மேலை நாட்டு ஸ்பினோஸாவும், கீழை நாட்டு நரேந்திரரும்

-சந்திர. பிரவீண்குமார்

விஜயபாரதம் வார இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. சந்திர. பிரவீண்குமார், சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது…

பாரூக் ஸ்பினோஸா…

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த யூதத் தத்துவ ஞானி. உலகம் உருண்டை என்று சொன்னதற்காக கலிலியோ சர்ச்சுக்கு முன்னால் மன்னிப்புக் கேட்ட அதே 1632-ஆம் ஆண்டில் தான் ஸ்பினோஸா பிறந்தார்.

ஏசுவை சிலுவையில் அறைந்த பாவத்தை யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் சுமந்தார்கள். அவர்களுக்கென்று எந்த நாடும் இல்லாமல் நாடோடிகளாக வாழ்க்கையை நடத்தினார்கள். அதில் ஸ்பினோஸாவின் முன்னோரும் விதிவிலக்கல்ல. கிறிஸ்தவ வெறியர்களால் ஸ்பெயின் நாட்டிலிருந்து நாடோடிகளாக அவர்கள் துரத்தப்பட்டு ஹாலந்துக்கு வந்தார்கள். அங்கும் யூதர்கள் மோசமாகவே நடத்தப்பட்டார்கள்.

ஸ்பினோஸா ஆசாரமான யூத குடும்பத்தைச் சார்ந்தவர். பைபிளும், மேற்கத்திய மதக் கொள்கைகளும் அவருக்கு சிறுவயதிலேயே கற்பிக்கப்பட்டன. ஆனால் ஸ்பினோஸாவோ பைபிள் கருத்துக்களுக்கு எதிர்க் கேள்வி கேட்க ஆரம்பித்தார். சர்ச்சுக்குப் போவதை நிறுத்தினார். தனக்கென்று சிந்தனைகளையும், சிஷ்யர்களையும் வளர்த்துக் கொண்டார்.

ஹாலந்தை ஆட்சி செய்தவர்கள் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கும் யூத எதிர்ப்பு இருந்தது. ஏற்கனவே எரிந்துகொண்டிருக்கின்ற தீயில் எண்ணெய் ஊற்றியது போல இருந்தது ஸ்பினோஸாவின் செயல்கள்.

விளைவு, யூதர்கள் மீதான அடக்குமுறைகள் ஹாலந்தில் அதிகமாயின. ஸ்பினோஸாவை  யூதர் இல்லை என்று அறிவிக்க நேர்ந்தது. அப்படி அறிவிப்பது கொடூரமானது. தனி இருட்டறையில் அந்த நபரை வைப்பார்கள். அணைந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படும். எல்லா மெழுகுவர்த்திகளும் அணைந்தால் அந்த நபருக்கும் யூத மதத்துக்கும் சம்பந்தமில்லை என்று அர்த்தம். இது நடந்தபோது ஸ்பினோஸாவுக்கு வயது 24.

அடுத்து இருபதாண்டுகள் தான் ஸ்பினோஸா உயிருடன் இருந்தார். தனது 44-ஆவது வயதில் நுரையீரல் பிரச்னையால் அவர் காலமாகும் வரை புரோட்டஸ்டன்ட் ஆட்சியாளர்களோடு அவர் போராட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அவர் இறையியல் சம்பந்தமான ஒரு புத்தகத்தை எழுதியுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. அப்படி எழுதினால் அது யூத, கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கும் என்று கருதப்பட்டது. அதனால் ஸ்பினோஸா தான் எந்த புத்தகத்தையும் எழுதவில்லை என்ற உறுதிமொழி தந்து வாழ நேர்ந்தது.

ஸ்பினோஸாவின் மறைவுக்குப் பிறகுதான் அவரது நூல்கள் வெளிவந்தன. மற்றவர்கள் நினைத்தது போல ஸ்பினோஸா இறை மறுப்பாளர் அல்ல;  ஆழ்ந்த இறைஞானி என்று நிரூபணமானது.

அவரது கடவுள்,  ‘இயற்கையுடன் இணைந்த கடவுள்’. அவரைப் பார்க்க முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும். அவர் இறந்த பிறகு அவர் கொண்டாடப்பட்டார். ஐன்ஸ்டீன் உட்பட ஏராளமானவர்கள் அவரைப் பின்பற்றினார்கள். இன்றும் அவர் மேற்கு உலகில் கொண்டாடப்படுகிறார்.

கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக, தனித்துவமான இறை நம்பிக்கையை வைத்துக்கொண்டு  அவரால் வாழ முடியவில்லை. அதுவும் நாகரிகத்தின் சிகரம் என்று தன்னைத் தானே வர்ணித்துக்கொள்ளும் ஐரோப்பாவில் ‘வாழ்ந்தார்’. மத நம்பிக்கையில் சிறிய அளவில் கூட அவர் சுதந்திரத்தை சுவாசிக்க முடியவில்லை. இறந்த பிறகே வெளிச்சத்துக்கு வந்தார். என்ன பயன்? அனுபவிக்க ஆள் இல்லையே?

ஆனால் 19-ஆம் நூற்றாண்டில் பாரதத்தில் ஒருவர் இருந்தார். சிறு வயதில் இறைவனின் இயல்பு பற்றி கேள்வி கேட்டார். “நேரில் பார்த்தால் தான் கடவுளை நம்புவேன்” என்று கூறிக்கொண்டார். சில காலம் கடவுள் நம்பிக்கையற்ற பிரம்ம சமாஜத்தில் கூட தீவிர உறுப்பினராகச் செயல்பட்டார். அவர்தான் நரேந்திரர்.

நரேந்திரரை, கேள்வி கேட்டதால் யாரும் ஒதுக்கிவிடவில்லை; மாறாக அரவணைத்தார்கள். ஆசாரமான ராமகிருஷ்ணர் நம்பிக்கையற்ற நரேந்திரருக்குக் கடவுளைக் காட்டினார். அவரை விவேகானந்தராக மாற்றினார். எந்த நரேந்திரர்  ‘கடவுளிடம் நம்பிக்கை இல்லை’ என்று கூவினாரோ, அவரே விவேகானந்தராக, ராமகிருஷ்ணரின் சீடர்களை வழிநடத்தினார். விந்தை அத்துடன் முடிவடையவில்லை.

விவேகானந்தர் கடைசி வரை முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருந்தார். அமெரிக்கா சென்று இந்து மதத்தைச் சொல்லவும் செய்தார்; அதே நேரத்தில் மூட நம்பிக்கைகளை மூர்க்கமாகக் கண்டிக்கவும் செய்தார்.

அவர்தான் ‘இந்தியாவில் ஒவ்வொருவனும் தனி மதம் என்று ஆகட்டும். அப்போதும் கவலை இல்லை’ என்று சொல்லவும் செய்தார், ‘இங்கு மதத்தைச் சொல்வதற்கு முன்னால் கல்வி கொடு, வசதி கொடு’ என்று முழங்கவும் செய்தார்.

சன்யாசியாகவும் ஏராளமான புரட்சிகளைச் செய்தார் விவேகானந்தர். சாதிகளைக் களைந்தார். மாமிசம் உண்டார். வங்காளப் பாணியில் புகைத்தார். பெண்களை துறவியராக மடத்தில் சேர்த்துக்கொண்டார். சன்னியாசிகளுக்கு உடல் வலிமை வேண்டும் என்றார். அவர்களை மடத்தில் அமர்ந்து உபதேசம் செய்யச் சொல்லாமல், சேவையே சன்னியாசம் என்று வலியுறுத்தினார். நிவேதிதை போன்ற வெளிநாட்டவர்களை இந்து மதத்திற்கு மாற்றினார். பெண்ணுரிமைக்கும் குரல் கொடுத்தார்.

அத்தனைக்கும் சிகரமாக ஒரு மகத்தான காரியத்தையும் செய்தார். மூட நம்பிக்கையாளர்கள் அதிகமாக இருந்த 19-ஆம் நூற்றாண்டில் சாதாரண இந்துவே கடல் கடந்து போக முடியாது. விவேகானந்தரோ சன்யாசியாக அமெரிக்கா சென்று, நம் மதத்தின் பெருமையை உலகறிய செய்தார்.

புரட்சிக் கருத்துகளை முன்வைத்த விவேகானந்தரை யாரும் ஒதுக்கவில்லை. மாறாக எந்த இந்து மதக் கடவுள்களை அவர் கேள்வி கேட்டாரோ, அதே இந்து மதத்தின் அடையாளமாக இன்றளவும் போற்றப்படுகிறார்.

ஸ்பினோஸாவுக்கு மேற்குலகம் தந்த மரியாதை போல இறந்த பிறகு பாராட்டவில்லை பாரத மக்கள். வாழும் போதே விவேகானந்தரைக் கொண்டாடினார்கள் நம்மவர்கள். ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நட்பு வைத்தார்கள். அங்கீகாரம் தந்தார்கள். அதுவும் அடிமை நாட்டில்!

அதுதான் பாரதம்!

$$$

Leave a comment