-மகாகவி பாரதி
லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது, அந்தப் பத்திரிகை - மகாகவி பாரதியின் இதழியல் பார்வை எத்துணை உயரத்திலிருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது இக்கட்டுரை….

(12 பிப்ரவரி 1921)
ஐரோப்பாவைப் பிடித்த சனி இன்னும் முற்றிலும் நீங்கியதாகத் தெரியவில்லை. சென்ற நான்கு நூற்றாண்டுகளில் ஐரோப்பா கல்வித் தேர்ச்சி, இயற்கை யறிவு முதலியவற்றில் எவ்வளவோ மேன்மை யடைந்திருக்கிறது. ஆனால் அதை அக்கல்வி முதலியவற்றால் எய்தக் கூடிய முழு நலத்தையும் எய்தாதபடி தடுத்து, ஏறக் குறைய ஸ்மசான நிலைமையில் கொண்டு சேர்த்தது யாதெனில், அதன் ஓயாத போர் நினைவு !
ஐரோப்பாவில் ஸதா ஏதேனுமோர் யுத்தம் நடந்து கொண்டிருக்கும். அல்லது விரைவில் ஒரு யுத்தம் வரப் போவதாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அந்தக் கண்டத்தாரின் மனதிலிருந்து யுத்தபயம் முற்றிலும் நீங்கியிருந்த ஒற்றை க்ஷணமேனும் பல நூற்றாண்டுகளாகக் கிடையாது.
இதனிடையே, சென்ற நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவின் ஒருபாகத்தினுள்ளே ஒதுங்கி வாழ்ந்த வெள்ளை ஜாதியார்கள் இன்றைக்கு ஐரோப்பா முழுவதையும், அமெரிக்காக் கண்ட முழுதையும், ஆஸ்திரேலியாவையும், ஆப்ரிகாவில் முக்காலே யரைக்காற் பங்கையும், ஆசியாவில் பாதிக்கு மேற் பகுதியையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.
இங்ஙனம் இந்த நான்கு நூற்றுண்டுகளுக்குள்ளே பல கண்டங்களை வெல்லும் சக்தி இவர்களுக் கேற்பட்டதன் காரணம் வெடி மருந்து, துப்பாக்கி, பீரங்கிகள். இந்த ஆயுதங்கள் மற்றக் கண்டத்தாரின் வசப்படு முன்பு வெள்ளை ஜாதியாருக்கு வசப்பட்டன. அதனால் பூமண்டலம் அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழே வீழ்ந்தது.
ஆனால், இங்ஙனம் உலக முழுதையும் வென்று, அங்கெல்லாம் தங்களுடைய வியாபாரத்தையும் நிலைநிறுத்தி ஏராளமான செல்வங்கள் திரட்டி ஐரோப்பாவுக்குக் கொணர்ந்த ஐரோப்பியர் அந்தக் குவை குவையான திரவியங்களையும், அவர்களுக்கு “ஸயன்ஸ்’’ ஞானத்தால் இயற்கையின் மீது கிடைத்த புதிய சக்திகளையும் யுத்தத்தில் உபயோகப் படுத்துவதே முதற் கடமையாகக் கருதினர்.
திருஷ்டாந்தமாக, வான விமானம் பறக்கத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐரோப்பியர் அதைப் போரிலே உபயோகப் படுத்துவதெப்படி என்பதைக் குறித்து யோசனை செய்யத் தொடங்கி விட்டார்கள்.
