-திருநின்றவூர் ரவிகுமார்
ஹிந்துக்களின் பாவ- புண்ணியக் கோட்பாட்டிற்கும், கிறிஸ்தவர்களின் பாவக் கோட்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்? சுவாமி விவேகானந்தரின் வழியில் விளக்குகிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் தன்னுடைய பேச்சில் விவேகானந்தர் அடிக்கடி இதைக் குறிப்பிட்டுள்ளார். ஏன்? இந்தக் கேள்வி எழுவது இயல்பு.
மேற்கத்திய கிறிஸ்துவ சிந்தனையின் அடிப்படை அறவுணர்வுகளில் ஒன்று ‘பாவம்’. அதைத் தாக்கினால் தான் மேற்கத்தியர்களிடையே நம் கருத்துக்கள் காலூன்ற இடம் கிடைக்கும் என்று சுவாமிஜி கருதியிருக்கலாம்.
‘பாவம் குறித்த உணர்வே இல்லாததால் தான் இந்தியாவில் ஊழல் மலிந்து உள்ளது. அதகாரிகளும் அரசியல்வாதிகளும் தயக்கமோ பயமோ இன்றி ஊழல் செய்கின்றனர். காரணம் பாவம் பற்றிய அறவுணர்வு இல்லாததே’ என்று இந்தியாவிலிருந்த இங்கிலாந்து ஹை கமிஷனர் (இங்கிலாந்து நாட்டு தூதர்) தனது நாட்டு அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இச்செய்தியை அவர் திட்டமிட்டே இந்திய பத்திரிகைகளில் கசியவிட்டார்.
எனவே இந்தியாவிலுள்ள ஊழலுக்கும் அராஜகத்திற்கும் காரணம் அறவுணர்வுகளின் அடிப்படைகளின் ஒன்றான பாவக் கோட்பாட்டை ஏற்காததே என்று கிறிஸ்தவர்களும் மேற்கத்தியவர்களும் கருதுகின்றனர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல ஹிந்துக்களில் பலரும் கூட, சுவாமிஜியின் கூற்றைக் கேட்டு திகைப்படைந்தனர். பாவம் குறித்த கருத்து நம்மிடையே இருக்கிறதே. பாவம் என்ற சொல் நம்முடைய அன்றாட வழக்கில் உள்ள சொல்தானே? என்று குழப்பம் அடைகின்றனர்.
விவேகானந்தர் பாவக் கோட்பாட்டை மறுத்துள்ளது சரியானதே. சுவாமிஜி உலக நாடுகளின் வரலாற்றையும் தத்துவங்களையும் நன்கு கற்றறிந்தவர். மேற்கத்திய அறவுணர்வுக் கோட்பாடுகளும் கீழைய அறவுணர்வுக் கோட்பாடுகளும் முற்றிலும் வெவ்வேறான அடிப்படைகளைக் கொண்டவை என்பதை சுவாமிஜி நன்கு அறிவார்.
மேற்கத்திய நாடுகளில் ‘சின்’ (SIN) பாவம் என்பதை நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ‘பாவம்’ என்று மொழிபெயர்ப்பது மொழியியல் தவறு. இரண்டும் வெவ்வேறு கோட்பாடுகளைக் குறிப்பிடுவதாகும்.
கிறிஸ்தவ இறையியிலின்படி ‘பாவம்’ என்றால் ‘ஆண்டவருக்கு கீழ்ப்படியாமை’ என்று அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது. ஹிந்துக்களும் பிற இந்திய சமயங்களைச் சேர்ந்தவர்களும் தவறு அல்லது கெடுதல் செய்தால் அதற்காக வருத்தப்படுவதோ அல்லது அதற்கான பழியை இறைவன் மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ போடுவதைப் பார்க்கலாம். ஆனால் அவர்கள் அந்தச் செயல் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமை என்று கருதுவது இல்லை.
கிறிஸ்தவர்கள் அறவுணர்வு என்பதை பிரபஞ்ச விதிகளில் ஒன்றாக ஏற்பதில்லை. அது இயலான, இயற்கையான ஒன்றல்ல. அறவுணர்வு என்பது மனித இனத்தின் மீது ஆண்டவர் வகித்த ஆணை. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது உள்ளது. ஆண்டவர் மோசஸுக்கு பத்து கட்டளைகளை கல்லில் பொறித்துக் கொடுத்தார். இது ஆண்டவருக்கும் மனிதருக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கை. கெடுதல் செய்வது அல்லது குற்றம் இழைப்பது என்பது தவறு மட்டுமல்ல, ஆண்டவருடனான உடன்படிக்கையை மீறுவதாகும்; ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையாகும். யூதர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் துயரங்களுக்கும் காரணம் அவர்களின் கீழ்ப்படியாமை. அதற்குக் கிடைத்தது தெய்வீக தண்டனை.
ஹிந்து மதத்தில் அறவுணர்வு என்பது பிரபஞ்சத் திட்டத்தின், பிரபஞ்ச அமைப்பின் அடிப்படை விதிகளில் ஒன்றாகும், இவ்வுலகம் சில விதிகளுக்கு உட்பட்டே இருக்கிறது; இயங்குகிறது. அவ்விதிகளில் ஒன்று கர்ம விதி. அதன்படி மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரபஞ்சத்தில் ஒரு விளைவை அல்லது பாதிப்பை ஏற்படுத்தும். அந்த விளைவு அல்லது செயலின் பலன் அச்செயலைச் செய்பவனுக்கு அதற்கே உரிய நேரத்தில் அவனை வந்தடையும். இதை கர்ம பலன் என்பார்கள்.
கர்மபலன், செய்த கர்மத்தின் வடிவிலேயே கிடைக்காது; செயல் முடிந்த உடனேயும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. பந்தை சுவற்றில் அடித்தால் அதே பந்து அதே வடிவில் உடனடியாகத் திரும்பி வரும். கர்ம பலன் அப்படி வராது.
உதாரணமாக வேத விதிகளின் யாகம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும். மகான்களுக்குச் சேவை செய்தால் செல்வவளம் சேரும். நல்ல செயல்கள் செய்தால் அதன் விளைவாக உங்களுக்கு நன்மை வந்து சேரும். அதை புண்ணியம் என்பார்கள். தீயச் செயல்களைச் செய்தால் துன்பம் வந்தடையும்; அதை பாவம் என்பார்கள்.
பாவம் என்பது ஆண்டவனுக்கு கீழ்ப்படியாமை என்று ஆகாது. தெய்வீக விதியை மீறியதாகவும் ஆகாது. ஏனெனில் தெய்வீக விதியை யாராலும் மீற முடியாது. செய்தவனுக்கு தனிப்பட்ட வகையில் நஷ்டம்; துன்பம்.
ஒருவன் தனக்குத் தானே துன்பம் இழைத்துக் கொள்வானா? அப்படிச் செய்வானேயானால் அவன் முட்டாள் அல்லது அறியாமையில் உள்ளவன் என்றுதானே அர்த்தம்? எனவே பாவம் என்பது அறியாமையின் தொகுப்பு தானே? இதைத் தான் சுவாமி விவேகானந்தர், “எங்களிடம் பாவக் கோட்பாடு இல்லை. அதை நாங்கள் அறியாமை என்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
$$$