-சுவாமி சுத்திதானந்தர்

பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.
-5-
பாரதம்- தர்மத்தின் அடிப்படையிலான தேசமா, மதச்சார்பற்ற தேசமா?
தர்மம் என்ற அடித்தளத்தின் மீது பாரதிய சமாஜம், பாரதிய சப்யதா, பாரதிய சமஸ்கிருதி (பாரதிய சமுதாயம், பாரதிய நாகரிகம், பாரதியப் பண்பாடு) ஆகியவை கட்டமைக்கப்பட்டுள்ளன. 1947-இல் காலனிய ஆதிக்கவாதிகளிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாம் ஐரோப்பிய முன்மாதிரியைக் கொண்டு ‘மதச்சார்பற்ற அரசு’ என்பதை ஏற்றுக் கொண்டோம். ‘மதத்திலிருந்து அரசு விலகி இருப்பது’, அதாவது அரசாட்சியில் மதத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்பது மதச்சார்பின்மையின் அர்த்தங்களில் ஒன்று. இது நல்ல விஷயம். ஆனால் ஹிந்து தர்மம் என்பது இந்த தேசத்தின் ஆன்மா. செக்யூலரிசம் என்ற பெயரில் மற்ற மதங்களுடன் சேர்த்து ஹிந்து தர்மமும் அரசாட்சியிலிருந்து ஒதுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தர்மத்தை மதம் என்று தவறாகப் பொருள் கொண்டதே ஆகும்.
தர்மம் என்பது மதம் அல்ல. இன்றைய உலகில் மதங்கள் என்று இருப்பவையும், மதம் என்று புரிந்து கொள்ளப்பட்டவையும், தர்மமும் ஒன்றல்ல. தர்மம் என்பது உலகளாவிய, வாழ்வியல் விஞ்ஞானம். மேற்கத்திய செமிட்டிக் சிந்தனையின்படி, மதம் என்பது குறுகிய, வெறித்தனமான நம்பிக்கை முறை.
அதுபோன்ற மதங்கள் அரசாட்சியில், தேசிய வாழ்வில் அங்கமாக இருக்கக் கூடாது என்பது சரியே; ஆனால் தர்மம் இருக்கக் கூடாது என்பது தவறு. தர்மம் இந்த தேசத்தின் உயிர்நாடி. இது நம் தேசிய வாழ்வின் அடித்தளம். அரசாட்சியில், கல்வியில், இன்னுமுள்ள எல்லாவற்றிலும் அது அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இதைச் செய்யாமல், ஐரோப்பிய கண்ணோட்டத்தின்படியான செக்யூலரிசத்தை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவது, மெதுவாக, ஆனால் உறுதியாக தேசத்தின் உயிர் சக்தியை, கழுத்தை நெறிப்பதாகும்.
இந்த விஷயத்தில், செக்யூலரிசத்தின் மற்றொரு அர்த்தத்தை இங்கு கவனிக்க வேண்டும். அதாவது, ‘எல்லா மதங்களையும் சமமாகப் பார்ப்போம். மதங்களிடையே வேறுபாடு காட்ட மாட்டோம்’ என்பதைக் கவனிக்க வேண்டும். இதுவும்கூட ஹிந்து சமுதாயத்தில் மட்டுமே நடைமுறையில் சாத்தியமாகியுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஹிந்து சிந்தனைதான் எல்லா மதங்களையும் சமமாக மதிக்கிறது. எனவே உண்மையில் செக்யூலரிஸம் அதுதான். தர்மத்தின் அடிப்படையிலான, எல்லா மதங்களையும் சமமாக மதிக்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற அரசாட்சி என்ற முன்மாதிரியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு உலகத்திற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
இந்தியா தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. தர்மம்தான் இந்தியப் பண்பாட்டின், இந்திய நாகரிகத்தின் ஆன்மா. இதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். நாம் தர்மத்தைக் கைவிட்டால் இந்தியாவே இருக்காது. இந்தியா இறந்து விட்டால் அதன் பின் அங்கு என்னதான் இருக்கும்? சுவாமிஜி கூறுகிறார்:
“இந்தியா சாக வேண்டுமா? அப்படியானால், உலகில் உள்ள ஆன்மிகம் எல்லாம் அழிந்துவிடும். எல்லாவிதமான தார்மிகங்களும் ஒழிந்துவிடும். மதங்களின் மீதான இனிய பரிவு தொலைந்துவிடும். எல்லாவிதமான அடையாளங்களும் இல்லாமல் போகும். அதற்கு மாறாக, அவை இருந்த இடத்தில் காமமும் சொகுசும் ஆண் பெண் தெய்வங்கள் போலாகிவிடும். பணம் பூஜாரி ஆகிவிடும். மனித ஆன்மா பலி கொடுக்கப்படும். இது ஒருபோதும் நடக்காது. துன்பம் இழைப்பதை விடவும் அந்த துன்பத்தை ஏற்றுத் தாங்குகின்ற சக்தி மேலானது. வெறுப்பின் சக்தியை விட அளப்பற்ற அன்பின் சக்தி ஆற்றல் மிக்கது. இப்போது ஏற்பட்டு வரும் ஹிந்துயிசத்தின் புத்தெழுச்சியானது, வெறும் தேசபக்த உந்துதல் தான் என்று நினைப்பவர்களின் கனவு பொய்யானது.”
