அறியாமை, வறுமை அகல வழிகாட்டியவர் சுவாமிஜி

-கே.முத்துராமகிருஷ்ணன்

திரு. கே.முத்துராமகிருஷ்ணன், திருச்சி அருகே லால்குடியில் வசிக்கிறார். சிறுவயது முதற்கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் தொண்டர்; ராமகிருஷ்ண மடத்தின் மந்திர தீட்சை பெற்றவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது (2013) சுவாமிஜி குறித்த இவர் எழுதிய கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரைப் பற்றி எழுதுவதும், பேசுவதும் ‘ஞாயிற்றைச் சங்கிலியால் அளப்பது’ போன்ற‌து. நடக்கக் கூடியதா அது? அந்த ஞானபானுவின் அருகினில் சென்றால், வியந்து, பேச்சிழந்து நிற்க வேண்டியது தான்.

குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறிய ‘குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்த கதை’யைப் போல சுவாமிஜியின் ஏதாவது ஒரு கோண‌த்தை மட்டும் தொட்டுவிட்டு  ‘இதுதான் சுவாமிஜி’ என்று நிறுவ நினைத்தால், அது எவ்வளவு பெரிய பிழையாகும்! இருப்பினும் நமக்கு வேறு வழியில்லை. அஞ்ஞானத்தில் உழலும் எளிய மனம் படைத்த என் போன்றவர்களுக்கு சுவாமிஜி எவ்வாறு காட்சி அளிக்கிறாரோ அவ்வாறே சொல்ல முடியும்.

சுவாமிஜியின் முக்கியமான செய்தி என்பது, நான் புரிந்து கொண்ட வரை, பாரத‌ மண்ணில் இருந்து அறியாமை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு என்பது தான். இக்கருத்துக்களை சுவாமிஜி அதிகம் வலியுறுத்தக் காரணம் என்ன?

சுவாமிஜி பூவுலகில் வாழ்ந்த காலத்தின் (1863- 1902) வரலாற்றுப் பின்னணியை சற்றே திரும்பிப் பார்த்தால் இதற்கான காரணம் தெற்றென விளங்கும்.

1857-இல் முதல் இந்திய சுதந்திரப் போரான (கலகம் என்று சிறுமைப் படுத்தப்பட்ட) சிப்பாய்களின் எழுச்சி நிகழ்வுக்குப் பின்னால் தான் இங்கிலாந்தின் முடியாட்சிக்குக் கீழ் பாரதம் கொண்டுவரப் பெறுகிறது. அதுவரை கிழக்கிந்திய கும்பினியின் வணிகர்களின் ஆட்சி.

வணிகம் என்று வந்து விட்டாலே லாபம் தான் முதல் கோட்பாடு. லாபம் அடைய என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் வணிக சூத்திரம். இங்கிலாந்து நாட்டிற்குத் தேவையான பொருட்களையே உற்பத்தி செய்ய வேண்டும்; விளைவிக்க வேண்டும் என்று மக்கள் விர‌ட்டப் படுகின்ற‌னர். மீறுபவர்களுக்கு கசையடி, சிறைத் தண்டனை என்று கெடுபிடி அதிகமாகிவிட்டது. வழக்கமாக இங்கு விளையும் தானிய‌ங்கள் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு செய‌ற்கையாக உருவாக்கப்பட்டது. அதன் விளைவு பஞ்சம், பஞ்சம், பஞ்சமோ பஞ்சம்.

சுவாமிஜி பரிவ்ராஜகராக பாரத‌ம் முழுதும் பயணித்தபோது லட்சக் கணக்கான் மனிதர்கள் எலும்பும் தோலுமாக உடலில் தெம்பு இல்லாமல், உள்ளத்தில் சோர்வைச் சுமந்துகொண்டு நடைப் பிணங்களாக இருப்பதைக் காண்கிறார்.  சுவாமிஜியின் கனிந்த இதயத்தில் இரக்கம் சுரக்கிறது. அவர்களுடைய நிலை கண்டு ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்.

“கஞ்சி குடிப்பதற்கு இலார் அதன்
காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -நிதம்
பரிதவித்தே உயிர் துடி துடித்துத்
துஞ்சி மடிகின்றாரே இவர்
துயர்களைத் தீர்க்க‌ ஓர் வழி இல்லையே…”

– என்று மகாகவி பாரதி பரிதவிப்பது சுவாமிஜியின் எதிரொலியாகத் தான்.

“விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அனாதையின் வாய்க்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுக்க முடியாத கடவுளோ, மதமோ என் நம்பிக்கைக்கு பாத்திரமானதல்ல..” என்ற சொற்கள் சுவாமிஜியின் வாக்கிலிருந்து வருகிறது என்றால், நமது ஆஷாடபூதிகள் மதம், சாஸ்திரம் என்ற பெயரால் சமூகத்தில் ஏற்படுத்தியிருந்த குழப்பங்களால் தானே?

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

-என்ற திருவள்ளுவரின் (குறள்- 1062) வாக்கல்லவா இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சுவாமிஜியின் திருவாக்காக வெளிப்படுகிறது?

கே.முத்துராமகிருஷ்ணன்

அதனால் தான் எல்லா வசதிகளும் கிடைத்தும் சுவாமிஜியால் அதனை ஏற்க முடியவில்லை.  “என் பாரதத்தின் கோடிக் கணக்கான சகோதரர்கள் ஒருவேளை சோற்றுக்கு அலைந்து திரியும் போது என்னால் சுகபோகத்தை எப்படி அனுபவிக்க முடியும்?” என்று அமெரிக்காவில் இரவு நேரத்தில் கண்ணீர்விட்டுக் கதறுகிறார் சுவாமிஜி.

அறியாமை இருளை அகற்ற வேண்டும் என்பதில் சுவாமிஜி முனைப்புக் காட்டினார். ஒவ்வொரு குடிசைக்கும் கல்வி சென்று அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபடியே சென்னையிலும், கொல்கத்தாவிலும் எதிர்காலத்தில் தோற்றுவிக்கப்பட வேண்டிய அமைப்புக்களுக்குத் திட்டங்களைத் தீட்டினார். அந்த அமைப்புக்கள் செய்ய வேண்டிய பணிகளாக, கைக‌ளில் தேசப்படங்கள் (மேப்), ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்சென்று ஒரு சிறிய கூட்டத்தைக் கூட்டி பாடம் நடத்தச் சொன்னார். வேதாந்தத் தத்துவங்களைப் பரப்ப இதழ் ஆரம்பிக்கும் திட்டத்தையும், அதனோடு கூட பெருங்கூட்டத்தினருக்கு கல்வி புகட்டுவதையும் முன்வைக்கிறார்.

“வயிற்றுக்குச்சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதருக்கெலாம்!
பயிற்றிப் பல கல்வி தந்து
இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்!”

-என்ற மகாகவியின் வாக்கும் சுவாமிஜியின் தாக்கத்தால் விளைந்ததாகும்.

சுவாமிஜியின் இரண்டு லட்சியங்களான அறியாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்புக்கு நம்மால் ஆன பணிகளைச் செய்வதே சுவாமிஜியின் 150-ஆம் ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டங்களுக்கு நாம் செய்யும் அஞ்சலி.

வாழ்க சுவாமிஜியின் திருநாமம்! வளர்க பாரதம்!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s