கிணற்றுத் தவளையும் கடல் தவளையும்

-ஆர்.நல்லக்கண்ணு

திரு. ஆர்.நல்லகண்ணு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மூத்த தலைவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வமத மகாசபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றில் சிறந்த உரையாகக் கருதப்படுகிறது. 121 ஆண்டுகள் கழிந்தாலும் இன்றும் சிகாகோ சிறப்புரை அன்றாட வாழ்க்கையில் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டிய அறிவுரையாக உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் வெள்ளிவிழா மாநாடு வாஷிங்டன் மாகாணம் பால்டிமோரில் நடந்தது. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து. மூன்று நாள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

சில இடங்களுக்குச்சென்று பார்ப்பதற்கு விழாக்குழுவினர் ஏற்பாடு செய்தார்கள். முதலில் சிகாகோ நகர் என்று தெரிந்ததும், பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

சுவாமி விவேகானந்தர் கலந்துகொண்ட சர்வதேச மாநாடு நடைபெற்ற கட்டடத்தையும், எட்டு மணிநேர வேலை கோரி அணிதிரண்ட தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான ஹே மார்க்கெட்டையும் பார்க்க வேண்டுமென்று தெரிவித்தேன். சிகாகோ நண்பர்கள் என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்டு நிறைவேற்றிக் கொடுத்தார்கள்.

உலக மதங்களின் பார்லிமெண்ட கட்டடத்துக்கு சென்று கேட்டோம். கட்டடத்தின் உள்ளே இருக்கும் ஒரு பகுதியைக் காட்டினார்கள். அவர்கள் சர்வதேச மதங்கள் மாநாடு நடைபெற்ற இடத்திற்குச் செல்லும் வழியைத் துல்லியமாகத் தெரிவித்தார்கள்.

அங்கு சென்றவுடன் பெரிய வீதியில்  ‘விவேகானந்தர் வீதி’ என்று குறிப்பிட்டுள்ள கைகாட்டியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தோம். பெரிய மாளிகை போன்ற அரங்கு. புதுப்பிக்கப்பட்டிருந்தது. எங்களை அழைத்துச் சென்று மாநாடு நடந்த அரங்கையும், சுவாமி விவேகானந்தரின் இருக்கையையும் காட்டினார்கள். அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களும் இருந்தன.

120 ஆண்டுகளானாலும் மறக்காமல் பாதுகாக்கப்பட்டிருக்கும் வரலாற்றுப் பதிவுகளைக் கண்டு திகைப்படைந்தேன். நம் நாட்டில் வரலாற்றுப் பதிவுகளில் போதுமான அக்கறையும் ஈடுபாடுகளுமில்லாததை எண்ணி வேதனையடைந்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

சிகாகோ மாநாட்டில் கலந்துகொண்ட விவேகானந்தருக்கு வயது 29 தான். இள வயதுத் துறவி. கம்பீரமான தோற்றம். அறிவும், ஆற்றலும், தாய்நாட்டின் இழிநிலை கண்டு ஆதங்கமும் விவேகானந்தரின் முகத்தோற்றத்தில் காணப்பட்டன.

சர்வமத சபை மாநாடு சிகாகோவில் 1893 செப்டம்பர் 11-இல் துவங்கி, 17 நாள்கள் நடந்தன. முதல் நாளே நான்காவது பேச்சாளராக பிற்பகலில் சுவாமி விவேகானந்தர் பேசத் துவங்கினார். மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் விவேகானந்தர் தான் இளைஞர். முன்னே பேசிய அனைவரும் மேலைய நாட்டு வழக்கப்படி,  ‘சீமான்களே! சீமாட்டிகளே!’ என்று பேச்சைத் துவங்கினார்கள்.

இளம் துறவியான விவேகானந்தர் கம்பீரமாக எழுந்தார். ‘அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!’ என்று துவங்கினார். கையொலி ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது.

‘எல்லா மதங்களும் சகிப்புத் தன்மையை போதிக்கின்றன. மத வெறி, உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து நாகரிகத்தை அழித்து, உலகை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலையை எய்திருக்கும். இன்று காலை இம்மாநாட்டின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மதவெறிக்கும் மற்ற இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி என்று நான் திடமாக நம்புகிறேன்.’

இதுவே சிகாகோ மாநாட்டில் விவேகானந்தரின் முதன் முழக்கமாகவும், உலக அரங்கில் இந்திய இளம் துறவியின் முத்தான பேச்சாகவும் இன்று வரை விளங்கிவருகிறது. 17 நாள்கள் நடந்த மாநாட்டில் ஆறு முறை பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியிருக்கிறார்.