இந்த குணத்திலிருந்து கடைசிப் பயனாக விளைந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தனால் தாம் எய்திய கஷ்டங்களை உணர்ந்த பின்னராவது அவர்களுக்கு இந்த குணம் அடியோடு தொலைந்து விட்டதென்று நினைத்தோம். ஆனால் பிறவிக் குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினால் போதுமா? இத்தனை கஷ்டங்களுக்குப் பிறகும் இந்தகுணம் அவர்களைக் கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது
உள் நாட்டுக் குழப்பத்தை அடக்குவதற்கு வேறு நியாயமான வழி தெரியாமல், பிற நாடுகளுடன் போர் தொடுத்து, அதினின்றும் ஸ்வ ஜனங்கள் ஏராளமாக மடிந்து தொலைவார்களாதலால் அங்ஙனம் உள் நாட்டுக் கலகம் தானே சாந்தி பெற்று விடுமென்று எதிர்பார்த்துப் பிற தேசங்களோடு போர் தொடங்குதல் சக்தியற்ற ராஜதந்திரிகளின் ஹீன மார்க்கங்களில் ஒன்று.
அதை முன்பு ருஷியா தேசத்துச் சக்ரவர்த்தி அனுஸரித்தார். அவர் அதனால் எய்திய முடிவைக் கண்டும் புத்தி தெளியாமல், இன்று வேறு சில ஐரோப்பிய தேசங்களின் ராஜதந்திரிகள் அந்த வழியை அனுஸரிக்க எண்ணுகிறார்களென்று நினைக்க பலமான ஹேதுக்கள் இருக்கின்றன.
ஆனால், இனி ஐரோப்பாவில் அல்லது மேற்கு ஐரோப்பாவில், குறைந்த பக்ஷம் இன்னும் 30 வருஷங்களுக்கு ஜனங்கள் யுத்தத்தின் பெயரையே ஸ்மரிக்க மாட்டார் களென்பது திண்ணம். சூடுகண்ட பூனை அடுப்பங்கரையை அணுகாது.
எனிலும் ஐரோப்பிய தேசத்தார்களுக்குள்ளே ஏற்பட்டிருக்கும் விரோதங்களை மூடும் பொருட்டு ஐரோப்பா முழுவதையும், அல்லது வெள்ளை ஜாதியார் அனைவரையும் ஆசியா, ஆப்பிரிகா ஜனங்களின் மீது போருக்கு விடலா மென்று சில மதிகேடர் யோசனை செய்கிறார்கள்!
லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகை பொறுப்புத் தன்மை யுடையதாகத் தன்னை மிகவும் கணித்துக் கொள்ளுகிறது. இங்கிலாந்து தேசத்து மந்திரிகளைக் காட்டிலும் தனக்கு ப்ரிட்டிஷ் பரிபாலன விஷயத்தில் ஆயிரம் பங்கு அதிகப் பொறுப்புணர்ச்சி யிருப்பதாக நடிக்கிறது. அந்தப் பத்திரிகை தனது 1921 ஜனவரி 15–ஆம் தேதிப் பதிப்பில், மிஸ்டர் மக்ளுர் என்ற அமெரிக்கப் பத்திரிகாசிரியரொருவர் எழுதிய “மேற்கும் கிழக்கும் விரோதம்’’ என்ற வ்யாஸத்தை ப்ரசுரம் செய்திருப்பதுடன், அதைக் குறித்து ஒரு தலையங்கக் குறிப்பும் வரைந்திருக்கிறது.
அந்த வ்யாஸத்தின் கருத்து யாதெனில் எதிர்காலத்தில் ஸமீபத்திலே ஏற்கெனவே நடந்த ஐரோப்பிய மஹா யுத்தத்தைக் காட்டிலும் பன் மடங்கு கொடிய பூகோள மஹா யுத்தமொன்று நடக்கப்போகிற தென்பது. இந்த யுத்தம் வெள்ளை ஜாதியாருக்கும் இதர வர்ணத்தாருக்கு மிடையே நடக்குமாம். ஜப்பானியரையும் சீனரையும் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் தம்முள்ளே பிரவேசிக்கக் கூடாதென்று தடுப்பதை உத்தேசித்து மஞ்சள் வர்ணத்தாருக்கும் வெள்ளையருக்கும் சண்டை வருமாம். ஜப்பானில் பூமி கொஞ்சம், ஜனத்தொகை அதிகம். அதற்கு அதி சமீபத்தில் வட அமெரிக்கா இருக்கிறது. அங்கு விஸ்தாரமான பூமிகளிருக்கின்றன. ஜனத்தொகை மிக சொற்பம். இன்னும் உழவின் கீழே கொணராத மிக வளமார்ந்த மைதானங்கள் ஆயிரக் கணக்கான மைல்களில் பரவிக் கிடக்கின்றன. கனடாவிலுள்ள நிலங்களை நன்றாக முழுமையும் பயன்படுத்தினால் அதில் விளையக்கூடிய கோதுமை மனிதக் கூட்டத்தில் பாதிக்குப் போதிய உணவாகு மென்று கணக்கிடப் பட்டிருக்கிறது.