உலகம் அழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியா உயிர்ப்புடன் இருக்க வேண்டும். இந்தியா தர்மத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. தர்மம் இல்லாமல் இந்தியா இல்லை. தர்மத்தின் மீதுதான் பாரதியப் பண்பாடு, பாரதிய சமுதாயம் எழுப்பப்பட்டுள்ளது.
மற்ற மதங்களைப் போல, குறிப்பாக செமிட்டிக் மதங்களைப் போலல்லாமல், ஹிந்து தர்மம் உலகம் தழுவியதாக, அறிவியல் பூர்வமானதாக, அனைத்தையும் உள்ளடக்கியதாக, பரிவுடன் கூடியதாக, அனைவரையும் அரவணைத்து ஏற்றுக் கொள்வதாக இருக்கிறது.
உலகில் உள்ள மனித இனங்களிலேயே ஹிந்து இனம் தான் இயற்கையாகவே இனவெறி அற்றதாக இருக்கிறது. உலகில் உள்ள மனித சமுதாயங்களிலேயே ஹிந்து மத சமுதாயம் தான் இயல்பாகவே மதவெறி அற்றதாக இருக்கிறது. இன்றும்கூட, ஹிந்துவைத் தவிர வேறு எந்த மதமாவது, ‘எல்லா மதங்களும் ஒரே இலக்கைக் கொண்டிருக்கின்றன; எல்லா மதங்களும் உண்மைதான்; எந்த மதத்தைப் பின்பற்றினாலும் நாம் அனைவரும் ஒரே குடும்பம் தான்; கடவுள் ஒன்றுதான், நாம் அதை பல்வேறு விதமாக வழிபடுகிறோம்; மதம் மாற்றம் தேவையில்லை’ என்று கூற முடியுமா? இதற்கான பதில் அனைவரும் அறிந்ததே.
ஹிந்துவைத் தவிர, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிற மதத்தை வெறுக்கும்படிக் கற்பிக்கப்பட்டுள்ளனர். இது மற்ற மதங்களின், குறிப்பாக செமிட்டிக் மதங்களின் முக்கியமான அம்சம். அவர்கள் தங்கள் மத நம்பிக்கையை, மதம் சார்ந்த சமுதாயத்தினரைத் தவிர பிறரை ஏற்றுக் கொள்வதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே, இறைவனை அடைய எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதால், அனைவரையும் மதிக்கிறார்கள்.
நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய மேற்கோளில் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
“எல்லா நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் மதக் கொடூரங்கள் நடந்துள்ளன. இந்த உலகில் கொஞ்சமேனும் சகிப்புத்தன்மை இருக்குமென்றால், உலகில் பிற மதச் சிந்தனைகள் பற்றி பரிவு இருக்கிறதென்றால், அது நடைமுறையில் இருப்பது இந்த ஆரிய (வேத நெறியைப் பின்பற்றும் ஹிந்துக்கள்) மண்ணில்தான், வேறு எங்கும் கிடையாது.”
இந்தியாவில் அல்லது ஹிந்து சமுதாயத்தில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அதற்குக் காரணம் தர்மம்தான். தர்மத்தின் அடிப்படையிலான நாகரிகம் இந்த மண்ணில் இருப்பதால்தான், இங்கு பல்வேறு இனத்தை, மதத்தைச் சார்ந்த மக்கள் இயல்பாக, தன்னிச்சையாக, கூடி வாழ முடிகிறது. தர்மம் மட்டுமே இதை சாத்தியமாக்கி இருக்கிறது. ஹிந்து தர்மக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டுமே, இந்தியாவின் சிறப்பை, ஹிந்து சமுதாயத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ள முடியும். மேற்கத்திய அல்லது செமிட்டிக் மதக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
பாரதியப் பண்பாடு, பாரதிய நாகரிகத்தின் அடிக்கல்லாக இருப்பது தர்மம். இந்தியா ஆரம்பத்திலிருந்தே தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறது. இனி வரும் காலத்திலும் அப்படித்தான் இருக்கும்.
பாரதத்தின் அடித்தளம் ஹிந்து தர்மம் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவும் அறிவிக்கவும் வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, தர்மத்தின் வரம்பற்ற வீரியம் முழுவீச்சில் வெளிப்படும். அதுவே, பாரதத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித இனத்திற்கே நன்மையைத் தரும்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரும் சுவாமி விவேகானந்தரும் பிறப்பெடுத்தது இந்த தர்ம சம்ஸ்தாபனப் (தர்மத்தை மீண்டும் நிலைநிறுத்தும்) பணிக்காகத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகம் தழுவிய தர்மம் மட்டுமே மனித இனத்தை நல்லிணக்கத்தையும் அமைதியையும் நோக்கிச் செலுத்த முடியும். ‘சனாதன தர்மமான’ ஹிந்து தர்மமும், இந்த புண்ணிய பூமியான பாரதமும் வாழ்க! புகழுடன் பொலிக!
- நன்றி: பிரபுத்த பாரத
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
(முற்றும்)
$$$