மகாவித்துவான் சரித்திரம்- 2(13)

-உ.வே.சாமிநாதையர்

அநுபந்தம் 1

வேறு சில வரலாறுகள்#



எழுவாய் பயனிலை

பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். “என்ன படிக்க வேண்டும்?” என்று இவர் அவரைக் கேட்கவே அவர், “இலக்கியம் படிக்க வேண்டும்” என்று கூறினார். அப்பால், “இலக்கணம் படிக்க வேண்டாமா ?” என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்” என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, “இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?” என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், “எழுவாய், பயனிலை” என்று சொன்னார்; “எழுந்து செல்லலாம்; யோசிப்பதில் பிரயோசனமில்லை” என்பது இவர் சொல்லியதற்குப் பொருள். அவர் அதனையும் உணராதவராகி யோசித்துக் கொண்டிருந்தார். உடனிருந்தவர்கள் குறிப்பாக அதனைப் புலப்படுத்தினார்கள். அப்பால் அவர் அதனை அறிந்து வணக்கமுடையவராகி இவரிடம் சிலமாதம் இருந்து பாடங்கேட்டுவந்து பின்பு தம்மிடஞ் சென்றார்.

சதுர்வேத தாத்பரிய சங்கிரகம்

இக்கவிஞர் கோமானுக்குச் சைவத்தில் அழுத்தமான பற்று இருந்தமையின் வடமொழியிலுள்ள சைவ நூல்களின் கருத்துக்களைத் தக்கோர் வாயிலாக அப்பொழுது அப்பொழுது தெரிந்துகொள்வார். ஸ்ரீ அரதத்தாசாரியார் முதலிய பெரியோர்களுடைய நூல்களிலிருந்து அவ்வப்போது வடமொழி வித்துவான்கள் கூறும் சுலோகக் கருத்துக்களை அறிந்து மகிழ்ந்து தனிச்செய்யுட்களாக மொழிபெயர்ப்பதுண்டு; அன்றித் தாம் இயற்றும் நூல்களில் உரிய இடங்களில் அக்கருத்துக்களை அமைப்பதுமுண்டு. அரதத்தாசாரியர் இயற்றிய  ‘சுருதி சூக்திமாலை’ யென்னும் நூலுக்குரிய வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மதுரையிலிருந்த சிவபுண்ணியச் செல்வர்களாகிய *1  வேங்கடாசல செட்டியார், மெய்யப்ப ஐயா என்னும் இருவரும் இவருக்குத் தெரிவித்துக் கொண்டனர். இவருக்கும் அம்மொழிபெயர்ப்புப் பணி உவப்புடையதாக இருந்தது. அரதத்தாசாரியர் சரித்திரத்தையும் தமிழ்ச் செய்யுளாக இயற்ற வேண்டுமென்று இவர் எண்ணினார்.

திருவாவடுதுறையிலும் வேறு சில இடங்களிலும், சதுர்வேத தாத்பரிய சங்கிரக வடமொழிப் பிரதிகள் கிடைத்தன. மதுரை, திருஞானசம்பந்தர் ஆதீன மடத்தில் சில பிரதிகள் உண்டென்று தெரிந்தது. அவற்றையும் பெற்றுப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. ஆதலின் அப்போது அவ்வாதீன வித்துவானாக இருந்த குறுக்கைக் குமாரசாமிப்பிள்ளை என்பவருக்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார். அதற்கு விடையாக அவர் பின்வரும் கடிதத்தை எழுதினார்:

“சிவமயம்.

“ம-ள-ள- ஸ்ரீ ஐயா அவர்களுக்குக் குமாரசாமி எழுதிக்கொள்ளும் விஞ்ஞாபனம்.

இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமத்தை எப்பொழுதும் தெரிந்துகொள்ள விருப்புற்றிருக்கின்றனன். தாங்கள் அன்போடு வரைந்தனுப்புவித்த கடிதம் வரப்பெற்று மிக்க மகிழ்ச்சியை அடைந்தேன். அக்கடிதத்தை உடனே ம–ள-ள – ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களிடத்திற்கு அனுப்புவித்தேன். கடிதம் வருவதற்குச் சில நாள் முன் தொடங்கி எனக்கு ஒன்றரை மாதம் வரையிலும் கடினமான சுரம் அடித்துக் கொண்டிருந்ததனாலே பதிலெழுத இதுகாறும் தாமதித்தது. அரசத்தாசாரிய சாமி சரித்திரம் பலவிதமாக இருப்பதனாலே அதைப் பின்னாலே மொழி பெயர்க்கலாமென்றும், இப்போது சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்தை மாத்திரம் மொழிபெயர்த்துச் செய்யுளாக்க வேண்டும் என்றும், அதற்கு இவ்விடத்தில் இருக்கிற புஸ்தகம் வேண்டுமாயின் எழுதினால் அனுப்புவிக்கிறோமென்றும் ம -ள-ள- ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களும் மெய்யப்ப ஐயா அவர்களும் தங்களுக்கு எழுதியனுப்புவிக்கச் சொன்னார்கள். வேஷ்டியைக் குறித்து மாயாண்டி செட்டியாரவர்களை வினாவினதற்குத் தங்களுக்கு எழுதிக் கொள்ளுகிறோமென்று சொன்னார்கள். மதுரைக் கலம்பகம் எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றது. அதைத் தபால் வழியாகவாவது மனிதர் வசமாகவாவது அனுப்புவிக்கிறேன். ஸ்ரீ சின்ன சந்நிதானம் எப்போதும் தங்கள் குணாதிசயங்களைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றது. யான் குறுக்கைக்கு வருங்காலம் இன்னொரு காகிதத்தில் எழுதியனுப்புகிறேன். இங்கே எழுதிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தின் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டுவதில்லை யென்று சொன்னார்கள்.

குமாரசாமி
சுக்கில வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி
மதுரை.

     
விலாஸம்

“இது, நாகபட்டணத்தில் ஓவர்ஸியர் அப்பாத்துரை முதலியாரவர்கள் பார்வையிட்டு ம – ள – ள- ஸ்ரீ திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வசம் கொடுப்பது.”

—————–

இக்கடிதம் கண்டவுடன் இப்புலவர் பிரான் மீண்டும் குமாரசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினர். அது வருமாறு:

"சிவமயம்.

"குலவர் சிகாமணி குமாரசாமிப் புலவர் சிகாமணி பொருந்தக் காண்க."

"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும்.
"தாங்களனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது.  அதிசயமாகவும் சைவ சமயம் நிலைபெறும்படியாகவும் சுரந்தீர்த்த தலத்தில் தங்களை அது வருத்தியது அதிசயமாயிருக்கிறது. இப்போது சவுக்கியமாயிருக்கிறது குறிப்பாற்றெரிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இது நிற்க.

"சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்திற்கு  ‘சுருதி சூக்குமம்’ என்று பெயர். அக்கிரந்தத்தொகை நூற்றைம்பது. அதை மொழிபெயர்ப்பதனாற் பிரயோசனமில்லை. யாகத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். நமஸ்காரத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். காயத்திரிக்குப் பொருள் பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். இந்தப்பிரகாரம் 150 சுலோகமுமிருக்குமே யன்றி வேறில்லை. ஒவ்வொரு சுலோக தாத்பரியத்தையும் எடுத்துப் பாஞ்சராத்திர முதலியோர் மதங்களைக் கொண்டு பூருவபட்சஞ் செய்து அப்பால் அநேக உபநிடதம் முதலியவற்றையுங் கொண்டு மேற்படி கட்சியை மறுத்துச் சித்தாந்தஞ் செய்வதுதான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. மூலமாத்திர மொழிபெயர்க்க வேண்டுமெனில் அதில் உள்ளதில் இரண்டு பங்கு நாம் சேர்த்துச் சொல்லலாமே. இன்ன சுருதியில் இன்ன உபநிடதத்தில் இதற் காதாரமிருக்கிறதென்பதை எடுத்துக்காட்டுதல் மாத்திரம் நமக்குக் கூடாது. அதற்குத்தான் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டும்.

