-வ.மு.முரளி
பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....

பாரதி என்றவுடன் நமக்கு நினைவில் வருபவை, அவர் ஒரு மகாகவி, தேசிய கவி என்பவைதான். ஆனால், மகாகவி பாரதியின் பூரண விஸ்வரூபத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அவரது பிற எழுத்துப் பணிகள் தெரியவரும். குறிப்பாக, எந்த நவீன வசதியும் இல்லாத 115 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய ஆங்கிலேய அரசை எதிர்த்து இதழியல் பணியாற்றிய பாரதியின் துணிவையும் மேதைமையும் அளவிட நம்மால் இயலாது.
அவர் பணியாற்றிய பத்திரிகைகள், நடத்திய இதழ்கள், எழுதிய கட்டுரைகளின் பட்டியலே நமக்கு மலைப்பூட்டும். ‘லண்டன் டைம்ஸ்’ முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான ‘அமிர்தபஜார்’ பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், நாட்டின் பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, தான் பங்களித்த பத்திரிகைகளில் பல புதுமைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்.
‘இந்தியா’ பத்திரிகையில் வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம் செய்திருப்பது இன்றும்கூட நமக்கு சாத்தியம் இல்லாதது. அதில் செல்வந்தர்களுக்கு ஒருவித சந்தாவும், எளியவர்களுக்கு ஒருவித சந்தாவும் அறிவித்து புரட்சி செய்தார். மேலும், தமிழ்ப் பத்திரிகைகளில், அதுவும் முகப்பு அட்டையில் முதன்முதலாக கார்ட்டூன் வெளியிட்டவர் பாரதியே.
பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தகம் வெளியிடுதல், விவாதங்களில் வாசகர்களை ஈடுபடுத்துதல், பத்திரிகையில் தமிழ்த்தேதி குறிப்பிடுதல், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் வெளிநாட்டு செய்திகளை வெளியிடுதல் எனப் பல முன்னோடிப் பணிகளைச் செய்தவர் அவர். 1908இல் நெல்லையில் சுதந்திரக் கனலைப் பரப்பிய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை சிறையில் சந்தித்து நேர்முக வர்ணனையுடன் செய்தி ஆக்கி இருக்கிறார் பாரதி.
1906 மே 9 முதல் சென்னையிலிருந்து வெளியாகிவந்த ‘இந்தியா’ வார இதழ், ஆங்கிலேய அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக 1908 செப். 5 ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அது மட்டுமல்ல, அரசுக்கு எதிரான கருத்துகளை பிரசாரம் செய்வதாக வழக்கு பதியப்பட்டு இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பெயர் பதிவு செய்திருந்த ஸ்ரீனிவாச ஐயங்கார் கைது செய்யப்பட்டார். வேறு வழியின்றி, உண்மையான ஆசிரியரான பாரதி, பிரெஞ்சு ஆளுகைக்கு உள்பட்ட புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றார்.
ஆயினும், புதுச்சேரியிலும் பாரதி சும்மா இருக்கவில்லை. மண்டையம் குடும்பத்தாரின் உதவியுடன் ‘இந்தியா’ வார இதழை 1908 அக். 10 முதல் மீண்டும் வெளியிடத் துவங்கினார். அந்த இதழ் 1910 மார்ச் 12 வரை பல்வேறு கெடுபிடிகளைத் தாங்கி வெளிவந்தது. அந்த இதழ்களில் பாரதி எழுதியுள்ள செய்திகள், கட்டுரைகள் அனைத்தும் சரித்திர ஆவணங்கள்.
தாங்கள் நடத்திவந்த பத்திரிகைக்கு வாசகர்கள் போதிய ஆதரவு தர வேண்டும் என்று கோரி, 1908 நவ. 7 இல் பாரதி எழுதிய ‘நமது விஞ்ஞாபனம்’ என்ற வேண்டுகோள் கட்டுரை, ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வரைந்துள்ளது. அதில் பாரதி கூறுகிறார்…
“..இப்பத்திரிகை (இந்தியா) தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது…”
பத்திரிகையாளர் என்பவர் சமூகத்தின் மனசாட்சி; சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையாளர் என்பதில் பாரதிக்கு இருந்த தெளிவையும், தனது பத்திரிகையின் செயல்பாட்டுக்காக மக்களிடம் கையேந்தாமல் ஆணையிடும் துணிவையும் மேற்கண்ட விஞ்ஞாபனத்தின் மூலம் காண முடிகிறது.
1904இல் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தபோது பாரதியின் இதழியல் பணிகள் துவங்கின. மிக விரைவில் அவரது மண்டையம் நண்பர்கள் துவங்கிய ‘இந்தியா’ வார இதழ் அவரது ஆவேச எழுத்துகளுக்கு வடிகாலானது. அதே நிறுவனத்தின் வெளியீடான ‘சக்கரவர்த்தினி’ என்ற மகளிர் மாத இதழில் (1905), பெண்களின் முன்னேற்றத்துக்கான கட்டுரைகளை பாரதி வாரி வழங்கினார்.
எம்.பி.டி.ஆச்சார்யா என பின்னாளில் புரட்சியாளராக அறியப்பட்ட மண்டையம் திருமலாச்சாரியாவின் ஏற்பாட்டில் ‘பாலபாரதா’ அல்லது ‘யங் இந்தியா’ என்ற ஆங்கில இதழையும் (1906) பாரதி நடத்தினார். இதே ‘யங் இந்தியா’ என்ற பெயரில் 1919 முதல் 1932 வரை மகாத்மா காந்தி ஒரு பத்திரிகையை நடத்தியதை இங்கு நினைவுகூரலாம்.