15.9.1893 அன்று விவேகானந்தர் தனது இரண்டாவது உரையை நிகழ்த்தினார். கடல் தவளை கிணற்றுக்குள் விழுந்து விட்டது. கிணற்றில் விழுந்த கடல் தவளைக்கும், கிணற்றுத் தவளைக்கும் கடலின் ஆழம், அகலம் பற்றி விவாதம் நடந்த கதையை நகைச்சுவையுடன் கூறினார்.

‘காலம் காலமாக இருந்து வருகிற தொல்லை இதுதான். நான் இந்து. என் சிறிய கிணற்றுக்குள் இருந்து கொண்டு, என் சிறிய கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்துவன் தனது மதமாகிய சிறு கிணற்றுக்குள் இருந்துகொண்டு தன் கிணறுதான் முழு உலகம் என்று நினைக்கிறான். இந்தச் சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக!’ என்று முடிக்கிறார்.

27.9.1893-இல் விவேகானந்தரின் இறுதி உரையில் இந்த மாநாட்டின் மூலம் உருவாகியுள்ள ஒருமைப்பாடு ஏதாவது ஒரு மதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிடைக்கும் என்று யாராவது நம்பினால் அது வீணானது.

விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும், காற்றும், நீரும் அதைச்சுற்றிப் போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிறதா? இல்லை. அது செடியாகத் தனது வளர்ச்சி நியதிக்கேற்ப வளர்கிறது. காற்றையும், மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு சத்துப்பொருளாக மாற்றிக் கொண்டு செடியாக வளர்கிறது.

மதங்களின் நிலையும் அதுவே. ‘தன் மதம் மட்டும்தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால், அவர்களைக் குறித்து என் இதய ஆழத்திலிருந்து பரிதாபப்படுவதுடன் இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் ‘உதவி செய், சண்டை செய்யாதே! ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமும் சாந்தமும் வேண்டும். வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்று சுட்டிக்காட்ட வேண்டும்’ என்று முடிவு செய்கிறார்.

39 ஆண்டுகளே வாழ்ந்தவர். உணர்ச்சி பிழம்பாக வாழ்ந்தவர். ‘ஞானரூபேந்திரன்’ என்று விவேகானந்தருக்கு பாரதி புகழாரம் சூட்டியுள்ளார். “துவராடை அணிந்த புரட்சித் துறவி விவேகானந்தர்’ என்று பொதுவுடைமை இயக்கத்தின் ஜீவா அவரைப் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் தனது நான்காண்டுப் பயணத்தை முடித்து இந்தியாவுக்குத் திரும்பினார். 1897 ஜனவரி 26-ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள பாம்பன் வந்திறங்கினார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டுக்குச் செல்வதற்கு பரிந்துரை செய்தவரும், நிதியுதவி செய்தவருமான ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, பாம்பன் சென்று விவேகானந்தரை வரவேற்றார்.

ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை போன்ற இடங்களில் சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மானாமதுரை, சிவகங்கை இரு ஊர்களிலும் விவேகானந்தர் பேசிய கருத்துக்கள் இன்றும் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய அரிய கருத்துக்களாகும்.

‘முட்டாள் தனமான பழைய விவாதங்களையும் பொருளற்றவற்றைப் பற்றிய சண்டைகள் எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்! கடந்த அறுநூறு எழுநூறு ஆண்டுகளாக நாம் எவ்வளவு இழிநிலை அடைந்துள்ளோம் என்பதை எண்ணிப் பாருங்கள். நமது மதம் சமையலறைக்குள் அடங்கிவிடுமென்ற ஆபத்துள்ளது.

நாம் எல்லாம் வெறும்  ‘தீண்டாதே, தீண்டாதே’ என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். நமது மதம் சமையல் அறையில் இருக்கிறது. பானை தான் நமது கடவுள், என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால், நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம்.

இத்தகைய நிலைகளை மாற்றவேண்டும். உறுதியோடு எழுந்து நிற்கவேண்டும். செயல்திறனும், வலிமையும் மிக்கவர்களாக வேண்டும். ஓர் உயரிய லட்சியத்துக்காக அர்ப்பணிப்பதால் மட்டுமே வாழ்க்கை மதிப்பு பெறுகிறது’ என்று பேசினார்.

சுவாமி விவேகானந்தர் ஆன்மிகவாதி! ஆனால், எதுவும் தானாக மாறிவிடும் என்ற உணர்வில் செயல்படாமலிருப்பதை எதிர்த்தவர்.

‘எழுமின், விழிமின், இறுதி லட்சியம் ஈடேறும்வரை போராட வேண்டும்’ என்று அறைகூவல் விடுத்து விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக்கு வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர்.

அவர் சிகாகோ சர்வமத சபையில் ஆற்றிய சொற்பொழிவை இன்று நினைவுகூர்வோம்.

  • நன்றி: தினமணி (11.09.2014)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s