வியாக்கியானத்தின் பெயர்தான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. இதற்கு மேல் வியாக்கியானமில்லை. சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தை மூலமென்று கருதினார்கள் போலும். பாஞ்சராத்திர தந்திரங்களும் பிற தந்திரங்களும் அநேகமாய் அதில் வெளிப்படும். சைவாகமங்கள் பலவற்றிலுமுள்ள உண்மைகளெல்லாம் வெளிப்படும். பிரபலமான சண்டை செய்து கொள்ளுவதல்லவா? இவ்வளவுக்கும் இடங்கொடுப்பது சதுர்வேத தாத்பரிய சங்கிரகமேயன்றி, அதன் மூலமாகிய சுருதி சூக்திமாலையல்ல. மூலம் 150 சுலோகமுஞ் செய்தது அரதத்தாசாரிய சுவாமிகள். வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகஞ் செய்தவர் மேற்படி சுவாமிகள் மாணாக்கரே; மேற்படி சுவாமிகள் அனுமதியாற் செய்ததேயன்றி வேறல்ல. மூலத்தின் பெயரிருக்க வியாக்கியானத்திற்கே பிரபலம் வந்துவிட்டது. அதன் பெருமை நோக்க, இவ்வளவு மூலத்தில் அடங்கியிருந்தாலும் நம் போலிகளாலும் பிறராலும் எளிதில் உணர முடியாது. ஆதலினால் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமே மொழிபெயர்க்க வேண்டும். உத்தேசம் அது 3000 சுலோகமிருக்கும். ஆதலால் இவ்விடத்துள்ள பிரதியினுடைய உயர்வு முன்னமே தெரிவித்திருக்கிறேனே. அவ்விடத்திலுள்ள பிரதியையும் உடனே அனுப்ப வேண்டுவதுதான். இன்னும் சில பிரதிகளும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் இக் கடிதங் கண்டவுடனே தபால் பங்கியில் அனுப்ப வேண்டும். மூலத்தையுங் கூடச் சேர்த்தனுப்ப வேண்டும். இது நிற்க .
.
"மாயாண்டிச் செட்டியாரவர்கள் வேஷ்டியைக் குறித்திது வரையிலொன்றும் எழுதவில்லை. அவசியம் வேண்டியிருப்பதனால் முன்னெழுதிய விவரப்படியே இவ்வளவு தொகையாகு மென்று தெரிவித்தா லுடனே யனுப்புவேன். அதற்குத்து… செய்ய வேண்டுவதில்லை. கருணாநிதியாகிய சந்நிதானத்தை நானினைத்தறிவேன்.

இக்கடிதங்கண்ட தினமே பதிலெழுதுக..

இங்ஙனம்
தி. மீனாட்சிசுந்தரம்.

சுக்கில வருடம் மார்கழி மாதம் 2ஆம் தேதி  

"இவ்விவரங்களை யெல்லாம் ம - ள - ள - ஸ்ரீ செட்டியாரவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் விவரமாய்த் தெரிவிக்க வேண்டும்."

விலாஸம்

"மதுரையில் தேவஸ்தான நிர்வாக சபையாரில் ஒருவராகிய ம-ள- ள - ஸ்ரீ வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் மேல்விலாசம் பார்வையிட்டு ம--ள- ள- ஸ்ரீ வித்துவான் குமாரசாமிப்பிள்ளையவர்களுக்குக் கொடுப்பது."

—————–

இதன்பின்னர்ச் சதுர்வேத தாத்பரிய சங்கிரகம் என்ன காரணத்தாலோ இவரால் மொழிபெயர்க்கப்படவில்லை.

நெல் அளித்த அன்பர்கள்

இவர் திருச்சிராப்பள்ளியில் இருந்த காலத்தில் இவரைப் பல வகையில் ஆதரித்த அன்பர்கள் பலர். பெரிய செல்வர்களும் இவர்பாற் பாடங்கேட்டுத் தாமே வலிய உதவிசெய்து வந்தனர். கள்ள வகுப்பினர் சிலர் இவர்பால் பாடங்கேட்டதுண்டு; பின்பு இக்கவிஞர்பிரானுக்கு அவ்வப்பொழுது வருஷாசனமாக அவர்கள் நெல்லளித்து ஆதரித்து வந்தனர்.

ஒரு பாட்டின் குறிப்பு

வரகனேரிச் சவரிமுத்தாபிள்ளை ஒருமுறை இவருக்குத் திருவிளையாடற் புராணத்திலுள்ள *2  “தன்கிளை யன்றி” என்னும் ஒரு செய்யுளைப் பற்றிய ஐயம் ஒன்றைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு விடையாக இவர் எழுதிய கடிதம் வருமாறு:

உ

(வெண்பா)
 
"இக்கடித நோக்கி யியற்செந் தமிழெவற்றும்
மிக்க தெனவளர்க்கு மேன்மையாற் - றொக்கபுகழ்த்
தென்னன் பொருவுந் திருவார் சவரிமுத்து
மன்ன னடையு மகிழ்.”