உலகத்திலுள்ள பூமியை யெல்லாம் இங்ஙனம் ஐரோப்பியர் சூழ்ந்து கொண்டு, நிலத்துக்குத் தவிக்கும் ஜனங்களைத் தம் சூழல்களுக்குள் ப்ரவேசிக்கக் கூடாதென்று தடுப்பதை ஜப்பான் ஆக்ஷேபிக்கிறது. வலியவன் பேச்சு இறுதியில் வெல்லுமென்ற ஐரோப்பியக் கொள்கையை சாதகமாக எண்ணி ஜப்பான் தன் சண்டைக் கப்பல்களை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறது. தன் பீரங்கிகளைப் பெருக்குகிறது. தன் படைகளை பலப்படுத்துகிறது.
இதைக் கண்டு அமெரிக்காவுக்கு நடுக்க மேற்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு இங்கிலாந்து கழுத்து வரை கடன் பட்டிருக்கிறது. இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் நட்புடம்பாடு செய்து கொள்ளப் பட்டிருக்கிறது. ஆனால் ஜப்பானுடன் சேர்ந்து கொண்டு இங்கிலாந்து அமெரிக்காவுடன் போர் செய்யாதென்று மிஸ்டர் மக்ளுர் ப்ரமாணம் பண்ணுகிறார். அதை லண்டன் ‘’டைம்ஸ்’’ பத்திராதிபர் மனப் பூர்வமாக ஆமோதிக்கிறார்.
மேலும் தென் ஆசியாவிலும் ஆப்ரிகாவிலுமுள்ள ஜனங்கள் ஐரோப்பாவின் ஆட்சியைத் தள்ளி விடப் போகிறார்களாம். அவர்களிடம் ஆயுதங்கள் இல்லையே யெனில், அவர்கள் அவற்றை மிக விரைவில் செய்து கொள்வார்களென்று மிஸ்டர் மக்ளுர் சொல்லுகிறார்.
இந்த யுத்தத்தில் சில ஐரோப்பிய தேசத்தார் ஆசியாக் கண்டத்தாரின் பக்கத்திலே சேர்ந்து கொள்ளக்கூடுமென்று மிஸ்டர் மக்ளுர் சொல்லுகிறார்.
எனவே, வெள்ளை ஜாதியாருக்குப் பெரிய ஆபத்து வரப்போகிறதென்று மிஸ்டர் மக்ளுர் பலமாக எச்சரிக்கிறார். ஆனால் ஆசியா இந்தியாவின் தலைமைக்குட்பட்டது. இந்தியா ஐரோப்பியரைக்கூடக் கொல்ல விரும்புவதில்லை. திருத்த விரும்புகிறது. எனவே, ஐரோப்பியர் இந்தப்புதிய பயத்திற்கிரையாதல் அவசியமில்லை. அது வெறும் பேதையச்சம். ஆனால் நம்முடைய சொல் ஐரோப்பாவில் எட்டுவதைக் காட்டிலும் லண்டன் “டைம்ஸ்’’ பத்திரிகையின் சொல் அதிகமாகவும் விரைவாகவும் எட்டுமே? அதற்கென்ன செய்யலாம்?
- சுதேசமித்திரன் (12.02.1921)
$$$