-மம்தா பானர்ஜி
செல்வி மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர். ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் மாத இதழின் சிறப்பிதழுக்கு 2014-இல் இவர் வழங்கிய வாழ்த்துரை இது….

சுவாமி விவேகானந்தர் இளைய பாரதத்தின் லட்சியத் திருவுருவம்! நமது இளைய தலைமுறையின் எழுச்சி நாயகன்!
சுவாமிஜியால் நான் எவ்வாறு ஈர்க்கப்பட்டேன் என்பதைக் கூறும் முன்பு, சுவாமிஜி பற்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியதைக் கூறுகிறேன்:
“ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் நான் எவ்வளவு கடமைப்பட்டுள்ளேன் என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. அவர்களின் பவித்ரமான தூண்டுதலால் மட்டுமே என் வாழ்வு விழிப்படைந்தது.”
சுவாமிஜியின் நூல்கள் உயர்ந்த ஞானப் பொக்கிஷங்கள். அவை ஆக்கபூர்வமான சிந்தனைகள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் அளவில் சிறியது; ஆனால் அளவற்ற நம்பிக்கையையும் உற்சாகத்தையும் நல்கும் சிந்தனைகளை உள்ளடக்கியது. அந்தக் கருத்துகளைப் படித்தாலும், அவற்றுள் சிலவற்றையேனும் நமது தினசரி வாழ்வில் செயல்படுத்தினாலும் வாழ்வில் வரும் மாபெரும் சவால்களை வெல்ல முடியும்.
ஆழ்ந்த மதிநுட்பம், செயலாண்மை, பக்தி ஆகியவற்றின் முழு வடிவம் சுவாமிஜி. தேசபக்தருள் தலைசிறந்தவர் அவர். ஆக்கபூர்வமான சிந்தனைகளின் ஒட்டுமொத்த உருவம் அவர். நர சேவையே நாராயண சேவை என்பது அவரது அருளுரைகளின் மையக்கருத்து. அதுவே அவர் வாழ்க்கையாகவும் ஆனது.
உலக வரலாறு என்பது தன்னம்பிக்கை உடைய ஒரு சிலரின் வரலாறே. அத்தகைய தன்னம்பிக்கை நம்முள் இருக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அவரின் இந்த வரிகளை இந்திய இளைஞர்கள் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
சுவாமிஜி இல்லை என்ற சொல்லை நமக்கு ஒருபோதும் கற்பித்ததில்லை. வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும். சுவாமிஜியின் வாழ்வையும் வாக்கையும் படித்தால் அவற்றைச் சந்திக்க உற்சாகத்தையும் ஆர்வத்தையும் பெறுவோம் என்பது உறுதி.
போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். தோல்விகளை, சறுக்கல்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஆயிரம் தடவை லட்சியத்திலிருந்து வழுவினாலும் திரும்பத் திரும்ப லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள்.
-சுவாமிஜியின் இந்தக் கருத்து எனக்கு வலிமையை அளிக்கின்றது. எனக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் அனைவருக்கும் வலிமையை அளிக்க வல்லது. மனிதப் பிறவியின் மகத்தான பெருமையை உலகிற்கு உணர்த்தினார். அது அவர் உலகிற்கு அளித்த கொடையாகும்.
சுவாமிஜியின் “எழுந்து நில், போராடு. ஓர் அடிகூட பின்வாங்காதே. எது வரினும் கடைசிவரை போராடி வெற்றி கொள்” என்ற வீர உரைகளை மக்களை உற்சாகப்படுத்த நான் அடிக்கடி கூறுவேன்.
இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் சுவாமி விவேகானந்தரை ஆழ்ந்து படியுங்கள். அவரிடத்தில் எல்லாமே ஆக்கபூர்வமானவை. எதிர்மறையானது எதுவும் இல்லை என்று கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் கூறியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தரைப் படித்தால் ஒருவர் ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கொண்ட உண்மையான இந்தியனாக விளங்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சுவாமி விவேகானந்தரின் ஓராண்டு காலப் பிறந்த ஆண்டுக் கொண்டாட்டங்களின் பொருத்தம் மிகு முத்தாய்ப்பாக ஒரு சிறப்பிதழை வெளியிட உள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.
இது சுவாமி விவேகானந்தரின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் மக்களின் மனங்களில் பதிய வைத்து, பலம், உற்சாகம் மற்றும் நேர்முகச் சிந்தனை ஆகிய செய்திகளைப் பரப்பும் என்று நான் மனமார நம்புகிறேன்.
இந்தப் புனிதப் பணிக்காக ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தைப் பாராட்டுகிறேன். வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் (ஜனவரி 2014)
$$$