"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்ப வேண்டும்.

"தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள், 'அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே. எளிதேது ஐய என்பதில் ஏதுவென்பது வினா.

"ஈசனன்பர்க்கு அருளைப் பெறுதல் எளிது. அஃது அரியதன்று. அன்பு செய்தல் அரிது. அஃது எளியதன்று' என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போது அதைத் தெரிவித்தேன்.

"*3 சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அது பற்றிக் கவலையில்லானென்று என்னை நினைத்தான் போலும். ம-ள-ள - ஸ்ரீ குமாரசாமி பிள்ளை, முருகப்ப பிள்ளை, சதாசிவம் பிள்ளை இவர்களைக் குருபூசைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.

"*4  ம -ள-ள- ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்கள ழைத்துக்கொண்டு சென்றதும் அவனொடு வந்தவொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விவரமும் தெரிய விரும்புகிறேன்.

"இவ்விடம் மகா சந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்பவுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது அல்லது தனித்தாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனாற் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம்.

இங்ஙனம்
தி. மீனாட்சிசுந்தரம்

பவ ஆண்டு  கார்த்திகை மாதம் 11ஆம் தேதி      

விலாஸம்.

"இது "திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முனிசீப் மகா -ள -ள - ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்தா பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவது."

நோயை மறந்து பாடஞ் சொன்னது

பிள்ளையவர்கள் காலத்திற்குப் பிறகு ஒருமுறை மேற்கூறிய சவரிமுத்தா பிள்ளையிடம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றின் கையெழுத்துப் புத்தகங்களைப் பெறுவதற்கு நான் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் கூறிய செய்தி ஒன்று வருமாறு:

“ஒருசமயம் ஐயா அவர்கள் என்னுடைய வேண்டுகோளின்படி இங்கே வந்து சில நாட்கள் இருந்தார்கள். அப்பொழுது நான் பெரிய புராணத்திற் சில பகுதிகளைப் பாடங்கேட்டு வந்தேன். ஒருநாள் நெடுநேரம் பாடஞ்சொல்லிக் கொண்டே வந்தார்கள். வர வர அவர்களுடைய சப்தம் பலமாயிற்று; கண்கள் சிவந்து தோன்றின. நெடுநேரம் ஆய்விட்டமையால், ‘ஐயா அவர்கள் பூசைக்கு நேரமாயிற்றே’ என்றேன். உடனே அவர்கள், ‘உடம்பு ஒருவிதமாக இருக்கிறது; சுரம் வந்திருக்கிறது போல் தோற்றுகிறது’ என்றார்கள். நான் அவர்கள் மார்பிற் கையை வைத்துப் பார்த்தேன்; கொதித்தது; சுரம் அதிகமாக வந்திருப்பது தெரிந்து, உடனே, ‘நோயையே மறந்து பாடஞ் சொல்லி வந்தார்களே! இவர்களுக்கு நம் மேல் உள்ள அன்பின் அளவுதான் எவ்வளவு! பாடஞ் சொல்லுவதில் எல்லாவற்றையும் மறந்து ஒன்றியிருக்கும் இவர்களைப்போல யாராவது இருக்கிறார்களா?’ என்று நினைந்து உருகினேன்.”

இச்செய்தியைச் சொல்லியபொழுது சவரிமுத்தா பிள்ளைக்கு இடையறாமல் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது.


அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

# உரிய இடங்களில் எழுதப்படாமல், பின்பு ஞாபகத்திற்கு வந்த வரலாறுகள் இங்கே அனுபந்தமாக எழுதப்பட்டுள்ளன.
1.  இவர்கள் சென்ற ஈசுவர (1877) வருஷத்தில் மதுரைத் திருக்கோயிற் கும்பாபிஷேகம் செய்வித்தவர்கள்.
2.
“தன்கிளை யன்றி வேற்றுப் பறவைகள் தாமுந் தன்போல், நன்கதி யடைய வேண்டிற் றேகொலிந் நாரை செய்த, அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய.” நாரைக்கு முத்தி. 24.
3.  இவருடைய மாணாக்கராகிய சதாசிவ பிள்ளை.
4.  திரு. பட்டாபிராம்பிள்ளையவர்கள்.

$$$

Leave a comment