புதுவையில் இருந்தபோது, மேலும் பல இதழ்களை பாரதி துவக்கினார். அவற்றில் ‘விஜயா’ என்ற மாலை பத்திரிகை குறிப்பிடத்தக்கது. ’இந்தியா’ வார இதழில், லண்டனில் மாணவராக இருந்த வ.வே.சு.ஐயர் பல சங்கதிகளை எழுதி இருக்கிறார். ‘இந்தியா’வும் ’விஜயா’வும் பிரிட்டீஷ் இந்தியாவில் 1909இல் தடை செய்யப்பட்டன.
அதேபோல ‘சூர்யோதயம்’ (1910) என்ற உள்ளூர்ப் பத்திரிகைக்கும் பாண்டிச்சேரியில் பாரதி ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கிறார். தவிர, பிரெஞ்ச் மண்ணில் குடிபுகுந்து ஆன்ம தவம் மேற்கொண்டிருந்த அரவிந்தருடனும் தொடர்பு கொண்டார். அரவிந்தர் நடத்திய ‘கர்மயோகி’ (1909) பத்திரிகையிலும், ‘ஆர்யா’ என்ற ஆங்கில இதழிலும் (1915) பாரதி பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா நடத்திய ‘ஞானபானு’ இதழிலும் பாரதி தொடர்ந்து எழுதி இருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கட்டுரைகளை எழுதிய பாரதி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திருந்து தமிழுக்கும், கவிதைகள், கட்டுரைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்காலத்தில் வெளிவந்த ‘தி ஹிண்டு, காமன்வீல், நியூ இண்டியா’ போன்ற ஆங்கில நாளிதழ்களில் வாசகர் கடிதங்களையும் தீட்டி இருக்கிறார். அவை தனி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
வாழ்வின் இறுதிக்காலத்தில், மீண்டும் ‘சுதேசமித்திரன்’ இதழில் (1920) இணைந்து முன்னைவிட வேகமாக பல வியாசங்களை எழுதிய பாரதி, சித்திரங்களை மட்டுமே கொண்டதாக ‘சித்ராவளி’ என்ர பத்திரிகையையும், வாரம் இருமுறை வெளியாகும்’ அமிர்தம்’ என்ற இதழையும் நடத்த வேண்டும் என்ற துடிப்புடன் வேண்டுகோள் விளம்பரங்களை வெளியிட்டார். ஆனால், அவரது கனவு நனவாகும் முன் அவரை காலன் அழைத்துக் கொண்டான்.
ஒரே பெயரில் தொடர்ந்து எழுதினால் வாசகர்களுக்கு அயற்சி ஏற்படும் என்று கருதி, பல்வேறு புனைப்பெயர்களை அந்நாளிலேயே சூடிக் கொண்டவர் பாரதி. காளிதாஸன், சக்திதாஸன், ஷெல்லிதாசன், நித்தியதீரர், சாவித்திரி, ஓர் உத்தம தேசாபிமானி, சி.எஸ்.பாரதி, சுப்பிரமணிய பாரதி எனப் பல பெயர்களில், எழுதுவதையே சுவாசமாகக் கொண்டு, எழுத்தே தவமாக வாழ்ந்திருக்கிறார் பாரதி.
எந்த ஒரு விஷயத்திலும் வாசகருக்கு முழுமையான தெளிவையும், தேசபக்தியையும் புகட்டுவதே பாரதியின் ஆழ்ந்த உள்ளக் கிடக்கை என்பதை அவரது பத்திரிகைப் படைப்புகளைப் படிப்போர் உணர முடியும்.
சமகால அரசியல் தலைவர்களுடன் தொடர்பு, உலக அரசியல் நுண்ணுணர்வு, பொருளாதார அறிவு, கல்வி மேம்பாடு, சமூக சீர்திருத்தம், பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு, தாய்மொழிப் பற்று எனப் பல முனைகளில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் மலையெனக் குவிந்திருக்கின்றன. பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் தொகுத்தளித்த ’கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ என்ற (12 பாகங்கள்) புதையலில் மூழ்கினால் முத்துகள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
‘விவேகபானு’ என்ற பத்திரிகையில் (1904) பாரதியின் ‘தனிமை இரக்கம்’ கவிதை முதன்முறையாக அச்சு வாகனம் ஏறியது. அதன்பிறகு, அவர் காலமாகும் (1921 செப். 11) வரை, அவரது எழுதுகோல் நிற்காமல் எழுதிக்கொண்டே இருந்தது. மரபுக் கவிதைகள், வசன கவிதைகள் (இன்றைய புதுக்கவிதைக்கு முன்னோடி), கட்டுரைகள், காப்பியம், நாடகம், வரலாறு, கதைகள், செய்திகள், மொழிபெயர்ப்புகள் என எழுத்துலகில் அவர் தொடாத துறையே இல்லை. அவற்றில் முத்தாய்ப்பானது அவரது பத்திரிகை உலகம்தான்.
அவரது கவிதைகளுக்கு – அதிலும் தேசபக்திப் பாடல்களுக்கு – நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அவரது பிற படைப்புகளுக்கும் கொடுப்பது அவசியம். ஏனெனில், இன்னமும்கூட பலர் அறிந்திராத நவமணிகளுடன் ஒரு புலமைச் சுரங்கமாக அவை காத்திருக்கின்றன.
காலத்தை மீறிக் கனவு கண்ட அந்த மகாகவியின் மறுபக்கம், தமிழின் முன்னோடி இதழாளர் என்பதே. அவரது பத்திரிகை உலகப் பணிகள் குறித்து விரிவான கல்விப்புல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது இளம் தலைமுறையின் கடமை.
- நன்றி: தினமணி- தமிழ்மணி (12.09.2021)
$$$