-விவேகானந்ததாசன்
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....

வீர நரேந்திரா விவேகானந்தா,
சரணம் சரணம் குரு நாதா!
ஜீவ சேவையே சிவ சேவையென
பாதை காட்டி அருள் புரிந்தாய்!
பரமஹம்சரின் அருளைப் பெற்று
பாருலகெங்கும் பவனி வந்தாய்!
அன்னை சாரதையின் அன்பைப் பெற்று அகிலம்
முழுதும் அணைத்துக் கொண்டாய்!
இந்து மதத்தின் இணையற்ற பெருமையை
இவ்வுலகெங்கும் பரவச் செய்தாய்!
இப்புவி மக்கள் நலமுடன் வாழ
இறையருள் ஒன்றே வழி என்றாய்!
மனதின் ஆற்றல் மலையினும் பெரிதென
மாந்தர்களை நீ உணரச் செய்தாய்!
தூய்மையும் தொண்டும் இருகண்களென
திக்கெட்டும் நீ முரசொலித்தாய்!
வேதத்தின் உண்மை காலத்தில் ஈன்றாய்
வேதாந்த சிங்கமே விவேகானந்த!
வேத ஸ்வரூப விவேகானந்தா,
வீரேசுவர சிவ நமோ நமோ!!
$$$