுகங்களில் வாழ்ந்தாலும் பாவம் படியாமல், இறுதியில் மோக்ஷத்தை அடைவான்.
ஒன்பது துர்கைகளில் சித்திதாத்ரி கடைசி வடிவமாகும். முதல் எட்டு வடிவங்களையும் முறையாக வணங்கி, ஒன்பதாம் நாளில் ஸித்திதாத்ரியை வழிபட, பக்தர்களின் ஆசைகள் அனைத்தும்; இஹத்திலும், பரத்திலும் நிறைவேறுகின்றன. ஆனால் அவளுடைய பிரிய பக்தனுக்கு எந்தக் காமனையும் பூர்த்தி செய்ய வேண்டியதாக எதுவும் இருக்காது. பக்தனின் அனைத்துப் பொருட்சார் விருப்பங்களையும் கடந்துபோய், தேவியின் தெய்வீக ஸந்நிதியிலேயே அவன் வாழ்கிறான். எப்போதும் அவளது அருளின் அமுதத்தை அருந்துகிறான். எனவே அவனுக்கு உடல் இச்சையும், புலன்களின் இன்பங்களும் முற்றிலுமாக நீங்கியிருக்கும்.
அப்படிப்பட்ட நிலைக்கு வந்த பின், அவனுக்கு வேறு எதையும் நாடத் தேவையில்லை. தேவியின் ஸ்வரூபத்தில் அமிழ்ந்து இருப்பதே அவனுடைய ஒரே குறிக்கோளாகிவிடுகிறது.
அஷ்டமா ஸித்திகள் என்பது இறை அருளால் பெறும் பேராற்றல்கள். அந்த எட்டு திறமைகள் கீழ்வருமாறு –
- 1. அணிமா – அணுவை விடச் சிறியதாக உடம்பை சுருக்கிக் கொள்ளும் திறன்.
- 2. மகிமா – உடம்பை மலையளவு பெரியதாக்கிக் கொள்ளும் திறன்.
- 3. கரிமா – மிகவும் கனமடைந்து, அசைக்க முடியாமல் இருக்கும் திறன்.
- 4. லகிமா – காற்றைப் போல மிகவும் இலேசானதாக மாற்றும் திறன்.
- 5. பிராப்தி – மனதால் நினைத்ததை உடனே அடையும் திறன்.
- 6. பிரகாமியம் – மற்றவர் உடலுக்குள் சென்று செயல்படும் (கூடு விட்டுப் பாய்தல்) திறன்.
- 7. ஈசத்துவம் – பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களுக்கும் ஆணையிடும் திறன்.
- 8. வசித்துவம் – மற்ற எவரையும் தனக்குக் கட்டுப்படுத்தி, வசியப்படுத்தும் திறன்.
இந்த அஷ்டமா ஸித்திகளுக்கும் மேலானது ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்ற தன்னை தானே உணர்ந்து தன்மயமாய் இருக்கும் நிலை என்பது மெய்ஞானிகளின் துணிபு.
அஷ்டமாஸித்திகளும், அதற்கும் மேலான ஞான நிலையையும் ஸ்ரீ தேவியின் அருளால் சாதகன் அடைவான். அதை கடாக்ஷிப்பவள் ஸித்திதாத்ரீ. அவளை வணங்க பரம கைவல்யம் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தன்னால் விளங்கும். அன்னையின் அருள் நிறைந்த வாழ்க்கை முழுமை பெறும். நிறைந்து நிலைக்கும்.
(தொடர்கிறது)
$$$