-மகாகவி பாரதி
ஜப்பானில் உள்ள மக்கள் பாரம்பரிய மதங்களைக் கைவிட்டு ‘கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்’ என்று மனம் வருந்தும் மகாகவி பாரதி, அந்நாட்டிற்கு, ‘ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்’ என்கிறார், இக்கட்டுரையில்...

(நவம்பர் 10, 1906)
ஒரு மனிதருக்கேனும் ஒரு ஜாதியாருக்கேனும் ஈசுவரன் ஞானத்தைக் கொடுத்து இருப்பது இவர்களின் சொந்த அலங்காரத்தின் பொருட்டாக இல்லை; இவர்களுடைய ஞானத்தை மற்ற ஜனங்களுக்குப் பரப்பும் பொருட்டாகவேயாகும். செல்வத்தைப் பெற்றிருப்பவன் அதைப் புதைத்து வைக்காமல் மற்ற ஜனங்களுக்கும் உதவி செய்யக் கடமைப்பட்டிருப்பதைப்போலவே ஞானமுடையவனும் அதையெல்லோருக்கும் தாராளமாக வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான்.
ஹிந்து ஜாதியார் மற்றெந்த விஷயத்திலும் குறைவு பட்டிருந்த போதிலும், தத்துவ ஞான விஷயத்திலே இவர்களிடம் சில அருமையான மனோரத்தினங்களிருக்கிற தென்பதை உலகத்தார் அனைவரும் ஒரே மனத்துடன் அங்கீகரித்திருக்கிறார்கள். லோபித்தனமான நம்மவர்கள் இந்த அருமையான ஞானரத்தினங்களைப் புதைத்து வைத்துக் கொண்டிராமல் எல்லா தேசத்தார்களுக்கும் வழங்குதல் பொருந்தும். முற்காலத்தில் எல்லாம் இங்ஙனமே நடை பெற்று வந்தது. ஆனால், இந்தியா பதனமடைந்து இந்தியர்களைச் சுற்றி பலவிதமான…… சூழத் தொடங்கிய காலத்திலே இவர்கள் தாம் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து வைத்த ஞானக்குவைகளை அதிகரிக்க முயற்சி பண்ணாமலும். தானும் அனுபவிக்காமலும், அன்னியர்கள் உபயோகிக்கவும் அனுமதிதராமலும் புதையல் காத்த பேய்கள் போலாகி விட்டார்கள்.
* * *
சென்ற சில வருஷங்களாக இந்தியாவிலே ஓர் புதிய எழுச்சி தோன்றியதற்கு முன்னடையாளமாக சுவாமி விவேகானந்தரும் அவரது கூட்டத்தாரும் தோன்றி உலக முழுதிற்கும் ஹிந்துமத உண்மைகளைப் பட்டினத்தார் தமது பணத்தைச் சூறை கொடுத்ததுபோல வாரியிறைக்கத் தொடங்கினர்கள். லெளகீக இன்பங்களிலும் நாஸ்திகக் கோட்பாடுகளிலும் மூழ்கிக் கிடந்த அமெரிக்காவிலே போய் தமது “ஸர்வத் தியாக’’ கோட்பாடுகளையும் எல்லா வஸ்துக்களின் ஏகத்துவத்தையும், விவேகானந்த சுவாமி ராஜமேகம் போல் நின்று வருஷிக்கத் தொடங்கினார். அவருக்கப்பாலும், சுவாமி அபேதானந்தர், திரிகுணதீதர் முதலானவர்கள் இவரது பெரும் தொழிலை முறையே நடத்திவருகிறார்கள்.
இப்போது ஜப்பானிலே மத மாறுபாடுகள் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. பழைய கன்பூஷிய மதம், சிதைவுபட்ட புத்தமார்க்கம் என்பனவற்றைக் கைவிட்டு வருகிறார்கள். இவர்களில் சிலர் கிறிஸ்தவ மார்க்கத்திலும் சிலர் மகமதிய மார்க்கத்திலும் சார்பு காட்டி வருகின்றார்கள்.
* * *
அவர்களுக்கு இந்தச் சமயத்தில் ஹிந்து மார்க்க உண்மைகளை உபதேசிக்க யாரேனும் பெரியோர்கள் செல்வார்களானால் மிகவும் சிறப்பாக இருக்கும். ராமகிருஷ்ண மடத்து சந்நியாசிகள் இவ்விஷயத்தில் சிரத்தையெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அவர்களுடைய ஞானவிதைகளை ஊன்றுவதற்கு அமெரிக்காவைக் காட்டிலும், ஜப்பான் மிகவும் பக்குவமான பூமியாகும்.
மேலும் ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இக்காலத்தில் பலவிதமான சம்பந்தங்களேற்படுத்துவது பலவிதமான நன்மைகள் உ ண்டாகக் கூடியது. ஜப்பானியர்களால் நமக்கு எத்தனையோ காரியங்கள் ஆகவேண்டி இருக்கிறது. ஜப்பானியரிடமிருந்து நாம் எத்தனையோ விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஜப்பானியர்கள் நமது தேசத்தை “தேவலோகம்” என்ற பாஷையிலே வழங்கி வருகிறார்களென்பது முன்னமே சொல்லியிருக்கின்றோம். அத் தேசத்தாருக்கு நம்மிடமுள்ள மதிப்பை நாம் வளர்க்க முயற்சி புரிய வேண்டும். இவ்விஷயத்திற்குத் தக்க உபதேசிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது நமது செல்வர்களாலும் மடாதிபதிகளாலும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
$$$