செங்கதிர்த்தேவன்!

-அ.ராதிகா

“கவிதை சந்தங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: ||

       (பகவத் கீதை 10- 35)
சாமங்களில் நான் பிருகத்சாமம்; சந்தங்களில் நான் காயத்ரீ!
மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் நான் மலரும் இளவேனில்!

‘காயத்ரி’ என்பது சமஸ்கிருதக் கவிதை இலக்கியத்தின் யாப்பிலக்கணத்தில் ஓர் அடிப்படை சந்தம். மந்திரங்களில் மூல மந்திரமாகக் கூறப்படும் காயத்ரி மந்திரம்  அமைந்த சந்தம் இது.

வேத மந்திரங்கள் அனைத்தும் செய்யுள் வடிவில் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலி அளவை உடையவை. ‘காயத்ரி’  என்னும் சந்த அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால், இதற்கு ‘காயத்ரி மந்திரம்’ என்பது காரணப் பெயர் ஏற்பட்டது.

விஸ்வாமித்திர முனிவரால் இயற்றப்பட்ட இந்த இருவரிக் கவிதை,  ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வேதங்களில் மிகவும் பழமையான  ரிக் வேதத்தில், மூன்றாவது மண்டலத்தில் (3.62.10)  இடம்பெற்றுள்ளது. உலகின் இயக்கத்துக்கு ஆதாரமான சூரியனைப் பிரார்த்திப்பதே இம்மந்திரத்தின் அடிப்படை.

காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர். உபநயனம் செய்யப்பட்டவர்கள் (அதாவது கல்வி / வித்தை பழகும் மாணவர்கள் அனைவரும்) நாள்தோறும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.  

காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது. இதோ அந்த மூல மந்திரம்…

ॐ भूर्भुवस्सुव: तत्सवितुर्वरेण्यम्
भर्गो देवस्य धीमहि ।
धियो यो न: प्रचोदयात् ॥

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி 
தியோ: யோந: ப்ரசோதயாத் 

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்:

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப்  பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

ஒவ்வொரு கடவுளரை தியானிக்கவும் தனித்தனி காயத்ரி மந்திரங்கள் உள்ளன. ஆனால், மூல காயத்ரி மந்திரம், சூரியனைப் போற்றுவதே.

காயத்ரி மந்திரத்தின் தமிழ் மொழியாக்கத்தை  மகாகவி பாரதி, தான் இயற்றிய பாஞ்சாலி சபதம் காப்பியத்தில் நுணுக்கமாகப் புகுத்தி இருக்கிறார். இதோ அந்தப் பாடல்:

‘செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன்
      எங்களறிவினைத் தூண்டி நடத்துக’என்பதோர் நல்ல
மங்களம் வாய்ந்த சுருதி மொழிகொண்டு வாழ்த்தியே- இவர்
      தங்க ளினங்க ளிருந்த பொழி விடைச்சார்ந் தனர்- பின்னர்
அங்கவ் விரவு கழிந்திட, வைகறை யாதலும்- மன்னர்
      பொங்குகடலொத்த சேனைகளோடு புறப்பட்டே,- வழி
எங்குந் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்றே,- கதிர்
      மங்கிடு முன்னொளி மங்கு நகரிடை வந்துற்றார்.

       (பாஞ்சாலி சபதம்- அழைப்புச் சருக்கம் – 1.1.27; பாடல்: 153)

அஸ்தினாபுர அரசர் திருதராஷ்டிரரின் அழைப்பை ஏற்று இந்திரப்பிரஸ்தத்திலிருந்து செல்லும் பாண்டவர்கள் ஒரு மாலையில் பைம்பொழிலில் ஓய்வெடுக்கிறார்கள். அப்போது பார்த்தனும் பாஞ்சாலியும் தனித்திருக்கும் வேளையில் மாலை வர்ணனை நிகழ்கிறது. அதையடுத்து, காயத்ரி மந்திரம் கூறி வழிபட்ட பிறகு பைம்பொழில் மீள்கிறார்கள் என மகாகவி பாரதி எழுதுகிறார்.

“இது பிரம்ம காயத்ரீ அல்லது சூரிய காயத்ரீ. இதுவே நம் தேசியப் பிரார்த்தனை. இதுவே நம் தேசிய மந்திரம். பல்லாயிரம் ஆண்டுகளாகக் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை இது கையாளப்பட்டு வந்துள்ளது….

…வேதங்களின் உட்கருத்துக்களெல்லாம் காயத்ரீயில் அடங்கியிருக்கின்றன என்பது ஐதிகம். காயத்ரீயில் அடங்கியிருக்கிற கருத்து யாது என்று ஆராய்ந்து பார்க்குமிடத்து, பரம்பொருளுக்கும், ஜீவாத்மனுக்கும் இடையில் உள்ள இணக்கத்தை அது ஞாபகமூட்டுகிறது. ஜீவாத்மனைப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துதற்கு அது வழிகாட்டித் தருகிறது. ஆக, ஜீவாத்மன் பரிணமித்து மேலோங்கி வந்து பரமாத்மனைச் சேர்வது குறிக்கோள். இது வேதங்களின் திட்டம். மானுட வாழ்க்கையின் முடிந்த நோக்கம் இதுவேயாம். இந்த நோக்கத்தைச் சுருக்கமாக காயத்ரீ மந்திரம் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் தான் காயத்ரீ மந்திரத்தை வேதங்களின் சாரம் என்று சான்றோர் சாட்டியிருக்கின்றனர்”

-என்று கூறுவார் சுவாமி சித்பவானந்தர் (நூல்: காயத்ரீ).

காயத்ரி மந்திரத்தின் முக்கியமான பதங்களின் பொருள்:

யோ – எவர்

ந – நம்முடைய

தியோ – புத்தியை

தத் – அப்படிப்பட்ட

ப்ரசோதயாத் – தூண்டுகிறாரோ

தேவஸ்ய – ஒளிமிக்கவராக

ஸவிது – உலகைப் படைத்த

வரேண்யம் – மிகவும் உயர்ந்ததான

பர்கோ – சக்தியை

தீமஹி – தியானிக்கிறோம்.

 “ஓம். யார் நம் அறிவைத் தூண்டுகிறாரோ அந்த சுடர்க் கடவுளின் மேலான ஒளியைத் தியானிப்போமாக” என்பது இது சமஸ்கிருத மூல காயத்ரி மந்திரத்தின் சுருக்கமான பொருள். இதனையே,

‘செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் - அவன்
எங்களறிவினைத் தூண்டி நடத்துக’

-என செம்மையான தமிழ்க் கவிதையாக வழங்கி இருக்கிறார் மகாகவி பாரதி.

எனவே, சூரியனை வழிபடும் ‘மகர சங்கராந்தி’ எனப்படும் பொங்கல் நன்னாளில், செங்கதிர்த்தேவனைப் போற்றும் காயத்ரி மந்திரத்தின் மகிமையை உணர்வோம். தகுந்த குருவிடம் தீட்சை பெற்று, சரியான உச்சரிப்புடன், இம்மந்திரத்தை அன்றாடம் ஜபிப்பது அனைவருக்கும் நலம் அளிக்கும்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நன்னாள், மகர சங்கராந்தி வாழ்த்துகள்!

$$$$

One thought on “செங்கதிர்த்தேவன்!

Leave a comment